எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜனவரி, 2020

உய்தல்.

கொஞ்சம் இரவு
கொஞ்சம் விடியல்.
கொஞ்சம் விழிப்பு
கொஞ்சம் தெளிவு.
நனவுக்குள் கனவு
உறக்கம்தான் கானல்.
ஒன்றுமில்லை செய்ய
உயிர்தாங்கி உய்ய.
  

சனி, 25 ஜனவரி, 2020

பூ மாலை.

வெக்கையில்
பழுத்து உதிர்கிறது
சருகுப் பகல்.
குளிரப் பூக்கிறது மாலை
  

திங்கள், 20 ஜனவரி, 2020

செங்கால் நடனம்.

மழையம்புகள்
சாய்க்கின்றன பயிர்களை
வெய்யில்கத்தியும்
வெட்டிச் சாய்க்கிறது தளிர்களை
குளிரின் சுருள் கத்தியோ
கருக்கியே விடுகிறது துளிர்களை
இரவுக் கேடயத்தின் பின்னோ
செங்கால் நடனமிடுகின்றன பவளமல்லிகள்
  

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

துளைத்தல்

ஒரு வெம்பல்
ஒரு அழுகல்
தானாய் விடும்வரை
வீசியதில்லை மரம்

கொஞ்சம் தேய்வு
கொஞ்சம் சாய்வு
உருளும் நிலவை
வீழ்த்தியதில்லை வானம்

ஏதோ கோபம்
ஏதோ புறக்கணிப்பு
பொறுக்காமலும் சகிக்காமலும்
வெட்டிவிடுகிறது தன்மானம்

பாவப்பட்ட பூனையினதும்
நீர் வடியும் நாயினதுமான
கண்களைத் துடைத்தணைத்தாலும்
துளைத்துக்கிடக்கிறது மனம்.
  

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

ஆட்டக்குளங்கரா பள்ளி.

நாற்பதாண்டு கடந்தாலும்
ஞாபகங்கள் தொலையாது. 
ஞானப்பால் புகட்டிய
ஆட்டக்குளங்கரா பள்ளி
அமிர்தப்பால் ஊட்டிய 
அன்னைக்கு நிகரேயாம்.

விளையாட்டில் குள்ளமென 
வீசுபந்தில் ஒதுக்கினாலும் 
இசையார்வம் என்னை
உசரத்தில் நிறுத்தியது 
மூன்றாம் பரிசளித்து.

தமிழாசான் பீர்முகமது 
தகவான தலைமையாசான்.
நலமாக நாம் பெற்றோம் 
லலிதா, சுந்தர்ராஜன், 
அண்ணாமலை என்னும் 
நல்லாசிரியத் தெய்வங்கள். 

ஓடியும் கூடியும் 
விளையாட்டாய்ப் பாடம் படித்தோம். 
இன்று ஒவ்வொருவரும் 
தனித்தன்மை எய்தியுள்ளோம். 
வாருங்கள் தோழிகளே, தோழர்களே, 
கரம் கோர்த்து ஒன்றிணைவோம். 

பார்வதி, பத்மா, சாந்தா, புஷ்பலதா, 
சுந்தர்ராஜன், வாசன், ஜெயராம். 
எத்தனை வருடங்களானாலும்
நட்பாலே நாம் இணைவோம். 
நல்லாசிரியர்களையும் நம் பள்ளியையும் 
கரங்குவித்தே வணங்கிடுவோம். 
இதை ஊருக்கு உரக்கச் சொல்லி 
உளம் மகிழ்ந்தே  உவந்திருப்போம்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...