எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 டிசம்பர், 2016

பொருட்காட்சி :-

பொருட்காட்சி :- ( UNEDITED )

குட்டிப் பாப்பா குட்டிப் பாப்பா எங்கே போறீங்க
பொருட்காட்சித் திடலுக்குத்தான் போகுறேனுங்க.

பொருட்காட்சித் திடலுக்குப் போய் என்ன செய்வீங்க
ராட்டினத்தில் ஏறி உலகைச் சுத்திப் பார்க்கப் போறேங்க

ராட்டினத்தில் சுத்தியபின் என்ன செய்வீங்க
பலூன் பொம்மை பஞ்சு மிட்டாய் வாங்கப்போறேங்க.

பஞ்சுமிட்டாய் தின்ன பின்னே என்ன செய்வீங்க
பஃபூன்ன் மாமா பல்டி அடிப்பதை பார்த்துச் சிரிப்பேங்க.

பல்டி அடிப்பதை பார்த்த பின்னே எங்கே போவீங்க
பறவைக் கூட்டம், சர்க்கஸ் எல்லாம் பார்த்து ரசிப்பேங்க.

சர்க்கஸ் எல்லாம் பார்த்தபின்னே என்ன செய்வீங்க
குட்டியானை குரங்குக் குட்டி சிங்கம் பார்ப்பேங்க.

அம்மா கையைப் பிடித்துக் கொண்டு சென்று வாருங்க
அழகாய்ப் பொருட்காட்சித் திடலை ரசித்து வாருங்க.


வெள்ளி, 30 டிசம்பர், 2016

தொட்டிச் செடி வளர்ப்போம்.

தொட்டிச் செடி வளர்ப்போம் :- (UNEDITED )

பட்டுரோஸை ரசிக்கலாம்.
புதினா வாசம் பார்க்கலாம்
துளசி இலைகள் எட்டிப் பார்க்கும்
தொட்டிச் செடி வளர்ப்போம்.

காய்கறிக் குப்பையைப் போட்டு
மண்புழு உரம் கொஞ்சம் போட்டு
செம்மண் கொட்டி விதை தூவ
குட்டித் தொட்டி போதும்.

காலை மாலை நீரூற்றி
காயும் வெய்யிலில் சிறிது வைத்து
கண்ணும் கருத்துமாய் கவனித்தால்
கொள்ளை அழகாய்ப் பூ பூக்கும்.

ரோஜாப்பூவு தலையாட்ட
சாமந்திப் பூவு சாமரம் வீச
சங்குப் பூவும் இதழ் சிரிக்க
ஜன்னலோரம் செடி வளர்ப்போம்.

காற்றை சுத்தம் செய்யும்
வீட்டை அழகாய் மாற்றும்
அம்மாவின் சமையலுக்குதவும்
அருமையான செடிகள் வளர்ப்போம்.


வியாழன், 29 டிசம்பர், 2016

கண்விழித்தெழுந்திடு பாப்பா :-

கண்விழித்தெழுந்திடு பாப்பா :- ( UNEDITED )

கண்விழித்தெழுந்திடு பாப்பா
 கன்னுக்குட்டியும் கால் எட்டித் துள்ளுது.
கோழிகுஞ்சும் துறுதுறுப்பாய் அலையுது.
துள்ளிக் குதித்தே பள்ளிக்குச் செல்ல
கண்விழித்தெழுந்திடு பாப்பா .

கணக்கு ஒன்றும் கடினம் இல்லை
ஆங்கிலம் அறவே அந்நியம் இல்லை
விஞ்ஞானம் என்றும் அஞ்ஞானம் போக்கும்
வரலாறும் உனக்கு  வாழ்க்கையை போதிக்கும்.
தமிழோ உனக்கு அமிழ்தமாய் இனிக்கும்

ஆசிரியர்கள் உனக்கு அருமையாய்க் கற்பிப்பர்.
அன்பான நண்பர்கள் காத்துக் கிடப்பர்.
அம்மாவும் உனக்கு அருதுணையாய் இருப்பார்
கண்ணை இறுக்கும் சோம்பலைக் களைந்திடு
கண்விழித்தேதான் பள்ளிக்குக் கிளம்பிடு.

புதன், 28 டிசம்பர், 2016

பறவைக்கூட்டம் காப்போம். :-

பறவைக்கூட்டம் காப்போம். :- ( UNEDITED )


கோடைக்காலம் வருகுது.
கொள்ளை வியர்வை பெருகுது


குடியிருக்க இடமில்லாமல்
பறவைக் கூட்டம் அலையுது.


மொட்டைமாடிக் கதவு நிலையில்
கூடுகட்டி குஞ்சு பொரிக்குது


இறக்கை சிதறிக் கிடக்குது.
இரையில்லாமல் தவிக்குது.


கீச்கீச்சென்று குட்டிக்குரல்
காதை வருடி அழைக்குது.


ரொட்டித் துண்டு போடலாம்
குருணை, தானியம் போடலாம்.


குட்டிக் கிண்ணங்களில் நீரூற்றி
குருகுகள் தாகம் தணிக்கலாம்.


கோடை காலம் தீரும்வரை
கொள்கையொன்று கொள்ளுவோம்


பறவைக் கூட்டம் பசியாற
பரிந்தே உதவிகள் செய்திடுவோம்.


ஞாயிறு, 11 டிசம்பர், 2016

தேடுதல் வேட்கை.

அலையாடுகிறது கடல்
தேய்ந்து ஒலிக்கின்றன
வார்த்தைச் சத்தங்கள்
தனக்குள் அமிழும் எண்ணங்கள்
குமிழாய் மறைகின்றன
சதுப்பாய்க் கிடக்கிறது மனம்
கடிகாரமுட்கள் தன்னைச் சுழற்றிச்
சவுக்கைகளாய்ச் சத்தமிடுகின்றன.
தேடுதல் வேட்கை
துரத்திக் கொண்டிருக்கிறது.
தூரப்போய்க் கொண்டிருக்கிறேன்
முகநூலிலிருந்தும்.

சனி, 10 டிசம்பர், 2016

அவள் இருந்த இடம்.

வாய்க்கால்களின் கொண்டைகளில்
வண்ணக் கண்ணாடித் தாள்கள்.
 
தவித்து மூச்சு வாங்குகிறாள்
நீராட்ட வருபவள்.


மண்ணள்ளிச் சேர்த்த கட்டிடங்கள்
மிதந்து கொண்டிருக்கின்றன
நதியின் கருப்பைக்குள். மலர்ந்திருந்தவளை மலடாக்கிவிட்டு
நீர்ப்புணர்ச்சி வேண்டித் தவம்.நீர்த்துப் போய் நீளமாய் வீழும்
அவள் கண்ணீர் கலங்கலாய்த்
தலைகுப்புற வீழ்கிறது கடலுக்குள்.நீராடுமுன் கைநிறைய நீரள்ளி
அவளுக்கும் அளியுங்கள் பிண்டம்.இது அவள் இருந்த இடம் என
தடம் குறித்து வைப்போம் வரைபடங்களில்.

வியாழன், 8 டிசம்பர், 2016

வெய்யில் காய்தல்.

வத்தலும் ஊறுகாயும்
காய்ந்த நடுவாசலில்
ஒரு நாய்க்குட்டியைப் போலச்
சுருண்டிருந்தாள் அவள்.
கைகளும் கால்களும் மடிந்து
உடல் ஒரு கம்பிளியாய் நெகிழ்ந்திருந்தது.
காலையும் மாலையுமற்ற குட்டை மதியத்தில்
குழியாடியாயும் குவியாடியாயும்
அவள் முதுகில் குதித்து
நடுவாசலில் தப்பித்து ஓடிக்கொண்டிருந்தது வெய்யில்.
காய்ச்சலில் உஷ்ணத்தோடு
நீண்ட பெருமூச்சை
இழுத்துத் திருப்பும் கணம்
அவள் நோக்கி நீண்ட
பாட்டியின் கைகளுக்குப் புலப்பட்டது
அவள் வெய்யிலைக் காயவைத்துக் கொண்டிருப்பதாக.

எதிர்கொள்ளுதல்

அடித்துப் பெய்கிறது மழை
பதைத்துக் கிடக்கிறது மனம்
நடுங்கி ஒன்றை ஒன்று
தழுவிக் கொண்டிருக்கும்
பால்கனிச் செடிகளை
அவற்றின் உலகத்தில் விட்டு
கதவைச் சாத்திக் கொண்டு வந்தேன்
எல்லாவற்றையும் எதிர்கொள்ளட்டுமென.

புதன், 7 டிசம்பர், 2016

ஊராத எறும்புகள்.

கைகளில் கடித்துத்
தப்பித்த ஒரு எறும்பை
உற்றுப் பார்த்துத்
தேடத் தொடங்கியதில்
தரையெங்கும்
கண்களுக்குள்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
ஊராத எறும்புகள்.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

முள்.

ஒரு முள்ளை
எடுப்பதற்கான ப்ரயத்தனம்
கொலையைவிடக் கொடுமையானது

ஒரு ஊக்கோ முள்வாங்கியோ
ரத்தம் பாராமல் திரும்புவதில்லை
ஒடிந்த முள்ளுடன்.

எப்போதும் எடுத்தோமோ இல்லையோ
என்பதறியாமல் ரத்தம் சிந்தும்
முட்களுடன் வாழ்கிறோம்

தொட்டிச் செடிகள் மட்டுமல்ல
மாடிப்படிகளின் வழவழத்த மரக்கைப்பிடிகளும்
முட்களான சிலாகைகளுடன் காத்திருக்கும்

எதவறியாமல் எல்லாவற்றையும்
நம்பும் கரங்களுக்கு அவை
முட்களைப் பரிசளிக்கத் தவறுவதேயில்லை.

நோகாத குயில்

சொல்பேச்சு கேட்பதில்லை
கடுக்கிறாள் அக்கா
கத்திக் கத்தி வயிறு புண்ணாப் போச்சு
கோபிக்கிறாள் அம்மா
எதையும் காதில் போட்டுக் கொள்வதில்லை
சலிக்கிறாள் மனைவி
கேளுப்பா கன்னம் பிடித்துக்
குழைகிறாள் மகள்.
இடையறாது கூவிக் கொண்டிருக்கிறது
யாரையும் நோகாது குயில்

வியாழன், 1 டிசம்பர், 2016

ஃபிடிலின் அளவு துயரம்.

ஃபிடிலின் அளவு துயரம்
தேய்ந்து தேய்ந்து வழிகிறது.
நிறுத்தமுடியா விரல்கள்
தோய்ந்து தோய்ந்து துடைக்கின்றன
மனக்கசிவின் ஈரத்தை.
சதுர நடனங்கள்
கொண்டாட்டங்களுக்கானவை.
மாமிசம் அறுக்கும் ரம்பங்களிலிருந்து
நீலநதியாக கருமைத் துண்டாக
நழுவிவிழும் தண்டவாளமாக
இறக்கை உதிர்க்கும் பறவையாக
ஓய்துதிரும் நட்சத்திரமாக
வீழ்ந்துகொண்டே இருக்கிறது
மடிந்து மடிந்து மனங்கொள்ளாமல் பேரிசை.

எல்லைச்சாமி

நீலத்தின் படிமங்கள்

நீர்த்து வெளிராகின்றன.

பசுமை மஞ்சள் ஆரஞ்சு

எல்லைக் கோடுகள்தாண்டி

செஞ்சினம் கொண்டும்

அழிக்கக் கிளம்புவதில்லை எல்லைச்சாமி

கருக்கருவாளும் குதிரையும்

துணைகொண்டு துண்டித்துக் கொண்டிருக்கிறான்

ஊர் எல்லையை இருப்பிடமாய்.

வெய்யிலும் மழையும்

சுதந்திரமாய்த் தழுவும் அவன் நோக்கி

சல் சல் என்று மனம் ஓடுகிறது.

ஆலமும் அரசும் கோலோச்சும்

சாமியவன் காலடியில் வருடம் ஒருமுறைதான்

வாய்க்கிறது பலியாடாய்க் கிடக்க.

ரத்தம் ருசிக்குமவன் சன்னதத்தை

எதிர்நோக்கிக் கிடக்கிறது எந்நேரமும் மனம்.Related Posts Plugin for WordPress, Blogger...