எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 டிசம்பர், 2015

உப்புத் தாள்.மனசுள் ஒட்டிக்கொண்டிருந்த  தைரியமெல்லாம்
உப்புத்தாள் தேய்ச்சலாய்த் தீர்ந்துபோய்விட்டதோ?
ஏனிப்படிக் கோழையாகிப் போகின்றேன்
எதையும் எதிர்கொள்ளச் சத்தில்லாமல் ?
மிக உண்மையாக நான் கோழை
உண்மையை எதிர்கொள்ளத் திராணியில்லாத
எலும்பில்லாத பிராணியாட்டம்
குப்புறச் சுருள்கிறேன்
வெளிப்படையாக ஏன் பேசமுடிவதில்லை
உன்னுடைய கல்மிஷமின்மை
இன்னும் என்னுள் நெருப்புப் பொறியாய்ச்
சுழன்று சுழன்று சுடுகின்றது.
கேவலமாய் மண்புழுவின் கீழ்த்தரமாய்
எப்படி இப்படிக் குறுகிக் கூனிப்போனேன்.
சத்திய நிதர்சனமாய் நீ நிற்கையில்
உண்மையை உண்மையாகவே பார்க்கும்
யதார்த்தத்தின் கம்பீரத்தில் நான்
ஒன்றுமே இல்லாமல் உதிர்ந்த சருகாய்ப்
பொடிந்து பொடிந்து மடிந்து போகின்றேன்
உன்னுடைய கம்பீரத்தை
அன்பு காட்டும் கனிவை
அடக்கியாளும் அன்யோன்யத்தை
தேய்க்கத் தேய்க்க ஒளிவிடும் அறிவுக்களையை
வெட்ட வெட்டத் துளிர்க்கும் பாசத்தை
உண்மையை நிலைநிறுத்தவேண்டும் என்ற உனது வெறியை
எல்லாருக்கும் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்ற
தத்துவத்தை உன் சுயதரிசனத்தை
நான் என் கலங்கிய கண்களுக்குள்
இரசித்துக் கொண்டிருக்கிறேன்.
நல்ல தகுதிகளே நீயாய் இருக்கும்போது
வெத்துவேட்டாய் தகுதிக்குத் தகுதிப்படாத
என்னால் நிற்கமுடிவதில்லை.
என் மனசுள்ளா இவ்வளவு அழுக்கு ?
இத்தனை நாளாய்ப் பூட்டிப் பூட்டிப்
போட்டு வைத்ததனால்தானோ மனம்
தெருப்புழுதியாய்ச் சீழ்ப்பிடித்துக் கிடந்தது.
உன் மனசுள் இவ்வளவு பெரிய இடம்
எனக்கு நீ கொடுத்திருக்கின்றாயா ?
நீ எவ்வளவு பெருந்தன்மைவாதி
என்னால் அதை ஏற்றுக்கொள்ளத் தென்பில்லை.
இன்றுதான் உன்னை முழுமையாய்ப்
பூரணமாய்ப் படித்தேனோ?
கயிற்றில் கட்டிப்போட்ட தும்பியாய்
,மனம் இந்தக் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட
பாவமன்னிப்புப் பெறவிழைகின்றது.
நீ எனது நண்பனா ? நீயா !
உனக்கு இந்த இழிவு ஆகாது.
என்னுள் ஏதோ இறைஞ்சுகின்றது.
மன்றாடுகின்றது.
உன்னைப்போல வெளிப்படையாய்
கம்பீரமாய் தன்னம்பிக்கையாய்
யதார்த்தவாதியாய்
உண்மையை உண்மையாய்க் காணும்
பக்குவத்தினளாய் ஆகவேண்டுமென்று ஆசை.
எனக்குத்தான் அது இயல்பிலேயே இல்லையே.
கடனாய்ப் பெற்றாவது திருந்தலாம்
என்ற நப்பாசைதான்.
(நான் ) ஓடி ஒளியாமல்
உண்மையையே பேசி வாழத்
தயவுசெய்து உதவி செய்.. ( செய்வாயா.?)


hihihi - 83 aam varuda diary :) :) :)

செவ்வாய், 29 டிசம்பர், 2015

என் சின்ன வானமே.என் சின்ன வானமே !

ஓ! நீலவானமே !
உன் நிர்மால்யத்தில்
நான் நிறைந்து போகிறேன்.
உன்னின் இத்தனை
வெள்ளைப்பூக்களா ?
உன்னுள் எத்தனை வேறுபாடு ?
வெளிர், அடர் நிறப்பிரிகை
இருந்தும் நீ ஒருமையானவள்
நீ வானத்திலும் வையத்திலும்
ஒரே நீலம், விஷ நீலம். அமிர்த நீலம்
நெஞ்சை அப்பிக் கொள்ளும் கருநீலம்
கனவுகளைப் பூக்கவைக்கும் வெளிர்நீலம்.
சங்குப்பூ நீலம் வெளிர்நீலப் புஷ்பம்நீ.
ஒட்டுமாங்கனி வண்ணமாய்
புதுச்சுவையாய் நீலங்களைப் பிரசவிக்கும்
அற்புதப் பிரம்மா. !
நீ பூத்திருப்பது அந்தர வெளியிலா ?
கொடியில்லாமல் வேரில்லாமல் பூக்க
எங்கு கற்றுக் கொண்டாய் ?
ஓ ! நீலவானமே. !
உன் நிர்மால்யத்தில்
நானும் நிறைந்து போகிறேன்.

-- 85 aam varuda diary

திங்கள், 28 டிசம்பர், 2015

வகுப்பறையில் நான்.வகுப்பறையில் நான்:-

வானமும் பூமியும்
மேகத்தை மழையாய்ப் பிய்த்துச்
சண்டையிட்டுக் கொண்டிருந்த
காட்சியைக் கடைக்கண்ணால் இரசிக்கும்போது
இராமனும் இராவணனும் சீதைக்காகச்
சண்டையிட்டது எந்த இதிகாசம் என்ற
தர்மசங்கடமான கேள்வி ஏன் ?
மரராணிகள் தலைக்குக் குளித்து
உலாத்திக் கொண்டிருந்த
அழகை அனுபவிக்கும்போது
குமரகுருபரரின்
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில்
நீராடற்பருவத்தை விளக்கச்சொல்லி
விபரீதக் கட்டளை விதிப்பதேன் ?
சே..! இயற்கையை இரசிக்கத்  தடை விதிக்கும்
இந்த வாழ்க்கை சுத்த போர்.

-- 83 aam varuda diary

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

லகான்களும் கொடுக்குகளும்,

லகான்களும் சேணங்களும்
அவசியமாயிருந்தன
டாக்குக் டாக்கென்று நடக்கும்
குதிரையாயிருந்தபோது.

 

 எரவாணத்தின் இருட்டில்
ஒளிந்திருக்கும் தேள்
அவ்வப்போது வாய்வழியேயும்
பிறப்பெடுக்கும்
துரத்துமொன்றைக் கொட்ட.


 கார்டூன் குதிரைகளுக்கும்
தேள்களுக்கும்
நினைக்குந் திசையெல்லாம்
வால்களும் கொடுக்குகளும்
முளைக்கின்றன
அவைகளின் விருப்பமில்லாமலேயே.


வெள்ளி, 25 டிசம்பர், 2015

குட்நைட்12. 4. 84. இரவு 8.30. “ அம்மாடி பொண்ணுக்குத் ..”

எதையுமே கடவுள் அருள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமோ ?


ஒருத்தன் இன்னொசண்டா இயல்பிலேயே இருக்கலாம். ஆனா இன்னொசண்டா மாற முடியாது.


எப்போதும் லோயர் க்ளாஸ் ஃபாமிலியில இருக்கதுதான் சிறந்தது. மிடில்கிளாஸ்ல் இருக்கிறதுனால எவ்வளவு பிரச்சனை. ?

நினைச்சதைச் சாப்பிட முடியாது. கிடைச்சதை வைச்சிண்டு திருப்திப்பட முடியாது. மனசு பரபரக்கும். அவங்காஞ்சதுமாதிரி அள்ளி அள்ளித் திணிச்சிண்டும் தணியாமல் பேராசைப்படும். அதுக்குத் தீனி போட முடியாது.

பணத்தை இரும்புப் பெட்டில மூட்டை கட்டி  இறுக்கி முடிஞ்சுக்கச் சொல்லும். இஷ்டப்பட்டு ஒரு பத்துக்காசுக்கு கமர்க்கட்டு, பெப்பர்மிண்ட் சாப்பிட முடியாது.

இவ்ளோ பெரிய வீடு இருந்தும் வேளை தவறாம சவரட்சணை கொறையாம வக்கணையா சாப்பாடு இருந்தும் உடுத்தவும் போடவும் எல்லாமிருந்தும் எல்லாத்தையும் காபந்து பண்ணிப் பண்ணி, அது பத்ரமாயிருக்கணுமேன்னு கவலைப்பட்டுண்டு ..”கர்மம்டா சே. ”  என்ன வாழ்க்கை இது. என்னிக்காவது பிச்சிண்டு ஓடிடலாம் போல. !

ஒரு சில சமயம் எனக்கும் இந்த இடத்துக்கும் சம்பந்தமில்லே அப்டீன்ற மாதிரித் தோன்றது. ஏன் அப்டி. ?

எனக்கு நிலையா ஒரு எடம் கிடையாது. ஏன் மத்த எல்லாத்திலேயும்தான். ஒரு குறிப்பிட்ட கொள்கைகூட இல்லை. பொட்டு வச்சுக்குறதுல, புடவை செலக்‌ஷன்ல, தலைப்பின்னிக்கிறதுல, எந்தப்பூவை வச்சுக்குங்குறதுல எப்பிடிப் படிக்கணுங்கிறதுல எப்பிடி எழுதணுங்கிறதுல எப்பிடிப் பழகணும், பேசணுங்கிறதுல எதுலயுமே.. ஏனிப்படி ‘ பாரதியின் வேடிக்கை மனிதி ‘ ஆனேன்.

எதிலெயுமே எனக்குப் பிடிப்பு இல்லையோன்னு ஒரு சில சமயம் சந்தேகமாயிடறது. அந்த சமயத்துல ஒண்ணும் பிடிக்கறதுல்ல. என்னயப் பத்தி யார் பேசினாலும் ஏதோ எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லன்ற மாதிரி.. ஒரு சில சமயம் பேசாம இப்டீயே போயிண்டு இருந்தா என்ன.. ? எங்காவது ஊர் ஊரா சாமியாரிணியாட்டம்னு தோண்றது.

எல்லாம் ஒரு க்ஷணம்தான். கைல நழுவுற பிஸிக்ஸ் புக்ல பார்வை பதிஞ்சதும் ஆகா நாம இப்ப பிஸிக்ஸ் ஸம் இல்ல போட்டுண்டு இருந்தோம்னு நெனைப்பு வரது. நெனைப்பு வந்தும் என்ன ப்ரயோசனம். ? ஏன்னா நான் ஒண்ணும் அதுக்கப்புறமும் வெட்டி முறிக்கப் போறதில்ல..! அப்புறம் என்ன விழிப்புணர்ச்சியும் சமாதியும், கற்பனையும் ஒண்ணுதானே.!

’தி.ஜா.’ வோட மரப்பசு ஹீரோயின் மாதிரி ( அச்சு அசல் அவள் மாதிரியே இல்லை) அவளோட ஆசை மாதிரி எனக்கும் எல்லாரோடயும் சிரிக்கணும்போல கைகுலுக்கணும்போல புரிஞ்சுக்கிட்டுப் பேசணும்போல இருக்கு. ! ஜிட்டு ( G.K.) சொல்றதுமாதிரி நம்மை நேசிக்கிற எல்லோரையும் நம்மாலயும் நேசிக்கமுடியும்னு.. ? முடியுமான்னு சிலநேரம் திகைப்பாய்த்தானிருக்கு. எவ்ளவுதான் கிறுக்குனாலும் என்னால ஒரு தீர்மானமான முடிவுக்கு வரமுடியாது. குழப்பிக் குழப்பிக் கடோசீல ஆரம்பிச்ச டாபிக்குக்கே வந்துடுவேன். சரி மணி பத்து . நேரம் ஆகப் போகுதாம். மணிக்கணக்குத் தெரியலைப் போல. சரி குட் நைட் , இதைப் படிக்கிறவங்களுக்கு பேட் நைட்.

பி.கு. ஹாஸ்டலில் எப்படியும் 11அல்லது 12 க்குத்தான் தூங்கப் போவேனா. அதனால இப்போ தூக்கம் வரமாட்டேங்குது. ! சரீ சரீ முடிச்சுட்டேன்…

-- 84 aam varuda diary :)

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஸ்நேகப் பிஞ்சு.மழைக்காலம் பச்சைத் தளிர்களைப் போல
மனதிலும் ஒருபுது தளிர்ப்பு.
மேல் இதழின் பனி வியர்வையில்
குளிரினை ரசிக்கும் ஸ்நேகப் பிஞ்சு..

Related Posts Plugin for WordPress, Blogger...