எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 30 ஜூன், 2013

மேகக் குட்டிகள்..

மேகக் குட்டிகள் :-
*****************
பேரின்ப நொடிகளில் மோதி
மழையாய்ப் பிசுபிசுத்துப்
புரண்டு படுக்கிறது மேகம்.
சிந்திய துளிகளைச் சேமித்து
கர்ப்பமாகிக் கிடக்கிறது நிலம்.
நீச்சலிடும் விதைகள்
காலூன்றி எம்பி
காற்றின் கரம் பிடித்து
மேலேறும்.
மஞ்சள் புன்னகையோடு
ரசித்துக் கடக்கும் சூரியன்
பச்சையம் பரிசளிக்கும்.
வான் தொட்ட இலவம்
மேகம் முத்தமிட்டுதிர்த்து
மேகக் குட்டிகளாய்
பூத்திருக்கும் மண்ணில்.

வெள்ளி, 28 ஜூன், 2013

துளசி..

களிகூர்ந்து
கருணை பொழிய
நனைந்து குளிர்கிறது
தாமரைக் கரங்களில்
துளசி..
தீபத்தின் வெம்மையில்
குளிர்காய்கிறது
திருமாலின் திருமார்பில்.
ஆரத்தி ஒளியில்
செம்மார்பில்
செம்மாந்திறுமாந்து
பிருகுவையும்
சுற்றவைக்கிறது
பாற்கடலை.
ஊறிக் கிடக்கும்
பெருமாளின்
மணம் சேர்ந்து
இணையாகிக்
காய்ந்தும்  மணக்கிறது.

குடைக்குள்..

மழையில் ஓடி
வளை தேடி
குடைக்குள் எலி.

புதன், 26 ஜூன், 2013

நட்சத்திரப் பருக்கை

நிலவுத் தட்டிலிருந்து

நட்சத்திரப் பருக்கைகள் சிதற

நதியில் கை நனைக்கிறது இரவு.

ஞாயிறு, 23 ஜூன், 2013

பலநிறப் பூக்கள்..

பலநிறப் பூக்கள்:-
******************************

ஊரில் இல்லை
வெளியே இருக்கிறேன்
வர நாளாகும்.
இன்னொரு நாள் பார்க்கலாம்.
எங்க போயிடப் போறோம்.
உலகம் உருண்டை.
ரொம்பச் சின்னது.
சீக்கிரம் பார்க்கலாம்.
அடுத்தவாரம் நிச்சயம்.
ஏதோ ஒரு கல்யாணத்தில் பார்க்கலாம்.
அடுத்த மீட்டிங் கட்டாயம்.
தவிர்த்துக் கொண்டே இருக்கிறேன்.,
ஒவ்வொரு சந்திப்பையும்,
நீ தெரிவித்த அதே வார்த்தைகளில்.
ஏதோ ஒரு தயக்கம்
முதலையாய் வழிமறித்துக் கிடக்கிறது
படகை எட்ட.
மரங்கள் மறைத்திருக்கும் தீவில்
காலை உரசிச் செல்கின்றன
உன் துடுப்பைத் தொட்ட அலைகள்.
கரை நோக்கி மிதந்து வருகின்றன
பல தீவிலிருந்தும் பூக்கள்.

வெள்ளி, 21 ஜூன், 2013

விழிக்கும் கிழமைகள்.

கிழமைகள் தினமும் விழிக்கின்றன.
சூரியனைத் தின்று செமிக்கின்றன.
மழை பெய்தபோது குளிக்கின்றன.
இரவானதும் நேரத்தில் துயில்கின்றன.

வியாழன், 20 ஜூன், 2013

அசை

ஆடுமாடுகளோடு
அசைபோட்டபடி
கடக்கிறது வெய்யில்.

புதன், 19 ஜூன், 2013

கண்ணீர்க் கிளைகள்

கண்ணீர் முளைவிட்டுக்
கன்னங்களில் கிளைபரப்ப
பூத்துச் சொறிகிறது
இமைப்பூக்கள்

கனவில் செதுக்கிய
கண்ணாடிப் பாளமாய்
வெடித்துக் கிடக்கிறது
மனக்கண்கள்..

வெதுவெதுப்பைச்
சுமந்த இறகொன்று
மெல்லச் சுருண்டு
குளிர்ந்திறங்குகிறது.

தவறவிட்ட
அணைப்பொன்று
கதகதப்பிழந்து
தனித்துக் கிடக்கிறது.

இறக்கைகளால்
போர்த்திக் கொள்ளும்
மரப்பறவை
துயிலத் தொடங்குகிறது.

இருளின் கிளை வழுவி
நழுவும் நிலா
நதி நதியாய்த் தழுவி
கடலில் விழுகிறது.

திங்கள், 17 ஜூன், 2013

கணங்களைக் கடந்து..

சில சிறகுகள்
உதிர்வது தெரிவதில்லை
மழைத்துளியாய்.
சில வலியெழக்
கிளையாய் ஒடிகின்றன.
அலகு தீட்டி
மரத்தைக் கூர்பார்த்து
நகம் தோய்த்துக்கொள்ளும்
சாமப் பறவைக்கு
இரைபிடிக்கப் போதுமான
இறக்கைகளிருந்தும்
உதிருந்துருளும்
சிறகுகளை சிலகணம்
உற்றுக் கசிந்தபடி நகர்கிறது
கணங்களைக் கடந்து.

ஞாயிறு, 16 ஜூன், 2013

பார்வைப்பூ..

ஆரிக்கிளும் வெண்ட்ரிக்கிளும்
இறகசைத்தன
பட்டாம் பூச்சியாய்..
உன் பார்வைப் பூவில்..

எனக்கு ஏன் கள்ளிப்பால் வழங்கப்படவில்லை..:-

எனக்கு ஏன் கள்ளிப்பால் வழங்கப்படவில்லை..:-
********************************

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்
என்று சொல்லப்பட்டு வந்த ஊரில்
ஆறாவதுக்குப் பின்னும் ஆண்குழந்தைக்குக்
காத்திருக்கும் மனிதர்கள் நடுவில் பிறந்ததால்

சமத்தி என்ன பெத்தா
தலைச்சன் பொண்ணு பெத்தா என
என் தாய் புகழப்பட வேண்டிப் பிறந்ததால்.


காரைக்கட்டிடங்கள் நிறைந்த நகரில்
கள்ளிப் பாலால் கொல்லமுடியும் என
யாரும் பார்த்து அறியாததால்


மகனை அரசனாகக் கண்ட பெற்றோர்
மகளை ஆத்தாப் பொண்ணு எனத்
தன் தாயாகவே கண்டதால்

ராணி மங்கம்மாளும், வேலு நாச்சியாரும்
மங்கையர்க்கரசியும் பெருமைக்குரியவர்கள் என
படிப்பறிவின் மூலம் உணர்ந்ததால்

எந்த ஈராவிலும் ஆணுக்குக்
கருப்பை வழங்கப்படாததால்
என்னைப் போன்ற பெண்ணைப் பிறப்பிக்க
எனக்கும் கள்ளிப்பால் வழங்கப்படவில்லை.

புதன், 12 ஜூன், 2013

சூரியத் தாய்.

வெளிச்ச நீர்தெளித்து
மரக்கிளை வழி புள்ளி வைத்து
மஞ்சள் தடவி
செங்கோலமிடும் சூரியத் தாய்.

நீலவிதானத்தின் கீழ்
மேகப் பந்தலில்
பச்சையங்களைச்
சமைத்துப் பரிமாறும்.

மாலைக் குளியலிட்டு
மஞ்சள் வண்ணமாக்கும்.
உதிரும் இலைகளைத் தினம்
தொடுவானத்திலிருந்து தட்டிவிடும்

உழைத்த களைப்படைங்க
மலைத்தலை கோதி
கொண்டை முடித்துத்
நிலவப்பம் ஊட்டித் தாலாட்டி
இரவுப் பாய் விரித்துச் செல்லும்.

சலசலப்பு.

உரையாடல்கள் தீர்ந்த பருவத்தில்
மௌனத்தில் உறைந்திருக்கிறது
சலசலத்த நதி.

செவ்வாய், 11 ஜூன், 2013

வார்த்தைச் சிறகுகள்..

வார்த்தைச் சிறகுகள்..:_
****************************

கூட்டில் வளரும்
பறவையாய்
பேசுபவர்களிடமிருந்து
உச்சரிப்பு இரை
எடுத்துக் கொண்டிருக்கிறது.
சிறகு முளைக்கும் குழந்தை.

தாய் வாயிலிருந்து
உணவுப் புழுவாய்
மொழியைக் கோர்த்து
விழுங்கிக் கொண்டிருக்கிறது
கூட்டுக் குழந்தை..

சமயம் வந்ததும்
பறக்கிறது
இறகசைத்து
கற்ற வார்த்தைகளோடு
தத்தித்தத்தி..
அக்கம்பக்கமிருந்து
குழந்தையைக் கொஞ்சும்
எல்லார் வாயிலும்
அதன் செல்லச் சிறகுகள்
உதிர்கின்றன.

.

திங்கள், 10 ஜூன், 2013

தீர்வுக்காய்..

வெறுப்புக்களையும்
தவிப்புக்களையும்
கோபங்களையும் தாண்டிப்
பிறந்தே விடுகிறது
ஒவ்வொரு வாரமும்..
சேமிக்கப்பட்டவை
அடுத்த வாரக் கடைசிக்காய்க்
காத்திருக்கின்றன
ஏதோ ஒரு தீர்வுக்காய்..


சனி, 8 ஜூன், 2013

தொடுப்பு..

பசுஞ்சாணம் தெளித்து
மஞ்சள் குங்குமம் வைத்துக்
கோலமிட்டால்
கெடுதல் நுழையாது
மனைவிக்கான நம்பிக்கை.

கோலமிடப்படாத
பின் வாசல் வழி
எத்தனையோ கெடுதல்கள்
வந்துபோகின்றன
வீட்டுக்காரனின் தொடுப்பென.

வெள்ளி, 7 ஜூன், 2013

கிளிகளுடன் கைகுலுக்கல்:-

கிளிகளுடன் கைகுலுக்கல்:-

வெகு சொகுசான வாழ்வில்
விதிகளை மீறிப் பறப்பதில்லை.
கூண்டைவிட்டுப் பறந்தால்
எஜமானனனின் தன் சுவடு
படிந்த தோளில் அல்லது கையில்..
பாசம் படிந்த தோலோடு
பழம் உண்டு ஒரே ராகத்தில்..
எப்போதாவது கற்பிக்கப்படும்
புதுவார்த்தைகளைத்
தன்னுடையதாக மிழற்றி..
வல்லூறுகளும் காக்கைகளும்
நாரைகளும் மயில்களும் கூட
வாழ்வதாக அறிந்து..
சுவருக்கு வெளியே
கடந்து செல்லும் சிலர் மட்டுமே
சில நொடிக் கீச்சல்களைக் கேட்டு..
இன்பமா துன்பமாவென
அறியாமல் கடந்து செல்ல..
அலகோ, நகமோ
கீறிவிடக்கூடுமென்பதால்..
கிளிகளுடன் கை குலுக்குவதில்லை யாரும்..

புதன், 5 ஜூன், 2013

வரலாறு.

முட்டையிடக்
கூடுகட்டும் பறவைகள்
வாழ்ந்த சுவடுகளைப்
பதித்து வைப்பதில்லை.
என்னுது என்னுதென்னும்
இறுக்கமில்லை.
கைவிட்டுப் போமோவென்ற
நடுக்கமில்லை.
என் செய்வோமென்ற
சிந்தனையில்லை.
அலகுகளால் உயிர்ப்பித்து
இறக்கைகளால்
பறக்கக் கற்பித்தபின்
விட்டு விடுதலையாகின்றன
ஒன்றிடமிருந்து ஒன்று..
கிளையோடும்
இலையோடும்
காற்றோடும் கலந்து
சிதறிக் கிடக்கும் சுள்ளிகளில்
வரலாறாய்க் கிடக்கிறது
வம்சம்பெருகிய காவியம்..

பிரபஞ்சப்பெண்.

சூரியனுக்குப் பின்
அந்திமந்தாரையோடு
குளிரப்பூக்கும் அவளை
இரவென்கிறார்கள்.

சூரிய ஒளியேற்றிப்
பயணித்து வரும்
பால்வண்ணக்காரனை
நிலவென்கிறார்கள்.

அவன் அவளைக்
கடந்துசெல்லும் போது
உராய்ந்து தெறிகின்றன
உடலெங்கும் நட்சத்திரங்கள்.

அவன் திரும்பும்வரை
சிதறும் நட்சத்திரங்களை
சேமித்துக் கொண்டிருக்கிறாள்
பெருகும் இன்பப் பால் வீதியாய்..

செவ்வாய், 4 ஜூன், 2013

எட்டிய உயரம் வரை..

கறுப்பென்றாலும்
சிவப்பென்றாலும்
வெள்ளையென்றாலும்
கொஞ்சம் பயமெனக்கு.

தினமும் மையிட்டுக் கொள்கிறேன்.
நெற்றி வகிட்டில் குங்குமம்.
வெள்ளி மிஞ்சியும் கூட.

பாசச் சந்தனமும்
விபூதியும் பற்றாகக் கூட.,
பச்சையமாய் சமைக்கிறேன்.

மஞ்சள் நிலவில்
அடர் நீல இரவில்
வண்ணங்கள் தெறிக்கும் கனவில்..

உறங்கும் குருவிதானென்றாலும்
விழிப்பு வந்ததும்
எட்டிய உயரம்வரை
பறக்க மறப்பதேயில்லை தினமும்..:)

எளிய மனிதர்களும், ஊர்களும்.

எளிய ஊர்களைப் போலவே
இருக்கின்றார்கள்
எளிய மனிதர்களும்.
நதிக்கரையோர
சணல்படுதா குடிசைகள்,
புட்டாமா அடித்துப்
பொட்டுவைத்த குழந்தைகள்,
ஏதோ ஒரு போராட்டக்கல்
உடைத்த ஜன்னலுடன் பேருந்து,
புகையிலை வாடையுடன் வரும்
பழக்கூடைக்காரி,
வீசும் கொட்டைக்கோ பழத்துக்கோ
தோப்பிலிருந்து வால் தூக்கி
சலாமடிக்கும் அணில்கள்,
குழையக் குழையச் சேறோடு
மணக்கும் சம்பா வயல்கள்,
எளிய மனிதர்களைப் போலவே
காவி காட்டிச்  சிரிக்கின்றன
எளிய ஊர்களும்..

ஞாயிறு, 2 ஜூன், 2013

விடுமுறை

மரத்தடையும் பறவைகளின்
மாலைநேரச் சலசலப்பு..
விடுமுறைக் குழந்தைகளின் கூச்சல்.

சோக புத்தன்..

இனத்தைப் புதைக்கும்
இடுகாடானது இலங்கை.

புதைகுழிகளான கருப்பை சுமந்து.
பிணங்களைச் சூல் கொண்டிருக்கிறாள்
பிரசவிக்க இயலாத தமிழ்மகள்.

வேண்டாத கருக்களாய்
வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது
மண்ணுக்குள் மனிதங்கள்.

தப்பித்த கருக்களுக்குக் கண்ணிவெடி

பற்களைப் பேழையில்
பாதுகாக்கும் தேசம்
பால்சிசுக்களை மென்றுதின்னும்
பாவிகளால் நிறைந்திருக்கிறது.

பச்சை ரத்தத்தைக்
கழுவிக் கொள்கிறது
இந்துமகா சமுத்திரத்தை
செங்கடலாய் மாற்ற எண்ணி.

தன் ரத்தம் தோய்ந்த
கோரப்பல்லைக் காணத் துக்கித்து
தவறான இடத்தில்
தவறவிட்டதற்காய்
கண்மூடி வருத்தத்தில் புத்தன்.

சனி, 1 ஜூன், 2013

சுயம்..


துளிர்விடும் கொடுக்கை
ஓட்டுக்குள் மறைத்து
சுருண்டு கொள்கிறது
சுயம்..


ஒற்றைக் கிளையைப்
பற்றும்போதெல்லாம்
உடைந்து விடுகிறது
சுள்ளி.


நெருப்பை விழுங்கி
நீரில் முழுகி
நிர்வாணமாய்க் கிடக்கிறது
உடல்.


ஒன்றைச் சுட்டும்போதெல்லாம்
தன்னைச் சுட்டிச்
சதிராடிச் சிரிக்கிறது
மனம்.

காக்கைகள்.தூரத்து மரம்போல
அசைவில்லாமல்
இருக்கிறது வாழ்க்கை.
 * * *
இரைக்காய்க் காத்திருக்கும்
சிலந்தியிடம் சிக்கிக் கொண்ட
கவிதாயினி.
 * * *  
காக்கைகள் இரைச்சலிட்டு
இசைப்பதாகக்
கூறிக் கொள்ளும். 
* * * 

பருத்தீ..

பருத்தீ..ப்ரிய விதைகளைத் தூவும்
பஞ்சுத் தாவரங்கள்

காற்றில் நீரில்லா மேகங்களைத்
தூதுவிடும் பருத்தி.

விமான விபத்தாய்
வெடிக்கும் பருத்தி.

கிழிபட்ட கடிதமாய்
இரகசியம் வெளிப்படுத்தும் பருத்தி.

அம்மியில் எறும்பாய்ப்
பருத்தியை அரிக்கும் காற்று.

ஊரறிந்த சிதம்பர இரகசியங்களாய்
உலாவரும் பருத்திப் பஞ்சுகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...