எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 ஜூலை, 2013

தேடல்அழகானவள்

அழகற்றவள்

அளவுக் கோடுகள் தாண்டி

அவளின் ஆழ்மனத் தேடலுக்கு

அருகதையானவன்தானா நீ..

சனி, 27 ஜூலை, 2013

பசை


ஆளப்படாத மனதின் பக்கங்களில்


கிறுக்கிக் கொண்டிருக்கிறாய்.

அத்துமீறி.

பொய்க்கோபத்தோடு

கிழித்தெறிந்தபின்னும்

ஒட்டிக் கொண்டிருக்கின்றன

சில வார்த்தைகள்

பசையோடு.


வெள்ளி, 26 ஜூலை, 2013

ஹூம் ஹாஸ்டலுக்குப் போக வேண்டும்..

வானம்
நீலம் பாரிக்கும் நேரம்.
லேப் கதவுகள்
வரதட்சணை வாங்காமல்
கல்யாணம் பண்ணிக் கொண்டன.
லைப்ரரி
வாய் வாசலுக்குப்
பூட்டுமாட்டிக் கொண்டது.

ஹூம் ஹாஸ்டலுக்குப் போக வேண்டும்.

ரூம்கள்
விளக்குமாற்றினால்
முதுகு சொறிந்து கொண்டன.
பறவைகள்
மேகமலைக்கு
டூர் போய்விட்டு  வந்தன.

ஹூம் ஹாஸ்டலுக்குப் போக வேண்டும்.

பெஞ்சுகள்
மறுநாள் வகுப்புக்கு
இப்போதே
அட்டென்ஷனில் நின்றன.
காண்டீன்
கழுநீரினால்
உடம்பு கழுவிக் கொண்டது.

ஹூம் ஹாஸ்டலுக்குப் போக வேண்டும்.

பெண்கள்
ரன்னிங் ரேஸில்
விமானங்களைப் பிடிக்கப்
பறந்தார்கள்.
டைனிங் ஹாலில்
வெந்நீர் விநியோகம்
தேநீர் என்ற பெயரில்
மார்கழிக் காலையாய் நடந்து கொண்டிருந்தது.

ஹூம் ஹாஸ்டலுக்குப் போக வேண்டும்.

வானம்
இருட்டுப் பவுடரைத்
திட்டுத் திட்டாக
அப்பிக் கொண்டது.
மஞ்சளும் வெள்ளையும்
கல் பதித்து
விளக்குக் கம்பங்கள்
நகையணிந்து கொண்டன.

ஹூம் ஹாஸ்டலுக்குப் போக வேண்டும்.

மாலை ரயில்
மனிதக் கைகளால்
டாட்டா காட்டிப் போனது.
புகை பறந்து
நிலவைத் தூசியாக்கிக்
காணாமற் போனது.

ஹூம் ஹாஸ்டலுக்குப் போக வேண்டும்..


டிஸ்கி:- 1984 ஆம் வருஷ டைரியிலிருந்து.

புதன், 24 ஜூலை, 2013

இறந்த நம்பிக்கைகள்.

கடலுக்குச் சென்றவர்கள்
திரும்பி வரலாம்
விசைப்படகு நிறைய
மீன்களோடு.
வலம்புரிச் சங்கோடு.
குண்டு தப்பிய காயங்களோடு.
வளையல் கிடைக்கும்.
சுறாப்பீலி கிடைக்கும்.
பள்ளி செல்ல உடை கிடைக்கும்.
கருத்தும் சிறுத்தும்
அலையும் மேகங்களோடு
தப்பி வரலாம் படகு
யாரும் சுடாமலே
இறந்த நம்பிக்கைகளோடும்..

சனி, 20 ஜூலை, 2013

மனிதச் சிலந்தி

மழைக்குடைக்குள் ஒளிந்து
நீர்ப்பூச்சி பிடித்து விளையாடும்
மனிதச் சிலந்தி.

நீர் வலை.

நீர்வலை விரித்து
மனிதர்களைப் பிடித்து
நகர்கிறது மேகம்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

சிறையெடுப்புதொடாமல் சிறையெடுத்தவன்

கெட்டவனாகிறான்.

தொட்டபின்

நெருப்பிலும் வனத்திலும் விட்டவன்

உத்தமனாகிறான்.

வாழ்த்து.

அம்மா முத்து அப்பா ரத்தினம்..
முத்து நவரத்தினமும்
புன்னகையில் ஜொலிக்கும்
சித்தப்பாவோ மாணிக்கம் ..
கோதையப்பத்தாவின்
செல்லமான நெல்லியான்
சீர்மிகு செல்லப்பனாகி
ராமசாமிஐயாவின்
குலம் தழைக்கச் சென்றார்.

குத்து விளக்காய்ச் சுடர்விடும்
வள்ளி என் தங்கையும்
குன்றின் விளக்காய்ப்
ப்ரகாசமாய்ச் சிரிக்கும்
ஸ்கந்தப் பழமும் பெற்று
நிழல்போல பின் தொடர்ந்து
இன்னொரு தாயாய்க் கனிவு காட்டும்
சித்திரச் சித்தியோடு
நெல்லிமரத்தான் அருளால்
நூறாண்டு வாழ்க..வியாழன், 18 ஜூலை, 2013

தினவுமனத்தினவு தீரும்வரை

எழுத்துக்களால் சொறிகின்றன

விரல்கள்.

சாவிசாவிகள் திறப்புக்கானவை
சில சாவியானால்
சில உயிர்துறப்புக்கும்..

புதன், 17 ஜூலை, 2013

காடும் பிராணிகளும்.

காடு காடென்று
அலைந்து கொண்டிருந்தன
சில பிராணிகள்.
விவசாயம், விளையாட்டு
எல்லாமே வியாபாரம்..
ஒன்றை ஒன்று தொலைத்து
இன்னொரு பரிமாணத்தில்
ஒன்றின் எதிரேயே இன்னொன்று
அலைந்தும் கண்டுபிடிக்கமுடியாமல்..

செவ்வாய், 16 ஜூலை, 2013

பத்துப் பாட்டு.


1.  சுத்தம்.:-
*************

சுத்தம் செய்தபின்னும்
விட்டுப் போன தூசி.
உன் வார்த்தைகள்.
********************************
2. பார்வைப் பூ.:-
**********************

ஆரிக்கிளும் வெண்ட்ரிக்கிளும்
இறகசைத்தன
பட்டாம் பூச்சியாய்..
உன் பார்வைப் பூவில்..
*********************************
3. கடவுள்.:-
*************

ஏகப்பட்ட கடவுள்கள்
குவியலாய் இருந்தார்கள்.
எனக்குப் பிடித்த கடவுள்
என்னைப்போல் எளிமையாயிருந்தார்.
*******************************************
4. குழந்தை:-
**************

அடுத்த வீட்டின் குழந்தைகள்
தோளணைத்துக் கிடந்தன
அவளுக்கான குழந்தை
உருவாகும் வரை
****************************************

5. மழை வலைக்குள்
குடையோடு சிலந்தி..
நீர்ப் பூச்சி
பிடித்துண்ணும்.

***************************************

6. அசைபோடுவது
கவ்விச் செல்வது
குடல் குதறுவது
சுற்றிலைய

கால்மடக்கி
வயிறெக்கி
இறகு படபடக்க
புதுத்தேனை உறிஞ்சும்
தேன்சிட்டை பூ விரும்பும்.

****************************************

7. பச்சையப் புள்ளியிட்டு
பூக்களால் இழையிழுத்து
பழக்கோலம் பூணும்
மரம்.

****************************************

8. விடியலின் நீர்ப்பூக்கள்
பூமியில்
பூக்கும் பனி.

****************************************
9. மௌனமாகவே கடந்து
சுருளச் செய்துவிடுகிறாய்
அடுத்த புயலுக்கு ஏன்
உன் பெயரிடக்கூடாது.

**********************************************************
10. எதிர்வீட்டுக் குழந்தை
அனுப்பிய முத்தப் புறாக்கள்
காற்றில் சப்தமிட்டு
கன்னத்தில் எச்சமிடுகின்றன..


பதினெண் கவிதைகள்.

குருதிக்கணவாய்கள்
வறண்டு கிடக்கின்றன
நெருப்புமிழ்ந்து..
வந்தேறிகளை வெளியேற்றி..

*******************************

விளக்கு வைக்க வந்தவள்
விறகாகிறாள்
வரதட்சணை  நெருப்பில்.

*********************************

சிப்பிகளும் சங்குகளும்
மண்புதைய நடைபயில
நண்டுகள் நீர்துரத்த
வளை ஒளியும்.

************************************

நீ பேசுவதை நிறுத்திவிட்டாய்
நிறுத்த முடியாத
நடன மயக்கத்தில் நான்

***********************************

உன்னுள் விதையாய் விழுந்து
முளைத்தெழுந்து
பின்னும் விதையாய் உன்னுள்
 
************************************
 
போதவில்லை
திட்டியது எல்லாம்
இன்னும் கொஞ்சம் திட்டு
அதிக போதைக்காய்.
 
*************************************
 
ராஜபிளவை
புறமுதுகிட்டதால் அல்ல
உன் பார்வை தைத்ததால்..
 
*********************************
 
ஆண்மையின்மை துயரமில்லை
ஆண்மையில் பெண்மை
பூத்துக் கிடப்பதுதான்
சப்பாத்திக் கள்ளிப் பூவின்
துயரச் சிரிப்பாய்.

************************************

உப்புமழை பொழிகிறாய்
நிறுத்து.
அமிலக்கண்ணீர் அரிக்கிறது மனம் .
 
************************************

 தோட்டத்து மரங்களுக்கு
இலைச் சிறகு முளைத்து
சலசலத்து பறக்கின்றன..
 
 *************************************

அழகுடைமை என்ற
அதிகாரம் படைக்கப்படவில்லை
அரிதாரம் அற்ற காலத்தில்..

**************************************

ஆரிக்கிளும் வெண்ட்ரிக்கிளும்
பட்டாம் பூச்சியானது
உன் பார்வையில்..

*******************************

நோய் என்ற அனுபவம்
உட்புகுந்தது என்னுள்
மண்புழுவாய்த் தின்று
துப்பியது என்னைப் பக்குவமாக்கி.

************************************

வால்களைச் சாமரமாக்கி
நன்றி அறிவிப்புச் செய்கின்றன
வளர்ப்பு நாய்கள்
எஜமானரின் வருகையில். 
 
***********************************


உணவை மாத்திரைகளாய்
எண்ணி உண்ணும் இளைப்பவர்கள்
மாத்திரைகளை உணவாக உண்டு.

*************************************
 
ஒற்றை வாசலில்
தொடங்கும் பயணம்
பல வாசல்கள் கடந்து
இறுதி இன்னொரு வாசல் வழி.
மூடிய கதவுடன்.
 ************************************
 
மழை ரேகைகள்
சுவரை அணைத்துப்
பாசம் வரைகின்றன.
 
************************************
 
ஆசையாய்க் கட்டிய வீட்டை
விற்று வந்தோம் லாபத்துக்கு
மகனின் குழந்தமைக்கரங்களின்
க்ரேயான் ஓவியங்களை
சுவற்றை விட்டு எடுக்க ஏலாமல் .

 

ஊவா முள்

ஊவா முள்ளென
ஏதோ ஒன்று..
கர்ப்பத்தின் வாசலிலிருந்து
கழற்றி எறிய முடியாமல்.
கர்ணனாய்க்  கவசம்
நீக்கினால் உண்டு
வள்ளலெனும் பதவி..
ரத்தம் தோய்ந்த
தோலோடு
அஸ்வத்தாமனாய் அலைகிறது
யுகம் யுகமாய்ப்
படிய வைத்த
வெறுப்பெனும் இருள்.
உரிக்க உரிக்கக் கண்ணீர்..
ஒன்றுமில்லாமல்..
ஒன்றென்று நினைத்த
ஒன்றுமற்றதற்கு..

திங்கள், 15 ஜூலை, 2013

கிச்சுக் கிச்சுத் தாம்பூலம்.

வார்த்தைகளை புதைத்து
விளையாடிக் கொண்டிருப்போம்.,
கிச்சுக் கிச்சுத் தாம்பூலமென.

சரியான இடத்தில்
கைவிரித்துப் பிடித்துக் கொள்வாய்
என் வார்த்தைகளை.

விடுவிக்க முன்னும் பின்னும்
தேடுவேன் கிளறிக் கிளறி.

தேடித் தேடி உளரத் துவங்கும்
என் முன்
உதறி நீட்டுவாய்.,
உன் கையில் புதைந்து
வேறு உருக்கொண்ட
என் அதே வார்த்தைகளை..

வெள்ளி, 12 ஜூலை, 2013

தோழி..

எங்கள் பால்கனிக்கிடையே
இருபதடி தூரம்தான்.
தவ்விக் கொண்டிருப்போம்
அதைத் தாண்டிவிடுவதுபோல
ஒருவரைஒருவர் பார்த்தவுடன்.

கையசைப்பாள்.
என் மனம் பறக்கும் அவளிடம்.
நர்சரி ரைம்ஸின்
ரோஸி லிப்ஸ் அவளுக்குத்தான்.

எனக்குக் கேட்கவேண்டுமென
சுலோகங்களும் பாடல்களும்
பாடுவதும் என்னைக்கண்டதும்
வாய் மூடிக் கொள்வதுமாய்
அவள் குரல் விளையாட்டு.
அபூர்வராகங்கள்., சப்தஸ்வரங்கள்.

விடுமுறை தினங்களில்
படியேறி கதையளப்பாள்..
பெரிய மனுஷியாய்..
தொங்கட்டான்கள் ஆட
கண்கள் விரிய அவள் பேசுவது
ஆலங்கட்டி மழையாய்
என்னை நனைக்கும்.

எல்லாவற்றிலும் ஏறி விளையாடுவதில்
வாலற்ற கபீஷ் அவள்.
இறக்கை முளைத்தமுயல்குட்டி
முந்தானை இழுப்பாளா
முத்தம்கொடுப்பாளாவென
ஆசையுற்று நிற்கையில்

தொடத் தொட
இறக்கை அடிக்காத
கோழிக்குஞ்சாய் ஓடுவாள்.
தன் வீடுநோக்கி..
எல்கேஜியிலிருந்து
யூகேஜி செல்லும் என் அன்புத்தோழி

வியாழன், 11 ஜூலை, 2013

எண்ணச்சுமை..

எண்ணச்சுமை..:-
**********************

என்னைக் கடந்து
போய்க்கொண்டே இருக்கிறேன்..
ஒரு சாலைத் தடையையும்.,
மழைப் பள்ளத்தையும்..
குறுக்கிடும் பாதசாரிகளையும்..

அங்கங்கே
இன்ப அதிர்ச்சியில்
எதிர்பாராமல் அடிக்கிறது
உன் பெயர் தாங்கிய
கடைப்பலகைகள்..

உன்னைக் கடந்து
பலவருடங்களாகிவிட்டன..
பழைய பலகைகளற்று
விளக்கெரிந்து மின்னும்
புதுப்பலகைகள் ஜொலிக்கின்றன.

ஒரு சாலைத் திருப்பத்தில்
பெயர்ப்பலகைகளையும்
தடையற்றுக் கடக்கிறேன்..
படபடவென்றே துடித்துக்
கொண்டிருக்கிறது இதயம்
கடக்காமல் விட்ட
உன் எண்ணச் சுமையில்..

இரையற்ற இரை.

எல்லோரையும் இணைத்தாயிற்று
நகர வழியில்லாமல்..
வலை சுருங்கிக் கொண்டிருக்கிறது..
இரையற்று இரையான சிலந்தி
மையத்தில் ஒடுங்கி..

சனி, 6 ஜூலை, 2013

கசக்கும் கோப்பைகள்..

கசக்கும் காஃபிக்கோப்பைகளை
நகர்த்தியபடி சொல்கிறாய்.
நீ ஒரு சாத்தான் என்று.

யோசிக்கத்துவங்குகிறேன்
நம் சந்திப்பிலிருந்து
அன்றான தினம் வரை.

சந்திக்க நினைத்ததைவிட
சந்தேகப்பட்ட நேரங்களை
காயப்படுத்திய கோபங்களை.

மாற்றி மாற்றிக் கேள்விகள்கேட்டு
துன்புறுத்திய கணங்களை.

கண் சந்திக்க ஏலாமல்
ஊசியாக் குத்தும் மழையில்
கண் கசிய நடக்கிறேன்.

கோட்டுப் பைகளுக்குள்
கை விட்டபடி புன்னகைக்கிறாய்
பலநாள் கோபம் மின்னலாய் ஜொலிக்க.

இடியைப் போல
இடித்துரைத்துக் கொண்டிருந்தது மனம்.

என்னிடம் இடம் அற்ற சாத்தான்
அடிக்கும் சாரலில் உன்னிடம்
இடம் பெயரத் துவங்கி இருந்தான்.

வெள்ளி, 5 ஜூலை, 2013

வெள்ளந்திச் சிரிப்பு :-

வேகவைச்ச வள்ளிக்கிழங்கோ,
சோளமோ , கடலையோ
பனங்கெழங்கோ,
எலந்தவடையோ
உப்பொரசி ருசிக்குமடி
உன் கரகரத்த கைபட்டு.
பள்ளிக்கூட முக்குல
மொளகாதூவி மாங்கா பத்தை,
கொடுக்காபுளி,
கமர்கட்டு,பெப்பர்மிண்டு,
சூடமிட்டாய் கல்கோனா
இனிப்பும் புளிப்புமா
நாவொரசிக் கடக்குதடி,
ஓடும் பஸ்ஸில்
சேவல்கொண்டை
பாம்படம் அசைஞ்சாட
சின்னாளப்பட்டோட
ஒரு வெள்ளந்திச்சிரிப்பை
அள்ளி அள்ளி ருசிக்கும்போது.

வியாழன், 4 ஜூலை, 2013

நெசவு :-

நெசவு :-
*****************

மழைநூல்களை
நெசவு செய்கிறது மேகம்.
பண்டிலாய் சுற்றி வைத்துக்
கொள்கிறது குளம் ..

செவ்வாய், 2 ஜூலை, 2013

ஆட்டுப் பிழைப்பு.

ஆட்டுப் பிழைப்பு..:-
****************

பிறந்துவிட்டது
புழுக்கைகள் நிறைந்த
ஆட்டுக் கொட்டாரத்தில்.

வெறுந்தசை வளர்த்தது
கசக்கும் வேப்பந்தழையில்.

பிடிக்கவில்லை
அதற்குத் தன்னை
உடலப்பிய ரோமங்களோடு.

துள்ளித்துள்ளி முட்டியது
கிடையிலிருந்து விடுவிக்கும்படி.

முட்டி முடங்கி
அசைபோட்டு அழுதது
கிடாய்ப்பிழைப்பு இதுவென..

இருந்தும்
வதைக்கூட அரிவாள் சாணையின்
முத்திரைச்சத்தம் அழைக்க
மலங்க மலங்க
விழித்தபடியே சென்றது,
முடிவுக்கு வந்த போராட்டத்தைக்
கைவிட இயலா ஆடு.
Related Posts Plugin for WordPress, Blogger...