எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 மார்ச், 2015

என் தேவனே..என் தேவனே !
எங்கே நீ..!
விடியலில் எழுந்ததும்
விழிக்கிறேன் உன் நினைவிலே
தூரத்து இரயிலின் சத்தத்தில்
கேட்டின் ஓசையில்
ஜன்னலின் விளிம்பில்
அழைப்புமணி அழைப்பில்
கதவின் இடுக்கில்
உன் முகம் பார்க்க ஏங்கி
என் முகம் பூத்துப் போச்சு.
உன் கண்களெனும்
கங்கைக்குள் மூழ்க வேண்டும்.
உன் அணைப்பெனும்
சொர்க்கத்தில் திளைக்க வேண்டும்.
உன் கைகளென்னும்
கோட்டைக்குள் சுவாசிக்க வேண்டும்.
உன் முத்தமெனும்
வெப்பமழையில் நனைய வேண்டும்.
உன்னைக் காணும் பொழுதிலே
நானாக நான் இல்லை
நீயாக நான் ஆனேன்.
நான் என்ற ஒன்றே இல்லை
சர்வம் நீ !
சரிகமபத நீ..!

-- 95 ஆம் வருட டைரி .

ஞாயிறு, 29 மார்ச், 2015

காக்கைகள்.காக்கைகள்
சோற்றுக்காய்க்
கூரை கொத்தும்
அழுக்குத் தின்று
அசிங்கம் அடக்கிய
காக்கைகள்

ஆங்காரமாய்ச்
சிறகடித்து
முகம் குதறிப்
புண்ணாக்கும் காக்கைகள்,

கறுப்பாய் வெளுப்பாய்
மாநிறமாய்
எல்லா நிறத்திலும்
எத்தனை காக்கைகள்.

நெருஞ்சி தள்ளி
முட்டவிழித்துக்
கோரமாய்ப் பார்க்கும்
காக்கைகள்.

இரகசியம் புதைத்து
கழுத்துப்பிடறியை
மெல்லச் சிலிர்த்து
அப்பாவியாய்ப் பார்க்கும்
கூர்நகம் பாதுகாக்கும்
காக்கைகள்.

அழுகல் மாமிசம்
அள்ளி அடைத்து
வாய்க்குக் கைகாட்டும்
இராட்சதக் காக்கைகள்.

மூக்கைத் தீட்டித் தீட்டி
மீனை உதறிப் போட
மௌனம் அடைகாத்த
மலட்டுக் காக்கைகள்
இவை
மனிதக் காக்கைகள்.

-- 83 ஆம் வருட டைரி 

சனி, 28 மார்ச், 2015

துர்க்கைகள்இவர்கள் சிவன்களல்ல
ருத்ர தாண்டவமாடும்
மொட்டைக் கபாலிகர்கள்.

அறுத்தெறியுங்கள்
இவர்களின்
மண்டையோட்டு மாலைகளை.

பொசுக்கிச் சாம்பலாக்குங்கள்
இந்த மாந்த்ரீகர்களின்
மந்திரக் கோலை.

சுட்டுப் போடுங்கள்
அத்தனை
சூத்திரதாரிப் பயல்களையும்..

துர்க்கைகள் எல்லாம் வீரத்தை
அணிந்துகொள்ளட்டும்
இல்லையில்லை
இவர்களுக்கு வீரம்
பணிந்து போகட்டும்.

-- 85 ஆம் வருட டைரி. 

வெள்ளி, 27 மார்ச், 2015

வியாபாரிகள்அந்த வியாபாரிகள்
புதையல்களை
நஷ்டத்திற்கு விற்றுவிட்டுக்
கோணிப்பைகளுக்குக்
கணக்குப் பார்த்தார்கள்.

நிலவைத் துடைத்துத்
தூரப்போட்டுவிட்டு
நட்சத்திரப் பொறுக்கல்களில்
மூழ்கியிருந்தார்கள்

அந்தப் பூக்கள்
பூப்பதை நிறுத்திவிட்டு
மகரந்தப் பைகளை
எண்ணிகொண்டிருந்தன

சில குதிரைகள் சேணம் மாட்டியும்
இலக்கை மறந்து போயின

சந்தர்ப்ப ஊசியில் நுழைந்து
வாழ்க்கைத் துணியில்
நூல்களாய்க் காணாமல் போனார்கள்

மருதாணித் துகள்களைத்
தலைசுற்றிப் போட்டுவிட்டு
நெயில்பாலிஷ்களைப்
பத்திரப்படுத்தினார்கள்

எழுதி எழுதி
அழித்து எழுதி
கிழிபட்ட காகிதமாய்ப்
போனார்கள் அவர்கள்

விற்றவர்கள் பார்த்துக்
கொண்டிருந்தது
நஷ்டக் கணக்கு

அந்த மலைமுகடுகள்
பள்ளத்தாக்குகளாய்ச்
சமைந்து போயின

அவர்கள் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்
தாங்கள் சூடிக்கொண்டிருப்பது
வைரக்கிரீடங்களென்று
உள்ளே முள் குச்சிகள்
உறுத்தும்போதுதான் புரியும்

அவர்கள் பகுத்தறிவில்லா
ஜன்னல் போலானார்கள்
அந்த மரங்கள்
பழங்களை உதிர்த்துவிட்டு
காய்ந்த சுள்ளிகளைச்
சேமித்துக்கொண்டிருந்தது. 

-- 83 ஆம் வருட டைரி. 

வியாழன், 26 மார்ச், 2015

கண்ணகிகள் நிறமிழந்து போனார்கள்.கண்ணகிகள் நிறமிழந்து போனார்கள்

[வைகறை என்னும் கல்லூரி மாகசீனில் வெளிவந்தது.]

கண்ணகிகள்
நிறமிழந்து போனார்கள்.

கபாலிகர்கள்
காலில் மிதிபடும் மண்டையோடுகளாய்..

என்று அந்தத் துர்க்கை
இடம்மாறிக் கொண்டாள் ?

நிலவு உதிப்பதற்குத்
திசையில்லாமல் போனது.
கண்ணகிகளின் வண்ணச்சீறடிகள்
இரவுவிடுதிகளில்
ஒளிவட்டம் அறிந்தன

ஊரெல்லாம் கறுப்பு நிலா
காய்த்துப் போனது.
இருக்கின்ற சில
புள்ளி நட்சத்திரங்களும்
இடம் மாறிப் போய்
இருட்டுடுத்துக் கொண்டன.

கறுப்புச் சிலந்திகள்
மனம் உழுது
விஷம் விதைத்துப் போகும்
கறுப்புச் சிலந்திகள்.

தாஜ்மகாலின் புனிதத்தின் மேல்
கறுப்புப்படலம் பூத்துப் போனது
சுரண்டச் சுரண்ட
சாம்பல் தெறிக்கும்
கசடுகளாய்

இவர்கள் வாசற்படி தாண்டும்போது
எத்தனை பூனைகள்
குறுக்கே ஓடின ?

சேணம் துறந்த
இந்தக் குழப்பக் குதிரைகள்
ஓடுவது எந்தப் புல்வெளி நோக்கி

எதற்காக யாரோடு
தோற்றுக் கொண்டிருக்கும்
பந்தயக் குதிரைகள் இவர்கள்

எந்த அசட்டுத் தைரியத்தில்
படையெடுத்துப் பின்வாங்கிக்கொண்டு
இருக்கும் கௌரவர்கள் இவர்கள்.

எல்லாப் பாரங்களையும் தூக்கி
முதுகை முறித்துக்கொள்ளும்படி
இந்தக் கழுதைகளுக்கு
யார் சாபமிட்டது?

கண்ணகிகள் நிறமிழந்து
காற்றிலலைந்து காற்றிலலைந்து
காணாமற் போனார்கள்.

எல்லா ஊர்க்கண்ணகிகளும்
எரிந்து பொசுங்கிச்
சாம்பலாகிப் போனார்கள்.

--- 84 ஆம் வருட டைரி. 
Related Posts Plugin for WordPress, Blogger...