எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 மார்ச், 2024

மலர்தல்.

சூரியன் மலர்ந்ததும்
தாமரையும் மலர்கிறது
இரட்டை இலையோடு.

சனி, 3 பிப்ரவரி, 2024

விரலில் நீந்தும் மீன்கள்

மீன்களுக்கான பாடல் 
தொடங்குகிறது தொலைக்காட்சியில்
சித்துக் குட்டியின் விரல்களில்
ஐந்து மீன்கள் நீந்தத் தொடங்குகின்றன
அவை ஒவ்வொன்றாகக் குறைந்து
ஒன்றாகின்றன.
மீண்டும் ஒன்றிலிருந்து ஐந்தாகி
நீந்தத் தொடங்குகின்றன.
பாடல் முடிகையில்
ஹாலே ஒரு மீன் தொட்டியாய் மாற
நீந்தத் தொடங்குகின்றோம் நாங்களும். 

சனி, 20 ஜனவரி, 2024

நிலாவின் ரேகைகள்

சூரிய நெசவில்
வெளிச்சக் கோலங்கள்

பிரதிபலிக்கும் நீரில்
கண்ணாடிக் கோலங்கள்

மாலை நீல ஆகாயத்தில்
செம்மண் கரை கட்டல்

பால் ஒளிக் கோலமிடும்
நிலாவின் ரேகைகள்

பச்சையங்கள் முகத்திலோ
விடியலின் பனித்துளிக் கோலங்கள்



சனி, 2 டிசம்பர், 2023

ஆசுவாசம்.

கற்களின் வெடிப்பிலிருந்து
பச்சை இரத்தநாளமாய்க் 
கிளைத்தெழுகின்றன தாவரங்கள்.
கரியமிலம் உண்டு
பிராணவாயு விடுத்து
ஆசுவாசமாய் மூச்சு விடுகிறது பூமி.

திங்கள், 23 அக்டோபர், 2023

அம்மாவான அம்மு

பிரியா விடைகொடுத்து
வீடெங்கும் பொம்மைகளோடு
விளையாட விட்டுவிட்டு
வேலைக்குச் சென்றுவிடுகிறாள் அம்மா.


உணவூட்டித் தாலாட்டி
ஒவ்வொரு பொம்மையையும்
உச்சிமுகர்கிறாள்
அம்மாவான அம்மு. 
Related Posts Plugin for WordPress, Blogger...