எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 டிசம்பர், 2016

பொருட்காட்சி :-

பொருட்காட்சி :- ( UNEDITED )

குட்டிப் பாப்பா குட்டிப் பாப்பா எங்கே போறீங்க
பொருட்காட்சித் திடலுக்குத்தான் போகுறேனுங்க.

பொருட்காட்சித் திடலுக்குப் போய் என்ன செய்வீங்க
ராட்டினத்தில் ஏறி உலகைச் சுத்திப் பார்க்கப் போறேங்க

ராட்டினத்தில் சுத்தியபின் என்ன செய்வீங்க
பலூன் பொம்மை பஞ்சு மிட்டாய் வாங்கப்போறேங்க.

பஞ்சுமிட்டாய் தின்ன பின்னே என்ன செய்வீங்க
பஃபூன்ன் மாமா பல்டி அடிப்பதை பார்த்துச் சிரிப்பேங்க.

பல்டி அடிப்பதை பார்த்த பின்னே எங்கே போவீங்க
பறவைக் கூட்டம், சர்க்கஸ் எல்லாம் பார்த்து ரசிப்பேங்க.

சர்க்கஸ் எல்லாம் பார்த்தபின்னே என்ன செய்வீங்க
குட்டியானை குரங்குக் குட்டி சிங்கம் பார்ப்பேங்க.

அம்மா கையைப் பிடித்துக் கொண்டு சென்று வாருங்க
அழகாய்ப் பொருட்காட்சித் திடலை ரசித்து வாருங்க.


வெள்ளி, 30 டிசம்பர், 2016

தொட்டிச் செடி வளர்ப்போம்.

தொட்டிச் செடி வளர்ப்போம் :- (UNEDITED )

பட்டுரோஸை ரசிக்கலாம்.
புதினா வாசம் பார்க்கலாம்
துளசி இலைகள் எட்டிப் பார்க்கும்
தொட்டிச் செடி வளர்ப்போம்.

காய்கறிக் குப்பையைப் போட்டு
மண்புழு உரம் கொஞ்சம் போட்டு
செம்மண் கொட்டி விதை தூவ
குட்டித் தொட்டி போதும்.

காலை மாலை நீரூற்றி
காயும் வெய்யிலில் சிறிது வைத்து
கண்ணும் கருத்துமாய் கவனித்தால்
கொள்ளை அழகாய்ப் பூ பூக்கும்.

ரோஜாப்பூவு தலையாட்ட
சாமந்திப் பூவு சாமரம் வீச
சங்குப் பூவும் இதழ் சிரிக்க
ஜன்னலோரம் செடி வளர்ப்போம்.

காற்றை சுத்தம் செய்யும்
வீட்டை அழகாய் மாற்றும்
அம்மாவின் சமையலுக்குதவும்
அருமையான செடிகள் வளர்ப்போம்.


வியாழன், 29 டிசம்பர், 2016

கண்விழித்தெழுந்திடு பாப்பா :-

கண்விழித்தெழுந்திடு பாப்பா :- ( UNEDITED )

கண்விழித்தெழுந்திடு பாப்பா
 கன்னுக்குட்டியும் கால் எட்டித் துள்ளுது.
கோழிகுஞ்சும் துறுதுறுப்பாய் அலையுது.
துள்ளிக் குதித்தே பள்ளிக்குச் செல்ல
கண்விழித்தெழுந்திடு பாப்பா .

கணக்கு ஒன்றும் கடினம் இல்லை
ஆங்கிலம் அறவே அந்நியம் இல்லை
விஞ்ஞானம் என்றும் அஞ்ஞானம் போக்கும்
வரலாறும் உனக்கு  வாழ்க்கையை போதிக்கும்.
தமிழோ உனக்கு அமிழ்தமாய் இனிக்கும்

ஆசிரியர்கள் உனக்கு அருமையாய்க் கற்பிப்பர்.
அன்பான நண்பர்கள் காத்துக் கிடப்பர்.
அம்மாவும் உனக்கு அருதுணையாய் இருப்பார்
கண்ணை இறுக்கும் சோம்பலைக் களைந்திடு
கண்விழித்தேதான் பள்ளிக்குக் கிளம்பிடு.

புதன், 28 டிசம்பர், 2016

பறவைக்கூட்டம் காப்போம். :-

பறவைக்கூட்டம் காப்போம். :- ( UNEDITED )


கோடைக்காலம் வருகுது.
கொள்ளை வியர்வை பெருகுது


குடியிருக்க இடமில்லாமல்
பறவைக் கூட்டம் அலையுது.


மொட்டைமாடிக் கதவு நிலையில்
கூடுகட்டி குஞ்சு பொரிக்குது


இறக்கை சிதறிக் கிடக்குது.
இரையில்லாமல் தவிக்குது.


கீச்கீச்சென்று குட்டிக்குரல்
காதை வருடி அழைக்குது.


ரொட்டித் துண்டு போடலாம்
குருணை, தானியம் போடலாம்.


குட்டிக் கிண்ணங்களில் நீரூற்றி
குருகுகள் தாகம் தணிக்கலாம்.


கோடை காலம் தீரும்வரை
கொள்கையொன்று கொள்ளுவோம்


பறவைக் கூட்டம் பசியாற
பரிந்தே உதவிகள் செய்திடுவோம்.


ஞாயிறு, 11 டிசம்பர், 2016

தேடுதல் வேட்கை.

அலையாடுகிறது கடல்
தேய்ந்து ஒலிக்கின்றன
வார்த்தைச் சத்தங்கள்
தனக்குள் அமிழும் எண்ணங்கள்
குமிழாய் மறைகின்றன
சதுப்பாய்க் கிடக்கிறது மனம்
கடிகாரமுட்கள் தன்னைச் சுழற்றிச்
சவுக்கைகளாய்ச் சத்தமிடுகின்றன.
தேடுதல் வேட்கை
துரத்திக் கொண்டிருக்கிறது.
தூரப்போய்க் கொண்டிருக்கிறேன்
முகநூலிலிருந்தும்.

சனி, 10 டிசம்பர், 2016

அவள் இருந்த இடம்.

வாய்க்கால்களின் கொண்டைகளில்
வண்ணக் கண்ணாடித் தாள்கள்.
 
தவித்து மூச்சு வாங்குகிறாள்
நீராட்ட வருபவள்.


மண்ணள்ளிச் சேர்த்த கட்டிடங்கள்
மிதந்து கொண்டிருக்கின்றன
நதியின் கருப்பைக்குள். மலர்ந்திருந்தவளை மலடாக்கிவிட்டு
நீர்ப்புணர்ச்சி வேண்டித் தவம்.நீர்த்துப் போய் நீளமாய் வீழும்
அவள் கண்ணீர் கலங்கலாய்த்
தலைகுப்புற வீழ்கிறது கடலுக்குள்.நீராடுமுன் கைநிறைய நீரள்ளி
அவளுக்கும் அளியுங்கள் பிண்டம்.இது அவள் இருந்த இடம் என
தடம் குறித்து வைப்போம் வரைபடங்களில்.

வியாழன், 8 டிசம்பர், 2016

வெய்யில் காய்தல்.

வத்தலும் ஊறுகாயும்
காய்ந்த நடுவாசலில்
ஒரு நாய்க்குட்டியைப் போலச்
சுருண்டிருந்தாள் அவள்.
கைகளும் கால்களும் மடிந்து
உடல் ஒரு கம்பிளியாய் நெகிழ்ந்திருந்தது.
காலையும் மாலையுமற்ற குட்டை மதியத்தில்
குழியாடியாயும் குவியாடியாயும்
அவள் முதுகில் குதித்து
நடுவாசலில் தப்பித்து ஓடிக்கொண்டிருந்தது வெய்யில்.
காய்ச்சலில் உஷ்ணத்தோடு
நீண்ட பெருமூச்சை
இழுத்துத் திருப்பும் கணம்
அவள் நோக்கி நீண்ட
பாட்டியின் கைகளுக்குப் புலப்பட்டது
அவள் வெய்யிலைக் காயவைத்துக் கொண்டிருப்பதாக.

எதிர்கொள்ளுதல்

அடித்துப் பெய்கிறது மழை
பதைத்துக் கிடக்கிறது மனம்
நடுங்கி ஒன்றை ஒன்று
தழுவிக் கொண்டிருக்கும்
பால்கனிச் செடிகளை
அவற்றின் உலகத்தில் விட்டு
கதவைச் சாத்திக் கொண்டு வந்தேன்
எல்லாவற்றையும் எதிர்கொள்ளட்டுமென.

புதன், 7 டிசம்பர், 2016

ஊராத எறும்புகள்.

கைகளில் கடித்துத்
தப்பித்த ஒரு எறும்பை
உற்றுப் பார்த்துத்
தேடத் தொடங்கியதில்
தரையெங்கும்
கண்களுக்குள்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
ஊராத எறும்புகள்.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

முள்.

ஒரு முள்ளை
எடுப்பதற்கான ப்ரயத்தனம்
கொலையைவிடக் கொடுமையானது

ஒரு ஊக்கோ முள்வாங்கியோ
ரத்தம் பாராமல் திரும்புவதில்லை
ஒடிந்த முள்ளுடன்.

எப்போதும் எடுத்தோமோ இல்லையோ
என்பதறியாமல் ரத்தம் சிந்தும்
முட்களுடன் வாழ்கிறோம்

தொட்டிச் செடிகள் மட்டுமல்ல
மாடிப்படிகளின் வழவழத்த மரக்கைப்பிடிகளும்
முட்களான சிலாகைகளுடன் காத்திருக்கும்

எதவறியாமல் எல்லாவற்றையும்
நம்பும் கரங்களுக்கு அவை
முட்களைப் பரிசளிக்கத் தவறுவதேயில்லை.

நோகாத குயில்

சொல்பேச்சு கேட்பதில்லை
கடுக்கிறாள் அக்கா
கத்திக் கத்தி வயிறு புண்ணாப் போச்சு
கோபிக்கிறாள் அம்மா
எதையும் காதில் போட்டுக் கொள்வதில்லை
சலிக்கிறாள் மனைவி
கேளுப்பா கன்னம் பிடித்துக்
குழைகிறாள் மகள்.
இடையறாது கூவிக் கொண்டிருக்கிறது
யாரையும் நோகாது குயில்

வியாழன், 1 டிசம்பர், 2016

ஃபிடிலின் அளவு துயரம்.

ஃபிடிலின் அளவு துயரம்
தேய்ந்து தேய்ந்து வழிகிறது.
நிறுத்தமுடியா விரல்கள்
தோய்ந்து தோய்ந்து துடைக்கின்றன
மனக்கசிவின் ஈரத்தை.
சதுர நடனங்கள்
கொண்டாட்டங்களுக்கானவை.
மாமிசம் அறுக்கும் ரம்பங்களிலிருந்து
நீலநதியாக கருமைத் துண்டாக
நழுவிவிழும் தண்டவாளமாக
இறக்கை உதிர்க்கும் பறவையாக
ஓய்துதிரும் நட்சத்திரமாக
வீழ்ந்துகொண்டே இருக்கிறது
மடிந்து மடிந்து மனங்கொள்ளாமல் பேரிசை.

எல்லைச்சாமி

நீலத்தின் படிமங்கள்

நீர்த்து வெளிராகின்றன.

பசுமை மஞ்சள் ஆரஞ்சு

எல்லைக் கோடுகள்தாண்டி

செஞ்சினம் கொண்டும்

அழிக்கக் கிளம்புவதில்லை எல்லைச்சாமி

கருக்கருவாளும் குதிரையும்

துணைகொண்டு துண்டித்துக் கொண்டிருக்கிறான்

ஊர் எல்லையை இருப்பிடமாய்.

வெய்யிலும் மழையும்

சுதந்திரமாய்த் தழுவும் அவன் நோக்கி

சல் சல் என்று மனம் ஓடுகிறது.

ஆலமும் அரசும் கோலோச்சும்

சாமியவன் காலடியில் வருடம் ஒருமுறைதான்

வாய்க்கிறது பலியாடாய்க் கிடக்க.

ரத்தம் ருசிக்குமவன் சன்னதத்தை

எதிர்நோக்கிக் கிடக்கிறது எந்நேரமும் மனம்.புதன், 30 நவம்பர், 2016

சேதி

வருவதும் போவதும்
போவதும் வருவதும்தான்
என்றானபின் பயணக் கணக்கென்ன.. ?
ஒவ்வொருதரமும்
ஒரு துயிலும் விழிப்புமாய்ச்
செல்கிறது காலம்.
ஒரு வித்யாசம்
உன் பயணப் பொழுதுகளில்
நீ தூங்கிக் களிக்கலாம்.
அதே பொழுதுகளில்
நான் விழித்தே கடக்கிறேன்,
நீ உனக்கான இருப்பிடம்
சென்று அடைந்த சேதி அறிய.

செவ்வாய், 29 நவம்பர், 2016

கிடங்கு.

ஒரு வெறுப்பு
ஒரு கோபம்
ஒரு சந்தேகம்
ஒரு எரிச்சல்
ஒரு எண்ணத்திரை
ஒரு கண்ணீர்த்துளி
இணைக்கிறதா
பிரிக்கிறதாவெனப் புரியாமல்
பொத்திவைத்துக் கொள்
உள்ளக்கிடங்குள்.
ஆரம்பமும் முடிவும்
இவற்றுள்ளே சுழல்கின்றன
உன்னையும் சுழலவிட்டு

வியாழன், 24 நவம்பர், 2016

ஆன்மா.

உயிர் தழுவும் அணைப்புகளும்
உயிர் குடிக்கும் முத்தங்களும்
ஆவி சோரச் சேர்ந்ததை
வெளிப்படுத்தப் போதுமானதாயில்லை.
ஓருயிராய்க் கலக்க
உடல் எடுக்கும் ப்ரயத்னத்தில்
விலகியும் வெருண்டும்
மருண்டும் நிற்கிறது ஆன்மா.

*********************************


பொருதோம் நாம் அன்று
பொருதோம் நாம் இன்றும்..

புதன், 23 நவம்பர், 2016

களப்பலிகள்

களப்பலிகள் கேட்பதில்லை
காதல் யுத்தம்.
சதுரங்கச் சிப்பாயல்ல
சாய்த்துவிட.
எத்திக்கும் சித்திக்கும்
சாதுர்ய ராணிக்குத்
திசைகள் புரிவதில்லை
பேதமையாகிறாள்.
முற்றுமுணர்ந்த ராஜாவின்
கம்பீரப் பார்வை
ராணியின்பக்கம்
மௌனமாய்.

செவ்வாய், 22 நவம்பர், 2016

சொற்சித்திரங்களும் ஞாபகங்களும்

நிலையற்ற சந்திரனையும்
நறுங்கும் சூரியனையும் தூரப் போட்டு
நட்சத்திரங்கள் சிதறும்
சொற்சித்திரங்களில்
லயிக்கிறது பூமி.

*************************************

விதையாய் முளைத்துப் பெருகும்
உன் ஞாபகங்களை
எப்படிப் புதைப்பது.

வலசைப் பறவையும் கடைசி உரையாடலும்.

நீர் நிறைய மீனிருக்க
மனங்கொத்திப் பறக்கிறது
வலசைப் பறவை.

*****************************

கடைசி விருந்தைப் போல
மறக்காத ஓவியமாகிறது
கடைசி உரையாடலும்.

திங்கள், 21 நவம்பர், 2016

ரசவாதம்

காளி என்றால் காளிதாசன் என்கிறாய்.
பேச்சி என்றால் பிரியன் என்கிறாய்
யட்சி என்றால் என்ன செய்வாய்
யட்சனாவாயா  ராட்சஸா.

ஞாயிறு, 20 நவம்பர், 2016

துருவங்கள்.

பனிப்பாறைகள் சூழ்ந்த தீவிலும்
தனியே வாழும் பெங்குவின்கள்.
தனித்தலையும் வால்ரஸ்கள்.
புது யுக வாழ்வு..
தனித்துவம் தான் தத்துவம்
இறுகிக்கிடக்கிறது
தாம்பத்யக் குகை..
வெளியேற வழியற்று
உறைந்து கிடக்கின்றன மீன்கள்
சூரிய வெப்பம் சாட்டவிடாமல்
இருண்டு கிடக்கிறது
தென் துருவமும் வடதுருவமும்

வெள்ளி, 18 நவம்பர், 2016

தரிசனம்

சூரியனைப் போல

வருவதும் போவதுமாயிருக்கிறாய்.

என் கவனம்தான்

பிசகிப் பிசகிப் போகிறது.


சில நேரம் ஜன்னலிலும்,

சில நேரம் மரக்கிளை ஊடேயுமாக

வந்து செல்கிறது உன் தரிசனம்.


அவ்வப்போது என் விழிகளிலும்

நிலவாய்ப் பிரதிபலிக்கிறது

உன் சூர்யப்பார்வை.


இருவரும் அற்ற தருணங்களில்

நட்சத்திரங்களாய்

மின்னிக் கொண்டிருக்கிறது நினைவு.


வியாழன், 17 நவம்பர், 2016

சூரியப் பார்வை.

நழுவி விழும் வெய்யிலைப் பிடிக்கிறாள்
ஈரத் துணிகளில்
தேய்த்த பாத்திரங்களில்
ஊறுகாய் ஜாடிகளில்
வத்தல் டின்களில்
தொட்டிச் செடிகளில்

நிரம்பி விழும் வெய்யில்
வீட்டிலிருந்து தப்பி
சாலைகளில்ல் குதித்தோடுகிறது
நதிகளில் மின்னலைப் போல

ஒருமுறை குவியாடியில் குவித்து
ஒற்றைக் காகிதத்தை எரித்தபோது
அவள் சூரியனைப் பிடித்துவிட்டதாகத்தான் பட்டது

நெசவு செய்த மஞ்சள் கம்பளத்தை
உருவிக் கொண்டு
பதறி ஒளியும் சூரியன்
மெல்ல எட்டிப்பார்க்கும் அதிகாலையில்
அதிசயமாய் நமஸ்கரிக்கிறாள்.

கண்ணாமூச்சியாய்ப் பொத்திக்
களவுத்தனமாய் ஒற்றைக் கண்விரித்து
இடுவலில் அவள் பிடித்த சூரியன்
சிக்கிக் கொண்டு துள்ளிவிழுகிறான்
அவளின் சூர்யப் பார்வையாய்.

வாசமொழி.

பூக்கள் மலர்கின்றன
வாசமொழி பேசி..
புரியவில்லை
ஆனாலும் நுகர்கிறேன்


*****************************


பேரன்புக் காற்றுப் பட்டாலும்
நடுங்கிச் சிலிர்க்கிறது
தோட்டத்தின் மூலையில்
புதிதாய்ப் பூத்திருக்கும்
ஒற்றைப்பூ.

*****************************


புதன், 16 நவம்பர், 2016

ஞாபக மாலை.

உடனே சொல் உடனே சொல் ..
மழலை மாறா
சிறுபிள்ளையாய்த் தொணதொணப்பு
இன்றே இறந்தா போகப்போகிறேன்
உடனே சொல்லிவிட்டுச் சாக.

************************************

காலக் கெடிகாரம்
ஞாபக மாலையின் இதழ்களை
ஒவ்வொன்றாகப் பிய்த்துப் போடுகிறது
எல்லாம் உதிர்ந்தபின்னும்
அது சரத்தில் இல்லை
என்றாகிவிடுமா..

நீர்க்காதல்.

மழையைப் பார்த்ததில்லை
வாசல் மூடி வசிக்கும் சிலர்
அவள் கோபத்தை தாபத்தை
முனகலை சிணுங்கலை

குழந்தையாய்க் குமரியாய்க்
காதலியாய்க் கனிந்தவளாய்
வீடு சுற்றி ஆடுமவள்
நடனம் கண்டதில்லை

முகம் மூடிச்செல்லும்
மனிதர்களைத் தவிர
மிச்சமுள்ள எல்லாவற்றையும்
தழுவிச் செல்கிறாளவள்.

குடை விரித்துத் தடைவிரித்துக்
கடந்து செல்வோருக்குச் சொல்ல
எந்த ரகசியமுமில்லை அவளிடம்.

அவள் முணுமுணுப்பை
உற்றுக் கேட்போருக்குச்
சொல்லிக் கொண்டிருக்கிறாள்
ஜீவரசம் ததும்பும் தன் நீர்க்காதலை.

திங்கள், 14 நவம்பர், 2016

நீர்மை

காற்றின் காதுகளில்
மிதந்து இறங்கும்
இறகு சொல்லும்
வெம்மையை,
ஊனாகி உயிராகிக்
கலந்திருந்த
உண்மையை,
பிரியமனமில்லாமல்
பிரிந்து வந்த
நீர்மையை.

வெள்ளி, 4 நவம்பர், 2016

கண்ணாமூச்சி

பொம்மைகளுக்குள்
ஒளிந்து கிடக்கிறது
பிரிய பொம்மை

பொம்மிகளுடன்
கண்ணாமூச்சியாம்.

ஏறக்கட்டப்படுகிறது பரணில்.
கொஞ்சம் தூசி நல்லது.

புது உடைகள் தேவைதான்
கொலுவுக்கு நாளிருக்கிறது.

பழித்தலும் அழித்தலும்
தெரியாக் கோலாட்டத்தில்
படிகளைவிட்டு ஓடிடப் போமோ

வியாழன், 3 நவம்பர், 2016

ஒத்ததிர்வின் ஓசை

துளித்துளியாய்க்
கரைந்துகொண்டிருக்கிறது
நேற்றைய சம்பவம் இனிப்பாய் .
சர்க்கரைப் பந்தலில்
தேன் மாரி பெய்து
கடைவாய்ப்பல்லில் ஒளிந்து
இதயத்தில் வடிகிறது.
ஒளிக்கும் முகம் களிக்கும்
உள்ளும் புறமும் நெகிழும்
ஒத்ததிர்வின் ஓசை
ஒன்றோடொன்று இயைந்து.

புதன், 2 நவம்பர், 2016

இரணிச் சிம்மம்.

என்னில் இரை எடுத்து
என்னில் இறை எடுக்கிறது
இரணிச் சிம்மம்

****************************

எதிர்ப்படுவதையெல்லாம்
வலியில்லாமல்
ப்ரசவிக்கிறது
நிலைக்கண்ணாடி

****************************

பூக்குடலைத் தூரப் போடு
பாமாலைகளைக் கிழித்தெறி
சரிக்குச்சரி சமராடு
ருத்ரம் உன் திருக்கோலம்
ரத்தம்தான் நிவேதனம்
நீ சரபமல்ல. மஹா ப்ரத்யங்கிரா.

*****************************

தப்பிதமான கற்பிதங்கள்
காவு வாங்கி விடுகின்றன,
சில சமயம் சரிவரக் காணாத உண்மையை  ,.
சில சமயம் தறிகெட்டலையும் மனதை.

திங்கள், 31 அக்டோபர், 2016

பேய்ச்சாமி

தினம் செல்லும்
ரயிலின் கூவல் ஓலத்தில்
கவிழ்ந்து கிடக்கிறது
ஒரு செம்பருத்தி.,
ரத்தச் சூல் பெருக.

திருவனந்தலில் கொய்து
கருக்கருவாளில் முடிந்து
பேய்ச்சாமி கொத்தியிருக்க
கையறு நிலையில்
உன்மத்தமாய்ப் பெருகிறது
உப்புவெள்ளம்.

அழகா.

காம்பழகா
மொட்டழகா
கண்விரிக்கும் சூரியன்முன்
நாணிக் கவிழ்கிறது
புதிதாய்ப் பூத்த செடி.

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

பூதம்.

தனிமையில் தோயும் போதெல்லாம்
அலாவுதீனின் பூதமாய் எழுந்து
என்னைத் தின்னக் கேட்கிறது
உன் நினைவு.
********************************

துக்கத்தை
இரவு அதிகமாக்குகிறது.
தூக்கம் தொலைத்துவிடுகிறது.

வியாழன், 27 அக்டோபர், 2016

முதுமையும் நிலவும்.

மிகக் கம்பீரமாகத் திகழ்ந்தவர்களையும்
குழந்தைகளாக்கி விடுகிறது
முதுமை.

***********************************

பகல்கம்பளம் சுருட்டி
இரவுப்பாய் விரித்துக் கொண்டது
நிலவு.

************************************

புற்களுக்கு வியர்வை
பனித்துளி
பூக்களுக்கு வியர்வை
தேன்துளி.

பொய்ச்சவுக்கைகள்.

மறைக்க மறைக்க
முகம் இருளடைந்துவிடுகிறது
பொழுது சாயச் சாய
பொய்ச்சவுக்கைகள் விரித்தாடும்போது
சூரியனும் கீறல்தோற்றத்தோடு.

புதன், 26 அக்டோபர், 2016

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாய்.

 சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாய்.

திரை அசைந்துகொண்டிருக்கிறது
துளசி மணக்கும் உன் நீள்மார்பில்
நானனிந்த பூக்களின் வாசம்.
உறங்குகிறாய் தலைசூடும் உள்ளங்கைகள்
எனைஅழைக்கும் தாமரையாய்.
பிரிந்தறியா நமது கனவொன்றில்
இதழ் இதழாய் இதம் பதமாய்
விளையாடிய சிரிப்பொன்று உதிர்கிறது
ஆண்டவளாய்ப் பிச்சியாய்க் கோதையாய்க்
கோர்த்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாய்.

சொல் மின்னல்

சொல் மின்னல்

கண்களிலிருந்து கைகளுக்கு
இடம் பெயர்கிறது ஒரு நதி
கவலையாய்க் கூப்பியிருக்கும்போது.
ஒற்றைச் சொல் மின்னலில்
கருணை மழை கிளைவிடலாம்
நம் கரங்களின் சங்கமத்தில்.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

குளிர்தல்

உன் பிரியமும் என் பிரியமும்
ஒரு கூழாங்கல்லில்
சந்தித்துக் கொண்டன
நீரோட்டமும் எதிர்நீரோட்டமுமாய்
குழம்பிச் சுருண்ட அது
கூர்மையிழந்து குளிர்ந்திருக்கிறது.

திங்கள், 24 அக்டோபர், 2016

நிலையற்றது.

ஜன்னல் கதவைத்
தட்டிக் கொண்டிருக்கின்றது ஒரு இலை.
திறக்கவோ  மூடவோ
நிலையற்ற தாழ்ப்பாளோடு
காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றது கதவு.

மீட்பில்லாதது.

எவ்வளவு கவிழ்த்தாலும்
ஒரே மாயக் குடுவையில்
திரும்பத் திரும்ப நிரம்பும் யுக்தி
உனக்கேயானது

***************************

ப்ரியத்தைப் போலக் கனமானதும்
சுயவெறுப்பை விளைவிக்கக்கூடியதும்
மீட்பில்லாததும் எதுவுமில்லை.

******************************

முகம்பார்க்கும் கண்ணாடியாய்
தவிர்க்கமுடியாமல்
திராணியற்றுத் திணறுகிறது
எதிர்படும் முகங்களைப்
பிரதிபலிக்கும் முகம்.

**************************

யுக்திகளும் யூகங்களும்
யுத்தங்களும் நிரம்பியவைதான்
யதார்த்தங்கள்.

வெள்ளி, 21 அக்டோபர், 2016

மனமீனும் பரந்த கடலும்

வார்த்தைக் குடுவைக்குள்
சிக்கித் திரிகிறது
மனமீன்.

முன்பே விடை கொடுத்துவிடுகிறாய்
இன்னின்னதுதான் நடக்குமென்ற யூகத்தில்
தப்புவதில்லை உன் கணிப்பிலிருந்து எதுவும்
நிகழுமுன்பே முடிவெடுக்கத் துவங்குகிறாய்
என்பதில் தெரிகிறது உன் சாணக்யத்தனம்
முடிவற்ற வட்டக் குளத்தின் சிற்றலைகளாய்

ஒரு சம்பவம் நிகழ்கிறது
சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி
வெய்யிலின் அனல் அலையாய் அலைக்கழிக்கிறது
சாக்பீஸ் கோடுகளால் சாலைச் சித்திரம் வரைகிறது.
ஒரு புடவையைக் கயிறாக்குகிறது.
கரிக்கட்டையாய் வேகவைக்கிறது.
ஒரு குளம் சிலந்தி வலைபோல் ஈர்க்கிறது.
உறைந்த ரத்தம் விழி நரம்புகளை முறுக்கேற்றி
வாழ்ந்தபோது சொல்ல இயலாக் கோபத்தைத் தெறிக்கிறது.
ஈனத்தனங்களைச் சமாளிக்கமுடியாமல் சமாதியாகிறார்கள்.
அடையாளச் சாம்பலைச் சுமப்பவர்கள்
வீட்டின் வெளியேயே வைக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்களை.
தீர்த்தமாடச் செல்பவர்களின் முங்குதலாய்க்
கழுவிவிடுகிறது ஒரு பரந்த கடல் முன்னெச்சங்களை.
கரையேறுகிறார்கள் கரை ஏறமுடியாதவர்களைக்
கரைத்துக் கழித்த கழிவிரக்கத்தில்.
அலை அடித்துக் கிடக்கிறது ஒன்றின்மேல் ஒன்றாய்.


முளைத்தல்.

எத்தகு விதைகளும்
முளைப்பதில்லை
ஒரு மரத்தை வெட்டிய இடத்தில்.

*********************************

மொழிகளை விட்டுப் பிரிவது
எளிதானதல்ல
அதைவிடத் துயரம்
மொழிகளற்ற
விழிகளைப் பிரிவது. 

புதன், 19 அக்டோபர், 2016

புத்தகத் திருவிழா போகலாம். :-


புத்தகத் திருவிழா போகலாம். :-

புத்தகத் திருவிழா போகலாம்
பொம்மைப்படப் புத்தகங்கள் வாங்கலாம்.
புதுப் புதுச் சேதிகள் கற்கலாம்
பரிசுப் பொருளாய்க் கொடுக்கலாம்.

பாட்டி சொன்ன கதைகள் இருக்கும்.

தாத்தா சொன்ன விடுகதை இருக்கும்

அக்கா போட்ட புதிர்க்கணக்கு இருக்கும்

அண்ணன் சொன்ன திகில்ப்படமிருக்கும்.

வாத்துக் கூட்டம் இல்ல நாம
ஒழுங்காய்க் கற்று வாசிக்கும் கூட்டம்
மடுவில் விழும் ஆட்டுமந்தை இல்ல நாம
மந்தம் போக்கும் அறிவுக் கூட்டம்.

நல்ல நல்ல புத்தகங்கள் வாங்குவோம்
நாடு நகரம் மக்கள் பத்தி வாசிப்போம்
நல்வழிப்படுத்தும் விஷயங்களை சுவாசிப்போம். 
புத்தகங்கள் நமக்கு என்றும் நல்ல நண்பனாம்

செவ்வாய், 18 அக்டோபர், 2016

திரிவேணி :-

திரிவேணி :-

ஒரு பூவைபோல
உன்னைப் பிரிகின்றேன்.
உன் காலடிமண்ணை முத்தமிட்டபடி.

கம்பீரச் செடியாய் நின்றிருக்கிறாய்
உதிர்ந்த கண்ணிகள்
எண்ணிக் கொண்டு.
.
உன்னடியைச் சுற்றிலும்
என்னைப் போன்ற பூக்கள் கண்டு
நானும் உரமாகிறேன்.

அடுத்து ஒரு பூஜென்மமிருந்தால்
சந்திப்போமெனச்செல்கின்றன
மகரந்தச்சேர்க்கை வண்டுகள்.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

மொக்கு

விடிகிறது ஒரு காலை
பூக்கின்றன உன் நினைவுகள்;
ஒளிவட்டமிடுகிறது மகிழ்ச்சி
தலையைச்சுற்றி வெய்யிலைப் போல.

நிழலைக் கூட காலடியில்
அடக்குகுறது உன் ஞாபகத் தகிப்பு.
கசகசக்கும் உன் நினைவின் வாசத்தோடு
கரைகிறது மாலை.

வண்டுகளாய் முத்தமிடுகின்றன
அந்திச்சூரியனை மேகங்கள்.
விரைந்து வீழ்கிறது
தப்பிய முத்தங்களைத்
துரத்திப் பிடித்தபடி இரவு.

தொடர்கிறது உன் ஞாபகம் மட்டும்
சுருளும் இருளுடனும் கூட.
விடியலில் உன்னைப் பூப்பதற்காய்ச்
சூல்கொண்ட தேனுடன்
காத்திருக்கிறது ஒரு மொக்கு

ஓவியக் காதல்

காதலர்களின் கரங்கள் பிரிவதேயில்லை
அவர்களின் காந்தப் பார்வையும்.
நூற்றாண்டுகளாய் நிலைத்தே இருக்கின்றன
கண்காட்சியில் கண்ட ஒரு ஓவியத்தில்.

வியாழன், 6 அக்டோபர், 2016

நினைவு அழிப்பான்.

எச்சரிக்கையாயிருந்தும்
படர்த்துகிறது கருமையை
நினைவு அழிப்பான்.

புதன், 5 அக்டோபர், 2016

எத்தனை எத்தனை..

எத்தனை பொய்கள்

எத்தனை பொய்கள்
சித்தம் பேதலிக்கும்
எத்தனை பொய்கள்.

எத்தனை வார்த்தை
எத்தனை வார்த்தை
அத்தனை குளிர்நஞ்சு
எத்தனை வார்த்தை.

எத்தனை உண்மை
எத்தனை உண்மை
மத்தனை மதியள்
எத்தனை உண்மை
Related Posts Plugin for WordPress, Blogger...