எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 டிசம்பர், 2015

உப்புத் தாள்.



மனசுள் ஒட்டிக்கொண்டிருந்த  தைரியமெல்லாம்
உப்புத்தாள் தேய்ச்சலாய்த் தீர்ந்துபோய்விட்டதோ?
ஏனிப்படிக் கோழையாகிப் போகின்றேன்
எதையும் எதிர்கொள்ளச் சத்தில்லாமல் ?
மிக உண்மையாக நான் கோழை
உண்மையை எதிர்கொள்ளத் திராணியில்லாத
எலும்பில்லாத பிராணியாட்டம்
குப்புறச் சுருள்கிறேன்
வெளிப்படையாக ஏன் பேசமுடிவதில்லை
உன்னுடைய கல்மிஷமின்மை
இன்னும் என்னுள் நெருப்புப் பொறியாய்ச்
சுழன்று சுழன்று சுடுகின்றது.
கேவலமாய் மண்புழுவின் கீழ்த்தரமாய்
எப்படி இப்படிக் குறுகிக் கூனிப்போனேன்.
சத்திய நிதர்சனமாய் நீ நிற்கையில்
உண்மையை உண்மையாகவே பார்க்கும்
யதார்த்தத்தின் கம்பீரத்தில் நான்
ஒன்றுமே இல்லாமல் உதிர்ந்த சருகாய்ப்
பொடிந்து பொடிந்து மடிந்து போகின்றேன்
உன்னுடைய கம்பீரத்தை
அன்பு காட்டும் கனிவை
அடக்கியாளும் அன்யோன்யத்தை
தேய்க்கத் தேய்க்க ஒளிவிடும் அறிவுக்களையை
வெட்ட வெட்டத் துளிர்க்கும் பாசத்தை
உண்மையை நிலைநிறுத்தவேண்டும் என்ற உனது வெறியை
எல்லாருக்கும் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்ற
தத்துவத்தை உன் சுயதரிசனத்தை
நான் என் கலங்கிய கண்களுக்குள்
இரசித்துக் கொண்டிருக்கிறேன்.
நல்ல தகுதிகளே நீயாய் இருக்கும்போது
வெத்துவேட்டாய் தகுதிக்குத் தகுதிப்படாத
என்னால் நிற்கமுடிவதில்லை.
என் மனசுள்ளா இவ்வளவு அழுக்கு ?
இத்தனை நாளாய்ப் பூட்டிப் பூட்டிப்
போட்டு வைத்ததனால்தானோ மனம்
தெருப்புழுதியாய்ச் சீழ்ப்பிடித்துக் கிடந்தது.
உன் மனசுள் இவ்வளவு பெரிய இடம்
எனக்கு நீ கொடுத்திருக்கின்றாயா ?
நீ எவ்வளவு பெருந்தன்மைவாதி
என்னால் அதை ஏற்றுக்கொள்ளத் தென்பில்லை.
இன்றுதான் உன்னை முழுமையாய்ப்
பூரணமாய்ப் படித்தேனோ?
கயிற்றில் கட்டிப்போட்ட தும்பியாய்
,மனம் இந்தக் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட
பாவமன்னிப்புப் பெறவிழைகின்றது.
நீ எனது நண்பனா ? நீயா !
உனக்கு இந்த இழிவு ஆகாது.
என்னுள் ஏதோ இறைஞ்சுகின்றது.
மன்றாடுகின்றது.
உன்னைப்போல வெளிப்படையாய்
கம்பீரமாய் தன்னம்பிக்கையாய்
யதார்த்தவாதியாய்
உண்மையை உண்மையாய்க் காணும்
பக்குவத்தினளாய் ஆகவேண்டுமென்று ஆசை.
எனக்குத்தான் அது இயல்பிலேயே இல்லையே.
கடனாய்ப் பெற்றாவது திருந்தலாம்
என்ற நப்பாசைதான்.
(நான் ) ஓடி ஒளியாமல்
உண்மையையே பேசி வாழத்
தயவுசெய்து உதவி செய்.. ( செய்வாயா.?)


hihihi - 83 aam varuda diary :) :) :)

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...