எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 செப்டம்பர், 2015

ப்ரிய ஸ்நேகிதி



ப்ரிய ஸ்நேகிதி

பெண்ணே
நீ நின்ற இடமெல்லாம்
கோடுகள் மட்டுமே
மிச்சமிருந்தன.
பிடிக்காத இடமிருந்து
ஆவியாகும் வித்தையை
எங்கிருந்து கற்றாயடா ?
போதும் உன் அலப்பரை
கன்னத்திலறைவேன்
மனம் விரித்துக் காட்டி
ப்ரியம் அறிவித்து
அரவணைத்து
மனசு சாந்தப்படுத்து.

-- 85 ஆம் வருட டைரி. 

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

கண்மை டப்பி



கண்மை டப்பி.

பக்கத்துவீட்டுப் பெரியநாயகி
பட்டணம் போயி பொகையிலைவித்து
வித்த துட்டுக்கு வாங்கிவந்தாளாம்
கண்மை டப்பி.
தெனம்தெனம் அப்பிக்கினு
கடைத்தெருவுக்குப் போகையில
கண்டவுக எல்லாம் கண்ணழகு
கண்ணழகுங்க கரைஞ்சுவந்த
காத்துல விஷயம் நாத்துநட்ட
சின்னக்கருப்பாயி காதுக்குப் போனுச்சாம்.
கருப்பாயி கடைஞ்செடுத்தா கண்ணப்பனை.
அவன் எங்க போவான் துட்டுக்கு.
கஞ்சிக்கே வக்கில்லை.
கஞ்சக் கண்ணப்பன் கொஞ்சினான்.
“ அடி என் கறுப்பழகி.!
உன் நிறத்துக்கு மை ஈடாகுமான்னு .! “
உடனே பூரிச்சாளாம் சின்னக்கறுப்பாயி
அய்ய நான் இம்புட்டு நெறமான்னு.

---  85 ஆம் வருட டைரி. 

மெல்லத் தமிழ் இனி..



மெல்லத் தமிழ் இனி.. :-

முத்தமிழும் முக்கலையும்
மூவேந்தர் காத்தநாடு
சங்கம் அமைத்துத்
தங்கத்தமிழ் வளர்த்த நாடு.
முக்கனியைப் பிழிந்துதரும்
தக்க மதுரையே ஈடு. !
பாத்திமா அன்னைபோல்
( ஃபாத்திமா விருட்சத்தில்
தமிழ்க்குயில்கள்
எந்நேரமும் இசைபாடும்.)
மற்ற கல்லூரி அன்னைகளும்
முத்தமிழ் விழாவைத்துத் தம்
தமிழ்க்குழவியைச் சீராட்ட
ஆரம்பித்தால் தமிழ் வளரும்.
அதுவரையில் பொறுக்க வேண்டும்.
பாரதியின் வாக்குப் பொய்யாகட்டும். !

மெல்லத் தமிழ் இனி –2

காணும் இடங்கள் தோறும்
முத்தமிழ் வித்தகர் கூட்டங்கள்.
மேடை ஏறிப்பேசும்
மேதாவிக் கூட்டங்கள்
மேதகு தன்மையை விட்டுவிட்டுக்
கீழ்த்தர ஜோக்குகள் அடிக்கின்றன.
மையக்கருத்து என்னவென்றே
மறந்துபோய் நிகழ்த்தும் வழக்காடுமன்றம்.
மக்களுக்கென்ன புரியப்போகின்றது
என்கின்ற நினைப்பா?
காதலரையும் கால் அதரையும்
மாதே வா மஞ்சுளாவாவையும் ஆராய்ந்துகொண்டு
இருந்தால் மெல்லத் தமிழ் இனி..?
பாரதியின் வாக்கு பலித்துவிடுமோ ?

-- 85 ஆம் வருட டைரி. 

திங்கள், 21 செப்டம்பர், 2015

85 ஆம் வருட டைரியில் ஃபாத்திமா அம்மா



Life is a gift from God

Whatever we posses, whatever we receive, whatever awaits for us – they are all from His hands. He is the alpha & Omega. He is everything.

Surrender everything to him. Ask him to show you his plans for you.

He has made you a talented person, a loving person.

May God abide with you at all times, especially when human persons fail. May you be strong in faith to the last day.

With love,
Fatima.
----  85 ஆம் வருட டைரியில் ஃபாத்திமா அம்மா எழுதிக் கொடுத்தது.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

குளிர் உணவுக் கவிதை.

தீராத சொற்கள் சுமந்து
உலா வருகிறது என் கவிதை
எதை எடுப்பது எதை விடுப்பது
குழப்பத்தில் பறந்தலைகின்றன
மகரந்தக் கால்களோடு தேனீக்கள்.
ராணித் தேனீவசமிருக்கும்
தேனடைக் கோட்டையிலிருந்து
எப்போதோ சாரலாய்ச் சிதறிய 
தேன் துளிகளை
எறும்பின் வாய்கொண்டு
குளிர் உணவுக் கவிதையென
மனப்புற்றில் சேர்க்கிறேன் .
நுணர்கொம்புகள்
வெவ்வேறு வசமிழுக்க
கால் அப்பும் தேன்திப்பி
நிரப்புகிறது புற்றையும் என்னையும்.
 

சனி, 19 செப்டம்பர், 2015

உன்னைப்பார் முதலில்



நீ உன்னைப்பார் முதலில் பிறகு..

உனது முதுகின் அழுக்குகள்
முகபடாம் களையப்படாமல் இருக்கும்போது
அடுத்தவள் முதுகிலென்ன அழுக்காராய்ச்சி ?

த்தூத்தேறி.! வெட்கமாயில்லை.
உங்களுக்கெல்லாம்.!
அடுத்தவள் அந்தரங்கத்தைத்
தரம்பிரிப்பது
தரங்கெட்ட செயலென்று.
பெண்ணைப் பெண்ணே வர்ணித்து
நிர்வாணித்துப் பார்க்கும்
கேவலத்தை விட
கீழ்த்தரத்தை விட
ஒரு பெண் ஆணை நேசிப்பது
புனிதமானது தெய்வீகமானது.

உங்களுடைய சங்கமங்கள் வேண்டுமானால்
சந்தேகங்களுக்காளாகலாம்.
ஆனால் எங்களுடையவை
சந்தேகத்தின் சல்லிவேரைப்
பதம்பார்த்து ருசித்து முடித்தவை..

யார் சொன்னது உங்களுக்கு
நேசிப்பது பாபமென்று. ?
பாபத்தின் மறுபிறவிகளே
என் பாக்களில்
கழித்துவிடப்பட்ட எழுத்துக்களே..!
என் அன்புப் பாதத்திற்குத்
தலைவணங்காத
உடைந்த ஊவாமுட்களே. !
உங்களது முள்ளுத்தனத்தை
உங்களைக் கொண்டே முறியவைப்பேன்.

சும்மா இருப்பவளிடம்
சவால் விட்டால் உங்கள் சிண்டு
ரெண்டுபட்டுப் போகும்.

நாங்கள் சாக்கடையில்
வீழ்ந்த மீன்கள் என்பதை
ஒப்புக்கொள்ள வேண்டுமானால்
அந்தச் சாக்கடையே நீங்கள்தானென்பதை
உங்களுக்கு உணர்த்தவேண்டியிருக்கும்.
எனவே உங்கள் நாற்றம்
எங்களைத் தொற்றிக் கொண்டதில்
வியப்பிற்கிடமேது ?
( இது எப்பிடி இருக்கு ?)

-- 85 ஆம் வருட டைரி.
Related Posts Plugin for WordPress, Blogger...