எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மார்ச், 2013

வெய்யில் வலை

மெல்ல வலையை
விரிக்கிறது வெய்யில்..
வேர்வைக் குளத்துள்
மீன்களாய் மனிதர்கள்.

கடிவாளம்

எதை ருசித்தாலும்
நாவுகளில் கடிவாளமிட்டிருக்கிறது
அம்மாவின் கைப்பக்குவம்

வியாழன், 28 மார்ச், 2013

வாலசைப்பு.

உப்பிட்டவர்களின்
உணர்வுகளுக்கேற்ப
வாலசைக்கிறது நாய்..

மினுமினுப்பு.

நீவி நீவி நெசவு
செய்கிறது சிலந்தி
அழிய அழிய மினுமினுப்பாய்.

திங்கள், 25 மார்ச், 2013

ரங்கமணி என்றொரு தேவன்.

விரிந்த கண்ணாடித் தாளில்
வெளிச்சம் பட்டு வீழ்ந்தொட்டும்
சிறுபூச்சிகளாய் நாம்.

இல்லாத கூண்டுக்குள்
அடைந்து கொண்டு
விடுவி விடுவி எனக்
கதறிக் கொண்டிருக்கிறோம்.

முற்றிய வியாதியாய்
முற்றுப் புள்ளி வைக்கமுடியாமல்
முழித்து விழித்துப் பார்க்க

விட்டால் போதுமெனத்
தன் அலுவலகக் கூண்டுக்குள்
சிறைவாசமிருக்கிறார்
ரங்கமணி என்றொரு தேவன்..

சனி, 23 மார்ச், 2013

ஏழு நிறம்தானா..

ஏழு நிறம்தானா..
.
.
எத்தனை நிறங்கள்
எங்கள் வாழ்க்கையில்..
.
எல்லா நிறங்களும்
எங்களைச் சூழ

.
எந்த நிறம்
எங்கள் சொந்த நிறம்..?

வெள்ளி, 22 மார்ச், 2013

ஒரு வாரம்.

மெல்லப் பிறக்கிறது
தவழ்கிறது.
நடை பயில்கிறது.
ஓடுகிறது.
உழைக்கிறது
மணக்கிறது.
மரிக்கிறது
இன்னொன்றை
உற்பத்தி செய்துவிட்டு
.
.
.
ஒரு வாரம்.

கிளியாந்தட்டு.

காற்றற்றபோது
புழுங்கித் தவிப்பதும்
பரிதவித்து உள்நுழையும்
காற்றைத் தடுப்பதும்
வெளி சுழலும் காற்றை
வேடிக்கை பார்ப்பதும்
திரைச்சீலைவழி
கைகோர்த்து இழுப்பதுமாய்
கண்ணுக்குத் தெரியாமல்
ஒரு கிளியாந்தட்டு..

வெறும் முட்டை

வீடென்ற கூடு
அடைகாக்கும்
வெறும்முட்டைநான்.

புதன், 20 மார்ச், 2013

நிலாச்சோறு.

நிலாச்சோறு ஊட்டும்
அத்தையின் கையில்
கவளம் கவளமாய்
உருண்டு கொண்டிருக்கிறது
நிலா.

ஞாயிறு, 17 மார்ச், 2013

கரண்ட் கட்

கரண்ட் கட்.:-
**********************

மின்சாரமற்ற ஒரு நாள்
என்னைப் புதுப்பித்துக்
கொண்டிருந்தது.

அவதி அவதியாய்க்
குளித்து அள்ளியுண்டு
கம்ப்யூட்டரின் முன்
குத்தவைக்கும் அவஸ்தையில்
இருந்து விடுபட்டிருந்தேன்.

முன்னைப் போல
அலமாரியைத் திறந்து
ஆராய்ந்து கொண்டிருந்தேன்
எதை உடுப்பதென.

கடலைமாவும்., பாலேடும்
எலுமிச்சையும் தேய்த்து
வெளுப்பதற்கான
முஸ்தீபுகளில் இறங்கினேன்.

எதெதையோ நேரம் கெட்டு
கெட்டுப் போய் உண்ணும்
நிலையிலிருந்து

சூடான புளிக்குழம்பை
சுடுசோற்றில் பிசைந்து
கவளம் கவளமாய் ரசித்துண்டேன்.

குழந்தைகளின் பழைய
ஓவிய நோட்டுக்களைக்
குறுக்கெழுத்துப் புதிர்போல
ஆராய்ந்து மகிழ்ந்தேன்.

வெள்ளையாய் க்ரீம் பூசி
நகச்சித்திரம் வரைந்து
நண்பிகளுடன் அளவளாவித்
திரும்பினேன் செல்லிலிருந்து.

என்ன உடுத்தினேன்
என்ன உண்டேன்
என்ன பேசினேன்
என்பதெல்லாம் மறந்து
காதலிக்ககத் துவங்கினேன்
கரண்டு வந்தவுடன்
ஒளிபெற்ற மானிட்டரை.

வியாழன், 14 மார்ச், 2013

ப்ரம்ம பதம்..

ஏணிப்படிகளை எண்ணி எண்ணி ஏறி
பாம்புக் கடி கீழிறக்க
ஏறவும் இறங்கவுமாய் அல்லல்பட்டு
முக்கி முனகி மூச்சுமுட்டி
பரமபதத்தை எட்டிய கிழவியை
தொண்ணூற்றெட்டில்
பெருங்கொண்ட பாம்புகடித்து
இரண்டில் இறக்கிவிட
குட்டிக் குழந்தையாகி
வீறிட்டலறினாள்..
“ அடப்பாவி
திரும்பவும் முதலேருந்தா..”

புதன், 13 மார்ச், 2013

அதே மாதிரியான

அதே மாதிரியான தினங்கள்.
அதே மாதிரியான உணர்வுகள்,
கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்,
தொடர்ந்து கொண்டிருக்கின்றன அவைகளும்.

திங்கள், 11 மார்ச், 2013

இன்னிசை அளபெடை.


பாடபேதம் தெரியாது
குயில்களுக்குத்
தம் இன்னிசை அளபெடையில்.

பறக்கும் பட்டாம் பூச்சிகள்.

கண்கள் பார்த்து
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன
என்றான் அவன்.
இறகாய் அசைந்த
குழல் விலக்கியவன்
கைப் பற்றலில்
வயிற்றில் முட்டி மோதி
பட்டாம் பூச்சிகள் துடித்தன..
விடுவித்துப் பறந்தாள்.
வெளியேறிப் பறக்கத் துவங்கின
பட்டாம்பூச்சிகள்  சுற்றிலும்.

ஞாயிறு, 10 மார்ச், 2013

வார்த்தைச் சிறகுகள்..

வார்த்தைச் சிறகுகள்..:_
****************************

கூட்டில் வளரும்
பறவையாய்
தாய் வாயிலிருந்து
உணவுப் புழுவைக்
கோர்ப்பது போல்
மொழியை விழுங்கிக்
கொண்டிருக்கிறது
குட்டிக் குழந்தை..

சமயம் வந்ததும்
பறக்கிறது
இறகசைத்து
கற்ற வார்த்தைகளோடு
தத்தித்தத்தி..

வலிகளோடு வாழ்தல் இனிது.

உண்பது போலொரு பாவனை
உடுப்பது போலொரு பாவனை,
ஞாபகமறதிக் கூட்டில்
குஞ்சு பொறித்திருக்கும்
விதம்விதமான வலி முட்டைகள்
ஒன்று காலெழும்பிப் பறக்க
இன்னொன்று முட்டையிட
வாழ்வது போலொரு பாவனை
வலி மட்டுமே உண்மை/
வயோதிகத்தில் யாரற்றபோதிலும்
மிச்ச ஞாபகங்களோடு கூடவே இருக்கும்
வலிகளோடு வாழ்தல் இனிது.

வெள்ளி, 8 மார்ச், 2013

நானான போது.

நானான போது..:-
******************************
கேசங்களை அலையென்றும்
நகங்களில் நிலவென்றும்
பாதங்களை தாமரையென்றும்
கண்களை கணைகளென்றும்
நீ வர்ணித்ததை எல்லாம்
பள்ளிப்பெண்ணாயிருந்தபோது
உண்மையென நம்பினேன்..
உலகத்தை உரித்துப் பார்த்தபின்
எதையுமே ரசிக்கமுடியாமல்..
உருவுக்குள் ஊடுருவும்
உன்மத்தர் உவப்பேச்சில்
உள்ளத்தை உலரவைத்து
ஆராய்ச்சி நோக்கோடு
அழகியலும் அழிந்து போக

கேசங்களுக்குள் நாகமென்றும்
நகங்களுக்குள் சதைகளென்றும்
பாதங்கள் தடம்மாற அல்லவென்றும்
கண்கள் நேர்கொண்டு நோக்கவென்றும்
திடமாய் சொல்ல முடியும்..
வயசுக் கோளாறு எல்லாம் கடந்து
தீர்க்கமான சிந்தனைகள் நானானபோது..

வியாழன், 7 மார்ச், 2013

மகளிர் தின நன்றிகள்..

தன்னைத் தானே
தேடியலையும் பெண்
இனம் காண்கிறாள்..
தன்னையும் தன்னினத்தையும்..
தாயாய், தமக்கையாய், தங்கையாய்
தோழிகளாய், மகளாய், பேத்தியாய்..
நீண்ட நெடிய பயணத்தில்
கைகோர்த்து உடன் வரும்
பாசம் கொண்ட தந்தைக்கும்
நேசம் கொண்ட சகோதரர்களுக்கும்
காதல் கொண்ட கணவருக்கும்,
கனிவு கொண்ட பிள்ளைகளுக்கும்
காணாமலே அன்பு செலுத்தும் சகோதரர்களுக்கும்
ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு உயர்விலும்
வாழ்த்தி மகிழும் நண்பர்களுக்கும்
திரும்ப ஒரு புன்னகையை, அன்பை,
அன்பான சொற்களைக் கொடுப்பதைத் தவிர
வேறென்ன செய்துவிடப் போகிறோம்..

நன்றி .. நன்றி.. நன்றி..:)


நீர்க்கங்கு..

மீன் செதிலாய் 
மினுமினுக்கிறது நதி
துடுப்புத் தூரிகையில் 

மீன்பிடிக்கும் ஓவியன்
துணையோடலைந்து 

அணையை அளக்கிறது பறவை.
நிழற்சாம்பல் பூக்க 

நீர்க்கங்கை அடக்குகிறது அணை..
பச்சைப் புன்னகையில் 

குழலசைத்துக் கிடக்கின்றன மரங்கள்..
வெய்யில் வலை விரித்து 

கணங்களை விழுங்கிக் 
கடக்கிறது காலம்..:)

புதன், 6 மார்ச், 2013

புளியமரப் பிசாசு

விஷத்தின் அடர்த்தியோடு
அதி வீர்யம்
விஷயத்தின் அடர்த்தி.

கொத்திச் செல்வதில்லை
யாரையும் என்றபோதும்
கொத்துப் பட்டது உண்மை.

கால்களற்றது என்றாலும்
முகத்தில் மோதுகிறது
புளியமரப் பிசாசு.

தர்க்கித்து தர்க்கித்து
இல்லாத ஒன்றை
வாரி வழித்து வீசிச் சென்று

ராக்குளத்தில்
முகம் தேட
ஒன்றும் தெரிவதில்லை
சூனியம் தவிர


திங்கள், 4 மார்ச், 2013

பசு பதி பாசம்.

முயல்வதற்கு ஏதுமில்லை.
மயங்கிக் கிடக்கிறது பசு
பதியின் பாசத்தால்.
முயங்கிக் கிடக்கிறான் பதியும்
பசுவின் பாசத்தால்.

ஞாயிறு, 3 மார்ச், 2013

வினையால் அணைதல்.

அச்சமூட்டுகிறது
மூன்றாம் நடவடிக்கை
தன்மை முன்னிலை
படர்க்கை..
முதுகுத் தண்டில்
குளிர் சுரமாய் நீள்கிறது
இருவரின் ரகசியத்துள்
படரும் மூன்றாம் கை.
பஞ்சதந்திரமாய்
ஜொலிக்கிறது
நரியின் விழி
நான்காம் கோணத்துள்.
முயல்கள்
குகை வாயிலில்
குவிந்த கைகளோடு
முணுமுணுக்கும் பிரார்த்தனை..
ஓநாய்ச் சூதின்
வினையால் அணைகிறது
முயலும் நரியும். 

Related Posts Plugin for WordPress, Blogger...