எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 ஜூலை, 2018

அன்புத் துலா.

எவ்வளவு இட்டாலும்
என் தராசுத்தட்டை
மேலேற்றி விடுகிறாய்.
அள்ளிக்கொட்டி
என் தலைஉயர்த்திவிட்டுத்
தாழ்ந்தே கிடக்கிறது
உனதன்பு.
  

இறப்பும் பிறப்பும்.

இறப்பின் துயரும்
பிறப்பின் துயரும்
ஒன்றுதான்.
நமக்கு என்னாளோ என்று
பலர் கலங்க
வகையாய் வந்து மாட்டிக்கொண்டோமே
என்று ஒருவன் கலங்க
இறப்பின் துயரும்
பிறப்பின் துயரும்
ஒன்றுபோலத்தான்
இருதுயர்.

- 1988 ஆம் ஆண்டு டைரி.
  

ஞாயிறு, 22 ஜூலை, 2018

இயல் உலகம்.

உடலும் நிறமும் கொண்டு
தீட்டப்படும் வண்ணங்கள்
உடலை அறிவதற்குக்
கரை உடைக்கின்றன.

அணையைத் தடுக்கும்
கற்களிலும் விதைகளைப் பாய்ச்சிச்
செல்கின்றன வலசைப்பறவைகள்.

உடல்வேறு மனம்வேறெனக்
கருதும் மனிதர்க்கு
இன்பந்துய்த்தலே இலக்கு.

மனதை உடலாயும்
உடலை மனமாயும்
கருதும் மனிதர்க்கு
இசைவாய் இயல்வதில்லை
இயல் உலகம்.

புதன், 18 ஜூலை, 2018

விரல்களைத் தின்னும் வர்ணங்கள்.

ஒரு நூறு முறை
மன்னிக்கப்படுகிறீர்கள் நீங்கள்.
உங்கள் ஜாதியை மதத்தைத்
தூக்கிப் பிடிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறீர்கள்.
கூண்டு ஜன்னலோரம்
கையசைத்துச் சிரித்துச் செல்லும் அரசியல்வாதியாய்
குற்றங்களின் பிடியுள் நிம்மதியாயிருக்கிறீர்கள்.
கவசமாய் அல்ல கேடயமாய்க்கூட
அவை உங்களைக் காப்பதில்லையென உணர்ந்தும்
கேன்களுடன் அமர்ந்து போஸ்கொடுக்கும்
துக்கிரி நிலைக்குத் தள்ளப்பட்டபோதும்
அடங்குவதில்லை உங்கள் மாச்சர்யம்.
பிறகு நீங்களே விரும்பாவிட்டாலும்
உங்கள் கைபிடித்து விரல் ரேகைகளை
அவர்களே பதித்துக் கொள்கிறார்கள்.
விரல்களைத் தின்னும் வர்ணங்களோடு வாழ்ந்தும்
ஆதிக்க வர்ணமாகவே அடையாளங் காட்டப்படும் நீங்கள்
உங்கள் அசல் உரிமை பெறக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.
  
Related Posts Plugin for WordPress, Blogger...