எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 நவம்பர், 2016

சேதி

வருவதும் போவதும்
போவதும் வருவதும்தான்
என்றானபின் பயணக் கணக்கென்ன.. ?
ஒவ்வொருதரமும்
ஒரு துயிலும் விழிப்புமாய்ச்
செல்கிறது காலம்.
ஒரு வித்யாசம்
உன் பயணப் பொழுதுகளில்
நீ தூங்கிக் களிக்கலாம்.
அதே பொழுதுகளில்
நான் விழித்தே கடக்கிறேன்,
நீ உனக்கான இருப்பிடம்
சென்று அடைந்த சேதி அறிய.

செவ்வாய், 29 நவம்பர், 2016

கிடங்கு.

ஒரு வெறுப்பு
ஒரு கோபம்
ஒரு சந்தேகம்
ஒரு எரிச்சல்
ஒரு எண்ணத்திரை
ஒரு கண்ணீர்த்துளி
இணைக்கிறதா
பிரிக்கிறதாவெனப் புரியாமல்
பொத்திவைத்துக் கொள்
உள்ளக்கிடங்குள்.
ஆரம்பமும் முடிவும்
இவற்றுள்ளே சுழல்கின்றன
உன்னையும் சுழலவிட்டு

வியாழன், 24 நவம்பர், 2016

ஆன்மா.

உயிர் தழுவும் அணைப்புகளும்
உயிர் குடிக்கும் முத்தங்களும்
ஆவி சோரச் சேர்ந்ததை
வெளிப்படுத்தப் போதுமானதாயில்லை.
ஓருயிராய்க் கலக்க
உடல் எடுக்கும் ப்ரயத்னத்தில்
விலகியும் வெருண்டும்
மருண்டும் நிற்கிறது ஆன்மா.

*********************************


பொருதோம் நாம் அன்று
பொருதோம் நாம் இன்றும்..

புதன், 23 நவம்பர், 2016

களப்பலிகள்

களப்பலிகள் கேட்பதில்லை
காதல் யுத்தம்.
சதுரங்கச் சிப்பாயல்ல
சாய்த்துவிட.
எத்திக்கும் சித்திக்கும்
சாதுர்ய ராணிக்குத்
திசைகள் புரிவதில்லை
பேதமையாகிறாள்.
முற்றுமுணர்ந்த ராஜாவின்
கம்பீரப் பார்வை
ராணியின்பக்கம்
மௌனமாய்.

செவ்வாய், 22 நவம்பர், 2016

சொற்சித்திரங்களும் ஞாபகங்களும்

நிலையற்ற சந்திரனையும்
நறுங்கும் சூரியனையும் தூரப் போட்டு
நட்சத்திரங்கள் சிதறும்
சொற்சித்திரங்களில்
லயிக்கிறது பூமி.

*************************************

விதையாய் முளைத்துப் பெருகும்
உன் ஞாபகங்களை
எப்படிப் புதைப்பது.

வலசைப் பறவையும் கடைசி உரையாடலும்.

நீர் நிறைய மீனிருக்க
மனங்கொத்திப் பறக்கிறது
வலசைப் பறவை.

*****************************

கடைசி விருந்தைப் போல
மறக்காத ஓவியமாகிறது
கடைசி உரையாடலும்.

திங்கள், 21 நவம்பர், 2016

ரசவாதம்

காளி என்றால் காளிதாசன் என்கிறாய்.
பேச்சி என்றால் பிரியன் என்கிறாய்
யட்சி என்றால் என்ன செய்வாய்
யட்சனாவாயா  ராட்சஸா.

ஞாயிறு, 20 நவம்பர், 2016

துருவங்கள்.

பனிப்பாறைகள் சூழ்ந்த தீவிலும்
தனியே வாழும் பெங்குவின்கள்.
தனித்தலையும் வால்ரஸ்கள்.
புது யுக வாழ்வு..
தனித்துவம் தான் தத்துவம்
இறுகிக்கிடக்கிறது
தாம்பத்யக் குகை..
வெளியேற வழியற்று
உறைந்து கிடக்கின்றன மீன்கள்
சூரிய வெப்பம் சாட்டவிடாமல்
இருண்டு கிடக்கிறது
தென் துருவமும் வடதுருவமும்

வெள்ளி, 18 நவம்பர், 2016

தரிசனம்

சூரியனைப் போல

வருவதும் போவதுமாயிருக்கிறாய்.

என் கவனம்தான்

பிசகிப் பிசகிப் போகிறது.


சில நேரம் ஜன்னலிலும்,

சில நேரம் மரக்கிளை ஊடேயுமாக

வந்து செல்கிறது உன் தரிசனம்.


அவ்வப்போது என் விழிகளிலும்

நிலவாய்ப் பிரதிபலிக்கிறது

உன் சூர்யப்பார்வை.


இருவரும் அற்ற தருணங்களில்

நட்சத்திரங்களாய்

மின்னிக் கொண்டிருக்கிறது நினைவு.


வியாழன், 17 நவம்பர், 2016

சூரியப் பார்வை.

நழுவி விழும் வெய்யிலைப் பிடிக்கிறாள்
ஈரத் துணிகளில்
தேய்த்த பாத்திரங்களில்
ஊறுகாய் ஜாடிகளில்
வத்தல் டின்களில்
தொட்டிச் செடிகளில்

நிரம்பி விழும் வெய்யில்
வீட்டிலிருந்து தப்பி
சாலைகளில்ல் குதித்தோடுகிறது
நதிகளில் மின்னலைப் போல

ஒருமுறை குவியாடியில் குவித்து
ஒற்றைக் காகிதத்தை எரித்தபோது
அவள் சூரியனைப் பிடித்துவிட்டதாகத்தான் பட்டது

நெசவு செய்த மஞ்சள் கம்பளத்தை
உருவிக் கொண்டு
பதறி ஒளியும் சூரியன்
மெல்ல எட்டிப்பார்க்கும் அதிகாலையில்
அதிசயமாய் நமஸ்கரிக்கிறாள்.

கண்ணாமூச்சியாய்ப் பொத்திக்
களவுத்தனமாய் ஒற்றைக் கண்விரித்து
இடுவலில் அவள் பிடித்த சூரியன்
சிக்கிக் கொண்டு துள்ளிவிழுகிறான்
அவளின் சூர்யப் பார்வையாய்.

வாசமொழி.

பூக்கள் மலர்கின்றன
வாசமொழி பேசி..
புரியவில்லை
ஆனாலும் நுகர்கிறேன்


*****************************


பேரன்புக் காற்றுப் பட்டாலும்
நடுங்கிச் சிலிர்க்கிறது
தோட்டத்தின் மூலையில்
புதிதாய்ப் பூத்திருக்கும்
ஒற்றைப்பூ.

*****************************


புதன், 16 நவம்பர், 2016

ஞாபக மாலை.

உடனே சொல் உடனே சொல் ..
மழலை மாறா
சிறுபிள்ளையாய்த் தொணதொணப்பு
இன்றே இறந்தா போகப்போகிறேன்
உடனே சொல்லிவிட்டுச் சாக.

************************************

காலக் கெடிகாரம்
ஞாபக மாலையின் இதழ்களை
ஒவ்வொன்றாகப் பிய்த்துப் போடுகிறது
எல்லாம் உதிர்ந்தபின்னும்
அது சரத்தில் இல்லை
என்றாகிவிடுமா..

நீர்க்காதல்.

மழையைப் பார்த்ததில்லை
வாசல் மூடி வசிக்கும் சிலர்
அவள் கோபத்தை தாபத்தை
முனகலை சிணுங்கலை

குழந்தையாய்க் குமரியாய்க்
காதலியாய்க் கனிந்தவளாய்
வீடு சுற்றி ஆடுமவள்
நடனம் கண்டதில்லை

முகம் மூடிச்செல்லும்
மனிதர்களைத் தவிர
மிச்சமுள்ள எல்லாவற்றையும்
தழுவிச் செல்கிறாளவள்.

குடை விரித்துத் தடைவிரித்துக்
கடந்து செல்வோருக்குச் சொல்ல
எந்த ரகசியமுமில்லை அவளிடம்.

அவள் முணுமுணுப்பை
உற்றுக் கேட்போருக்குச்
சொல்லிக் கொண்டிருக்கிறாள்
ஜீவரசம் ததும்பும் தன் நீர்க்காதலை.

திங்கள், 14 நவம்பர், 2016

நீர்மை

காற்றின் காதுகளில்
மிதந்து இறங்கும்
இறகு சொல்லும்
வெம்மையை,
ஊனாகி உயிராகிக்
கலந்திருந்த
உண்மையை,
பிரியமனமில்லாமல்
பிரிந்து வந்த
நீர்மையை.

வெள்ளி, 4 நவம்பர், 2016

கண்ணாமூச்சி

பொம்மைகளுக்குள்
ஒளிந்து கிடக்கிறது
பிரிய பொம்மை

பொம்மிகளுடன்
கண்ணாமூச்சியாம்.

ஏறக்கட்டப்படுகிறது பரணில்.
கொஞ்சம் தூசி நல்லது.

புது உடைகள் தேவைதான்
கொலுவுக்கு நாளிருக்கிறது.

பழித்தலும் அழித்தலும்
தெரியாக் கோலாட்டத்தில்
படிகளைவிட்டு ஓடிடப் போமோ

வியாழன், 3 நவம்பர், 2016

ஒத்ததிர்வின் ஓசை

துளித்துளியாய்க்
கரைந்துகொண்டிருக்கிறது
நேற்றைய சம்பவம் இனிப்பாய் .
சர்க்கரைப் பந்தலில்
தேன் மாரி பெய்து
கடைவாய்ப்பல்லில் ஒளிந்து
இதயத்தில் வடிகிறது.
ஒளிக்கும் முகம் களிக்கும்
உள்ளும் புறமும் நெகிழும்
ஒத்ததிர்வின் ஓசை
ஒன்றோடொன்று இயைந்து.

புதன், 2 நவம்பர், 2016

இரணிச் சிம்மம்.

என்னில் இரை எடுத்து
என்னில் இறை எடுக்கிறது
இரணிச் சிம்மம்

****************************

எதிர்ப்படுவதையெல்லாம்
வலியில்லாமல்
ப்ரசவிக்கிறது
நிலைக்கண்ணாடி

****************************

பூக்குடலைத் தூரப் போடு
பாமாலைகளைக் கிழித்தெறி
சரிக்குச்சரி சமராடு
ருத்ரம் உன் திருக்கோலம்
ரத்தம்தான் நிவேதனம்
நீ சரபமல்ல. மஹா ப்ரத்யங்கிரா.

*****************************

தப்பிதமான கற்பிதங்கள்
காவு வாங்கி விடுகின்றன,
சில சமயம் சரிவரக் காணாத உண்மையை  ,.
சில சமயம் தறிகெட்டலையும் மனதை.

Related Posts Plugin for WordPress, Blogger...