எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

செவ்வாய், 17 மே, 2022

வெட்கக் குறிப்புகள்

வருடத்தில் சிலமுறைதான்
எதிர்ப்படுகிறாய்.
வருடம் முழுமைக்கும்
பொங்கி வழிகிறது வெட்கம்.
எதிர்கொள்ள இயலாமல்
தலைகுனிந்து கடக்கிறேன்.
என் ஓரவிழிப் பார்வையை
எப்படியோ கவ்வி விடுகிறது
உன் கருடப் பார்வை.
நெளியும் மீனாய்
ஓடும் என் பின்
பரவிக் கிடக்கிறது
உன் பார்வை அணைப்பு.
உணர்வுகள் கிளர்ந்தெழ
பக்கம் இல்லாத உன் தோள்சாய்ந்து
இம்முறையும் கடக்கிறேன்
ஒரு சந்திப்புக்கும்
மறு சந்திப்புக்கும் இடையில்
யார் யாரோ பகிர்ந்த புகைப்படங்களில்
சிங்கம் போல் சிலிர்த்து நிற்கும்
உனைப்பார்த்து மௌனமாய் ரசித்து
பெருமிதப்பட்டுக் கொள்கிறது மனம்.
உனக்குத் தெரியாமல்
உன்னைக் காதலிப்பதென்பது பெரும் சுகம். புதன், 11 மே, 2022

நெகிழும் மணல்

சிதறும் அலைகளுக்குள்
கைபிடித்துச் செல்ல உன்னால் முடியும்
நனையும் அச்சமின்றிக்
காற்றைப் போல் வருகிறேன்
வெள்ளித் துகள்களாய் நம்மை
வரைந்து கொண்டிருக்கிறது சூரியன்
கால தேச வர்த்தமானம் இன்றிக்
கரைந்து ஓடுகிறோம் கரைகள் எங்கும்
பாதங்களின் கீழ் நெகிழ்ந்து நெகிழ்ந்து 
கடலுள் தன்னை மறைத்துக் கொள்கிறது மணல்.
 

வியாழன், 5 மே, 2022

பறத்தல்

ஆகப்பெரிய உயரத்தில்
ஒரு பறவை பறந்து போனது
மேகங்கள் அதன் கீழ்
மெத்தைகளாய்ப் புரண்டன
ஓய்வெடுக்கத்தான் அனுமதிக்கவில்லை
அப்பறவையின் இறக்கைகள். 
எதை நோக்கிப் போகிறோம்
எதற்காகப் போகிறோம்
காற்றின் கோதுதலிலும்
கனக்கத் தொடங்கின சிறகுகள்.

 

வியாழன், 28 ஏப்ரல், 2022

தனித்துத் தொலைதல்

என்னிடமிருந்து அவள் 
என்னைத் திருடிக் கொண்டிருக்கிறாள்.
இருந்தும் அனுமதித்திருக்கிறேன்.
தனித்திருப்பது சுமையாய் இருக்கிறது.
தொலைந்துதான் போவோமே.புதன், 13 ஏப்ரல், 2022

பாவனைப் பூனை

கால்மேல் கால் போட்டு
அமர்ந்திருந்தான் ஒருவன்
அவனுடைய பாவனைகளைக்
கவனிக்க தொடங்கினேன்.
கண்ணாடிப் பார்வைக்குள்
காகிதத்தை மேய்ந்து கொண்டிருந்தான்.
மோவாயில் கை வைத்திருந்தான்
இன்னொருவன்.
செல்போனைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்
ஒருத்தி.
கூரிய பார்வையில்
கூட்டத்தினரைப் பார்த்துக் கொண்டிருந்தான்
மற்றொருவன்.
மா மரத்தின் பக்கத்தில் உள்ள
மதிலில் அமர்ந்து
எங்கள் அனைவரின் பாவனைகளையும்
பார்த்துக் கொண்டிருந்தது
ஒரு பூனை.
 

வியாழன், 7 ஏப்ரல், 2022

ஊரும் மனிதர்கள்

மரவட்டையாய் ஓடும்
ரயிலுக்குள்
எறும்புகளாய் ஊரும் மனிதர்கள்.
ஒவ்வொரு புகைவண்டி நிலையமும்
எறும்புகளைச் சூல்கொண்ட
புற்றுக்களாய்
நகரத்தின் தெருக்களில்
வாழ்வுத் தேட்டையில் அலைந்து
சூலுக்குள் மறைகின்றன எறும்புகள்
சூலைச் சுற்றியுள்ள பொந்துகளில் சதாநேரமும்
தேனடைக்கான கனவுகளோடு வாழ்ந்து
மரிக்கின்றன எறும்புகள்

 

புதன், 12 ஜனவரி, 2022

இளந்துளிர்ப் பிறப்பு.

பழைய பைகளைப் போல் 
சுருங்கிக் கொண்டிருக்கிறது தோல். 
விரிந்திருக்கும் விழிகளில் 
கூம்பு இருளாய்ப் படிகிறது வானம். 
விரல்களின் தொடுகையில் 
முதிர்ந்த செல்கள் 
வெண்துகளாய்ச் சிதறுகின்றன. 
கடவுள் துகளோடு 
கலக்கத் துடிக்கிறது ஆவி. 
பின்னுமொரு பிறவியெடுத்தால் 
பக்கத்துத் தோட்டத்துப் பெரு மரத்தின் 
இளந்துளிராய் விரிய ஆசை
 
Related Posts Plugin for WordPress, Blogger...