எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

சாணை.

நீண்ட நாள் கழித்துக் கவிதை போல ஒன்று எழுதுகிறேன்.
திரும்பத் திரும்ப நீ அழைத்த என்பெயர் காதில் ஒலிக்கிறது.
இனிப்பாய் உன் குரல் பட்டுக் கனிந்திருந்தது என் பெயர்.
நான் உச்சரித்துப் பார்த்தேன் ஒரு மாற்றமுமில்லை.
மருகி மருகி வேண்டி நிற்கும் வார்த்தைகளைத் தள்ளுகிறேன்
இரக்கமுடையவள் என்று கூறிக்கொண்டே
வார்த்தைச் சாணையால் வீறுகிறேன்
கீறல்களோடு நீ தனித்திருக்க.
மறுதலித்து நடக்கிறேன்
அது என் பெயர்தான் ஆனால் அல்லவென்று.
  

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

இருப்பின் விகசிப்பு.

எங்கும் வியாபித்திருக்கும்
உன்னை உணர்கிறேன்

எங்கோ விசிறும் சிறு கேலியும்
நையாண்டியும்கூட உன்னை வரைகிறது.

உன் அக்கறையும் விசாரிப்புமில்லாமல்
பலவருடங்கள் ஓடினாலும் இன்னும் உன்குரல் காதில்.

பேசிக்கொள்வதில்லை என்பதாலேயே
புரிந்துணர்வு பெருகுகிறது

எப்போதும் சந்தித்துக்கொள்ளவேண்டாமென்ற
வைராக்கியம் இறுகுகிறது இருப்பின் விகசிப்பில்

நலமாயிரு எப்போதும் எங்கும்
நீ இங்கேயும் நான் அங்கேயும்
  

புதன், 22 ஆகஸ்ட், 2018

இசைவும் அசைவும்.

காற்றின் இசைவுக்கேற்ப
நடனமாடிக்கொண்டிருக்கிறது
அசைவறியாப் பூ .
  

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

நுதலின் நிபந்தம்.

பருவம் முகிழ்த்த சூதகம்
பச்சிளம் பிறப்பின் சீராம்.
நரைத்த திரைத்த கேதம்
ஞமனின் நடுவன் சீராம்

மூங்கில் நுணலாய்
உருவம் சாய்த்த
இரும்பது துரும்பாய்
உள்ளம் ஓய்த்த
உவப்பை ஒழித்த
பெருங்கழி ஓதம்
நுதலின் நிபந்தம்.  

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கான(க)ம் பெரிது.

இருளும் குளிரும்
நெருக்கமாய்ப் போர்த்தியிருக்கும்
இலைகளுக்குள்ளும்
கதகதப்பாய்க்
குடியிருக்கின்றன
கான(க)ம் பெரிதென்று வாழும் குயில்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...