எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 2 அக்டோபர், 2026
செல்லச்சிட்டே சித்திரமே
செவ்வாய், 29 செப்டம்பர், 2026
பூந்தோட்டம்
பூந்தோட்டம்
பூந்தோட்டம் பார்த்தேனே
பூக்கள் எல்லாம்
சிரித்தனவே
மல்லி முல்லை ஜாதிப்பூ
வெள்ளைப் புன்னகை செய்தனவே,
பவளமல்லிக்குச் சிவப்பு காலு
அரளிப்பூவுக்குச் சிகப்பு உடலு
கொடிச்சம்பங்கிக்குப் பச்சை முகம்
செடிச்சம்பங்கிக்கு வெள்ளை முகம்
பல நிறத்தில் ரோசாப்பூ
மஞ்சள் பிங்க் ஊதா
டிசம்பர் பூவு
செண்டை கட்டும் கோழிக்கொண்டை
சிவப்பு வெல்வெட்டு உடம்பு அதுக்கு.
மகரந்தத்தை
நீட்டிக்கிட்டே
தலையாட்டுது
செம்பருத்தி
சூரியன் போகும்
திசையெல்லாம்
முகம் திருப்புது
சூரியகாந்தி
தண்ணிக்குள்ளே
தாமரைப்பூ
அதுக்கணைவா அல்லிப்பூ
குடை பிடிக்குது நாகலிங்கம்
நாட்டியமாடுது
நந்தியாவட்டை
ஊதா நிற வாடாமல்லி
மாசக்கணக்கில் வாடாதது.
வெள்ளை சாமந்தி மஞ்சள் சாமந்தி
விசேசம் வந்தா அணிவகுக்கும்.
பெருசு பெருசாப்
பூத்திருக்கும்
டேலியாப் பூவு கினியாப்
பூவு
அந்தியிலே மட்டும்
பூக்கும்
அழகழகாய் அந்திமந்தாரை
ஆரஞ்சு நிறக் கனகாம்பரம்
மனச மயக்கும் மரிக்கொழுந்து
கதம்பம் போல இணைஞ்சு நின்னு
கலகலப்பாச் சிரிக்குதுக.
பூவரசம்பூவும் ஆவாரம்பூவும்
புதருக்குள்ளே தாழம்பூவும்
காட்டு மல்லியும்
மணக்குது
பூந்தோட்டம் பொலியுது
மனுசர் நாமும் பூக்கள்
போல
மதம் சாதி இல்லாம
மனசைப் பார்த்துப்
பேசுவோம்
மக்கள் ஒண்ணாச்
சேருவோம்
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026
அய்யன் வள்ளுவன் வழி நடப்போம்
அய்யன்
வள்ளுவன் வழி நடப்போம்
அன்னை தந்தை உலகம்
என்று
ஆதி வணக்கம் சொன்னாரு
ஒழுக்கம் கல்வி அன்பு
பண்பு
அறம் மேன்மை என்று
ஒரு நூறு குறள்
சொன்னாரு
அறம் பொருள் இன்பம்
என்று
முப்பாலாய் வகுத்தாரு.
நூற்றி முப்பத்து மூன்று அதிகாரத்தில்
ஆயிரத்து முன்னூற்று
முப்பத்திமூன்று குறள் தந்தார்.
அரசனுக்கும்
அமைச்சனுக்கும்
அரசாங்கத்துக்கும் குறள்
வகுத்தார்.
தனி மனித
ஒழுக்கத்துக்கும்
விழுப்பம் தரும் குறள் வைத்தார்.
நிர்வாக மேலாண்மைக்கும்
இயற்கைச்
சீராண்மைக்கும்
நல்லாட்சி அமைத்திடவும்
வல்லமையுடன்
திகழ்ந்திடவும்
குறள் சமைத்தார்
வள்ளுவர்.
இல்வாழ்க்கை மட்டுமல்ல
தவம் தானம் என்று கூட
குறள் இயற்றிச்
சென்றார்
வாழ்க்கை நெறியைச் சீரமைக்க
வள்ளுவ நெறியைத்
தந்தார்
வழிகாட்டும் குறள் தந்த
அய்யன்
வள்ளுவன் வழி நடப்போம்
உலகே புகழும்
நெறியிதுவாம்
வள்ளுவப்பெருந்தகையை
வணங்கி நிற்போம்
வியாழன், 2 ஜூலை, 2026
மிருகக் காட்சி சாலை
மிருகக் காட்சி சாலை
சித்து ஒருநாள்
தொலைக்காட்சியில்
மிருகங்கள் பாடுவதைப்
பார்த்தானே
அப்பா அப்பா
இவையெல்லாம்
எங்கே இருக்கெனக்
கேட்டானே
மிருகக்காட்சி சாலையிலே
இவையெல்லாம்
பார்க்கலாமே
என்று தந்தை உரைத்தாரே
அப்பா நானும்
பார்க்கணுமே
என்றே சித்து கெஞ்சினானே
செவ்வாய், 2 ஜூன், 2026
எல்லைக் காவல் வீரர்கள்
எல்லைக் காவல் வீரர்கள்
வல்லரசுப் போட்டியிலே
வன்மம் கொண்ட நாடுகள்
ட்ரோன்கள் விட்டு உளவறிந்து
குண்டு வீசிச் செல்லுது
இரும்பு டாங்கி வருகுது
இரக்கமில்லாமல் குண்டு போடுது
மேலே விமானம் பறக்குது
மழை போல் குண்டு பொழியுது
அணுகுண்டை அள்ளி வீசி
ஆளைக் கபளீகரம் செய்யுது
எங்கும் குண்டு எதிலும்
குண்டு
மனிதனை மொத்தமாய்
அழிக்கும் குண்டு
எல்லைச்சாமி போல நின்று
எல்லையைத்தான் காக்கின்றார்
எல்லைக் காவல் படையினர்
நாட்டை காக்கும் வீரர்கள்
பனி படர்ந்த மலையிலும்
பாசறைகள் அமைத்துமே
உயிரை துச்சமாய் கருதியே
கண் விழித்து காக்கிறார்.
ஊடுருவல் செய்கின்ற
உளவாளிகளையும் தீவிரவாதிகளையும்
எல்லையிலே தடுக்கிறார்.
எதிர்த்தால் எகிறி
அடிக்கின்றார்.
நாட்டில் பாதுகாப்பாய் நாம்
வாழக்
காவல் அரண் செய்கிறார்
எல்லை சாமி இவரை போல்
எங்கும் கண்டதுண்டோ ஒரு
தெய்வம்
வருடம் முழுதும் வீட்டை
பிரிந்து
உதிரம் கொட்டிக் காக்கின்றார்
பாதுகாப்பாய் நம்மை காக்கும்
பாதுகாவலர் படை இது
நாட்டின் எல்லை காக்க உழைக்கும்
நல்லோரை வணங்குவோம்
வீட்டில் ஒருவர் இவரை போல
சனி, 2 மே, 2026
சிக்கி முக்கி கல்
சிக்கி முக்கி கல்
சிக்கி முக்கி கல்லைத் தேய்த்து
சிறு நெருப்பைக் கண்டுபிடித்தார்.
அரணிக் கட்டை கொண்டு கடைந்து
யாக வேள்வி செய்து வைத்தார்
தீக்குச்சியில் மருந்தை அடைத்து
நெருப்பை அதில் ஒளித்து வைத்தார்
உரசும் போது உயிர் பெற்று
ஒளிரும் அந்தத் தீக்குச்சி
விறகை கொண்டு மண் அடுப்பினிலே
விதம் விதமாய்ச் சமையல் செய்தார்
சுருட்டைத் தூளும் சிராய்த்தூளும்
சுள்ளிகளும் கொண்டு அடுப்பெரித்தார்.
குமுட்டி அடுப்பு கோட்டை அடுப்பு
கரி அடுப்பு இரும்பு அடுப்பு
ரம்பத்தூள் அடுப்பு தவிட்டு அடுப்பு
மண்ணெண்ணெய் அடுப்பு, சாணவாயு அடுப்பு,
எரிவாயு அடுப்பு மின்சார அடுப்பு
சூரிய அடுப்பு தூண்டல் அடுப்பு
எத்தனை அடுப்பு எத்தனை சமையல்
இத்தனையும் ஒரு சாண் வயிறு நிரப்ப.
சுடுகாற்றலை கொண்டு சமைக்கின்றார்
எரிவாயு கொண்டு சமைக்கின்றார்
மின்சாரம் கொண்டு சமைக்கின்றார்
சமைத்து சமைத்து உண்கின்றார்.
உணவைச் சமைத்து உண்ணும் மனிதரே
மனதை செம்மையாய்ச் சமைத்து வாழுங்கள்
உணவைப் பகிர்ந்து உண்ணக் கொடுத்து
மனிதம் போற்றி மகிழுங்கள்.
வெள்ளி, 3 ஏப்ரல், 2026
வியாழன், 2 ஏப்ரல், 2026
கார்மேகம்
கார்மேகம்
கார்மேகம் வந்தது
கனத்த மழை பெய்யுது.
நீர்நூலைச் சேர்த்து சேர்த்து
அருவி நெசவு செய்யுது.
ஓடைத்துண்டாய் விழுகுது
நதிச்சேலையாய் நெளியுது.
அனைத்தும் ஓடி ஓடிவந்து
நீலக்கடலில் கலக்குது.
நீர்மேல் சூரியன்
உலவுது
கதிரில் வெப்பம் பரவுது
.
ஆவியாகி நீர் எழும்புது
மேலே கொஞ்சம் செல்லுது
கருத்த யானை உருக்கொண்டு
கார்மேகம் ஆகுது
மீண்டும் மழை பெய்யுது
இதுவே இயற்கை சுழற்சியாம்
திங்கள், 2 மார்ச், 2026
இனிய எளிய தலைவர்கள்
இனிய எளிய தலைவர்கள்
காந்தித் தாத்தா வந்தாரு
சத்திய வழியில் நடந்தாரு.
நேரு மாமா வந்தாரு
நல்லாட்சியைத் தந்தாரு .
அண்ணல் அம்பேத்கர் வந்தாரு
சட்டம் ஒழுங்கு செய்தாரு.
கர்மவீரர் வந்தாரு
கல்வியோடு சத்துணவு தந்தாரு.
இனிய எளிய தலைவர்கள்
நாட்டை உயர்த்திச் சென்றார்கள்.
சுதந்திரத்தைத் தந்தார்கள்
சுகமாய் வாழச் செய்தார்கள்.
மக்கள் மனதில்
நிறைந்தார்கள்
மகத்துவமான
மனிததெய்வங்கள்.
இவரை நாமும் போற்றுவோம்
இவரை பின்பற்றி வாழுவோம்.
திங்கள், 2 பிப்ரவரி, 2026
இயல்பாய்..
வெளியேறு என்கிறார்கள்
வார்த்தைகளுக்குள்
சிக்கிக் கொண்டிருக்கிறேன்
மௌனத்தின் சுவர்
அச்சுறுத்துகிறது
பேச்சிழந்தபோதெல்லாம் துயில்கிறேன்
எழுந்ததும் வார்த்தைகளும்
என்னுடன் விழித்துப்
போட்டி போடுகின்றன.
இருவரும் போராடுகிறோம்
ஒருவரை ஒருவர் விட்டுவிட.
சகித்துக் கொண்டு
வாழவும் பழகிவிட்டோம்.
மீளாத்துயில்வரை
என்னையும்
வார்த்தைகளையும்
நீங்களும் இயல்பாய்
எடுத்துக் கொள்ளுங்களேன்