எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

சூரியப்பறவை..

இரவுக் கூட்டில் சோம்பல் முறித்து
கதிர்ச் சுள்ளிகள் தெறிக்க
வெளிச்ச இறக்கைகள் விரித்து
பூமியின் ரகசியங்களை
ருசித்தபடி பறக்கிறது சூரியப் பறவை....!!!

நத்தை மேகம்..

நத்தை மேகம்
அவ்வப்போது தலை நீட்டி
மழையாய் ஊர்ந்து கொண்டே..

செவ்வாய், 27 டிசம்பர், 2011

அன்புச் சிறை..

இறக்கைகள் உண்டு..
பறக்க முடியவில்லை..
உன் அன்பெனும் சிறையில் நான்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

மின்மினிப்பூக்கள்..

இருள் மரத்தில் பூச்சொரியும்
நெருப்புப் பூக்களாய்
மின்மினிப் பூச்சிகள்.

மெழுகுக்குள விட்டில்..

பார்வைத்தீயெரிய
மெழுகுக்குளமாய் ஈர்க்கிறாய்..
மூழ்கப் பாயும் விட்டிலாய் நான்..

சனி, 24 டிசம்பர், 2011

இனிப்பு ஈ..

விரட்ட விரட்ட ஈயைப் போலவே
சுற்றுகிறது உன் நினைவு..
என்னை இனிப்பாக்கி..

வியாழன், 22 டிசம்பர், 2011

சில்வண்டுகளின் சேர்ந்திசை..

உன் அருகாமையற்ற இரவுகளில்
சில்வண்டுகளின் சேர்ந்திசை
என் துணையாய்..:)

புதன், 21 டிசம்பர், 2011

பொன்வண்டுக் கண்கள்..

நினைவுப் பெட்டிக்குள்
ரகசியமாய் ஒளிந்து கிடக்கிறது
நான் பதுக்கி ரசிக்கும்
உன் பொன்வண்டுக் கண்கள்..

செவ்வாய், 20 டிசம்பர், 2011

ஹெலிகாப்டர் பூச்சி.

ஹெலிகாப்டராய் பறந்து வருகிறது தட்டாரப்பூச்சி..
அதன் வாலில் கட்டிய கயிற்றைப் பிடித்துப்
பறந்து வருகிறார்கள் குழந்தைகளும்.

திங்கள், 19 டிசம்பர், 2011

ஏகப்பூ விரதம்..

எத்தனை பட்டாம்பூச்சிகள் கடந்தன..
நீ மட்டும் சுற்றிக் கொண்டிருக்கிறாயே..
அலுக்காமல்., சலிக்காமல்.
ஏகப்பூ விரதமா..:)

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

துயில் எழுப்புதல்..

இதழ்களில் இதமாய் முத்தமிட்டு
பூக்களைத் துயில் எழுப்புகிறது
பட்டாம்பூச்சி..:)

வெள்ளி, 16 டிசம்பர், 2011

எதிர்வீட்டு வண்ணத்துப் பூச்சி..

அழகு இறக் கைவிரித்தபடி
என் கைப்பூவில் தொற்றி அமர்கிறது
எதிர்வீட்டுக் குழந்தை
வண்ணத்துப் பூச்சியாய்..

திங்கள், 12 டிசம்பர், 2011

சிறகுச் சிறை..

கட்டுப்பாடுகள் நெருக்க
சில சிறையுடைத்துப் பறக்கின்றன.
சில சிறகொடிந்து மரிக்கின்றன.

சூரியப் பட்டாம்பூச்சி..

அணைத்திருந்த இரவை
விடியல் சிறகால் உதறிப்பறக்கிறது
சூரியப் பட்டாம்பூச்சி..

இடப்பெயர்ச்சி;;

நெருங்கி வந்தாய்..
இதழ்களிலிருந்து வயிற்றுக்கு
இடம்பெயர்ந்தன பட்டாம்பூச்சிகள்..:)

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

தாகம்.

தினம் தினம்
இதழ் இதழாய்த் தேடிக்கொண்டே..
தாகம் அடங்கவில்லை
பட்டாம்பூச்சிகளுக்கு...

மனப்பூ...

மனப்பூவில்
தேன்மாந்திக் கிடக்கின்றன
உன் நினைவென்னும் தேனீக் கள்..
.


சனி, 10 டிசம்பர், 2011

புன்னகைப் பட்டாம்பூச்சி:-

புன்னகை
உன் இதழில்
ஒரு பட்டாம்பூச்சியைப் போல
சிறகடித்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்க்கப் பார்க்க
பறந்து வந்து
என் இதழ்களிலும் அமர்ந்தது.

வெள்ளி, 9 டிசம்பர், 2011

ப்ளாக்..BLOCK.

எவ்வளவு போக் (POKE)
எவ்வளவு லைக் (LIKE)
எவ்வளவு கமெண்ட்.(COMMENT)
எவ்வளவு ஷேர் (SHARE)
ஒரு நட்பென்னும் தேரை
இழுத்துச் செல்ல..

ஒரு சின்ன கோபம்
ஒரு சின்ன கருத்து வேறுபாடு
ஒரு சின்ன பிடிவாதம்
ஒரு பெரிய பொசசிவ்னெஸ்.!!!
கண்ணில் நிலைதட்டி
காணமல் (BLOCK) அடிக்கச் சொல்கிறது.

வியாழன், 8 டிசம்பர், 2011

தாய் வாசம்..

பால்வாசம் சுமந்த
பச்சை உடம்புக்காரி
கடந்து போனாள்..
பச்சைப் பிள்ளையாகித்
தாய்வாசம் உணர்ந்தேன்.

உதறப்பட்ட வார்த்தைகள்.

மௌனக்கூடுடைத்து
வார்த்தை சிறகுகளில்
வலம் வரும் பட்டாம்பூச்சிகள்
வீழ்ந்து கிடக்கும்
வெள்ளைத்தாள்களில்
தொத்தி தொத்தி
கிறுக்கலாகின்றன.
நிம்மதியின்மையை
சுமந்த தாள்
தாளமுடியாமல்
காற்றில் தலைதிருப்பி
உழன்று கொண்டிருக்கிறது,
உதறப்பட்ட வார்த்தைகளோடு.

புதன், 7 டிசம்பர், 2011

நாடோடி..

மூடிக்கிடக்கும்
மேகக்காட்டின் கீழ்
பூத்துத் திரிகின்றன
பட்டாம்பூச்சிகள்..

வெள்ளி, 2 டிசம்பர், 2011

தேடல்..

நித்தமும்
எதையோ தேடி
அலைகிறது பட்டாம்பூச்சி..
நினைத்தது
கிடைத்து விட்டாலும்
இறக்கையை
முடக்குவதில்லை..

காதல் கூலி..

கண்ணுக்குள்
குடித்தனம் புகும் காதல்
முத்தத்தை
குடக்கூலி்யாய்க் கேட்கிறது.

சிறகின் காதல்..

காதல்
பட்டாம்பூச்சியின்
சிறகைப் போல மென்மையாய்
என்னைத் தொட்டுச் செல்கிறது.
அதன்
வண்ணங்கள் அப்பி
என்
கன்னங்கள் சிவப்பானது...

வியாழன், 1 டிசம்பர், 2011

மழை..

மேகத்தின்
ஈரக்கொண்டை பிரிந்து
உதிரும் நீர்க்கூந்தல்..

திங்கள், 28 நவம்பர், 2011

மலை அரசியின் எழில்..

மலை அரசியின் எழில்
*********************************
பச்சை வர்ணம் போர்த்த தோகை
பாதி சேலை அணிந்த பூவை..
இச்சை வர்ணம் பூசும் பாவை
இமை வருடும் குளிர்ந்த சோலை

ஊசி மரங்கள் மேகத்துணியில்
ஊசிநூலால் கோர்த்த நெசவு...
குறிஞ்சி மலரும் கொய்யாக்கனியும்
குறைவில்லாத கோர்வைக் கசவு..

மலைப்பிலாத..மலைப்பலா.,
உவப்பிலாத களைப்பிலா.
மலை மக்கள் உழைப்பிலா
மனிதநேயம் செழிப்பிலா..

மனிதருக்காய் மலைகுடைந்து
பாதை செதுக்கி., மலை வனைந்து.,
மலை பிளந்து., மலை விழுங்கி,
ராட்சசநாவாய் நீளும் சாலை..


வெட்டி வீசி வீழ்ந்து கிடக்கும்
பச்சை ரத்த மரச் சடலங்கள்..
பச்சையம் உண்ணும் கட்டிடங்கள்
பேய்க்காளான்களாய் முளைத்து..

அணுமின் ஆராய்ச்சிக்குமாய்
உளுத்துக் கொண்டிருக்கும்
உயிர்கருக்கி உருக்கிவிட்டால்.
உருவாக்க முடியுமா இன்னொரு மலை..

நாகரீகத் தொட்டில்கள்
நனைந்து நிற்கும் நெடுநல்வாடைகள்
நாகரீகம் தோய்ந்த மனிதன்
நாசமாக்கும் பாவை விளக்குகள்

கொடிமுந்திரி.,கொளிஞ்சிக்காய்
யானை., காட்டெருமை, வரையாடு.,
பைன்., தேக்கு., எல்லாம் தொத்தித்
தொங்கும் ஆரண்யக் குளிர்..

சோதனை எல்லாம் இங்கெதற்கு
தாய் இவள்.. உடைக்கிறோம்..
அழிக்கிறோம் ..மழைக்கான தடுப்பணையை
மானுட இனத்துக்கு துரோகமாய்..

தேவதையை தெய்வத்தை
வானவளை வனப்பேச்சியை
அவளை அவளாய் வாழவிடுங்கள்
மழையும் மலையும் நமை உய்விக்க..

வெள்ளி, 25 நவம்பர், 2011

எப்ப சின்னப் பிள்ளை ஆகப் போறீங்க..

1. 2. BIG BABOOL - 2 RS.
2. 2. BOOMER - 2 RS
3. 2. COFFEE BITE - 1 RS
4. 2. CENTER FRESH - 2 RS.
5. 2. ALPHENLIBIE - 1 RS
6. 2. HAJMOOLA - 1 RS
7. 2. HINGOLI - 1 RS
8. 1. NESTLE MILKY BAR - 12 RS.
9. 1. KITKAT - 6.50 RS.
10. 2. SPLASH CANDY -
11. 2. JUICY FRUIT ( CHEWING GUM) - 2 RS.
12. 2. MICKY MOUSE -
13. 2. DONALD DUCK -
14. 1. PERK - 10 RS.
15. 2. BONKERS -
16. 2. FUNFLIPS ( ORD) - 1 RS
17. 1. FUNFLIPS PUDINA - 4 RS
18. 1. UNCLE CHIPS - 15 RS
19. 1. RUFFLES LAYS - 15 RS.
20. 2. CRAX 5 -
21. 1. FIVE STAR - 10 RS.
22. 1. POPPINS - 1.50 RS
23. 2. LOLLY POP - 6 RS.
24. 1. BROOKLYN -
25. 1. MAGIC POP - 10 RS.
26. 1. GEMS - 10 RS.
27. 1. POLO - 5 RS.
28. 1. CADBURYS DAIRY MILK - 12 RS
29. 3. TOFFO - 1.50 RS
30. CRAX - 6 - 38 RS. 3 GAMES.

COCACOLA - 2
MAAZA - 2
FANTA - 2
PEPSI - 2.

ஹா ஹா ஹா .. இதெல்லா என்ன சின்னப் புள்ளத்தனம்.. வெலையெல்லாம் எழுதி இருக்குன்னு பார்க்குறீங்களா.. என் பிள்ளைகள் குட்டியாய் இருந்தப்போ டெல்லியில் ஒரு நாள் இதெல்லாம் லிஸ்ட் போட்டு வாங்கித் தின்னமாக்கும்..:)

எப்பப் பார்த்தாலும் மெச்சுர்டாவே பிஹேவ் பண்ணனுமா.. இதை வாங்கித் தரமாட்டேன். அதை வாங்கித் தரமாட்டேன்னு சொல்லணுமா.. ( இதுல ஐஸ்கிரீம் வகையறா இருக்காது அது தனியா ஒரு நாளைக்குபோடுறேன்... ஹிஹி ) கொஞ்சம் அப்ப் அப்ப சின்னப் புள்ளங்களாவும் ஆட்டம் போடலாமே. நீங்க எப்ப சின்னப் புள்ள ஆனீங்கன்னும் பின்னூட்டத்துல சொல்லுங்க..:)

புதன், 23 நவம்பர், 2011

இங்கிலீஷ்டைரி..

*WHEN SOMEONE SEES YOUR EYES THEY WILL SAY YOU ARE IN YOUR FIFTEENS. (YOUNG LAD)

*WHEN SOMEONE SEES YOUR SMILE THEY WILL SAY YOU ARE IN YOUR TWENTYS.( YOUNGSTER).

* WHEN SOMEONE SEES YOUR SHOULDERS THEY WILL SAY YOU ARE IN YOUR TWENTYFIVES.( YOUNGMAN).

*WHEN SOMEONE SEES YOUR PERSONALITY THEY WILL SAY YOU ARE IN YOUR THIRTYS.( YOUNG FATHER).

* WHEN I UNDERGO YOUR LOVE AND AFFECTION I'LL SAY IT ALOUD YOU ARE A "GENTLEMAN"..

ஞாயிறு, 20 நவம்பர், 2011

இப்படியா பதுக்குவது..

தென்றல்கீற்று நிலாத்துண்டுகளை
முத்தமிட்டுச் சரசமாடிய
கிராமத்து இராக்காலங்கள்
ஒற்றைச் சுருள் முடிபோல்
நினைவுகளின் முன் உச்சியில்
நர்த்தனமாடியபோது
நினைத்துக் கொண்டாள்.,
“நகரத்துக் கட்டடச்
சாகசக்காரிகள்
சந்திரனை இப்படியா
முந்தானைக்குள்
பதுக்கிக் கொள்வது ..?” என்று.

வியாழன், 17 நவம்பர், 2011

கொள்ளை..

பார்த்துப் பசியெடுக்கக்
கல் எறிந்தோம்.
மரமேறி ஒன்றிரண்டு
பறித்துத் தின்றோம்.
இன்னுமிரண்டு பறித்து
மடியில்கட்டி ஓடினோம்.
திருட்டு என்று கட்டிவைத்து
உதைத்தார்கள்..
மொத்தமாய்க் கொள்ளையடித்த
குத்தகைக்காரர்கள்

புதன், 16 நவம்பர், 2011

பழசு..

செத்துப்போன பாம்பைத்
தட்டச்சாய் அடிக்காதே..
பிறகு அது
உன் மேலும் என் மேலும்
சதைச்சேறு வீசும்.

ஊராரின் பற்கள் அவலுடன்
அதில் கிடக்கலாம்.
நம் முன்னோர்களை சந்தியில்
நிறுத்தக்கூடிய
ஆதார எலும்புகள் கிடைக்கலாம்.

செத்த பாம்பைத் தூரப்போடு..
தட்டச்சாய் அடிக்காதே..

உன் சரித்திரமும்
என் சரித்திரமும்
அம்பலமாகும்.
மூன்று கோடிப் பற்கள்
நமுட்டுத்தனமாய்ச் சிரிக்கும்..

செத்த பாம்பைப் புதைத்துப் போடு
அது தானாகத்
தோலுரிக்காது.
சதைச்சேறும் அடிக்காது..

ஞாயிறு, 13 நவம்பர், 2011

சின்னச் சிகப்பு ரோஜா..

தத்தித் தவழ்ந்துவரும்
தன்கை பிடிக்க வரும்.
முகத்தைத் திருப்பிக் கொண்டால்
முத்தம் ஒன்று தரும்.

பட்டுப் பாதத்தால் பைய நடந்துவரும்
எட்டிக் கைபிடித்தால் விட்டு ஓடிவிடும்.
சுட்டித்தனம் செய்தே சிந்தை மயக்கிவிடும்.
விட்டுப் பிரிந்துவிட்டால் மனம் வெந்து தணிந்துவிடும்.

சட்டியை உடைக்கையிலே சட்டெனப் பிடித்துவிட்டால்
பட்டுப் பட்டென இமை கொட்டி பயமாய் எனை விழிக்கும்.
சட்டெனக் கிட்ட வந்து குட்டிப் பூப்பூக்கும்
விட்டு விட்டோமென்றால் பல சுட்டித்தனம் செய்யும்.

இனிப்பைக் கொண்டுவந்தால் எனக்கா எனக் கேட்கும்.
இந்தா எனக் கொடுத்தால் இதமாய் நடந்துகொள்ளும்.
இருப்பதை மறைத்துவைத்தால் திருட்டுப் பூனையாய் மாறிவிடும்.
இனிப்பில் எறும்பதுவே இருப்பது காணாமல் குட்டி
இதழுக்குள் திணித்துக் கொண்டு ஆவெனக் கத்திவிடும்.

குழைந்த சோறிட்டு., பருப்பும் நெய்யும் விட்டு,
குழைவாய் மசித்துவிட்டு கிண்ணத்தில் எடுத்துவந்தால்
இனிப்பிட்டுத் தரச் சொல்லி இன்னமும் அடம்பிடிக்கும்.
சக்கரை இட்டுத்தந்தால் தா தா என வாங்கி
காக்கைக்கு ஊட்டிவிட்டு கல கலவெனச் சிரிக்கும்.

அப்பளம் காயவைத்தால் எரியும் அடுப்பினுள் போட்டு விடும்.
வற்றலைப் போட்டு வைத்தால் வாளித்தண்ணிக்குள் நனைத்துவிடும்
அரிசியை ஊறவைத்தால் எடுத்துக் கோழிக்குத் தீனியாக்கும்.

குளிக்க அழைத்துவந்தால் என்னைக் குளிக்க வைத்துவிடும்.
சோப்பை எடுத்துக்கொண்டு என் மூஞ்சியில் தேய்த்துவிடும்.
தந்தைதனையழைத்து என்னைக் கோமாளி எனக்காட்டும்.

அடுத்தவர் வீடு சென்றால் அடங்கி அமர்ந்திருக்கும்.
அரைமணிநேரத்துக்குள் அனைத்தையும் தலைகீழாக்கிவிடும்.
சீச்சீ வாலுக்குட்டி என முறைத்து நானுரைத்தால்
நீதான் அதுவென நயமாய்த் திருப்பிவிடும்.

தாத்தாவுடன் பூஜைசெய்ய பவ்யமாய் போயமரும்.
பூஜை முடியுமுன்னே நைவேத்யம் காணாமல் போயிருக்கும்.
கோபமாய் நான் முறைத்தால்
குறுகுறுவெனப் பார்க்கும்.

பாட்டியின் பக்கம் சென்று அட்டணக் காலிட்டு
மடியிலமர்ந்துகொண்டு சொல் சொல் அக்கதையை
எனத் தொந்தரவு செய்துவிடும்.
அவர் எனைக் கோபித்தால் நானழும் வேளையிலே
பக்கம் மெல்ல வந்து கண்ணீர் துடைத்துவிடும்.

கண்பொத்தி சொல்லுநான் யாரென்று கேள்விகள் கேட்டுவிடும்.
தெரியாதெனச் சொன்னால் முகம் வாடித் தலைகுனியும்.
யாரந்த வானரமா எனக் கேட்டால் கோபம் கொண்டுவிடும்.
ஆகா என் தங்கக் குட்டியென்றால் அகம்புறம் குளிர்ந்துவிடும்.

இருட்டில் விழித்துவிட்டால் இனம்புரியாமல் அழும்.
தட்டிக் கொடுத்துவிட்டால் ரோஜா மொட்டுப்போல் உறங்கும்.
இத்தனை கள்ளத்தனம் இதுவா செய்கிறது என
ஆச்சர்யப்படும் வண்ணம் தூக்கத்தில் புன்னகைக்கும்.

டிஸ்கி:- இதைப் படிச்சு குழந்தைகளாயிட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் குட்டீஸ்...:))

வியாழன், 10 நவம்பர், 2011

கருவிழிகொண்டு கண்களை மூடுவது..

ஒரு அன்பை பொத்தி வைப்பது
ஒரு நெருப்பை மூடுவது

ஒரு மழையை ஊற்றி
எரிமலையை அடக்குவது

ஒரு விதையை ஊன்றி
செடியை மறைக்க முயல்வது

ஒரு பூத்த பூவின் வாசத்தை
காற்று திருடாமல் செய்வது

விரிகதிர் சூரியனை
சல்லாத்துணி கொண்டு மறைப்பது.

கண் மூடிய பூனையாய்
தனக்குள்ளே அமிழ்வது

ஒரு அன்பை அடக்குவது
கருவிழிகொண்டே கண்களை மூடுவது

செவ்வாய், 8 நவம்பர், 2011

ஒசத்தி..

கேட்டோரம்
நாக்குத் தொங்கவிட்டு
நொண்டியடித்துக்
கொண்டிருந்த தோஸ்த்திடம்,
மாடியில்
டன்லப்பின் தாலாட்டிலிருந்து
கண்விழித்து
பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருந்த
பாமரேனியன் கேட்டது.,
“பார். என் அழகு நெக்லஸை.!
உனக்கு இப்படி யாராவது
பண்ணிப்போடுவார்களா “ என்று
தன் கழுத்துப் பட்டியைக் காண்பித்து.

வெள்ளி, 4 நவம்பர், 2011

ஊடல்மழை..

முகம் கருக்க
சண்டையிட்டுக்கொண்டார்கள்.
மின்னலாய்க்
கீறிக் கொண்டார்கள்.
வார்த்தைகள் தடித்தபோது
பளீர் என இடி இறங்கியது.

மழை வடியும் இமைகளோடு
குனிந்திருந்த மரத்தை
தழுவச் சென்ற தென்றலை
குளிர்காய்ச்சலாக்கி
விரட்டியது ஈரக்கிளைகள்..

கூதலோடு திரும்பிய
தென்றலுக்குக்
கூடலைவிட
இன்பமாய் இருந்தது
அந்த ஊடல்..

புதன், 2 நவம்பர், 2011

மேகப் பசு..

மழை மரங்கள்
வெளியில் மின்னல்சரம் எறிய..
மனமும் சூல் கழட்டி
மகரந்தம் கோர்த்தது.

டெரஸ் பாலைகளில்
மழை விதையூன்றி பாத்தி கட்டும்.
மாடியோர விளிம்புகளில்
ஊஞ்சலாடும்.

சபைக்கவிஞர்களாய்
சிம்மாசனமிட்டு அமர்ந்து
ப்ரிய ராகங்களால்
உரக்கப் பாடும்.

காதருகே
இடிக்கொம்பசைத்து
மேகப்பசு
மழைப்பால் கறக்கும்.

செடிகள் புதிது புதிதாய்ப்
நீர்ப்பூவுதிர்க்கும்.
கை பாய வரும் குழந்தையாய்
ஜன்னல் வழி கலகலக்கும்.

சித்திரையில் பரிசமிட்டு
ஐப்பசியில் மண்மணக்கும்.
காற்றோடு கலந்து
மனமகரந்தங்கள் சூல் மூடும்.

மழைப்பால் குடித்த
தாவரங்கள் பால் வழிய
வேர்வரைக்கும்
நனைந்து நிற்கும்

செவ்வாய், 1 நவம்பர், 2011

திருட்டு.

எங்கிருந்தோ
வாடைக்காற்று
ஜன்னல்வழி
வீட்டுக்குள் உலாவி
திருடிச்சென்றுவிட்டது.
வெப்பத்தை.

தொலைத்ததைத்
திரும்ப வாங்கத்
தேடியலைகிறேன்
குளிரான இடமெல்லாம்
மழையில் நனைந்து
உன்னையும் அணைத்தபடி ..

திங்கள், 31 அக்டோபர், 2011

கொத்தடிமை..??

கொத்தடிமை..??
************************
யூனியன் இல்லை..
போனஸ் இல்லை..
கிம்பளம் இல்லை..

வரையறுக்கப்பட்ட
வேலை நேரம் இல்லை..
பொழுது போக்கவும்..

ஊருக்கு முன் விழித்து
உளைச்சலோடு உழைத்து
ஊரடங்கி உறங்கி.,

உலக நடப்பு தெரியா
இவர்கள் கொத்தடிமைகளோ
இல்லை வங்கி ஊழியர்களாம்..

வெள்ளி, 28 அக்டோபர், 2011

சிதறல்கள்..

இனிப்பு வியாதி வரும் என
சிரிக்கமாட்டேன் என்கிறாய்.
இரத்த அழுத்தம் துள்ளும் என
பேசமாட்டேன் என்கிறாய்.
இதயம் படபடக்கும் என
பார்க்கமாட்டேன் என்கிறாய்.
*************************************
நீர்க்குமிழி, பாய்மரக்கப்பல்,
காலறுந்தபட்டம்
இதெல்லாம் தட்டாமாலையாய்
சுற்றிச்சுற்றி..
உன்னைச் சுற்றி நான்
சுற்றுவது போல்.
**************************************
சேற்றையாவது வீசு
சேர்த்துக்கொள்ளாமல் வி்டாதே..
திட்டிவிட்டுப் போ
கொட்டிவிட்டுப் போ
அந்தத் தழும்புகள்
சுகமானதாய்..
**************************************
நீள் வெளியில் காற்றாகி
இழுத்துச் செல்.
முடிவில்லாத வெளியில்
இறக்கைகளில்லாமல் தவழ்வது.
யாதுமற்ற ஒன்றாகி
யாதுமாய் ஆவது.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தீலீபன் முஃபாரிஸ்

உன் சிரிப்பில் முத்துக்கள்

சிதறிக்கொண்டே இருக்கிறது.

கோர்க்க முடியாமல் தடுமாறும் நான்..
******************
உன் சிரிப்பில் இருந்து
அமுதம் வழிந்து கொண்டே
இருக்கின்றது

சாகாவரம் பெற்றுவாழும்
ஆசையில் நான் அதை
அருந்திக்கொண்டே
இருக்கின்றேன்
திலீபன்
உன் சிரிப்பு பெருகிக் கொண்டே போய்
என் முகத்திலும் புன்னகையைப்
பற்ற வைக்கின்றது...

நிமிர்ந்தபோது
ஒரு கோடிச் சூரியன்கள்...
நம்மைச் சுற்றிலும்...

ஆனந்தம் அலைஅலையாய்
உன்னிடம் இருந்து என்னிடம்
பெருகி வருகின்றது...

பிரபஞ்சத்தின் பெருவெளியில்
உன் சிரிப்பே தினமும்
என் சந்தோஷ உணவாக...

நீடூழி வாழ்க கண்மணி..!!!

சனி, 22 அக்டோபர், 2011

நிழல்

சாலை விளக்குகள்
மஞ்சள் மழை பொழிகின்றன.,
நண்பர்களைக் கடப்பதுபோல்
நனையாமல் கடக்கிறான் அவன்.,
என்னையும் இழுத்து.

இருட்டு மரங்களை
அலுவலக வேலைகளைப்போல
அங்குலம் அங்குலமாகக்
கடக்கிறான்.,
அவனுள் புதையுண்டு
நானும் கடக்கிறேன்.

உச்சியில் முத்தமிட்டு
நிலவு தழுவுகிறது அவனை
நெகிழ்ந்த காதலியைப் போல்.
பின்தொடரும் என்னைத் தழுவாததால்
கோரைப்பல்லும் கொம்பும்
முளைக்கிறது எனக்கு

வெள்ளி, 21 அக்டோபர், 2011

தங்கைகளுக்கு... அக்கா குயிலின் கீதம்.

அக்காக்களும் தங்கைகளும்
அவ்வப்போது செல்லமாய்
அடித்துக் கொள்வதற்கும்
அடித்துச் சொல்வதற்கும்.

அக்காக்கள் தவறுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள் அல்ல.
அக்கக்கோ குயிலின்கீதமாய்
ஏக்கமும் சோகமும்.

வலிமையாய் இருக்கிறாய்
வாளெடுப்பதில்லை நீ
இருந்தும் வாளாவிருக்கிறேன்.,
வலிமையற்று உன்முன்.

யாரும் இருந்தும் இல்லாமலும்
வாழ்ந்து பார்ப்பதே வாழ்க்கைதான்.
உனக்குப்பின்னும் உலகம் இருக்கிறது
உறைந்துபோய்விடாமல் உயிர்ப்போடு..

செவ்வாய், 18 அக்டோபர், 2011

ஒரு காணாமற்போன டைரியின் மிச்ச ஞாபகங்கள்

1. யதார்த்தங்கள் - நீள்வெளியும் தொடுவானும்.

2. தவிப்பு - எந்தக் காற்றுக்கும் இந்தப் பூக்கள் உதிர்ந்திடக் கூடாது.

3. இரகசியம் - பாவம்.. அந்தக் கிளிகள்.

4. ஸ்நேகம் - இறுகிய பாறைக்குள்ளும் நீர் இருக்கும்.

5. தொலைபேசி - அது உன்னையும் என்னையும் இணைக்கும் பாலம்.

6. சரிகமபதநீ - வெள்ளைப் புறாவைத் தேடும் மாடப்புறா.

7. ஸ்வயங்கள் - நிழலும் நிஜமுமாய் நீ

8. எதிர்பார்ப்பு - ஸ்திரமான ..

9. நம்பிக்கை - முகங்களே முகமூடியுடன்..

10. பொய் முகங்கள் - முகத்துக்கு முன்னால் முகமன்கள் பாடும் முதுகுக்குப் பின்னால் கேலிகள் பேசும் தேசமிது.

11. உனக்குமா..? - பூக்களுக்குக் கூட வியர்க்கிறது.

12. பூபாளம் - காலைப் பூவே ..மெல்ல மலர்ந்து ராகமிசைக்கத் தொடங்கு.

13. தீர்க்கங்கள் - நமக்குள் நாமே தீர்ப்பெழுதுவோம்.

14. ஏக்கம் - நாளைய விடியலுக்கு மலர காத்திருக்கும் பூ.

15. ஒரு சுதந்திர தின நாளில் - தோழனே.. மிட்டாய் கிடைத்தது.. கொண்டாடலாம் வா விடுமுறையை..

16. தீர்மானிக்கப்பட்ட முடிபுகள் - திறமை ஒருபோதும் உறைவதில்லை..

17. எரிச்சல் - எழுதி அழிக்க மனசென்ன வெறும்பலகையா.

18. புதிய நிகழ்வுகள் - யாரைக் கேட்டு இதெல்லாம்..

19. உணரப்படுதல் - நெஞ்சினின்று ..

20. கானற்கனவுகள் - கேள்விக்குறியாய்..

21. போராட்டம் - நீள்வெளி வானமதை ஒன்றாக்க..

22. எதிர்காலம் - வாங்கிய பட்டங்களை பறக்கவிட..

23. ஆகுதீ - நாட்கள் நடைபழக.. நீறுபூத்தது பெருகி..

24. அவசரம் - என்னவரம்.. என்னவரும்..

25. நண்பன் - இவன் உயிர்த்தல்வேண்டி தவம்.

டிஸ்கி :- நன்றி பங்களாபுதூர் பாமா. மனோவுக்கு.

சனி, 15 அக்டோபர், 2011

வெய்யில்.

விடியலில் ராஜகுமாரனின் அணைப்பாய்
நண்பகலில் ராட்சசன் பிடியாய்
மாலையில் வானப்ரஸ்த விலகலாய்.

பருவப்பெண்ணாய்
பொன்னிறம் ஜொலிக்க
வீரியக் கதிர் பாய்ச்சி.
பருவம் தப்பும்பெண்ணாய்
குளிருக்குள் ஒடுங்கி

மஞ்சள்நிற அருவியைப் போல
வீழ்ந்துகொண்டே இருக்கிறது
கருமேகங்கள் பாறைகளாய்
சூழ்நாள் தவிர.

பூமியெங்கும் உழுது செல்கிறது
வயலானாலும்
மலையானாலும்
பழைய கோட்டையானாலும்
மூடிய இலைகளானாலும்
பாரபட்சமில்லாமல்..

அட்சரேகை தீர்க்கரேகை
பாகைகள் அறியாமல்
வெய்யிலில் கிடப்பவர்
வர்ணமெல்லாம் உறிஞ்சி
கறுப்பை பூசி

ஆதிக்கக்காரர்கள் போல்
அடித்துச் செல்கிறது
சுவாசத்தைப் புண்ணாக்கும்
வெங்காற்றையும்,
தாகத்தில் சிக்கிய
மனிதர்களையும்..

மஞ்சள் ராஜாளியாய்
பூமியின்மேல் சிறகுவிரித்து
கவிழ்ந்து செல்கிறது.

மரக்கிளைக்குள் புகுந்து
வெவ்வேறு விதப்
புள்ளிக் கோலமாய்
பச்சையங்களை முத்தமிட்டு
புதுக்கவைத்து உயிர்ப்பித்து

தோண்டாமல் கிடைக்கும்
ஒப்பற்ற தங்கவெள்ளம்..
பூமியைப் புதுப்பிக்கவும்,
புதுப்பயிர்கள் கிளைக்கவும்.

புதன், 12 அக்டோபர், 2011

நினைவுப் புகைக்கூண்டு..

நினைவுப் புகைக்கூண்டுக்குள்
காற்றுக் க்ரீடை செய்வோம்..
வா..
மனநுனிகள் புகையடிக்காமல்
வெய்யில் சுறா கடிக்க வருமுன்..
சீக்கிரமாய்..
சீக்கிரமாய்..
முகங்கள்
புன்னகைப் பனிக்குள்
உறைந்திருக்கும்போதே
புகைச் சுழலுக்குள்,
ஸ்நேகமாய் ஒருதரம்
முங்குவோம் வா..
மந்தைகளின் கொம்புகளுக்கும்
கூர்பற்களுக்கும் நாம்
இரையாவதற்கு முன்..
தடம் பார்த்து
நமக்குரிய வண்டிகள்
பிடிப்போம் வா..
தார்மீகக் காரணங்கள்
ஆராய்ந்து
ஒற்றுமைகள் புலப்படுத்தி
ஒன்றாய்க் கரைசேருவோம்,
வலைமீளுவோம் வா..
மழையின் அவசரமாய்,
சாகரத்தின் தாகமாய்..
சீக்கிரம்..
சீக்கிரம்..
Related Posts Plugin for WordPress, Blogger...