எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 அக்டோபர், 2018

மதியப் பொழுதைத் தின்பவள்.

நீர்க்கண்ணிகள் வளைந்திறங்கி
வெடித்துக் கிடந்த நிலத்தைச்
சுருக்குகின்றன.
பனை விசிறிகள்
ஆசுவாசமாய் நீர்க் கவரி வீசுகின்றன.
பொடிப்பொடியாய்த்
தெறிக்கும் நீரில் சிறுவிதையாய்
முளைத்துக் குதிக்கின்றன தவளைகள்
ஒரு கால்வாய் கோடிழுக்கத் துவங்கி
நெளிந்து காட்டாறாகிறது.
துணிகளைத் துவைக்க வந்தவள்
புழுக்களைச் சுவைக்கும்
குருவிகளின் கொத்தலை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
நீளமாய் ஓடி சட்டென்று சுருங்குகிறது
ஒரு வெக்கைப் பகல்.
தோட்டத்து செத்தைகளில்
செம்பசையாய் குழுமியிருக்கிறது
விழப்போகும் இளநீருக்கான தளம்.
மெத்தையில் புத்தகங்களோடு
அரைவிழியினை அங்குமிங்கும்
அசைத்துக் கொண்டிருக்கிறாள்
மதியப் பொழுதைத் தின்பவள்.
  

செவ்வாய், 30 அக்டோபர், 2018

கண்களின் வண்ணம்.:-

கண்களின் வண்ணம்.:-


ஓங்காரம் உச்சரித்து
ஒழுங்கசைவில் அமர்ந்து
உள்முகமாய்ப் பார்க்க
ராபின்பறவைப் புருவம் துடிக்கிறது.
நீலமேகம் அசைந்து கடக்கிறது
கடலாய் எழும்பித்தாழ்கிறது இமை
பசுமைப் பயண அடுக்குகளில்
மசமசப்பாய் மஞ்சள் அலைய
செங்கல் வண்ணத்திலொரு அருவியும்
செஞ்சாந்துத் தடிப்போடு ஒரு சூரியனும்
வழிந்திறங்க விழிக்கோளம் உருள்கிறது
உள்நிலவின் வெளிச்சத்தில்.
நிறம்விரித்து நிறம் குவித்துக்
கருமைக்குள் உருண்டு உருண்டு
களைப்பாறிக் கிடக்கிறது.
கண்களின் வண்ணம்.
  

திங்கள், 29 அக்டோபர், 2018

வலை அலை வெளி.

நமது போர் நம்முடனே
வட்டமானதும் தட்டையானதும்
நம் உலகம்.
ஒளிதலுக்கு இடமில்லா
வலை அலை வெளியில்
நமது வியூகங்களும்
யூகங்களும் நம்மையே
மையப்படுத்துகின்றன.
கனவு வெளிகளில்
காக்கி மனிதர்கள் சுற்றியிருக்க
வளையமிட்ட நூல்கற்றையில்
தலை நுழைக்கிறேன்.
விழிகளைக் களவாடிய
குற்றமொன்றுதான் உனது.
தடதடக்கும் இறக்கைகளோடு
பட்டாம்பூச்சியாயிருக்கிறாய்.
முட்டி மோதி மோதி என்
இருட்டறையை வண்ணமாக்கியிருக்கிறாய்.
விலங்குகள் உன் விரல்தீண்டுமுன்
சதுரத் திறப்பில்
உன்னைத் தப்பிக்கவிடுகிறேன்.
நீ உதிர்த்துச் சென்ற
வண்ண வாள் கொண்டு
என்னைச் சிரச்சேதம்
செய்கிறேன்.

வெள்ளி, 26 அக்டோபர், 2018

கொதிமலை.

நீலவண்ணம் பொதிந்த
பெண்ணுடல் கடலை ஒத்திருக்கிறது.

நதிகளின் சங்கமிப்பும்
மழையின் உயிர்த்துடிப்பும்
பெருஉப்பைப் போக்குவதில்லை.

நீளமாய் மடிந்து மடிந்து
மன அலை விரித்துச்
சொல்லவந்ததைத் சொல்லாமல்
முழுங்குகிறாள்.
சமயத்தில் சுற்றியிருக்கும்
அனைத்தையும்.

நீலம் நீலத்தோடு கரைகட்டாதவேளை
உள்ளோடிப் பார்த்தால்
தெரியக்கூடும் சில கொதிமலைகளும்
பல கப்பல்களும்
இன்னும் உள்ளிழுக்கும் பள்ளத்தாக்கும்.
  

செவ்வாய், 16 அக்டோபர், 2018

விடியல்.

இருள் வலையால் பின்னப்படாதிருக்கிறது
கடலைப் போலக் கலைந்து கிடக்கும் அவ்விரவு.

பாய்மரப் படகாய் அசைந்தாடுகின்றன கட்டிடங்கள்
அலையாய்த் தழுவும் காற்றில்.

நிலவில் ஊறிக் கொண்டிருக்கும் மரம்
நனைந்தாடுகிறது பால் மயக்கத்தில்.

சத்தமின்றி விரைந்தாடுகின்றன இலைகள்
கசிந்திறங்கும் குளிரின் பிசுபிசுப்பில்.

கலங்கரை விளக்காய் கனவில் ஈர்க்கிறது
கலவியற்றுக் கலந்தவளின் கண்கள்.

வெளிறும் கடல் வற்றத் தொடங்குகிறது
துருவனின் கைபிடித்துக் கரையோர மணலாய்

சிறைப்படுகிறது திசையற்றுத் திரியும் சூரிய மீன்
வடிகட்டியாய் அலையும் விடியலின் கூரிய கரங்களில்.
  

திங்கள், 15 அக்டோபர், 2018

ஆடும் ஆனையும்.

கல்லூரிக்கான வழித்தடத்தில்
அமைந்திருந்தது அம்மலை.
ஏதோ ஒருவிதத்தில் அவை
வெருட்டியிருக்க வேண்டும்
மாமிசம்போல் எப்படி
வெட்டிப் புசித்தார்கள்
உதிர்ந்த எலும்புகள்
சுண்ணாம்புக் கவிச்சியுடன்
செரிக்கமுடியாத குன்றாய்க்
கெக்கலிக்கிறது அவர்களைப் பார்த்து.
ஆட்டை வெட்டலாம்
ஆனையை வெட்டமுடியாதென
நீண்டு நிமிர்ந்து கிடைக்கிறது
சிறிதே தள்ளி தப்பித்த ஒன்று
  

வெள்ளி, 12 அக்டோபர், 2018

ஓநாய் வணக்கம்.

பனிப்பாறைகளுக்குள்
உறைந்துள்ளன எச்சங்கள்
கருத்தும் அழுகியும்.
தழையுண்ணிகளாய் இருப்பதோ
மாமிச பட்சிணிகளாய் இருப்பதோ
கணங்கள் முடிவெடுக்கின்றன.
துண்டு துண்டாய்ப்
பிளவுபடுகின்றன நிலங்கள்
துளிர் உண்ணும் உண்ணிகளால்.
தீமை உரித்துத் தந்திரம் வடிக்க
பனி எச்சங்களால் உயிர்க்கும்
ஓநாய்கள் வணக்கத்துக்குரியதாகின்றன.
  

வியாழன், 11 அக்டோபர், 2018

ஒளிவிலகல்

சிதறிச் சிதறி விழுகின்றன
எழுத்துக்கள் குவிப்பானில்.
குழியாடியும் குவியாடியும்
குழிவீழல் சிக்கலாய்.
வலமூளைக்கும் இடமூளைக்கும்
அலைநீளங்கள் அதேதான்
பெருமூளையில் விழும் நிஜங்கள்
ஒளிவிலகலில் நிழல்களாய் நீளும்.
  

செவ்வாய், 9 அக்டோபர், 2018

அலைவு.

இரவை சுதி மீட்டுகிறது
கடிகாரம்.
கொசுக்களோடு ராகமிசைக்கின்றன
சில்வண்டுகள்.
தென்னங்கீற்றுடன்
உசாவிக் கொண்டிருக்கிறது மின்விசிறி.
கட்டம் கட்டமாய் நகர்ந்து
கண்ணாமூச்சியாடுகிறது நிலவு.
வீட்டுக்கும் தோட்டத்துக்குமாக
அலைந்து கொண்டிருக்கிறது இருள்.
  

விளைந்தவைகள்.


டிக் டிக் டிக்
குறைந்துகொண்டிருக்கிறது
லப்டப்
மழைக்கொத்திகள்
பூமியைக் கொத்த
விளைந்தவைகளை
எண்ணிக் கொண்டிருக்கிறது மனம்
தேய்ந்து கொண்டிருக்கிறது
மழைச்சொட்டின் சத்தம்.
அமோக விளைச்சல்தான்
நீர் வார்க்கிறது பனை.
மரம் விட்டு மரம் பறக்க
இறகை விரிக்கிறது பறவை.

  

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

சூரியச் சாமரம்.

இரவில் விழுந்த மழைமுத்தங்கள்
இலையெங்கும் வழிந்து கிடக்கின்றன.
பாலாவியாய்க் காற்றில் அலசி
இலைகளை உலர்த்துகிறது தோட்டம்.
சூரியச் சாமரம் இலைவெளி புகுந்து
தூபம் போட்டுக் கொண்டிருக்கிறது.
கூதலை உண்ட புள்ளினங்கள்
உறைந்து கரைந்து சிறகு விசுறுகின்றன.
  

வெள்ளி, 5 அக்டோபர், 2018

கழிமுகம்.

ஊசியாய் இறங்குகிறது மழை
ஆணியடிக்கிறது பூமியை.
சிரச்சேதம் செய்கிறது செடிகளை
பசிய கவிச்சி பரவுகிறதெங்கும்.
விழுந்து கிடக்கும்
மரக்கட்டைகளை இழுத்துக்கொண்டு
முள்முடி சுமந்து
கழிமுகம் பயணிக்கிறது நீர்.
  

உதிர் ஏக்கம்.

உதிர் ஏக்கம் இன்றி
கூதிர்காலத்தில் ஆடிக்கொண்டிருக்கின்றன
முதிர்பூக்கள்.

மலர்வதே ஒரு தவமாய்
மலர்வதே ஒரு வரமாய்
மலர்வதே ஒரு பலமாய்.

முதிரும் புதிருமாய்
புன்னகைப்பது பார்த்தும்
மொக்குகள் கிளைக்கின்றன

நீர்பட்டு நார்பட்டுக்
காயரும்புகளும் சேர்ந்துவிடுகின்றன
மாலையாகும் விரிபூக்களுடன்.
  

புதன், 3 அக்டோபர், 2018

வனமடி.

முரசடித்து முழங்கிச்
செல்கிறது மேகம்.
மலைமுலைகளில் பாலாய்ப்
பெருகிவழிகிறது அருவி.

வனமடியிலிருந்து
துளிர்க்குழந்தைகளை
விரல்பிடித்துத்
தூக்குகிறது சூரியன்

ஈர ரத்தமாய்
வேர்வருடி
பசிய வாசத்தோடு
நழுவிக்கொண்டிருக்கிறது நதி

கதகதப்பு பரவப்பரவ
கலகலக்கிறது
பறவைகளின் தாலாட்டால்
கனிந்திருக்கும் காடு.
  

வெளி.

விசிறும் மழையில்
நனையாமலிருக்க
விசிறிக்கொண்டு
விரைகின்றன தட்டான்கள்.

மஞ்சள் பூக்களுக்கு
இறகு முளைத்துப்
பறக்கின்றன பாப்பாத்திகளாய்.

வண்ணங்கள் கலைந்துவிடுமென்ற
பயம்விடுத்து
வானவில் வரைகின்றன வண்ணாத்திகள்

வெண்டிலேட்டர் வீட்டுக்குள்
குடும்பத்தோடு குந்தி
வெளி வெறித்துக் கொண்டிருக்கின்றன புறாக்கள்.

திங்கள், 1 அக்டோபர், 2018

நீயாகிய நான்.

கண்ணோடு கண் நோக்கி
கருத்தொருமித்திருந்த கணம்
யௌவனம் புகுந்தது

யானும் நீரும்
செம்புலம் கலக்க
சாரல் தெறிக்கிறது

இம்மையிலேயே
மறுமை தொடர்கிறது
நீயாகிய நானும்
நானாகிய நீயுமாய்.

  
Related Posts Plugin for WordPress, Blogger...