எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஜனவரி, 2014

லட்சம் ஞாபகங்கள்

யாராக இருக்க வேண்டும்.
யாராக இருக்கிறேன்.
யாராக இருந்தால் நல்லது.
எல்லைக் கோட்பாடுகள் என்னென்ன..

எவெரெவர் கண்ணுக்கு
எப்படிப் புலப்படுகிறேன்
எவெரெவர் எப்படி
உணரக் கூடும்.

யாரை யாருக்குப் பிடிக்கிறது
யாரை யார் வெறுக்கிறார்கள்.
யார் யாரோ எப்படிப் போனாலென்ன
எதன் மிச்சமும் எச்சமும் எதிலிருக்கிறது.

புகைப்படங்களையும்
எழுத்துக்களையும் கூர்ந்து நோக்கிக்
கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
என்னிலிருந்து யாரோவாகிறேன்.

நூறு பிறவி எடுக்கும் உருமுன்
யாராய் இருந்தாலென்ன
லட்சம் ஞாபகங்கள் சிதறிக் கிடக்கின்றன
அத்தனை பிறப்பாயும்.

செவ்வாய், 28 ஜனவரி, 2014

காற்றாய்..

அன்பின் வலி இன்னதென்று அறிந்திருக்கிறாயா.
எதனை எதனால் தொலைப்பதென்று
அறியாது காத்திருக்கிறது அந்த பீடம்.
ஒரு குழந்தை தவழும் மடியாய்
ஒரு பூ உதிரும் கிணற்றடியாய்
ஒரு குழந்தையாகவோ
ஒரு பூவாகவோ
தொட்டு விடமாட்டோமாவென்று.
ஏன் அந்தச் சிலந்தியிடம் மாட்டிய
அறியாப் பூச்சியாகக் கூட.

காத்திருப்பின் வலியை நீ உணர்ந்ததேயில்லை.
காற்றாய் நீளும் என் கரங்கள்
எங்கிருந்தோ வந்து உன்னைச் சுற்றி
சுற்றிச் சென்று விடுகிறது.
நுழைவதில்லை நான் உன் சுவாசத்தில்.
நீயாய் என்னை நினைத்து
ஆழப் பெருமூச்சு இழுக்கும்வரை
காத்திருக்கிறேன் நட்சத்திரங்களோடு
நட்சத்திரமாய்க் கலந்து..

வெள்ளி, 24 ஜனவரி, 2014

மூச்சு

கம்பிக்கும்
கயிற்றுக்கும் நடுவில்
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றன
சில மூச்சுக்கள்.

சனி, 18 ஜனவரி, 2014

நீரின் பயணம்

எங்கோ பெய்யும்
பெருமழையின்
ஒரு தூறல் என் மேல் விழுந்து
தெரிவிக்கிறது என் உயிர்ப்பை, இருப்பை.
நானும் ஒரு துளியாய்
துளித் துளியாக்
கரையத் துவங்குகிறேன்.
மலைகளில் இருந்து வீழ்ந்து
மடுவில் அடிபட்டு
உள் குகைக்குள் சென்று
சின்னச் சின்ன உருளல்களோடு
நீளக் கோடுகளாய்க்
கடல் நோக்கிக் நகர்கிறதென் பயணம்.


என் பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு. Kalimuthu Nalla Tambi அவர்கள் என்னுடைய கவிதை ஒன்றை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார்கள். நீரின் பயணம் என்ற அந்தக் கவிதை வீணைகளையும் யாழையும் தம்புராவையும் அடுக்கிய வடிவத்தில் இருந்தாலும் , என்னுடைய கவிதையும் இன்னொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. சாத்தியப்படுத்தி மகிழ்வூட்டிய அருமை நண்பருக்கு நன்றி..

ನೀರಿನ ಪಯಣ....

ಎಲ್ಲೋ ಸುರಿವ
ಒಂದು ಜಡಿ ಮಳೆಯ
ಒಂದು ತುಂತುರು ನನ್ನ ಮೇಲೆ ಬಿದ್ದು ತಿಳಿಸುತಿದೆ
ನನ್ನ ಚೇತನವ , ಇರುವಿಕೆಯ
ನಾನು ಒಂದು ಹನಿಯಾಗಿ
ಹನಿ ಹನಿಯಾಗಿ
ಕರಗಿ ಹೋಗುತ್ತೇನೆ
ಬೆಟ್ಟಗಳಿಂದ ಜಾರಿ
ಮಡುವಲ್ಲಿ ಇಳಿದು
ನಿನ್ನ ಗುಹೆಯ ಹೊಕ್ಕಿ
ಸಣ್ಣ ಪುಟ್ಟ ಉರುಳಿನೊಂದಿಗೆ
ನೀಳ ಗೆರೆಗಳಾಗಿ
ಕಡಲಿನೆಡೆಗೆ ಧಾವಿಸುತ್ತಿದೆ ನನ್ನ ಪಯಣ ....

-ತೇನಮ್ಮೈ ಲಕ್ಷ್ಮಣನ್

சனி, 11 ஜனவரி, 2014

விளையாட்டு

ஒரு கருமேகம்
கொதித்துக் கிடக்கும் பூமியில்
நிரப்பிச் செல்லும் குளுமை
பூக்களைச் சிரிக்கவைத்துக்
காற்றைச் சிலிர்க்க வைக்கிறது,
முகம் கழுவி எழும் சூரியனையும்
சுறுசுறுப்பாக்குகிறது.
அலையும் பகல் மரக்கூந்தல்களில்
தங்கித் துயில்கிறது.
ஏகாந்தமாய்க் குயிலோடு
கூதலாய்க் கூவிச் செல்கிறது காற்று.
செய்வதற்கொன்றுமில்லை.,
தினம் தினம் அடுக்கினாலும்
விளையாட்டுப் பொருளாய்
இறைந்து கிடக்கும் இவற்றில்
மூழ்கிக் கிடப்பதைத் தவிர..

வெள்ளி, 3 ஜனவரி, 2014

பற்றற்றுப் பற்று

பிரம்ம ராட்சசர், கின்னர்,
கந்தர்வர், கிம்புருட
ர்,
பூத கணங்கள்,
யானைத் துதிக்கை யாளி,
சிம்மம், நந்தி ,
எட்டுக்கரம் விரித்தணைக்கும் காளி,
நாகம் சுமந்து இசை நடனமிடும் கூத்தன்
நிரம்பித் திரிகிறார்கள் கனவெங்கும்.

கொட்டும் மழையிலும் வெய்யிலிலும்
குதிரைகள் புடை சூழக்
காத்து ரட்சிக்கிறார்கள்
கருப்பரும் ஐய்யனாரும்.
மயானச் சாம்பலிலிருந்து
புறப்பட்டெழும் அங்காளம்மன்
வேட்டைக்குப் போகும் சுடலை மாடன்,
உணர்த்துகிறார்கள் நிலையாமையின் இருப்பை.

நின்ற கோலம்
நடனக் கோலம்
இருந்த கோலம்
கிடந்த கோலம் எல்லாம்
உலாவரும் கோலமாய்
உழம்பிக் கிடக்கிறது ஞாபகம்.
எண்ணங்களற்றும் இருப்பற்றும்
பற்றற்றும் பற்றோடு திரும்புகிறது மீளவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...