எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 நவம்பர், 2017

நானுமோர் துறவி.

நானொரு துறவி
பூர்வாசிரமத்தை
விட்டு வந்த துறவி.

தவம் என்னும்
கடமைக்காக
மலையேறிக்
கஷாயம் உடுத்தி
முடிவளர்த்துக் குவித்து
ஜபமாலை உருட்டி
நீரர்ப்பணம் செய்து
ஜபமாலை உருட்டி
நீரர்ப்பணம் செய்து
நானுமோர் துறவி.

கனிகாயால் கிளைத்தெழுந்து
கோபமழிந்து
சாந்தம் புகுந்து
இறைமையை அர்ச்சித்து,
தூரதர்சித்து,
நானுமோர் துறவி.

கொட்டையணியாமல்
கட்டை மாட்டாமல்
ஓடு ஏந்தாமல்
நீறு தீட்டாமல்
நானுமோர் துறவி.


-- 82 ஆம் வருட டைரி. :)

புதன், 29 நவம்பர், 2017

நினைவுப் பை.

மடங்கிக் கிடக்கிறது
ஞாபகம்,
உன் மனசாய்
எனக்குள்.

க்ளிப்பின்
கரங்களுக்குள்
துணிகளாய்
நினைவுப் பையும்
காற்றாடும்.

படுக்கை விரிப்புகள்
நுனி மடங்காமல்,
வெறுக்கத்தக்க
அழகுடன்.

விட்டத்துப் போர்வைகள்
விட்டிலாய்
என்மேல் சரிய
விளக்காய் நான்.

அனைவரின்
பேச்சுக்களும்
தென்னை மட்டைச்
சரசரப்பாய்
ஒன்றும் செய்யாது
போகும்..,
என்னை.


-- 82 ஆம் வருட டைரி. :)

வியாழன், 23 நவம்பர், 2017

கூடுகள்.

எங்கேயோ
சில நாற்றங்கால்கள்
தலை சிலுப்ப
எனக்குள்ளா ?
எனக்குள்ளா ?
இல்லை இல்லை
இவை மக்கிச் சரியும்
வைக்கோல்கள்.

நுழைவுத் தோரணங்களாய்
சிலந்திக் கூடுகள்.

மனிதர்களாய்
இரைகுதறும் சிலந்தி

மனிதத்தாலே
உண்ணப்படும்
மனிதம்

நகமும் அழுக்குமாய்
மனிதனும் மனசும்.

-- 83 aam varuda diary.

செவ்வாய், 21 நவம்பர், 2017

கள்ளியாய்.

நிலவைப் போலவே
தேய்ந்தும்
வளர்ந்தும்
உன்னுள் எண்ணங்கள்.

நீ
அந்த நிலைத்த சூரியனைப்
போல் இரேன்.

இடித்தவுடன்
நொறுங்கும் கண்ணாடியாய் இல்லாமல்
தேயத் தேயத்
தகதகக்கும் தங்கமாய் இரேன்.

தொட்டவுடன்
சுருங்கும் பூவாய் இல்லாமல்
தண்ணியில்லாக்  காட்டின்
கள்ளியாய்க் களைக்காமலிரேன்.


-- 82 ஆம் வருட டைரி. :)

முச்சந்தி.

ஏன் நிகழ்கிறது
இந்த விசித்திரம்
ஏனெனில் நீ ஒரு தரித்திரம்

வருடந்தோறும்
மலருக்கெல்லாம் வசந்தம்
உனக்கு மட்டும் கசந்தும்.

ஒவ்வொருவருக்கும்
அவரவர் பாதை
நீ ஒரு முட்டாள் முச்சந்தி

இயற்கைக்குக் கூட
உன்னைக் கண்டு இளப்பம்.
உனக்கென்றால்
பருவகாலங்களும் புத்தி பேதலிக்கிறது.

சூழ்நிலைச் சங்குகள்
உன்னைக் கண்டு கத்தும்.
நீ
சும்மா கிடந்த  ஆண்டிபோல்
(உறவுச் ) சுமை தூக்கி அலைவாய்.

உனக்கேன் விரக்தியும் வெறுப்பும் ?
அடித் தேனு !

சந்தோஷமாய் இரேண்டி சனியனே !

-- 82 ஆம் வருட டைரி. :)

திங்கள், 20 நவம்பர், 2017

அருகு.

நீ என்னருகில்
இருக்கும்போது
எந்தக் காயங்களும்
என்னைச்
சேதப்படுத்துவதில்லை.

நீ என்னருகில்
இல்லாதபோதோ
கொடிக்கம்பி நிழல்களெல்லாம்
விசுவரூபம் எடுத்து
எனை விழுங்கக் காத்திருப்பதாய்.

-- 86 aam varuda diary

வெள்ளி, 17 நவம்பர், 2017

கூட்டுப் புழு.

உனக்கேன்
இந்த
வண்ணத்துப் பூச்சிக் கனவுகள்.

நீ
ஆணாகவோ பெண்ணாகவோ
ஆசைப்படலாமா ?
ஏன் பிறந்தாய் ?
அவதிப்படு.

உனக்குள்ளே
கூடு கட்டு இன்பமாய்.
கூட்டுப் புழுவிலே
கொல்லப்படுவாய் எனத் தெரிந்தும்
கூடு கட்டு
உருப்படாமல் போ

மனசைக் கழட்டி
விட்டெறிந்து விட்டுச்
சும்மா கிட.

உனக்கேன் மனசும்
கனவும் இன்னொண்ணும்.

அரைக்குக் கோவணமில்லை
போர்வைக்குப் பேராசையா ?

-- 82 aam varuda diary

உம் பணம் பணம் எம் பணம்.

எல்லாரும்
சந்நியாசியாகுங்கள்.
இல்லாவிடில்
சந்யாசிகளாக்கப்படுவீர்கள்.

மணமானவர்கள்
மகான்களாக இருங்கள்
இல்லாவிடில்
மகான்களாக்கப்படுவீர்கள்.

முப்பணம் பற்றி
ஞானியாயிருங்கள்.
செலவழித்த பணம்
செலவழிக்கும் பணம்
செலவாகப் போகும் பணம்

பணம் உங்கள் அகராதியில்
பணம் ( வரும் அல்ல ) போகும் போகும்
எல்லாருக்கும் ஈந்து
ஈரத்துணியைக்
கட்டிக்கொண்டு படுங்கள்.

சாதுக்களாயிருங்கள்
சீறினீர்களோ
உங்கள் ஈகோ கொல்லப்பட்டு
சாதாக்களாக்கப்படுவீர்கள்.

-- 86 ஆம் வருட டைரி

புதன், 15 நவம்பர், 2017

விநாயகர் துதி.

விநாயகன் பேர் கொண்டு வினைகள் பல தீர்த்திடுவான்
விண்ணிற்கும் மண்ணிற்கும் முதலான பெருமானே !
ஆனை முகத்தானே ! யார்க்கும் நலம் புரிந்திடுவான் !
அன்னை பார்வதிபோல் அழகுப்பெண் தேடுகிறான். !

உன்னையே கதி என்று உய்யுமுன் அடியார்க்கு
உதவினேன் எனக்கூறி ஐந்துகரம் நீட்டிடுவான்.
பெருமை பல கொண்டிருந்தும் பொறுமையினால் அமைதிகொண்டு
சிறுமை பல புரிவோர்க்கும் சிறப்புவரம் தந்திடுவான்.

உன்னையே கதியென்று உய்யும் முன்  ( உய்யும் உன் ) அடியார்க்கு
‘தந்தேன் அபயம்’ என ஐந்து கரம் நீட்டிடுவான்.

பெருமை பல கொண்டிருந்தும் சிறுமை பல புரிவோர்க்கு
பொறுமையினால் அமைதி கொண்டு பெரும் நலனே நல்கிடுவான்.

-- 8 . 4. 1981.

செவ்வாய், 14 நவம்பர், 2017

வள்ளியப்பன் நாமத்தான் எந்தன் தம்பி.


வள்ளியப்பன் நாமத்தான் எந்தன் தம்பி!
அள்ளி அள்ளிக் கொடுப்பான் எந்தன் தம்பி !
பள்ளி கொண்டி ருப்பான் எப்போதுமே
வள்ளி யைத்தான் மணப்பான் எந்தன் தம்பி !

ஓயாமல் சண்டை போடும் அன்புத்தம்பி!
ஆயாவீட்டு ஐயா பேருனக்கு அருமைத்தம்பி!
ஐயா போல் இருந்திடுவாய் அன்புத்தம்பி !
பொய்யே நானும் சொல்லமாட்டேன் ஆசைத்தம்பி !

பட்டப்படிப்பு படிப்பாயா எந்தன் தம்பி!
சட்டப்படிப்புப் படிப்பாயா எந்தன் தம்பி !
குடத்திலிட்ட விளக்குப் போல இருந்திடாமல் நீயும்
மடைதிறந்த வெள்ளம் போல துடிப்புக் கொள்வாயே!

டிஸ்கி :- இது என் சகோதரன் பாபு என்ற வள்ளியப்பன் என்ற சேவுகன் செட்டிக்காக அவன் பிறந்தநாளில் எழுதியது. . வருடம் நினைவில் இல்லை. 80, 81  இருக்கலாம். அவன் இப்போது இல்லை. 44 வருடங்கள் வாழ்ந்த அவன்  2013  ஏப்ரல் ஆறாம்தேதி இயற்கை எய்திவிட்டான்.

ஞாயிறு, 12 நவம்பர், 2017

சௌந்துவுக்காக..

நேரம் நகர மறுக்கிறது
நீ உப்புமூட்டை
விளையாடிய முதுகில்
அதுவும் இப்போது
கண்ணே
எங்கே சென்றாய் ?
கொல்லத்தின் சமையற்காரியக் கலக்கி
கிரைண்டரை நிறுத்தி
மிக்ஸியைத் தட்டிவிட்டு
குறுக்கே ஓடி
துணிகளைத் துழாவி
சோறு சிதறி
மழலை பேசி
யாரை மயக்கிக்
கொண்டிருக்கிறாய் நீ. ..

யாரிடம் அடம்பிடித்து
(கண்ணீர் இல்லாமல் )
அழுது கத்திக் கொண்டிருக்கிறாய் நீ

இங்கோ அமைதியின் அலறல்.
தண்ணீர்வாளிகள்
வெய்யிலின் கருக்கலில்,
வத்தல்கள் வசலில்,
பேனாக்களும் புத்தகங்களும்
அங்கங்கே..

எந்த ஸ்டேஷனில் இறங்கிய
பயணி நீ ?
வேறு ரயிலில்  ஏறிக்கொண்டாயோ ?
நானோ எதிர்வரும்
ரயில்களையும் ஸ்டேஷன்களையும்
துழாவிக்கொண்டு உனக்காய் !

வலை.

கரப்பான்
கூடு கட்டிப்
போடும்.
சிலந்தி
தன்னைப் பிடிக்கவே
வலை பின்னும்.
கைகளுக்குள்ளும்
பசையாய்
நிகழ்காலம்
வலை
தும்பட்டையாகும்
எங்கும் வெளிச்சம்
துரட்டிகள்
ஓரம் விலக்க
சிலந்தி பயணப்படும்
வேறிடத்தில் வலைபின்ன.

Related Posts Plugin for WordPress, Blogger...