எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 செப்டம்பர், 2011

அனைத்தும் பொய்யோ..?

முடிந்துபோன கதை ஒன்றின்
இரண்டாம் அத்யாயம்
ஆரம்பமாகி விடுமோ..

மீண்டும் முன்போல
சுயகம்பீரம் அழிந்து
கரைந்து போய் விடுவோமோ..

நிழலைப் பிடிக்கும் ஆவலில்
வெளிச்சத்தையே காணாமல்
போக்கி விடுவோமோ..

கால ஓட்டத்தில்
நசிந்து போகும்
பலவீன உணர்வுகள்
கலங்க அடிக்கிறதே..

அன்பு காட்டினால்
பரிசாகக் கிடைப்பதும் அதுதான்
என்ற அன்பு மொழிகள்
அனைத்தும் பொய்யோ..?

திங்கள், 26 செப்டம்பர், 2011

முத்தமிழ் மன்றத்தில் தமிழிசைப் பாடல்கள் -- சேஷகோபாலன்.

தமிழிசைப் பாடல்களை முத்தமிழ் மன்ற விழாவில் சேஷகோபாலன் அவர்கள் பாடியது.. இன்று வாசிக்கும்போது இவ்வளவு அழகான தமிழ்ப் பாடல்கள் இருக்கா என ஆச்சர்யப்படவைத்தது.

1. உலகம் யாவையும் தாமுள வாக்கலும்.

2. பாலும் தெளிதெனும் பாகும் பருப்புமிவை நான்கும்.

3. அள்ளி உண்டிடலாம் வாரீர் எல்லோரும் தெள்ளமுதாகிய செந்தமிழ்த் தேனை., உவகை பெருக்கி ஆனந்தக் கண்ணீர் சொரிய.

4. சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா.

5. அலைபாயுதே கண்ணா.. மனம் மிக அலைபாயுதே. உன் ஆனந்த மோகன வேணுகானமதில் அலைபாயுதே..

6. ஆறபிமானம் வைத்தாதரிப்பாய் என்னை ஆனந்த பைரவி.

7. அகிலாண்டேஸ்வரி..

8. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா..

9. சுட்டும் விழிச் சுடர்தான் சூரிய சந்திரரோ..

10. ஹரிகேச முத்தையா பாகவதர் பாடிய “ கந்தா உன் தாள் எனக்கருள்”. இது நிரோஷ்டம் எனப்படும். நீரோட்டம் எனப் பொருள். முஷ்ட என்றால் பாடும்போது உதடுகள் சேருவது. நீர் என்றால் உதடுகள் சேராதது.
‘சரிகதனி’-- என்ற இராகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தில்லானா- சாகித்யம் இவர் இயற்றியது. ‘த்ருகிட’, ‘சரிகதனிஸ’ ..

பாடிப்பாருங்கள் ..”கந்தா உன் தாள் எனக்கருள்.. ” பாடும்போது உதடுகள் சேருவதில்லை.

11. காக்கைக் சிறகினிலே..

12. தேடி உன்னைச் சரணடைந்தேன் தேசமுத்துமாரி..

13. நல்லதோர் வீணை செய்தே..

14. கண்டேன்..கண்டேன் சீதையை ராகவா..!

15. இசைபடிச்சதாலே பழனிமலை நின்ற குருவே.. இகம்பர சௌபாக்கியம் அருள்வாயே..!

16. வாழிய செந்தமிழ்.. வாழ்க நற்றமிழர்.. வாழிய பாரத மணித்திருநாடு.. வந்தே மாதரம்..

இதில் 4,5 பாடல்கள் மகா கவியினுடையது. மிக அற்புதமாக பாடினார் சேஷகோபாலன் அவர்கள். நினைத்துப் பார்க்கும்போது இன்று கூட தமிழ்த் தேனருவி பாய்ந்ததுபோல இருக்கிறது அந்தத் தமிழ் இசையமுதம்..

வாழிய செந்தமிழ்.. வாழ்க தமிழிசைப் பாடகர்கள்.

திங்கள், 19 செப்டம்பர், 2011

மறந்துவிட்டாயா..

மறந்துவிட்டாயா
நாம்
தமிழ் எழுத்தாளர்களைத்
தரப்படி பட்டியலிட்டதை..

மறந்துவிட்டாயா
நாம்
அரங்கேற்றம்
பாலசந்தரை விமர்சித்ததை.

மறந்துவிட்டாயா
நாம்
மேடைகளில்
புயலென முழங்கியதை..

மறந்துவிட்டாயா
நாம்
பெண் உரிமை பற்றிப்
பிரலாபித்ததை.

மறந்துவிட்டாயா
நாம்
இயல் இசை வாரத்தில்
ஷேஷகோபாலனின்
சங்கீதத்தை ரசித்ததை...

மறந்துவிட்டாயா
நாம்
ஹுசைனியின்
குதிரை ஓவியங்களைக்கண்டு
ஆச்சர்யப்பட்டதை..

மறந்துவிட்டாயா
நாம்
புங்கை மரத்தடியில்
மாவடுவும் வடையும்
பகிர்ந்துகொண்டதை.

மறந்துவிட்டாயா
நாம்
பருவத்தின் விறைப்பில்
பாரதியின் புதுமைப்பெண்ணாய்
இருந்ததை..

மறந்துவிட்டாயா
நாம்
சால்ட்டைக் கண்டுபிடிக்க
சோதனைச் சாலைகளில்
செய்த குறும்பை..

மறந்துவிட்டாயா
நாம்
கோலப் போட்டிகளில்
கோலங்களாகவே ஆனதை..

மறந்துவிட்டாயா
நாம்
கல்லூரி கல்லூரியாக
கவிபாடச் சென்றதை..

மறந்துவிட்டாயா
நாம்
வாழ்க்கையெனும் கடலுக்குள்
அலைகளாய்
வீசப்பட்டுக் கொண்டிருப்பதை..

மறந்துவிட்டாயா
நம் கனவுகளையும்
நனவுகளையும்...

அடி தோழி..!
பருவங்கள் மாறிவிட்டன..
நம் உருவங்கள் மாறிவிட்டன..
ஆனால் நினைவு மட்டும்
மாறலையே தோழி..!

வியாழன், 15 செப்டம்பர், 2011

நாங்களும் ஓவியர்தான்..

கவிஞருக்குப் பெண்பால் கவிதாயினி மாதிரி பெண் ஓவியருக்கு என்ன பேரு.. ? ஹூம் நல்லா வரைஞ்சிருந்தா நாமளும் ஜீவா மாதிரி பேரோட புகழோட வந்திருக்கலாம். ( நான் திரைச்சீலை மூலம்தான் பிரபலமானேன்னு அவர் சொல்றது கேக்குது..:)) .. இது கறுப்பு மற்றும் நீல பால் பாயிண்ட் பேனாக்களால் வரைந்திருக்கேன்.(அதுக்காக ஜீவா நீங்க என்னை ஆர்ட் க்ளப்பில எல்லாம் சேர்த்திடக் கூடாது..:))..

ரெகார்டு நோட்டு., ஓவிய நோட்டு ஓவியராக மட்டுமே இருந்துட்டமேன்னு மீனாக்ஷி மதன்., அனுராதா நிகேத்., அப்புறம் நேத்து ராதா ராமகிருஷ்ணனோட ஓவியம் எல்லாம் பாத்து நினைச்சேன்.. போகட்டும் ஓவிய உலகத்துக்கு ஒரு சின்ன இழப்புதான்..;))))

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

ப்ரியமானவர்களுக்குச் சமர்ப்பணங்கள்..

எண்ணங்களைப்
பார்வையாலே கிரஹித்து
உழைத்து உயரவைத்த
அப்பாவுக்கு.,
ஆயகலைகள்
அறுபத்து நாலல்ல
அதற்கு மேலும்
என்று கூறிக் கற்பித்த
அம்மாவுக்கு..,
அன்பு செயல் வழியாகத்தான்
செயல்படும் என்றுணர்த்திய
நளினிக்கு.,
நாமிருக்கும் தூரங்கள்
அதிகமானாலும் பாலங்கள்
போடலாம் என்று கூறிய
சந்திரோதயத்துக்கு.,
அழகும் சிரிப்பும்
அன்பான பழக்கங்கள்
என்ற சிராஜுன்னிசாவுக்கு.,
கலகப்பும் சிரிப்பும்
ஆக்கிரமிப்புமாக
அனைவரையும் அடிமைப்படுத்த
முடியுமென்ற ராஜேஸ்வரிக்கு.,
மோனோ ஆக்டிங் நன்றாக செய்து
அப்ளாஸ் அப்ளாஸாக வாங்கி
மனதைத் தொட்டுப் போன
வசந்தி அக்காவுக்கு.,
கருங்கூந்தலுடன்
அலையலையாச் சிரித்து
இழுக்கும் சாந்திக்கு.,
கனவு காண்பது
என் தொழில் என்று
மனமயக்கத்தில் ஆழ்ந்து
கவிதை சொன்ன வசந்திக்கு.,
மான் விழியால் பேசி
பாடம் படிப்பதே நம் கடமை
என்றுணர்த்திய அமுதாவுக்கு.,
மௌனமாய்ப் பார்த்து
மௌனமாய்ப் பேசி
மௌனமாய்ப் புன்னகைத்து
மௌனமாய் உறவாடும் ஷாந்திக்கு.,
என்நேரமும் எப்போதும்
பங்சுவாலிட்டியையும்
கண்டிப்பையும் கடைபிடிக்கும்
ப்ரொஃபசர் ராஜலெக்ஷ்மிக்கும்.,
“கனவில் மூழ்குவதல்ல..
காட்சியைப் பார்ப்பதே உன் வேலை”
என்று தண்ணீர் தெளித்து எழுப்பிய
சுசீலாம்மாவுக்கு.,
பட்டியல் போட்டுக்
காரியங்கள் செய்யக் கற்றுக்
கொடுத்த சகு மாமிக்கு.,
வீட்டைச் சுத்தமாய்
வைத்துக்கொள்ள
முன்மாதிரியாய்
இருந்த சரஸ் மாமிக்கு.,
பார்த்தவுடன் ஓடிவந்து
கைபிடித்து ஸ்பரிசித்து
மகிழும் முத்து ஆச்சிக்கு.,
பார்வையாலே
பாசத்தை உமிழ்ந்து
தலையைக் கோதும்
ஐயாவுக்கு.,
போதும் போதுமென
பாதிச் சாப்பாட்டிலேயே
எழுந்து ஓடுமளவு திணிக்கும்
லெட்சுமி அம்மாவுக்கு.,
பெண்ணைப் பூவைப்போலப்
பார்க்கக் கற்றுக் கொடு்த்த
பாலுவுக்கு.,
உலகை ஆராய்ச்சி நோக்கோடு
அணுகக் கற்றுத்தந்த
ஜெ.காவுக்கு.,
உன்னை நேசிப்பவரை எல்லாம்
உன்னாலும் நேசிக்க முடியும்
என்பதைக் கூறிய ஜே.கே.வுக்கு.,
கிழக்குப் பார்த்து அமர்ந்து
இந்த உலகம் இலட்சியமில்லை
உனக்கு.. உதறிவிடு என
வேதாந்தம் உரைத்த
ஆனந்த விநாயகருக்கு.,
கோப உணர்வுகளைக்
கட்டுப்படுத்தக்
கற்றுத்தந்த மீனாவுக்கு.,
எல்லார் குற்றத்தையும்
தன் குற்றமாகப் பாவிக்கும்
கீதாவுக்கு.,
பழகுவதற்கு இனிய
கேதரின்., கல்யாணி., கலாவுக்கு.,
என்ன மாதிரிப் பழகுவாள் என
என்னால் இனம் கண்டு
பிடிக்கமுடியாத வித்யாவுக்கு.,
இவ்வளவும் எழுத எனக்கு
உதவிய என் ஆதிபகவனுக்கு.,

”சமர்ப்பணங்கள்..!!!”
Related Posts Plugin for WordPress, Blogger...