எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 மே, 2020

நிலவுப்பழம்.

இரவுப்பாலில்
கரைந்து கொண்டிருக்கிறது
நிலவுப்பழம்.
  

புதன், 27 மே, 2020

உயிர்ப்பு.

சாமி பக்தையாகிவிட்டாள் செல்லி.
வீடே கோவிலாகிவிட்டது
தீப எண்ணெயும் தீப்பெட்டியும்
ஊதுபத்தியும் சாம்பிராணியும்
அவள் மளிகைக்கடை லிஸ்டில்
முதலிடம் பிடிக்கின்றன.
சமைத்து பாத்திரம்தேய்த்து
சமைத்து பாத்திரம்தேய்த்து
குணச்சித்திரப் பாத்திரமாகிவிட்டாளவள்.
உடுப்பது நைட்டியென்றாலும்
ஊர்ப்பட்ட துணிகள் தினம் துவைக்க.
காயைக் கழுவிக் கையைக் கழுவி
கழுவில் நிற்கிறது அவள் நேரம்.
முகத்தையே தொடாமல்
முகமறைந்து
முகமறந்து கிடக்கிறாள் செல்லி.
முகமறியா பலர்
கிருமிகளுக்குப் பலியாக
கையறுநிலையில்
குற்றவுணர்ச்சியோடு
குதறிப்போட்ட குடலாய்
சிதறிக் கிடக்கின்றன
அங்கங்கே அவள் எழுத்துக்கள்.
ஒருவழியாய்
ஊரைச் சுற்றும் கொள்ளைநோய்
ஒழியும்போதுதான்
ஒளிந்திருக்கும் அவள்
உயிர்ப்போடு எழமுடியும்.

வெள்ளி, 15 மே, 2020

தற்காலம்

பசித்திரு
தனித்திரு
விழித்திரு
என்றதொரு காலம்

வீட்டிலிரு
விழிப்புடனிரு
விலகியிரு
என்கிறது தற்காலம்.
  

செவ்வாய், 12 மே, 2020

வெறியின் கோட்பாடு.

புறாக்களின் மாம்சத்தில்
கண்ணாயிருக்கின்றன வல்லூறுகள்
சிபிகளின் தராசுகளில்
நிறைவடைவதில்லை அவை.
கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்
மாம்சத்துக்கு மாம்சம்
ரத்தத்துக்கு ரத்தம்
இவையே வெறியின் கோட்பாடு.
விசிறும் இறக்கைகளில்
வழியும் ரத்தத்தில் தமக்குத்தாமே
சாமரம் வீசி நிறைவடைகின்றன அவை.
 

செவ்வாய், 5 மே, 2020

மினுங்கல்.

கொட்டிக் கிடக்கும் வெய்யிலில் 
முங்கிக் குளிக்கின்றன பறவைகள். 
அவை அலகசைக்கும்போது 
நீர்த்திவலைகள் தெறித்ததுபோல் 
மின்னுகின்றன ஜன்னல் கண்ணாடிகள்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...