எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 நவம்பர், 2012

ஈசான மின்னல்

எல்லைக் காளிகள் 
ஈசானத்து மின்னல் நடனக்காரனின் 
பூதகணங்களாய் உருப்பெறுவது .,
பாண்டிக்கரை முனிகளால்
திருவரங்கத்து மணி ஓசை 
திருமலைநாயக்கனுக்கு எட்டுவது.

தினச்சண்டை

கோட்டான்கள் ஒலிக்க
நிலவுக் கேடயத்தோடு
நகர்கிறது இரவு.

பொருதவரும்
சூரியனை
வழிமொழிகிறது சேவல்.

பாயும் ஒளிவாளை
நிலவில் ஏந்திப் பிடித்து
உள்மறைகிறது இரவு.

கூடடையும் பறவைகள்
இந்த தினச் சண்டையைப்
புதுப்பிக்கின்றன மாலையில்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து (” அவர் ”செல்வகுமார் கேட்டதற்காக எழுதியது)

அல்லும் பகலும் விரும்பு
ஆசையின் தூரம் கடந்து
புறப்படு உடனே விரைந்து
புவியின் ஈர்ப்பைக் கடந்து

சொல்லும் செயலும் தொடங்கு
செல்லும் திசையை அறிந்து
உழைப்பை உணர்வை வழங்கு
உயர்வாய் என்றும் உயர்ந்து.

விழுந்து கிடந்தாலும் முளைப்போம்
விழுப்புண் என்றே நினைப்போம்
வெட்டுக்காயமும் தழும்பும் சகஜம்
விடாமல் போராடுவதே நிஜம்  .

விண்ணும் கோளும் தாண்டி
வருவோம் உண்மை தோண்டி
எண்ணும் எண்ணம் வெற்றி
எங்கும் எங்கும் வெற்றி

அரும்பு இதழுக்காக சிகரங்களில் ஏறி விண்ணைத்தாண்டி.

சிகரங்களில் ஏறி விண்ணைத்தாண்டி
------------------------------

சிகரங்கள் தொட
மலைகளில் ஏறுவோம்..
வானமும் மேகமும்
தொட்டுவிடும் தூரம்தான்..

முயற்சி செய்வோம்..
நம்பிக்கை கொள்வோம்
தடைகளைத் தகர்த்தெறிவோம்...

தீவிரமாய் உழைப்போம்
குறிக்கோளோடு செயல்படுவோம்
நினைத்ததை அடைவோம்...

நம்மைப் படைத்து
உயிர் கொடுத்தது தெய்வம்...
ஊனுடம்பு கொடுத்தது தாய்தந்தை..
உருவாக்கியவர் ஆசான்கள்...

நம்மைச் செதுக்கியவர்களுக்கு
நாம் நன்மையைக் கையளிப்போம்...
நாளனத்தும் நமது...
நல்லோரனைவரும் நம்மவர்...
நல்ல எண்ணங்கள் அனைத்தும் நமதாம்...

வெற்றிப்  படிக்கட்டுக்கள்
நம் வாயிலிலிருந்தே
தொடங்குகின்றன...

நல் வினையாற்றுவோம்..
வெற்றியடைவோம் ..
விண்ணைத்தாண்டியும்..
வெற்றி படைப்போம்...!!!

அரும்பு இதழுக்காக 2010 இல் எழுதியது.

விசுவாசம்

அங்கிகளுக்குள்
எம்மை மறைத்து
செயலற்று இருந்தோம்..

உமது கண்கள் வழி
கருணை பொங்கி..
எமை அணைத்து..
அரவணைத்து..

எங்கள் துயரை எல்லாம்
எம்மால் சுமக்க
முடியாது என்று
எமக்காய் சிலுவையாக்கி
சுமந்த எம்பெருமானே...


மூன்றாம் நாளில்
முளைக்கும் விதைபோல்
கிளைத்தெழுந்த
எங்கள் பெருமகனே .,

வாழ்வின் நம்பிக்கையே..
எங்கள் நன்மை விளைந்தது..
உங்கள் உயிர்த்தலில்..

அன்பின் தேவே..
நல்லவற்றில்
விசுவாசம் பிறந்தது.
.
நோயுற்றிருந்தோம்..
வலிகளைச் சுமந்தீர்..
தெளிவற்று இருந்தோம்..
ஒளியாய் வந்தீர்..

தனிமையில் இருந்தோம்...
துணையாய் நின்றீர்...
நீதி நாளுக்காய் காத்திருக்கிறோம்...
இரட்சிக்க வருவீர்...

எல்லா நம்பிக்கைகளிலும்
நீவீர் பிறந்து கொண்டே இருக்கிறீர்..
எம்மை ஆறுதல் படுத்தவும்..
ஆற்றுப் படுத்தவும்..

நன்மையின்., அன்பின்.,
விசுவாசத்தின் வடிவே..
உமது வருகைக்காய்..
பூங்கொத்துக்களுடன் நாங்கள்...
வந்தெமை ஆட்கொள்க விரைவில்...!!!

எமிரேட் ஹியூமர் க்ளப்புக்காக மார்ச் 2010 இல் எழுதியது.

சந்தோஷமாய்ச் சிரித்திடு
செல்லச்சிட்டே சிரித்திடு
சின்னக்கிளியே சிரித்திடு
செந்தமிழில் சிரித்திடு ...

நாளும் உள்ளன்போடு
உள்ளம் ஒரு ஒளியாய்  ஒளிர
முகம் ஒரு மலராய் விரிய
இதழ்ப்பூவில் மலரட்டும் உன் புன்னகை....

அனைவருக்கும் கொடு உன் புன்னகையை
பொன்னகையைவிட மேலானது
துன்புருவோருக்கு ஆறுதலாய்
நோயுற்றோருக்கு தேறுதலாய்...

என்நேரமும் சிரித்து உன் அழியாத
செல்வத்தை அனைவருக்கும் பங்கிடு
சின்னச் சின்னச் சந்தோஷங்கள்
இயற்கை அன்பு நிகழ்வு நெகிழ்வு
சினேகம் பாசம் அனைத்துக்கும் ஒரு புன்னகை

சூரியக்கதிர் போல் நிலவின் ஒளிபோல்
வாய்விட்டுச் சிரித்திடு நோய்விட்டுப் போக
சங்கீதமாய்ச் சிரித்திடு
சத்தம்போட்டுச்சிரித்திடு

காலன் கூட ஓடிப்போக
குலுங்கிக் குலுங்கிச் சிரித்திடு
சிறுமை கண்டு சிரித்திடு
வெகுளி கண்டு சிரித்திடு

சிரிப்பெனும் சில்லறையை
சிந்திச் சிதறி விடு...
இருப்பவனோ இல்லாதவனோ
மனம் விட்டுச் சிரித்திடு..

வாய் கொள்ளாமல் புன்னகை விரிய
வேண்டாம் என்று சொல்லாத ஒரே தானம் இது
காண்பவர் முகத்திலெல்லாம் ஒளியைப்பற்றவைக்க
சிரிப்பெனும் தீபத்தை ஏற்றிவிடு...

ஒன்று பலவாய்ப் பெருகி
உள்ளன்போடு கொடுத்திடு
ஒஹோ என வாழ ஒஹோவென்றும்
ஆஹாவென வாழ ஆஹாவென்றும்,,,,,,,,,,,  (சந்தோஷமாய்ச் சிரித்திடு )

தீபங்களின் நிருத்தியம்

தீபங்களின் நிருத்தியம்
காற்றின் தாளக்கட்டுக்கு ஏற்ப
கண் ஆடிக்குள் ஜதிகூட்ட
வீடே எதிரொளிக்கிறது ப்ரகாசத்துடன்..

ஞாயிறு, 25 நவம்பர், 2012

சாலைக் கிளைகள்.

முன்பின்னாய் ஒளிர்ந்து
மின்மினியாய்ப் பறக்கின்றன
சாலைக் கிளைகளில்
இரவு வாகனங்கள்..

இருள் பாம்பு

பேருந்துத் தலைகொண்ட
வெளிச்சக் கண்விரித்து
இருள் பாம்பாய்
நழுவுகிறது சாலை..
கொத்திய விஷப்புகையில்
மூழ்குகின்றன மரங்கள்..

வர்ணத்துப் பூச்சி

வாசல் வந்து வந்து
திரும்பி செல்கிறது
கருப்பு வெள்ளை இரண்டு மட்டுமே
நிறமென்று ஏற்க இயலாத
வண்ணத்துப் பூச்சி

செவ்வாய், 20 நவம்பர், 2012

குடைவரைக் காற்று

எதைத் தேடியதோ
எது கிட்டியதோ..
பிடிவாதமாய் திரும்பத் திரும்ப..
குடைவரைக் கோயில்களில்
உள்நுழைந்து வெளியேறுகிறது காற்று

சித்தாள்கள்.

மண் குழைத்துக்
கல் பதித்த
சிமெண்டுச் சிற்பங்களை
உருவாக்கிச் செல்கிறார்கள்
கருத்த மயன்கள்,
சாம்பலில் உயிர்க்கும்
ஃபீனிக்ஸ் பறவைக் கால்களுடன்
அடுத்த இந்திரலோகத்தைச் சமைக்க..

பாதுகாப்பு வாசம்

பாதுகாப்பு வாசம்:-
*************************
வந்து மீள்கிறது
ஒற்றைப் பார்வை..
மொக்குகளாய் துளிர்ப்பதும்
கூம்பிலிருந்து வெடிப்பதும்
வலிக்கிறது
ப்ரளயம் கிளர்த்தி.
பார்க்காமலே
மார்பு ரோமம்
முகம்உரசிக் கிடக்கையில்
கிடைக்கும் பாதுகாப்பு
அர்த்தமில்லாதாக்குகிறது
புணர்ச்சியை.
புஜத்தில் ஒட்டிய பொட்டோ,
முதுகில் தொற்றிய பூவோ,
என் வாசத்தை
உன்மேல் தெளித்து
உன் இரும்பு வாசத்தை
உறைவிக்கிறது என்மேல்.
ஒரே இடத்திலோ
வெவ்வேறு இடங்களிலோ
உணர்கிறோம்
நம் இருவரையும்
கடக்கும் ஒரு பூ வாசத்திலும்
ஒரு லோஷன் வாசத்திலும்

புதன், 14 நவம்பர், 2012

ஜெயித்தல்

ஜெயித்தல்:-
*****************
 தீபாவளி நேரம்
தேர்தல் முடிவு
சாமி புறப்பாடு
மாப்பிள்ளை அழைப்பு
இதெல்லாம் மீறி
இந்தியா கிரிக்கெட்டில்
ஜெயித்த உணர்வை
உண்டாக்குகிறது
ஒரு பட்டாசுச் சப்தம்

செவ்வாய், 13 நவம்பர், 2012

கூகையும் குகையும்.

குங்குமமாய்
வழிகிறது நெபுலா..
குளித்துக் குளிர்ந்து
கருநீராய் உறைகிறது லாவா.
எங்கோ ஒலிக்கிறது கூகை.
எதிரொலித்து ஒளிக்கிறது
எல்லாம் உணர்ந்த மனக்குகை..

சனி, 10 நவம்பர், 2012

குளிர்ப் பூ..

கரங்களோடு கரங்கள்
கோர்த்து  நடக்க
விரல்களில் இருந்து
உதிர்கிறது குளிர்..




வியாழன், 8 நவம்பர், 2012

பறக்கும் ஓவியம்.

சிதறும் வண்ணங்கள் சுமந்து
பறக்கும் ஓவியமாய்
உலாவருகிறது
பட்டாம்பூச்சி.

மயில்தோகை விசிறி.

தோகைகளாய் மாறினதும்
கண்கள் முளைத்தன.
பார்வையற்ற விழிகளோடு
உணர்கிறேன் உன்னைக்
காற்றாய் வருடி.

புதன், 7 நவம்பர், 2012

மீன்

அழகான ஜாடி
அது நிறைய தண்ணீர்
பசிக்குமுன்னே உணவு
துக்கமும் தூக்கமும் அறியாமல்
எதைத் தேடியோ
அலைந்துகொண்டிருக்கும் மீன்

செவ்வாய், 6 நவம்பர், 2012

கதிர் விரித்தல்.

விரியனாய் தினம்
காத்திரமாய்க்
கதிர் விரித்துக்
கடித்துச் செல்கிறது
இருள் பொந்திலிருந்து
ஓசோன் கிழித்து
வெளிப்படும் விஷச் சூரியன்

திங்கள், 5 நவம்பர், 2012

அபிப்ராயங்கள்

அபிப்ராயங்கள்:-
*********************
கால்களற்றவன்
கைச்சக்கரங்களால்
கடந்துபோய்க்கொண்டிருக்கிறான்.


கண்கள்வழி
கருணை கசிந்துவிடாதிருக்கவும்
புன்முறுவல் பொங்கிவிடாதிருக்கவும்

யத்தனிக்கிறேன்.

கடுமையான பாவனைகளால்
கல்லாகிறது முகம்.,
அவனை எந்த விதத்திலும்
காயப்படுத்தாத சந்தோஷத்துடன்.

யதார்த்தமாய்க் கடக்கும் அவன்
யோசித்தபடி செல்கிறான்.,
முறுவல்கள்கூட அற்ற முகம்..
பாவம் என்ன பிரச்சனையோ..

வெள்ளி, 2 நவம்பர், 2012

ஜிமிக்கி

கண்கள் விரிய எத்தனை காலம்தான் காத்திருப்பது..
காதல் கணவா வந்து விடு சீக்கிரம் அலுவலகத்திலிருந்து
காத்துக் காத்து கண்ணுக்குக்குள் ஒரு பூவாய்ப் பூக்கிறாய்..
காற்றாய் சுழல்கிறாய் என் கழல் சுழற்றி..
வாசனையாக் கரைந்து கொண்டிருக்கிறேன்..
வயதாகிக் கொண்டிருக்கிறது எனக்கும் என் ஜிமிக்கும்கூட..:)

வியாழன், 1 நவம்பர், 2012

தீர்க்கமுடியாதவை..

தீர்க்கமுடியாதவை:-
***************************
 
தேத்தண்ணியும் காப்பித்தண்ணியும்
கலந்த சீனிப் பானையாய்
பெருத்துக் கிடக்கிறது வயிறு
 
ஊர்விட்டு ஊர்மாறும்
அட்டைப் பெட்டிகளால்
நிரம்பிக்கிடக்கிறது வீடு.
 
தண்ணீர்க் குழாய்களாலும்
சாக்கடைப் பள்ளங்களாலும்
பிளந்து கிடக்கிறது சாலை.
 
சுயநல அணைகளாலும்
அணு ஆலைகளாலும்
பிளவுபட்டுக் கிடக்கிறது ஊர்.

சோகக் கவிதை

துக்கமும் சாவும்
ஓவியமாகவே  பதிகிறது
ஓவியக்காரனுக்கு
சோகக் கவிதையாகவே
புலம்பிச் செல்கிறது
கவிதைக்காரிக்கு..
Related Posts Plugin for WordPress, Blogger...