எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 டிசம்பர், 2021

உதிர்தல்


கற்களின் மேல் குவியலாய்
உதிர்கின்றன இலைகள்
மேலாக உதிர்ந்த பூவொன்றும்
தன் அஞ்சலியைச் செலுத்துகிறது.

 

ஞாயிறு, 14 நவம்பர், 2021

வளியும் ஒளியும்

சூரியனாய் அமர்ந்திருக்கிறாய்
உன் பக்கமிருக்கும் நிலவும்
சுற்றிலும் கிடக்கும் தாரகைகளும்
மறைந்து விடுகிறார்கள்.
யாருமறியாமல்
காந்தக் கண்களால்
என்னைக் கவ்வி எடுத்து
ஒளிப் பறவையாய்ப் பறக்கிறாய்
உன் பிரகாசத்தில்
தோய்ந்த என் விழிகளும்
இரட்டைச் சூரியனாய்
ஒளிரத் துவங்குகின்றன.
அன்பின் கதகதப்பும்
கனிவின் வெம்மையும் சூழ
எங்குமே இருளற்ற
இன்னொரு பிரபஞ்சத்தில்
எனைக் கொண்டு சேர்க்கிறாய்.
வளியும் ஒளியுமாய்
அலகுகள் கோதி
வண்ணச் சிதறல்களோடு
வாழத் துவங்குகிறோம்.
 

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

காத்திருப்பு

கரைகாணாக் காதலில்
செய்யப்பட்டவள்தான் அவள்
ஆனாலும் அவளுள் இருந்த கடல்
உள்வாங்கி விட்டது.
மணற்செதில்களாய்க் கிடக்கும் அவளைச்
சூரியனும் சந்திரனும் வருடிச் செல்கிறார்கள் தினம்
இனி அவள் மலர ஒரு யுகம் ஆகலாம்
பிரபஞ்சத்தின் கருந்துளையில்
இனியொரு வெடிப்புக்காய்க்
காத்துக்கிடக்கிறது 
அவளது பிரியம் என்னும் விதை.
 

செவ்வாய், 19 அக்டோபர், 2021

நிறுத்துதல்

பேச்சை எப்படியோ 
ஆரம்பித்துவிட முடிகிறது. 
எங்கே நிறுத்துவது 
என்பதுதான் தெரியவில்லை. 

வேறொண்ணுமில்லையே 
என்று நீ கேட்கும்வரை 
பேசிவிடுவதுதான் 
வெட்கத்தில் மூழ்கடிக்கிறது என்னை.
 

சனி, 16 அக்டோபர், 2021

யாரோ.

அவனும் அவளும்
யாரோவாகி விட்டார்கள்.
தூது சென்ற நான்
அவர்களின் காதலைச்
சுமந்து நிற்கிறேன்.
கிளையாய் இலையாய்ப்
பூவாய் மலர்ந்து கிடக்கும்
அக்காதல் விருட்சத்தின்
ஆணிவேரும் சல்லிவேரும்
என்னுள் வேரோடிக் கிடப்பதை
எப்படிக் கெல்லி எறிவது.

8888888888888888888888

அவனும் அவளும்
யாரோவாகி விட்டார்கள்
தூதுசென்ற நான்
யாரோடு நிற்பது ?

 

வெள்ளி, 8 அக்டோபர், 2021

கற்கண்டு

துளித்துளியாய்
மொட்டுவிடத் தொடங்குகிறது மழை
மரங்களிலிலிருந்து வெண்பூக்கள்
உதிர்கின்றன.
வாடைக்காற்று உவகையுடன்
தழுவிச் சுழல்கிறது.
பால்கனியில் பாலாவி படர்ந்து
சிலிர்க்க வைக்கிறது என்னை.
இதழில் வீழ்கிறது ஒருபெருந்துளி
கற்கண்டாய்.
இதென்ன பேரவஸ்தையென
சுண்டிவிட எத்தனிக்கிறேன்.
இரு இரு.. பொறு..பொறு..
அது நான்தான் என்கிறாய்
 

புதன், 29 செப்டம்பர், 2021

இனிது

உன் நினைவுகளில் 
நான் உறையும்போது
காலமும் உறைந்து விடுகிறது
கடிகாரத்தின் முட்கள்
என்னை உருக்கும்போது
ரோஜாக்களாய் நிரம்பிக்
கிடக்கிறது உன் ஞாபகம்.
எவ்வளவு மறைத்தும்
என் முகம் வழி
பூத்து விடுகிறாய் நீ.
கசியும் காற்றில்
உன்னை முகர்கிறேன்.
நீயாக நுழைந்து
நானாக மாறிவிடும்
உன் வாசனைகளுடன்
வாழ்வது இனிது.

 

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

பழக்கதோஷம்

மரங்கள் காத்திருக்கின்றன
பறவைகள்தான்
ஓய்வெடுக்க நேரமில்லாமல்
உணவுத் தேட்டையில்.
கூடுகளில் முட்டைகள்
தாமே பொறிந்து வருகின்றன
சிறு சிறகு கோதி
விழுந்தெழுந்து தாமே பறக்கக் கற்கின்றன
குஞ்சுகள் பறந்தபின்னும்
தாய்ப்பறவைகள்
பழக்கதோஷத் தேட்டையில்
பறந்துகொண்டே இருக்கின்றன. 

 

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

சங்கிலிப் பிணைப்பு

பொன்னூஞ்சலில் ஆடினாலும்
தனித்தனி உலகம்
தனித்தனி மயக்கம்
ஆணுலகும் பெண்ணுலகும்
இயங்குவது சங்கிலிப் பிணைப்பால். 
 

ஞாயிறு, 25 ஜூலை, 2021

நிழலும் நிஜமும்

இணைந்து நடந்தாலும் 
இணைந்து கிடந்தாலும்
நிஜத்தின் நானாவித குணங்கள்
நிழலிடம் படிவதில்லை,
பிம்பமாகவே தொடர்ந்தாலும்.
தொடரும் நிழல்
பட்டும்படாமல்
படரும் இருள் மட்டுமே.
முன் செல்லும் நிஜமோ
நிறமற்றிருந்தாலும்
இருண்மையின் பிம்பம். 
 

வெள்ளி, 9 ஜூலை, 2021

ஒரு சிறு மரமும் அணைவாய் ஒற்றைக் கிளையும்

இறக்கைகள் விரியப் பறக்கின்றன
பறவைகள்.
மேலே வானம்
கீழே வனம்
காற்றிலசைந்து
சருகுபோலாடி
மெல்லக் கீழிறங்க
ஒற்றைக் கிளை
அவற்றின் உலகம்.
எல்லைகள் எல்லாம்
இறக்கையின் அசைவில்
எண்கோணமாய் விரிந்து கிடக்க
நிலவுப் பொழிவில்
இமைகள் இடுங்க
கால்கள் குறுக்கிப் பஞ்சுடல் சாய்க்கத்
தேவை ஒரு சிறு மரமும்
அணைவாய் ஒற்றைக் கிளையும். 

 

வியாழன், 24 ஜூன், 2021

இதயச்சேறு

என்னை உழுது
ஊர்ந்துபோகும் உன் எண்ணத்தின்பின்
அதிர்ந்து பிரள்கிறது இதயச்சேறு. 
 

செவ்வாய், 22 ஜூன், 2021

ஒட்டியும் ஒட்டாமலும்

உலாவுகிறது காற்று
பூக்கள் மலர்கின்றன
வண்டுகள் முரல்கின்றன
மகரந்தம் சிதறுகின்றது
தேன் துளிகளோடு..

தேனின் ருசியறியாது
மகரந்தத்தை இடம்பெயர்த்து
வண்டுகளைச் சுமந்து
பூக்களோடு ஒட்டியும் ஒட்டாமலும்
உலாவருகிறது காற்று
 

புதன், 16 ஜூன், 2021

மனச்செடி

வார்த்தை நீர்
வார்க்கத் தொடங்கியதுமே
பூக்கத் தொடங்குகிறது 
மனச்செடி


 

செவ்வாய், 15 ஜூன், 2021

இதயப் பூ

பாமாலையும் பூமாலையும்
ஏற்கும் வல்லிய தோள்கள்
பூங்கரம் தொட்டதும்
மூங்கிலாய் வளைகின்றன
பூப்போன்ற முகம் ஏந்தி. 

வாசனையாய்ப்
பூங்கொத்துக்களோடு
தொய்ந்து கிடக்கிறது
ஒரு பூங்கொடியும் 
அவ் வன்கரத்தில்.. 

இரும்பு கூட
இலை விரித்து
முளைக்கத் தொடங்குகிறது
கூடவே பூத்துக் கிடக்கும் பூவையோடு
அதன் இதயப் பூவும்

 

சனி, 5 ஜூன், 2021

நூல் பார்வை..

ஒற்றைப் பார்வைதான் பார்த்தாய்
நூலாய் என்னைக் கட்டி
இழுத்துச் செல்கிறது அது.
தட்டாரப் பூச்சியாய்ப் பறக்கிறேன்
உன் பின்னே 
 

வியாழன், 27 மே, 2021

பூக்களோடு பூக்களாய்..

தாமரைகளோடு
அல்லிகளும் மலர்ந்திருக்கின்றன..
பூக்களோடு பூக்களாய்ப்
பூத்திருக்கிறது குளமும்.
கயல்களோடு
குதிக்க இடமில்லாமல்
தவிக்கிறது சூரியன்.
ரீங்காரத்தோடு
இனம்புரியாமல்
அலைகின்றன வண்டுகள்.
வாசனைப் பாலாவியோடு
தண்ணென்றிருக்கிறது வாவி.
எல்லா இதழ்களும்
விரிந்து விடுகின்றன
தண்டுகளோடு 
தண்டுகளாய்த் துழாவிப் 
பூக்களோடு பூக்களாய்
முகம் விரிக்கும்போது..

வெள்ளி, 21 மே, 2021

மொக்கு

மெல்லத் துளிர்விடுகிறது
ஒரு மொக்கு
இலையுதிர் காலத்துக்குப் 
பின்னுமொரு வசந்தம்.
எங்கோ இருக்கும்
தேனியின் நாசியிலும்
வசந்தத்தின் பெருமூச்சு.
புறப்பட்டு வருகிறது
அலைந்து அலைந்து
தேடித் தேடி
தனக்காய்ப் போதவிழத்
தொடங்கியிருக்கும் முகை நோக்கி. 
ரீங்காரம் மனம் கொய்ய
சிறகடிப்பு சிலிர்க்க வைக்க
தேன் சுரக்கும் இதழ்களோடு
மடல் மடலாய்
விரியத் தொடங்குகிறது மொக்கு.

திங்கள், 17 மே, 2021

மந்தை

கொள்ளை நோய்ச் செய்திகளைப்
பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்
பின்னிருந்த சிம்மாசனம் 
காணாமல்போய் இருந்தது.
துரட்டிக் கம்புகளுக்குள் ஓடும்
ஆட்டுமந்தையில்
காணாமல் போயிருந்தேன்.
தழைகள் கிடைத்தன
அப்படியே உண்பதா
காய்ச்சிக் குடிப்பதா..
 

வியாழன், 6 மே, 2021

மறதி மிகச் சிறந்த வியாதி

மறதி 
மிகச் சிறந்த வியாதி.

ஒவ்வொரு முறையும்
சுழற்சி முறையில் வாய்ப்பு

கொள்ளை கொள்ளையாய்அடித்த
குடும்பச் சொத்துக்கள்
பரம்பரை பரம்பரையாய்த் தொடர

சுற்றி இருப்போரின் கைப்பாவையாய்ச்
சேர்த்து வைத்தவர்கள்
கடலோரச் சமாதிகளில் உறைய

இறப்பின் தேதிகள் கூட
கூட இருப்பவர்களால்
நிர்ணயிக்கப்படுகின்றன.

இராமனோ இராவணனோ
ஆண்டவன் யாரானால் என்ன

கொள்ளை கொடுத்தவர்கள்
தற்காலிக ஞாபக மறதியில்

மறதி 
மிகச் சிறந்த வியாதி.
 

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

தகவமைத்தல்.

ஊசி போடவோ
ஓட்டுப் போடவோ
எங்கெங்கும் கூட்டம்
தற்காத்துத் தகவமைக்கத்தான்
இரண்டுமே.
 

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

விடை

ஒரு கலைஞன் விடைபெறும்போது 
நடந்துவந்த பாதையைத் 
திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது. 

என்னுடைய கடமைகளை எல்லாம் 
நிறைவேற்றி விட்டேனா.. 

பாதி எது
முழுமை எது ? 

இதற்காகக் கலங்குவதா 
நம் முறைக்காகக் காத்திருப்பதா.. 

குழப்பம் சூழ்கிறது. 
நிறைவு எப்போது ? 

#விவேக்
 

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

மீன்பாடு

எல்லைக்கோடு வகுத்திருக்கிறார்கள்
மீன்களுக்கும்
படகுகளில் நிரம்பி வழிகின்றன
எல்லைஅறியாது நீந்தி
இறந்த நம்பிக்கைகளோடு
சுட்டுத் தள்ளப்பட்ட மீன்கள்.

 

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

கோடை

கானல்நீர் ஓடுகிறது
கண்ணெங்கும் அனலாய்.
ஆவிக்கீற்றுகள்
உடலெங்கும் கீறுகின்றன.
உள்ளிருந்து ஒரு குளிர்நடுக்கம்
நரம்பு நாகமாய்  இறங்குகிறது.
வாட்டத் தொடங்கும் வெய்யிலுக்குள்
புழுவாய்ச் சுருள்கிறது உடல்

 

புதன், 24 பிப்ரவரி, 2021

செமித்தல்

அமிர்தம் சிந்திப்
புல்பூண்டு முளைத்ததா
அரவுகள் வெட்டுப்பட்டுப்
புல்பூண்டு கிளைத்ததா
அரிஅரனுக்கே வெளிச்சம்
எவ்வளவுதான் 
செமித்துச் செமித்தும்
எழுகின்றன நாகங்கள்
காமமும் ஞானமுமாய்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

பூமிப் பிடாரன்

செம்படமெடுக்கிறது சூரியன்
வெளிச்ச நாக்குகள் நீட்டி.
பூமிப் பிடாரன் மகுடி ஊதி
முடிக்கும்போது
நழுவி முடங்குகிறது
இருள் கூடைக்குள் 
 

சனி, 20 பிப்ரவரி, 2021

பால்வெளிப் பிரபஞ்சம்

சூரிய வளையமும்
சந்திர வளையமும் மாட்டி
இருளின் மடியில்
உருண்டு விளையாடுகிறது பூமி
இன்னும் பல 
நட்சத்திரத் துணுக்குகளைத் 
தூவி அழகு பார்க்கிறது 
பால்வெளிப் பிரபஞ்சம்

 

சனி, 13 பிப்ரவரி, 2021

சாத்வீகம்

சுயநல உலகில்
சாத்வீகம் மட்டுமே
பொதுநலத்துக்கு
நேர்ந்துவிடப்பட்டிருக்கிறது
ராஜஸமும் தாமஸமும்
ஏறிச் சவாரி செய்யத்
தன்னை ஒப்புக்கொடுத்தபடி
வேலைச் சிலுவை சுமக்கிறது
ரத்தக்கண்ணீரோடு
 

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

ஒட்டாத உறவுகள்

ஒருபக்க முட்களோடு
உட்பக்க ஈரம்பெருகக்
காத்திருக்கிறது  ரணகள்ளி
உச்சிப் பூக்கொத்தேந்தி 
நூற்றாண்டுகாலமாய்க் கிளைவிட்டு,
நதி ,நிலா,சூரியன், மழை, காற்றெனத்
தினம் வந்து வந்தோடும் 
ஒட்டாத உறவுகளுடன். 
 

வியாழன், 11 பிப்ரவரி, 2021

சலசலப்புகள்

கட்டாரி ஒன்று வெட்டும்வரை
ஒன்றன்மேல் ஒன்று
மோதிக்கொண்டிருக்கின்றன இலைகள்
சலசலப்புகள் என்பது
கிளைநீங்கும் வரைதானே. 


 

திங்கள், 8 பிப்ரவரி, 2021

நீர்க்கொப்புளங்கள்

சுழன்று வரும் நீருக்குள்
கண்ணாடி வளையங்கள்
சக்கரவியூகத்துள்
உடைகின்றன நீர்க்கொப்புளங்கள்
உருவாய் அருவாய்
உளதாய் இலதாய்க்
கலந்து பிறக்கின்றன
நீரும் காற்றும். 
 

உள்தேடல்.

உணவு உடை உறையுள்
நிறைவடைந்ததும்
காணாமல் போகிறது உள்தேடல்..
 

புதன், 3 பிப்ரவரி, 2021

அரவங்கள் உலவும் தெரு

அரவங்கள் உலவும் தெரு
செவிகளிலே ஐம்புலனும் திறந்திருக்க
கண்நாகம் மினுமினுக்க
பேச்சரவம் பெரும்படம் விரிக்க
நாவரவம் அதிர்ந்தொலிக்கப்
போர் அரவம் கேட்டதுபோல்
பயந்தொளிந்தோடும்  தெருவோரம்
உடல் நெளித்து அரவமற்று ஒரு நச்சரவம்..
 

திங்கள், 25 ஜனவரி, 2021

போலிப் பொறையுடைமை

இதை வணங்கு
அதை வணங்கு
இந்தக்குழுமத்தில் சேர்
அந்தக்குழுமத்தில் சேர்
அந்தச் சாமியார் கடவுள்
இல்லையில்லை இவரே கடவுள்
நான் சொல்பவர்தான் கடவுள்
நீ வணங்குவது கடவுளல்ல
முடியவில்லை வாதப் பிரதிவாதங்கள்
பேச்சற்று ஓடும் 
மந்தைக் கூட்டமாய்
மனம்புழுங்கியபடி
பின் செல்லுதல்
பொறையுடைமையாமோ
போலித் தெய்வங்களின் பின் 
போலிப்பொறையுடைமையாம். 

  

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

உயரத்தனைய உயர்வு

கானமயிலாடக் 
கண்டிருந்த வான்கோழி
தானும் தோகை விரித்து
ஆடியதாய் எண்ணியது. 
வெள்ளத்தனைய மலர்நீட்டம்
அதுதன் உயரத்தனைய இறகு

வியாழன், 21 ஜனவரி, 2021

உழுதவன் கணக்குப் பார்த்தால்..

பாளமாய் வெடித்து
வாழ்வில்லாத வயல்கள்
அறுவடைக்குமுன்னே
முளைக்கும் நெற்கதிர்கள்
ட்ராக்டர் உழவில்
இழுபடும் பூமி
விளைச்சலின் பலனோ
தரகர்கள் கையில்
உழுதவன் கணக்குப் பார்த்தால்
உழக்கென்ன
உழுதவனே மிஞ்சுவதில்லை.. 


  

செவ்வாய், 12 ஜனவரி, 2021

உள்விகாரம்

எங்கெங்கோ 
ஓடிக்கொண்டிருக்கிறது நதி
தன்னை மட்டும் நாடி
ஓடிவந்ததாய் மகிழ்ந்து கொண்டிருக்கிறது
விருட்சம்
உயரக்கிளைப் பறவைகள்
உண்மையை ஓங்கி உரைக்கின்றன
எதுவும் செவியேறாமல்
வேர்ப்பாசத்தில் மூழ்கிக் கிடக்கிறது விருட்சம்
விருட்சம் கடந்து 
உள்விகாரம் வெடிக்க
சாக்கடை கலந்து
சந்தனமென நினைத்து
நாராசமாய் மணத்துக்
கடல் ஓடுகிறது நதி. 
 
  

திங்கள், 11 ஜனவரி, 2021

தோடு

தோட்டை வீசி இருளில்
நிலவை உண்டாக்குகிறாள்
ஒரு தாய்

நோட்டைப் பார்த்து எப்போதுமே
உறவைத் துண்டாடுகிறார்கள்
சில தாய்கள்.
  

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

கொள்ளுப் பைகள்

துணுக்குகளாய் சிதறிக் 
கிடக்கின்றன ஞாபகங்கள்.
வந்ததும் பார்த்ததும்
வென்றதும் சென்றதும்
சுழலில் சிதறும் நீர்த்துளிகளாய்
இழுத்தும் மூழ்கியும்
நனைத்தும் எடுத்தும்.
முக்காடை எடுக்கிறேன்
முக்குளிக்கவேயில்லை
பிரமையும் கானலும்
கொள்ளுப் பைகளாய் முன்னே. 

வெள்ளி, 8 ஜனவரி, 2021

கூதலும் காந்தலும்

தென்னையிளங்காற்றாடிக்
கசிந்திறங்குகிறது வெய்யில்
வேர்க்காலில் நீர்முடிச்சுகள்
நேற்றுப் பெய்த மழையிருப்பு.
விசிறிக் கொள்கின்றன மட்டைகள்
கூதலையும் காந்தலையும்
வண்ணங்கள் சிதற
தென்னையை வட்டமிட்டு
எழுகிறது ஒரு பட்டாம்பூச்சி. 
  
Related Posts Plugin for WordPress, Blogger...