எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 ஜனவரி, 2019

மருமக்கள் வழி மான்யத்தில் நான்காவது மனைவியின் நிலை :-

மருமக்கள் வழி மான்யத்தில் நான்காவது மனைவியின் நிலை :-

கவிமணி கூறும் மருமக்கள் வழி மான்யத்தில் நான்காவது மனைவி மிகவும் அழகானவளாக வர்ணிக்கப்படுகிறாள். அவளின் மஞ்சள் பூச்சும், மயக்கிடும் பேச்சும், கொஞ்சிடும் மொழியும், தாசிகள் மெட்டும் தன் கணவனை மயக்கி விட்டதாக ஐந்தாவது மனைவி ஆத்திரத்துடன் பகிர்கின்றாள்.

அவள்
“அடுக்களை வந்திடாள் – அரக்குப் பாவையோ ?
கரிக்கலம் ஏந்திடாள் – கனக சுந்தரியோ ?
வாரிகோல் ஏந்திடாள் – மகாராணி மகளோ ?
வெய்யிலில் இறங்கிடாள் – மென்மலர் இதழோ ?
குடத்தை ஏந்திடாள் – குருடோ நொண்டியோ ?”


என்று கூறுவதன் மூலம் ”நான்காவது மனைவி கணவனைக் கைக்குள் போட்டுக் கொண்டவள். அவள். அலங்காரத்தினால் கணவனை மயக்குகின்றாள். அதே சமயம் அவள் செய்யவில்லை எனக் கூறும் வேலைகள் அனைத்தையும் தான் செய்வதாகக் கூறும் “ஐந்தாம் மனைவி  மேலும் கூறுகின்றாள். “நான்காமவள் ஒரு வேலையும் செய்வதில்லை. ஒரு துரும்பைக் கூடத் தொடுவதில்லை. எந்நேரமும் அலங்காரம் செய்யவும், கணவனை மயக்கி மற்றவரை ( மற்ற மனைவியர் நால்வரையும் ) ஏச்சுக்குள்ளாக்கிடும்  பாவியாகக் காட்டப்படுகின்றாள். இதுவே மருமக்கள் வழி மான்யத்தில் நான்காம் மனைவியின் நிலை.
  

திங்கள், 21 ஜனவரி, 2019

தொட்டும் தொடாமல்.

தாலாட்டும் காற்றோடு
தடதடக்கிறது ரயில்.
கொறிக்கக் கொஞ்சம்
புத்தகங்கள் கைவசம்
ஃபில்டர் வாசனையோடு
செம்பழுப்புக் காஃபி பக்கம்.
நீளமான தண்டவாளங்கள்போல்
இணைந்து செல்கிறது உரையாடல்
இறங்கும் ஊர் வந்தபின்னரும்
கூந்தல் சுழலும் கழுத்தோரம்
ஒரு முத்தம் தராத ஏக்கத்தில்
பிரிந்து போகிறது வண்டித் தடம்.
மெல்லிதாய்ப் பிரிந்த வியர்வை வாசம்
ரயிலிலிலிருந்து குதித்திறங்கித்
தொட்டும் தொடாமல்
தொடர்ந்து கொண்டிருக்கிறது.
  

செவ்வாய், 1 ஜனவரி, 2019

வாள்களும் பூக்களும்.

பனிபெய்திருக்கும்
பன்னீர்ப் பூக்கள் கொட்டி
வாசனை தெளிக்கும் சாலை உனது.
ரத்தச்சிவப்பில்
காட்டமான குல்மோஹர்கள்
வெகுபிரியம் எனக்கு.
சந்திக்காத சாலைகளின்
வெவ்வேறு முனைகளில்
வந்து சேர்ந்த நம்மை
வெகுவேக வாகனங்கள்
ஒன்றாய் நிறுத்திவைக்கின்றன.
பசுவின் மென்மையாய்ப்
பன்னீர் சிந்தும்
உன் பார்வைப்பூக்களை
என் செவ்வாள் கொண்டு வெட்டுகிறேன்.
ஆயுதபாணியை அடிக்கலாம்
நிராயுதபாணியையுமாவென
உடைந்து விழுகின்றன எனது வாள்கள்.
புதிதாய்ச் சேகரமாகின்றன
அம்மாபெரும் சாலையில்
வாள்களும் பூக்களும்.

நிலாத்தட்டும் சூரியத்தட்டும்.

நிலாத்தட்டும் சூரியத்தட்டும்
ஏறி இறங்கித் தாழ்கின்றன.
சிதறிவிழும் நட்சத்திர தானியங்களை அள்ள
அலையை விரித்துப்
பறக்கத் தொடங்குகிறது கடல்
  
Related Posts Plugin for WordPress, Blogger...