எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 நவம்பர், 2015

மௌனமாக இரு



மௌனமாக இரு :-

இதயத்தின் இருட்டுப் புதையலுக்குள்
இதழின் இனிய மடிப்புக்களில்
மௌனத்தைப் பொதித்து வை.
மூளையை அலைச்சல்படுத்தாதே.
முயங்கி மயங்கிக் கரையாதே.

உயர்ந்த துவஜஸ்தம்பங்களில்
சிநேகப்பூக்கள் மத்தியில்
சொற்களைப் புதைத்துவை.
கேள்விகளைக் கொட்டிவிடாதே
அந்தரங்கத்தை மறைத்துவை

நீ ஒரு ஓட்டைப்பானை
ஒருபுறம் அடைக்க
மறுபுறம் ஊற்றெடுக்கும்.
அடக்கமாயிரு.
முடிந்தவரை அடங்கியிரு
பொங்கியெழுந்து கோபிக்க
நீயென்ன கங்கையா காவிரியா.?
வயலோரக் கால்வாய்.
உன்னை நம்பும் உழவர்களை
வயல்களைக் காயப்படுத்தாதே.

உனக்குக் கோபம் வந்து
பெரிதாக ஒன்றும் சாதித்துவிடப் போவதில்லை.
ஏதோ ஒருமுறை வெற்றி கிடைத்ததென்பதற்காக
ஆறுமுறை தோல்வியைத் தழுவிய
இராபர்ட் புரூசாய் ஆகாதே

மனக்குளத்தில் சலனக்கல்லை
முத்தமிட அனுமதிக்காதே.
தயவுசெய்து சாதாரணமாயிரு.
ஆசைகளை சுமந்து சுமந்து
தள்ளாடிச் சரியாதே
ஒருவேளை நீ என்றாவது
வற்றாத ஜீவநதியாகலாம்.

அதுவரை
வயலோரக் கால்வாய் நீ
மௌனத்தைப் பொதித்து வை.
கால்பட்டுக் கலங்காதே
உன் பாட்டில் பயணத்தை நடத்து
அடக்கமாயிரு அமைதியாயிரு
பிரளயம் வந்து உன்னை
அணைக்கும்போது நீ
பெரீய்ய்ய்ய நதியாகலாம்
நம்பிக்கையுடன் நட.

-- 85 ஆம் வுடைரி 

ஞாயிறு, 29 நவம்பர், 2015

காற்று

நுண்குமிழ் புகுகாற்று
கேசநுனிப் புல்லசைத்து
கன்னவளைவில் நழுவி
அதரங்களில் தத்தி
வியர்த்ததுளி நறுமணமெடுத்து
சூழ் அறையில்
குழைந்து கிடக்கிறது
அறையும் சுவரும்.
காணாமல் போய்
உட்புகுந்த மின்சாரம்
பாசம்பெற்ற சுவர்தடவி
மூச்சடைத்து சுவாசம்தப்பி
திகைத்துச் சுற்றுகிறது.
காற்றோடும் காதலோடும்.

வியாழன், 26 நவம்பர், 2015

வசந்தோற்சவங்கள்



      வசந்தோற்சவங்கள் :-

வசந்தங்கள் புஷ்பிக்கின்றன.
வசந்தவிழா
பூச்சொரியல்கள்
பூக்குவியல்கள்
பூமணங்கள்
விதம்விதமான வாசனைகள்
வண்டுகளின் ரீங்காரங்கள்
தேன் துளிகள்
சிறகுக் கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி
மயக்கிச் சிருங்கார உறிஞ்சல்கள்

வசந்தங்கள் புஷ்பிக்கின்றன.
வசந்த விழா
வாடிய பூக்களின்
வருத்தச் சுமைகள்
ஆசைச் சுமைகள்
வேஷமாகி விட்ட நிலை.
வண்டுகளின் சிறகடிப்பு
வதங்கிய பூக்களின்
இறப்புச் சிதறல்கள்
சோகச் சுவைகள்.

வசந்தங்கள் புஷ்பிக்கும்
மறுபடியும்.
வருடந்தோறும்.
பூக்களின் உல்லாசம்
வண்டுகளின் சல்லாபம்.
மறுபடியும்
மறுபடியும்
ஏமாற்றச் சுகங்களும்
ஆனால் என் வசந்தம்
என்னுடைய வசந்தம்
என் வாழ்வில்
ஒருமுறைதான் புஷ்பிக்கும்.
புஷ்பிக்க வேண்டும்.
வதங்கிய மலர்கள்
மறுபடியும் புஷ்பிக்கலாம்
ஆனால் மனதுக்கு
ஒரு தடவைதான்
ஒரே தடவைதான்
அது காத்திருக்கின்றது
போகிறேன்.

----- 85 ஆம் வுடைரி 

செவ்வாய், 24 நவம்பர், 2015

மேகங்களைத் தொலைத்த வானம்



மேகங்களைத் தொலைத்த வானம். :-

ஒரு வானத்தாயின் புலம்பல்.

ஓ மேகங்களே
என்னருமைச் செல்லக் குழந்தைகளே
என்னைத் தவிக்கவிட்டு எங்கே சென்றுவிட்டீர்கள்.?
உங்களைப் பகல்முழுதும் தேடித் தேடி
என் சூரியக் கரங்கள் அந்தியில் சிவக்கின்றன.
ஒரு வேளை
நீங்கள் நிலத்தலைவனிடம்
அடைக்கலம் தேடிவிட்டீர்களோ?
உங்களை அவன் தான் மறைத்துப் பதுக்கி வைத்திருக்கிறானோ ?
என் கடற்காதலன் குழந்தை எங்கேயெனக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
இரவில் அவன் தன் அலைக்கரங்களைத் தட்டி நுரைத்துக்
கோபத்தாற் பொங்கிப்போய் என்னிடம் வந்தால்
என்ன பதில் சொல்ல?
உங்களுக்கு நான் என்ன குறை வைத்தேன். ?
எதற்காக என்னைவிட்டுப் பிரிந்தீர்கள். ?
நிலத் தலைவனின் பயிர்ப்பெண்களிடம்
பேசவேண்டாம் என்று சொன்னதற்கா
என்னைத் தவிக்கவிட்டு
நிலத்தலைவன் பாதம் வருடினீர்.
அவனுக்கு உங்களைப் பிடிக்கவில்லையா
அல்லது உங்களுக்கு அவனைப் பிடிக்காமல் போய்விட்டதால்
நதியாக உருமாறிக் கடல் தந்தையிடம்
சேர்ந்துவிட்டீர்களா >
ஆம்.. !
இரவில் என் பௌர்ணமிக் குளிர்ச்சியைத்
தாளாத என் கடல் தலைவன்
என்னிடத்தே வந்து நீங்கள் உங்கள் தவறுணர்ந்து
திருந்தித் திரும்பியதாகக் கூறி மகிழ்ந்தான்.

-- 85 ஆம் வுடைரி 

உறங்கட்டும் உள்ளக் கேவல்கள், அவலங்கள்.



உறங்கட்டும் உள்ளக் கேவல்கள், அவலங்கள்.

சொற் சுவாலைகளுக்குப் பயந்து
போர்த்திக் கொண்ட மௌனப் போர்வையின்
வெம்மையைப் பிரிய இஷ்டமில்லை.
காட்டாற்று வெள்ளத்தின் நடுவில்
திட்டுத் திட்டாய்ப் பூத்திருக்கும்
மொட்டைத் திடல்களில்
மாட்டிக்கொண்டுவிட்ட நிலை.
நட்டாற்றில் கைவிடுப்பு
மூழ்குவதுபோல் தவிப்பு
கல்லடிபட்டும் எனக்கு  உறைக்கவில்லை
ஏனெனில் உன் சொல்லடிகள்
என்னை உறைபோட்டு இருந்தன.
எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும்
எலிப்பொறியில் மாட்டிக்கொண்ட எலியின் நிலை.
தடுமாற்றங்கள்.
இப்போது உண்மையாகவே உதவ யாருமில்லை.
இது
உண்மையின் தடுமாறல்களினாலா
உறவுகளின் தடம்மாறல்களினாலா.
எனக்கே புரியவில்லை
அழுகைச்சொத்து
பத்திரம் எழுதியதில்
அது ஒன்றுதான் மிச்சம்.
இது
சுய இரக்கத்தின் விளைவா
மகிழ்ச்சித் தடுமாற்றத்திலா
மனம் கண்ட வாட்டத்திலா
சுய ரூபத்தின்
நிர்வாணக் கோலமா
சாயம்போன கனவுக் கலங்கல்களா
இருளில் கிடந்த உண்மையின் மேல்
வெளிச்சம் பட்டதால் கூசிச் சிலிர்த்த
கண்ணின் அசைவுகளோ?
எதைச் சொல்ல ?
எப்படிச் சொல்ல ?
சொன்னால்
வெளியே கூறிவிட்டால்
தீருமா இந்த அவலம்.
அளவுக்கு மீறிய சந்தோஷத்தையும்
அளவுக்கு மீறிய துக்கத்தையும்
அடக்கி வைப்பது தவறாமே.
போகட்டும் எதையும் நான் சொல்வதற்கில்லை.
என் அவலம் என்னுள்ளே
புதைந்து புதைந்து மடிந்து போகட்டும்.

-- 85 ஆம் வுடைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...