இதயப் பாலங்கள் உடைகின்றன.
இதயப் பாலங்கள் உடைகின்றன
எண்ண அலைகள் ஓய்கின்றன.
எத்தனை கற்பனைகள்
அஸ்திவாரம் ஆயின
எத்தனை கனவுகள்
கற்கள் ஆயின.
எத்தனை ஆசைகள்
இணைந்து கொடுத்தன.
காண்பவர் கண்
வியக்கும் வண்ணம்
பாலம்
படிப்படியாக வளர்ந்து
கம்பீரத்தை அளித்தது.
வளர்ச்சிக்கும் ஓர்
வீழ்ச்சி உண்டல்லவா ?
உள்ளத்தில் அமைந்த பாலம்
உதட்டால் உதட்டுச் சொற்களால்
உடைந்து போன அவலம்.
கண்ணாடி சிற்களாய்
உடைந்து போனாலும்
ஒட்டி வைத்து முகம் பார்க்கலாம்.
உள்ளம் உடைந்தால்
எதை வைத்து ஒட்ட முடியும் ?
சந்தேகக் கோடு ! அது
சந்தோஷக் கேடு. !
இந்த உலகத்தில்
எதுவுமே நிலையானதல்ல !
நிரந்தரமானதல்ல !
-- 82 ஆம் வருட டைரி