எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2020

எஞ்சுதல்.

செவ்வலை மீன்களாய் 
மிதந்து வருகின்றன எறும்புகள்
காய்கறிக்குள் ஒளிந்திருக்கும்
புழு இழுக்க..

இழுத்து இழுத்துக் 
காணாமல் போகின்றன
எறும்புகளும் புழுக்களும்
காய்கறிக் கூடுமட்டும் எஞ்ச..
  

செவ்வாய், 29 டிசம்பர், 2020

எறும்பிலிருந்து அரவமாய்..

எங்கெங்கோ இருக்கும் 
தீனியைத் தேடியபடி
அலைகிறது எறும்பு மனம். 

வரிசைகட்டி
வளைந்தோடி
புற்றாய்ச் சேர்க்கிறது.

கரையான்கள்
கவிழ்ந்துண்ண
செம்மேனியாய்ச் சமைகிறது புற்று

துளைகளுக்குள் நாகம்புக
பாலூற்றி வணங்கத் தொடங்குகிறது
கால சர்ப்ப தோஷம்

எறும்பிலிருந்து திடீர் அரவமாய்
உயர்ந்தமண்
கடவுட் காட்சியாகிறது. 

  

சனி, 19 டிசம்பர், 2020

மனச்சாயம்.

கோரைப்பல் காட்டாமல்
வாலைச் சுழட்டாமல்
வாஞ்சாலையாய் இருப்பதுபோலவே
கிளம்புகிறது ஒரு பூதம்

வேஷமெனத் தெரிந்தாலும்
தின்னக் கொடுக்கிறேனென்னை.
வெளிறித் தோலுரியும் அதனுடன்
வெளுக்கிறது என் மனச்சாயமும். 
  

செவ்வாய், 15 டிசம்பர், 2020

காத்திருப்பு

அலைமேல் அலையடிக்க
விழுந்து எழுந்து
கால் நனைக்கிறது கரை.

அலைகள் அடங்கியவுடன்
முக்குளிக்கலாமெனக்
காத்திருக்கிறது கடல். 



  

வெள்ளி, 27 நவம்பர், 2020

சுழல்

ஒவ்வொரு அடியாக
இரும்பான உடல்தூக்கி
ஏறுவது கடினமானதுதான்
பறவையைப் போல
கால்வளைத்து
எளிதாக இறக்கிவிடும்
சுழல்படிகளில்

  

திங்கள், 23 நவம்பர், 2020

வழி

சுங்கச்சாவடியின்
தடுப்புக் கம்பி
மந்திரவாதியின் கோலாய்
நிமிர்ந்து வழிவிடுகிறது
ஃபாஸ்டாகை வாசித்ததும். 
  

வியாழன், 19 நவம்பர், 2020

தழைதல்

தழைந்து தழைந்து
எட்டிப் பார்க்கும் 
கிளைகளை வெட்டிவிடலாம்
தழையத் தழைய
படுமுடிச்சேறி
தாழ்ந்து செல்லும் வேர்களை..?
  

செவ்வாய், 17 நவம்பர், 2020

இழுவை

இழுவை
இறைத்திறைத்து ஊற்றியும்
நிரம்பிக் கொண்டிருக்கிறது கிணறு.
திணறித் திணறித்
தத்தளித்து மூழ்குகிறது வாளி
முக்குளித்து மேலேறுகிறது
கயிறில் தொற்றி.
சகடையையும் கிணற்றையும்
இணைத்திழுத்து இணைத்திழுத்துக்
களைத்து கிடக்கிறது இழுவை.
  

நித்தமும் நித்தமும்

கன்மவினை தொடர
மனிதப் பிறப்பெடுத்தாலும்
மாறுவதில்லை
பன்றியின் இயல்பு
அல்லதை உண்டு
அல்லதாய் செழிக்குமதன்
மாமிசம் உண்பார்க்கும்
அதேதான் தொற்றும். 
நிந்தனையில்லை
நித்தமும் நித்தமும்
நிஜமென்றுணர்ந்ததாலதன்
நிலைபற்றி உரைத்தேன்
  

திங்கள், 16 நவம்பர், 2020

அரக்கு.

சில துளிர்கள்
அரக்காகவே கருத்தரிக்கின்றன
செடிக்குத் தண்டமாய்
பூமிக்குப் பாரமாய்
உதிர்க்கவும் இயலாமல்
ஒட்டவும் இயலாமல்
திகைத்துப் போய் நிற்கின்றன
இயலாமைச் செடிகள். 
  

எஞ்சுதல்

உடல் ஒரு தாவரம்
மூளைதான் கிளைகள்
சிந்தனை இலைகள் விரிகின்றன
பசுமையாய்...
சில பழுப்பேறி உதிர்கின்றன.
எப்போதோ நாசியேறி
சில ரோஜாக்களும் மல்லிகைகளும்
முல்லைகளும் முகிழ்க்கின்றன.
பூவேறிப் பிஞ்சேறிக் 
காயேறிக் கனியுதிர்ந்து
முதிர்ந்து மேலுரிக்கும்போது
எஞ்சுகின்றதொரு மரக்கொம்பு.
  

வியாழன், 12 நவம்பர், 2020

தூரத்துப் பச்சைகள்

வளைந்து நெளிந்து செல்கிறது சாலை
வாய்க்காலின் நெளிவு சுளிவுகளைக் கற்று.
கால் நனைத்துக் கொண்டிருக்கின்றன வீடுகள்,
விலகி இருக்கக் கற்கின்றன தோப்புகள்.
எல்லாவற்றிலும் பாய்ந்து கைநரம்பாய் வெடித்துப் பின்
காணாமல் போகிறது ஒரு பச்சைப் பாம்பு. 
மலைகள் காற்றோடு சூரியனையும்
தாலாட்டிக் கொண்டிருக்கின்றன.
வாய்க்காலின் அன்பில் மூழ்கிக் கிடக்கிறது வயல்.
பொன்வண்ண வெய்யிலில்
வயலெங்கும் பாவி மீன் பிடித்துண்கிறது கொக்கு
தலையசைத்துக் களித்துக் கொண்டிருக்கின்றன
தூரத்துப் பச்சைகள்.
 
  

செவ்வாய், 10 நவம்பர், 2020

கூந்தல் நாகம்

தழைந்து கிடக்கிறது தாழை
கூடவே இழைந்து கிடக்கின்றன 
கரு நாகங்களும்
மூலக்கூறு இணைப்புப்போன்ற
நாகசடைப் பின்னல்களில் 
மடிப்பு மடிப்பாய்
மணம் வீசிக் கொண்டிருக்கின்றன 
வெட்டுப்பட்ட மடல்கள்.
தாழைக்குள் கிடக்கும் கருநாகமாய்
ஒளிந்து கிடக்கிறது அசையாமல்
வளைந்து நெளியும் கூந்தலும்

  

வெள்ளி, 6 நவம்பர், 2020

கருத் துகள்கள்

வண்டுகள் வந்தமரப்
பூக்களுக்குள்ளிருந்து
எட்டிப்பார்க்கின்றன மகரந்தங்கள்
பூப்பூவாய்ப் பூப்பூவாய்ப்
பறந்தலையும் வண்டுகளோடு
பூந்தூறலாய்ப் பயணப்படுகின்றன
செடிகளின் கருத் துகள்களும் ..

புதன், 28 அக்டோபர், 2020

பாலாவியாய்..

நதியின் செதில்களில்
நீரின் மினுமினுப்பு
உச்சிச் சூரியனிலிருந்து
உலாவருகிறது கானல் நீர்
பாலாவியாய் மிதந்தலைகின்றன
பாலீதீன் பைகள்
விசிறியடிக்கும் காற்றில்
வட்டமிட்டலைகிறது மணல். 

  

வெள்ளி, 23 அக்டோபர், 2020

நீளும் கொடுக்குகள்.

தெரிந்தும் தெரியாததுபோல்
கொட்டிவிட்டு
விலகிச் செல்கிறது தேள்.
அடிக்க விரையுமுன்
பதுங்கிவிடும் அது
அடுத்து எதிர்பாராமல்
கொட்டும்போதுதான்
வெளிநீட்டுகிறது கொடுக்கை
எது தேளென்று 
கொட்டும்வரை தெரிவதில்லை
மறைந்திருக்கும் கொடுக்குகள்
காலம் வந்தால் நீளும்
நியாயத் தராசுகள் என்று
வாழக்கற்பிக்கப்படுகிறோம் நாமும். 
  

வியாழன், 22 அக்டோபர், 2020

பூமிப் பறவை.

சூரியத் தாவரத்தில்
ஒளிக்கிளைகள் நீள்கின்றன.
பூமிப் பறவை இளைப்பாறுகிறது 
அக்கிளைகளில்.
சிலசமயம் வெளிச்சப்பூக்களைப்
பிடித்துண்ணுகிறது.
இருள்கூட்டில் உறங்கி உயிர்த்து
உருண்டோடி உண்ணத் தொடங்குகிறது
மற்றுமொரு புதுப்பூவை. 

  

புதன், 21 அக்டோபர், 2020

பூமியின் இரக்கத்தால்..

பூமியின் இரக்கத்தால்..

நதி ஓட முடிகிறது.
மலை நிற்க முடிகிறது
மரம் வேரோடுகிறது
பறவை பசியாறுகிறது

மீன் துள்ளித் திரிகிறது
இலை அசைந்து களிக்கிறது
பயிர் எழும்பிச் சிரிக்கிறது
நானும் உயிர் வாழ்கிறேன். 

  

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

நதி, மரம், சூரியன்.

ஓடிவரும் நதிநீரை
இலைதூவி வரவேற்கிறது மரம்.

வரவேற்கும் விருட்சங்களின்
வேர்வருடி இதமாக்குகிறது நதி.

நதியின் மேல் குதித்து
ஆனந்த நீராடுகிறது சூரியன்

குளியலாடும் சூரியனைக்
கரம் ஏந்திக் களிக்கிறது நதி.

மின்னும் நதியில் 
முகம் பார்த்துக் களிக்கிறது மரம் 

நதி வழி மரமேறி
ஊஞ்சலாடுகிறது சூரியன். 

கொஞ்சும் சூரியனோடும் கெஞ்சும் மரத்தோடும்
ஒட்டியும் ஒட்டாமலும் ஓடிக்கொண்டிருக்கிறது நதி. 


  

திங்கள், 12 அக்டோபர், 2020

ஞாபகச் சொட்டுகள்

ஒரே இடத்தில் 
உறைந்து கிடக்கும் 
எண்ண நீர்
உருகிக் கரைந்து
ஞாபகச் சொட்டுக்களாய் வடிய
வெகுநேரம் ஆகிறது. 

 

வெள்ளி, 9 அக்டோபர், 2020

ஜலதரங்க மழை

கருத்துத் திரண்டு
வலதும் இடதும் மோதி
மேளம் இசைக்கிறது
மேகம்

ஒன்றிலொன்று உருண்டு
முன்னும் பின்னும் புரண்டு
முரசொலிக்கிறது
இடி

வெளிச்சப் புல்லாங்குழல்களாய்ப்
பின்னிப் பின்னி இறங்கி
சாக்ஸபோனாகின்றன
மின்னல் கம்பிகள்

மரங்களைக் கிண்ணங்களாக்கி
இலைகளைக் கரண்டிகளாக்கி
ஜலதரங்கம் வாசிக்கிறது 
மழை

  

செவ்வாய், 6 அக்டோபர், 2020

சமரசங்களோடு வாழ்வது.

துளிர்க்கும்போதே ஓணான்களுக்கும்
துளிர்த்தபின் கத்திரிகளுக்கும்
துளிர்க்க ஏங்கி நீருக்கும்
துளிர்க்கரம் பிடித்தெழுப்பும் சூரியனுக்கும்
துளிர்ப்பிடி கருகிச் சருகாகும்போதும்
துளிர்த்த இடத்திலிருந்து ஒட்டறுந்து வீழும்போதும்
நன்றியும் பாசமும் காதலும் கொண்டு
மிதந்தும் பறந்தும் செல்ல வாய்ப்பதுதான்
சமரசங்களோடு வாழ்வது.

  

முள்முடி

கொரோனாவா
கதிர்வீச்சா
மூச்சுத் திணறலா
த்ராம்போஸிஸா
விதம் விதமாய்
முள்முடி மாட்டுவது 
வைரஸ் மட்டுமல்ல
பணவீக்கத்தில்
நசுங்கிக் கிடக்கும்
பொதுஜனமும்தான். 


  

புதன், 30 செப்டம்பர், 2020

நிற்றல்

கிளையாட்டிக் கொண்டிருக்கின்றன
தோட்டத்து மரங்கள்
தலையாட்டிப் பார்க்கிறான்
குட்டித் தம்பு.
கழுத்து நின்றதும்
மரம் பார்ப்பதில்லை அவன்
ஆனாலும் தம்போக்கில்
கிளை ஆட்டிக் கொண்டிருக்கின்றன மரங்கள்.

  

திங்கள், 28 செப்டம்பர், 2020

வெய்யில் வளையங்கள்

வெய்யில் வளையங்கள்
பூமியின் மீது விழுகின்றன.
அவ்வளையத்துள் நழுவி
உருண்டோடும் பந்தாய் பூமி.
  

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

நிழல் வாழ்வு

நிழல் வார்த்தைகள்
உன் பின்னே 
ஓடி வருகின்றன.
விடியலில் 
உன் மதுக்கோப்பைக்குள்ளும்
இரவில் உன் வாயினுள்ளும் 
குடியிருக்கும் அவை
சாராயம் ஏறுவதுபோல்
சரசரவென ஏறுவதும்
பின் நாற்றத்தோடு வீழ்வதுமாய்
வாழ்கின்றன.
என்னடா இந்த நாறப் பிழைப்பென
அவை நாராசத்திலிருந்து கூவுவதை
ஒருபோதும் சட்டை செய்ததில்லை நீ.
இருந்தும் சொற்கள்
எச்சமாய் விழுந்தும் எழுந்தும்
இருந்தும் இல்லாமலும்
நிழல் வாழ்வில்.


  

வியாழன், 24 செப்டம்பர், 2020

இனிக்கும் வேம்பு

கதவைத் திறந்ததும்
குதூகலிக்கின்றன கிளைகள்
வரவேற்கவும் வழியனுப்பவும்
பூச்சொரிகின்றன
வாலாட்டி அமரும் 
குருவிகளுக்குத் தேனும்
சிலவற்றுக்குக் கொட்டையும்
சிலவற்றுக்குப் பழமும். 
வேம்பும் இனிக்கிறது
எல்லாப் பறவைகளுக்கும். 

  

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

நிரம்புதல்

இரை எடுத்த பெருமகிழ்வில்
தொப்பையை அசைத்து
அமர்கின்றன பறவைகள்
வயிற்றை நிரப்பிய குதூகலத்தில்
வாயாடிக் கொண்டிருக்கின்றன கிளைகள். 

  

திங்கள், 21 செப்டம்பர், 2020

ஆமோதிப்பு

சிச்சிலிப்புக் கொட்டித்
திரிகின்றன பறவைகள்
ஆமோதித்துத் தலையாட்டிக் 
கொண்டிருக்கின்றன இலைகள். 

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

பறவைப் பார்வை

கடலையும் கட்டிடங்களையும்
அளக்கிறது பறவை
பறவைப் பார்வையால்
அளந்து கொண்டிருக்கிறேன்
இம்மூன்றையும். 

  

சனி, 19 செப்டம்பர், 2020

பூத்தல்

மாறும் மாறும் 
எப்போது மாறும்
ராகு கேது
நாகபாதை விரிக்க
பூர்வஜென்ம
மலர்ச்சோலையில் 
காத்திருக்கிறேன்.
நெளிந்து செல்லும்
நாகங்களுக்கிடை
நழுவி ஓடியும்
மேலே பூக்கிறது ஒரு
நாகலிங்கப் பூ. 

  

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

வளையம்

ஏதோ ஒரு பூவின் வாசம்
நிழல் உருவங்கள்
காதுள் கேட்கும் குரல்கள்
கிணற்றுள் மூழ்கும் குடமாய்
நீர் வளைய நினைவுகள்
அடுக்குகளால் ஆனதா உலகம்
அலைந்து அளைந்தும்
நீளும் கைகளைப் பிடிக்கவே முடிவதில்லை
ரீங்காரம் இடுகிறது நீர்
இறங்கிக் கொண்டே இருக்கிறது கயிறு
தட்டுப்படுவதில்லை
தரையும் ஆகாயமும்
தண்ணென்ற குளிர்வில்
பாசம் தின்னும் தலைப்பிரட்டையாய்
நீந்தத் தொடங்குகிறேன். 


  

வியாழன், 17 செப்டம்பர், 2020

உயிருடை

நிலைக்கண்ணாடியில்
அறைக் கதவுகளுக்கிடையில்
வாசல் நடையில்
சாவி துவாரத்தில்
ஆடிச் செல்கிறது ஒரு பிம்பம்
முன்னோர் ஒருவரின்
சாயலும் வாசனையும் கொண்டு
கண்ணோரத்தில் நடமாட்டம்.
விதிர்த்துத் திரும்பும்போதெல்லாம்
விசிறிகள் போல் ஆடுகின்றன
எங்கோ கொடியில் தொங்கும் உடைகள்
உடைகள் கழற்றி உலவும் அவர்களுடன்
உயிருடை கழற்றாமல் உலவுகிறேன் நானும்.
  

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

உண்மை

எத்தனை முறை
நீ பொய்யுரைத்தாலும்
நம்பிவிடுகிறது உள்ளம்.
நீ எது சொன்னாலும்
அது உண்மையாகத்தான்
இருக்கவேண்டும் என
மனதில் செதுக்கிய
எண்ணத்தை மாற்ற முடியவில்லை.
இருக்கட்டும் போ
அது உண்மையோ பொய்யோ
நான் உண்மை என்றே நம்பிக்கொள்கிறேன்.
உன் மேல் வைத்த நம்பிக்கைக்காக மட்டுமல்ல
என் மன நிம்மதிக்காகவும்தான். 

வியாழன், 10 செப்டம்பர், 2020

ஒரே உலகம்.

எங்கள் உலகத்தில்
நாங்கள் நால்வர் மட்டுமே
நான் அவர்
இரண்டு சேட்டைக்காரப் பயல்கள்
பின்னொருநாள் மாறியது
மொணமொணத்துக் கொண்டிருந்த
நாங்கள் மட்டுமே
எங்கள் உலகத்தில்.
சேட்டைக்காரன்களுக்கென்று
ஒரு தனி உலகம்.
பின்னும் ஒருநாள்
சேட்டைக்காரன்கள் 
தம் பிள்ளைகளோடும்
பார்யாளோடும் அவர்கள் உலகத்தில் 
குடிபுகுந்தார்கள்.
இப்போது
எங்கள் பெற்றோரின் உலகம்
எங்களின் உலகம்
பிள்ளைகளின் உலகம்
பேரப் பிள்ளைகளின் உலகம்
என்று வேறு வேறாய்க்
குட்டி போட்டது ஒரே உலகம்.

  

புதன், 9 செப்டம்பர், 2020

நூல் வெய்யில்.

பால்கனிச் சுவரோரம்
நீர்க்கற்றையென 
குளிர்ச்சியாகக் கசிகிறது வெய்யில்
வண்ணக் காகிதமாய்
மிதக்கும் பட்டாம்பூச்சியொன்று
நூல்களாய்ப் பிரித்துச் செல்கிறது
அவ்வெய்யிலை. 
  

திங்கள், 7 செப்டம்பர், 2020

உறைவு

புகைப்படத்தில் நாங்கள்
கண்ட அளவிலேயே
உறைந்திருக்கிறது
அந்த நகரமும்.
அதன் பூங்காவும் பூக்களும்
இராட்டினமும் கூட
வாளேந்திய மங்கைகள்
கண்சிமிட்டாமல்
நோக்கியபடியே இருக்கிறார்கள்.
நதியும் படகுகளும்கூட
எங்களுக்காகக் காத்து நிற்கின்றன.
எங்கெங்கிருந்தோ கீறிப் பாயும் 
வெளிச்சமும் கூட
இன்னும் பிரகாசமிழக்கவில்லை.
ஒரு கால் உடைந்த நாற்காலி
அப்படியே நின்றிருக்கிறது.
கண்ணில் காக்கைக் கோடுகளும்
காதோர நரைகளும்
பூக்கத்தொடங்கி இருக்கும்
இந்த இலையுதிர் காலத்தில் 
எங்கள் இளம்பருவமும்
அப்புகைப்படத்தில்
உலைவுறாமல்
உறைந்திருப்பதுதான்
உச்சபட்ச மகிழ்ச்சி.
  

புதன், 2 செப்டம்பர், 2020

சுடர் விடுதல்.

நெடுங்கோட்டைச் சுவரென
நீண்டுகிடக்கிறது
நமக்கிடையான உறவு.
சில முதலைகள் 
உள்நுழைந்து அகழியை
அகழாய்வு செய்கின்றன.
எச்சரிக்கை வீரர்களின்
பாரா ஒலி வேறு அசந்தர்ப்பமாய்.
விடியலுக்குள் நீ வந்து சென்ற கனவை
இருளோடு தேய்த்து
அழித்துவிட நினைக்கிறேன்.
சூரியன் புலரும் பொழுதில்
சுடர்விட்டுத் துலங்கும்
உன் நினைவை என்ன செய்ய. 

  

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

போ நீ போ

சுவாசமே சுவாசமே என்றும்
உன்னைத்தொட்ட காற்று வந்து 
என்னைத் தொட்டதென்றும்
பாடிக் களித்தவர்கள் இன்று
போ நீ போ
தனியாகத் தவிக்கின்றேன்
துணை வேண்டாம் போ நீ போ
எனப் பாடுகிறார்கள்
கொரோனா காலக் கொடுமைகள்
பாடல்களிலும் பல் பதிக்கின்றன. 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

செம்மாந்தல்.

மஞ்சள் இஞ்சி மிளகு
மாமருந்தாகிவிட்டது
சுக்குமி ளகுதி ப்பிலி என்று
கேலி செய்தவர்கள்
கசாயத்தின் பிடியில் காய்ச்சலைக் 
கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கபசுரக் குடிநீரும்
நிலவேம்பும் சுவையற்ற நாக்கில்
கசப்புப் பாயாசங்களாக
வழிந்தோடுகின்றன. 
கோள்களும் கிரகங்களும்
நாட்டை சுத்தமாக்கிவிட்ட மகிழ்ச்சியில்
செம்மாந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

  

சனி, 29 ஆகஸ்ட், 2020

நியாயத் தராசு

நியாயத் தராசு ஏறி இறங்குகிறது
மூச்சுக்கு முன்
மூச்சுக்குப் பின் என.

முள்ளில் இல்லை
தட்டிலும் இல்லை
ஊடாடும் காற்றில்தான் இருக்கிறது
நியாயத்தின் உயிர்த்தல். 
  

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

அண்ணாரைப் போல..

இந்தக் காலத்தில்
மறைந்தவர்கள்
மனம் கனக்கச் செய்கிறார்கள்.
பட்டினத்தார் பாடலொன்று
கத்தும் நமைப்பார்த்துக்
கணக்கென்ன என்கிறது. 
இன்னொன்றோ
அண்ணாரைப் போலத் 
திரியச் சொல்கிறது..
இரண்டும் கெட்டானாகி
மூன்றாம் உலகு விரிகிறது.


வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நிழல் பிரசவம்

விளக்கிலிருந்து பிறக்கும் தீபம்
மாடத்துள் பிரசவிக்கிறது
மூன்று நிழல் விளக்குகளை..

  

புதன், 26 ஆகஸ்ட், 2020

ஆலமும் காலமும்

தலையிலிருந்து வால்வரை
விழுங்கி விழுங்கி
உயிர்க்கின்றன அரவுக் கிரகங்கள்
விழுங்கும் ஒவ்வொருமுறையும்
வாதாபியாய் வெளிப்படுகிறேன்
எப்போது ஜீரணமாவேனென்பதை
தர்மராஜனே அறிவான்
ஆலமும் காலமும்
நுரைத்துப் பொங்கிக் கொண்டிருக்கின்றன. 
  

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

நானென்ற ஒன்றா..

ஆயிரம் நிலவை அழைத்தவர்
மூச்சுள்ளும் 
உன்மத்தம் பிடித்தலைகிறது
கிருமி அலை..
அவ்வலை சிந்தும் துளிகளில்
நான் யார் நீ யார்
என்றொரு ஆராய்ச்சி நடக்கிறது
ஒவ்வொரு அலையாய்ப்
பிடிந்தலைந்தும்
குழப்ப முடிச்சுக்கள்
கரையில் தள்ளுகின்றன
யோசித்தும் சுவாசித்தும்
பிழைத்துக் கிடப்பது யார்
நானா  .. நானென்ற ஒன்றா.. 
  

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பயன்..

மூச்சுக் குழலுக்குள் 
முக்குளித்து மூச்செடுக்கிறது.
சாதா காய்ச்சலும் காங்கையும்
சள்ளைப் படுத்துகிறது.
கொடுமை கொடுமை என
கோவிலுக்கும் செல்ல விடுவதில்லை. 
என்னே பயன் எனில்
தனித்தனியாய்க் கிடந்தோரை
தனிமையில் தள்ளுவதுபோல்
குடும்பங்களை ஒன்று சேர்க்கிறது 
கொரோனா.
  

புதன், 19 ஆகஸ்ட், 2020

பச்சோந்தி

பச்சோந்திபோல்
உடல்மாறும் கிருமி
மனிதரைத் தாக்க
முள்முடி சுமந்தலைகிறத
கடைசிவிருந்தில்
மூச்சுக் காட்டிக் கொடுக்க 
நுரையீரல்தான்
தீர்ப்புக் கூறும் இடமாகிறது

  

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

இஞ்சியால் ஆனது உலகு

இஞ்சி சட்னி
இஞ்சித் துவையல்
இஞ்சிப் புளி
இஞ்சி மண்டி
இஞ்சி ரசம்
இஞ்சி சூப்
இஞ்சி ஜூஸ்
இஞ்சிக் குழம்பு
இஞ்சி சாதம்
இஞ்சிக் கொழுக்கட்டை
இஞ்சியால் ஆனது உலகு,
கொரோனாவுக்குப் பின். 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

அலையும் கிருமி

நுரையீரலில் புகும் கிருமி
ஊஞ்சல் கட்டி ஆடுகிறது
உயிருடனும் 
உயிர்வாழ்வதற்கான சேமிப்புடனும்.

சுருங்கும் நுரையீரலாய்ச்
சுருங்குகிறது சேமிப்பு.

சறுக்கிவிழுந்து
குதித்தோடுகிறது உயிர்
போராட முடியாமல்.

இன்னொரு ஊஞ்சல் தேடி
விரிந்த தலையோடு 
அலைந்து கொண்டிருக்கிறது கிருமி. 

  

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

கபசுரம்.

காங்கையா காய்ச்சலா
கழுத்தை வருடிச் செல்கிறது
கபசுரக் குடிநீர்.
  

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

பூக்கும் காதல்.

முற்றிய மரமும்
துளிர்விடுகிறது
வருடந்தோறும் 
பூக்கும் காதலில்.
    
Related Posts Plugin for WordPress, Blogger...