எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

முன்னோருக்காய்.

சிறுமேகமாய் எழும்புகிறது
சமையல் புகை
மேகத்தைக் கொத்தி விளையாடுகின்றன
நீள்மூக்கு இலைகள்
மழைச்சாரல் அர்க்யம் செய்கிறது.
சோடச உபசாரங்கள் நிறைவுற
பதார்த்தங்கள் காத்திருக்கின்றன
கருத்தபறவையொன்றின் வடிவில்
தாகம் தணிக்க வரும் முன்னோருக்காய்.
  

புதன், 25 டிசம்பர், 2019

தாய்மையின் ரகசியக் கடவுச் சொற்கள்.

கண்ணுக் குட்டி, செல்லம், வெல்லம், லட்டு
கைபேசியில் முகம் காட்டும்
பிள்ளைகளைக் கண்டதும் துள்ளிவரும் கொஞ்சல்கள்
மருமக்களின் காதுக்கு எட்டிவிடுமுன்
வெட்கப்படும் மகன்கள் கோபிக்குமுன்
எதில்பொத்தி வைப்பது
எப்படி மறைப்பது.
தாய்மையின் ரகசியக் கடவுச் சொற்களை.
  

வியாழன், 19 டிசம்பர், 2019

வென்று வாழுங்கள்

உதவிக்கரம் நீட்டி ஓடோடி வருவீரே
அபயக்கரம் காட்டி இனி அன்புசெய்ய யாரிருக்கா.
எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்கள் எத்தனையோ பேருண்டு.
எம் உள்ளத்தையும் உம்முடன் எடுத்துக்கொண்டு வாழ்ந்து காட்டிச் செல்லுவதும் நீர்தானே.
ஆற்றுக்கால் பகவதி நீர் 
அன்பின் ஊற்றுக்கால் நீர்தானே
வைகையென நீர்சொரிந்த
சொக்கனின் மீனாட்சி உம்மிடம் 
"என் சுந்தரனும் என்னோடு இங்கிருக்க
நீயும் ஒரு சுந்தரனோடு சுகமாக வந்தாயோ
என்னாட்சி மதுரையிலே இனி 
உன்னாட்சியும் நடக்கட்டுமென
வருகவென வரவேற்றுத்
தாய்போலக் கை விரிப்பாள்.
நடக்கட்டும் மதுரையிலே
உங்கள் இருவரின் பேராட்சி
நானிலத்தில் நன்மையே விளையட்டும்.
அமெரிக்க மண்ணைவிட்டு
அன்னை பூமி சென்றபின்னும்
உங்கள் அன்புக்கடிமைகளை 
மறக்காதீர் ஒருபோதும். 
தாயாய்த் தோழியாய் 
யாதுமாய் இங்கிருந்தீர்
தாய்நாடு சென்றபின்னும்
தகவல் தொடர்பு கொண்டிடுக
தாயவளாம் மீனாட்சியிடம்
எமக்காகவும் வேண்டிடுக.
இப்பிரிவு பௌதீகப் பொருண்மைக்குத்தான்.
உள்ளப் பிரிவு நாம் அறியாதது.
உடல் நலம், உள்ள நலன் போற்றி
இன்றுபோல் என்றும் ஒன்றாயிருப்போம்.
வாழ்க வளமுடன்
வென்று வாழுங்கள் மதுரையிலும்.
உங்கள் அன்பெனும் அமுதம்பருகி
இனிது வாழும் விஜி சத்யாவின்
அன்பு முத்தங்கள் ஆயிரம்
  

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

துளிர்த்தெழு

இதுகாறும்
கடல்மேல் பொழிந்த மழையாய்
வீணானது எங்கள் பேரன்பு.
இன்னும் பொழியக் காத்திருக்கிறோம்
மண் விலக்கி முளைவிட்டெழு
எங்கள் சிறுவிதையே
இலைச் சிறகுகளோடு
துளிர்த்தெழு
எங்கள் செல்லத் தேவதையே
 

செவ்வாய், 10 டிசம்பர், 2019

காவி

பிள்ளைப்பிராயத்திலிருந்து
காவி என்னை லாவிக்கொண்டுதான் இருக்கிறது.
துறவறத்தை நோக்கிச் செல்லல் மற்றும்
தன்வயம் இழந்து தெய்வமயமாதல்
வெண்மையும் நீலமும் கருப்பும் கூட
அதற்குத்தானென்றறிகையில்
சிவந்து குழம்பித் திரிகிறது என் காவி ரத்தம்.

வியாழன், 5 டிசம்பர், 2019

கங்கை

கரையெங்கும் சாம்பலும் எலும்புகளும்
அகோரி நர்த்தனங்களும் தீயின் நாக்குகளும்
கடல்நோக்கி ஓடுகிறாள் கங்கை
தன்னையும் கரைத்துக்கொள்ள..

Related Posts Plugin for WordPress, Blogger...