எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 ஜூன், 2012

ஜீவிதம்

ஜீவிதம்.:-
***********
சிமெண்ட் தொட்டியிலோ
சிண்டெக்ஸிலோ வழியும் நீர்
அடம்பிடிக்கும் குழந்தை
ஜன்னல்வழி எறிந்த மிச்சஉணவு
பெருநகரக் காக்கைகளுக்கும்
கிடைக்கிறது தினப்படி ஜீவிதம்

செவ்வாய், 26 ஜூன், 2012

பதிவு

பதிவு:-
*************
இரவைக் கார்பனாக்கி
அவன்
அவளுள் எழுத
பத்து மாதம் கழித்துப்
பதிவிட்டாள்
க்ளோனாய்க் குழந்தையை

இறையாண்மை

இறையாண்மை..:-
************************

சில உணவிடப்படுகின்றன.,
சில பலியிடப்படுகின்றன.,
வழிபாட்டின் பெயரால்..

ஞாயிறு, 24 ஜூன், 2012

இருப்பு

தடங்கள் இல்லாமல்
இரும்பைத் தின்கின்றது காற்று
அடையாளம் இல்லாமல்
இருப்பைத் தின்கின்றது ஏக்கம்.

கவர்ச்சி

கூர்ந்திருக்கும் கொக்கை
குட்டிமீன்கள்
கவர்வதில்லை..

வியாழன், 14 ஜூன், 2012

நீதான்,..

நீதானென எனக்கு தெரியும்.
நீயில்லை என நீயே சொல்வதால்
நம்பிக்கையுறுகிறது மனது..
நீ ஏன் நீயில்லாமல்
போகவேண்டும் என் முன்னால்
என தர்க்கிக்கிறது மூளை.
நீ எதிர்பார்த்த நானில்லையோ இது
அல்லது உன்னை
வெளியிடத் தயக்கமோ.
நீயே உன்னை வெளிப்படுத்தும்போது
நம்பிக் கொள்கிறேன் நீதானென்று..
அதுவரை அந்நியமாகவே இரு

புதன், 13 ஜூன், 2012

அன்புப் பரிசு

உனக்கென வாங்கின பரிசுகளை
உன்னிடம் சேர்ப்பித்துவிட்டேன்.
எல்லாமும் கிடைத்ததா..
சோதித்துப் பார்
ஏதேனும் குறையலாம்.
அனுப்பத் தயங்கி
இங்கேயே வைத்திருக்கிறேன்
என் அன்பெனும் பரிசை.

ட்வைன் நூல்

இழுத்து இழுத்து
உடைக்கப்பார்க்கிறது
அறையும் யதார்த்தம்..
மீள்கிறேன் ட்வைன் நூலாய்
விட்டுக்கொடுத்து வளைந்து

திங்கள், 11 ஜூன், 2012

புன்னகைக்குழி,,

உன் புன்னகையை
வனைகிறது கன்னக்குழி
புதைகுழியாய்
என்னை இழுத்தபடி..

வெள்ளி, 8 ஜூன், 2012

கெடு..:-

உன் தூண்டிலில்
மீன் சிக்கும்வரை
நான் புழு.

வியாழன், 7 ஜூன், 2012

வாழும் அடிமை

வார்த்தைகளின் அடிமையிடம்
பல்லிவாலாய்
சத்தமிடும் நாக்கு.

செவ்வாய், 5 ஜூன், 2012

பூ மயக்கம்

கூந்தல் வாசம்
பிடித்திழுத்து
மயங்கிக் கிடக்கிறது
பூச்சரத்துள்
புழு.
Related Posts Plugin for WordPress, Blogger...