எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மார்ச், 2019

தண்டட்டிக்காரி

வேலிப்படல் மறைக்கும்
வெண்பூசணிக்கொடி
கித்தான் படுதா உரசும்
கல்வாழைப்பூ
வெள்ளாட்டுக்குட்டியோடு
வயிறு சதைத்த வான்கோழி
கெக்கெக்கென குதூகலிக்க
வட்டிலிலே கஞ்சியோடு
வறுத்த கருவாடு உண்ணும்
தண்டட்டிக்காரியின்
குழல் அலசும் காற்றுக்கு
வேலிப்படல் தள்ளிப்புக
வேகமென்ன பத்தலையா
வெக்கமாகிப் போச்சுதாமா
வேலிக்கருவை பிடித்துக்
கால்தடுக்கி நிற்பதென்ன
வெய்யிலோ உள்நுழைந்து
வெதவெதப்பா நடப்பதென்ன
வேர்க்கும் சுங்குடியை
விசிறியாய் அவள் வீச
ஆசுவாசம் கொண்டு
அவள் வாசம் சுமந்த காற்று
மூச்சுப் பிசிறடிக்க
முந்தானையைப் பற்றுதம்மா
  

புதன், 27 மார்ச், 2019

நம்பர் கவிதை

நீ பகுபதம் நான் பகாப்பதம்.

நொதிபட்டாலும் அரைப்பதம்தான்.

வகுபடு எண்ணில்

நீ ஈவாக இருக்க

நான் மீதியாய்க் கிடக்கிறேன்

(நான் மட்டும் தக்காளித் தொக்கா

நானும் எழுதிட்டேன்

" நம்பர் கவிதை")
  

திங்கள், 25 மார்ச், 2019

வார்த்தைக் க்ரீடை

சுழலாய்ச் சருட்டிவிடுமெனத் தெரிந்தும்

வண்ணமயமாய்க் கவர்ந்திழுக்கிறது

வார்த்தைக் க்ரீடை.
  

வியாழன், 14 மார்ச், 2019

கூம்புதல்.

பூக்களைக் கத்தரித்து
ஜாடி மகிர செருகியாயிற்று.
நிரம்பி வழிகிறது வரவேற்பறை.
புன்னகைகள் பிடுங்கப்பட்ட துயரத்தில்
கூம்பிக் கிடக்கின்றன தொட்டிகள்.
  

செவ்வாய், 12 மார்ச், 2019

இருதிணை.

பாம்பின் தலைக்கும்
உடலுக்கும் பதிலாக
இருவேறு உயிராகப்
புதுப்பித்தாயிற்று.
இரண்டுக்குமிடையில்
சிக்கித் தவிக்கும் மனம்
இருதிணைச் சிந்தனையில்
உயிர்தெழுவதில்லை
  

புதன், 6 மார்ச், 2019

முடக்கம்.

நகரத்தின் மையத்தில்தான்
அமைந்திருக்கிறது வீடு.
நாலாதிசையும் பறக்கிறது சிந்தனை.
நகர்விலும் பெயர்தலிலும்
புதிதாக என்ன முளைத்துவிடப் போகிறதென
முடங்கிப் படுத்திருக்கிறது மனம்.
வெம்மையில் குளிர் கர்ப்பமாய்
சுருட்டி ஒளிந்திருக்கிறது சாளரம்.
தொப்புள் கொடியாய்
போஷித்துக் கொண்டிருக்கிறது
திறந்து மூடும் வாயில்.

செவ்வாய், 5 மார்ச், 2019

ஒளிர்தல்.

ஐந்து முகங்களில்
ஒளிர்கிறாள்...
கண்மூடித் திறக்கிறேன்
ப்ரகாசமான முகத்தோடு..
தீபத்தால் தீபத்தை
ஏற்றுதல் இதுதானா.
Related Posts Plugin for WordPress, Blogger...