எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கோகுலம் குழந்தைப் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோகுலம் குழந்தைப் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜனவரி, 2017

மீனு எத்தனை மீனு :-

மீனு எத்தனை மீனு :-

உருளைத் தொட்டி செவ்வகத் தொட்டி
மேலயும் கீழயும் உலாவித் துழாவி
முத்தம் கொடுப்பதாய் வாயைக் குவித்துச்
சுத்தம் செய்யுது சக்கர் மீனு.

கலர்க் கூழாங்கல்லும் போட்டு
கிணத்துத் தண்ணி ஊத்தி
காலை மாலை உணவைத் தூவு
காஞ்ச புழுவையும் கொஞ்சமா தூவு.

தங்க மீனு தேவதை மீனு
பூக்கொண்டை மீனு ஆபரண மீனு
கத்தி மீனு பென்சில் மீனு
கப்பி மீனு நெத்திலி மீனு

ப்ளாசம் மீனு ப்யூட்டி மீனு
டைகர் மீனு ரைடர் மீனு
எத்தனை மீனு  எத்தனை மீனு
அழகுக்கு மீனு அமைதிக்கு மீனு.

ஆரஞ்சுச் சுளையா அலையுது மோலி
கறுப்பு ஃப்ளைட்டா துரத்துது ஃபைட்டர் மோலி
அமைதியா சுத்துது ஆஸ்கார் மீனு
ஹை ஜம்ப் அடிக்குது அரோவணா மீனு

பட்டர்ஃப்ளை ஏஞ்சல் மீனுக்கு
உப்புத் தண்ணி வேணும்.
ஃப்ளவர்ஹார்ன் மீனு தலையில்
ஹாரனோட அலையும்.
சத்தமில்லாம சுத்தி நம்ம ஈர்க்கும்
ஓடுமீன்கள் பார்த்து மீன்போல் அலையும்
கண்ணுக்குப் பயிற்சி மனதுக்கு அமைதி
வீட்டுக்கு இதமா தொட்டி மீன் வளர்ப்போம்.


சனி, 31 டிசம்பர், 2016

பொருட்காட்சி :-

பொருட்காட்சி :- ( UNEDITED )

குட்டிப் பாப்பா குட்டிப் பாப்பா எங்கே போறீங்க
பொருட்காட்சித் திடலுக்குத்தான் போகுறேனுங்க.

பொருட்காட்சித் திடலுக்குப் போய் என்ன செய்வீங்க
ராட்டினத்தில் ஏறி உலகைச் சுத்திப் பார்க்கப் போறேங்க

ராட்டினத்தில் சுத்தியபின் என்ன செய்வீங்க
பலூன் பொம்மை பஞ்சு மிட்டாய் வாங்கப்போறேங்க.

பஞ்சுமிட்டாய் தின்ன பின்னே என்ன செய்வீங்க
பஃபூன்ன் மாமா பல்டி அடிப்பதை பார்த்துச் சிரிப்பேங்க.

பல்டி அடிப்பதை பார்த்த பின்னே எங்கே போவீங்க
பறவைக் கூட்டம், சர்க்கஸ் எல்லாம் பார்த்து ரசிப்பேங்க.

சர்க்கஸ் எல்லாம் பார்த்தபின்னே என்ன செய்வீங்க
குட்டியானை குரங்குக் குட்டி சிங்கம் பார்ப்பேங்க.

அம்மா கையைப் பிடித்துக் கொண்டு சென்று வாருங்க
அழகாய்ப் பொருட்காட்சித் திடலை ரசித்து வாருங்க.


வெள்ளி, 30 டிசம்பர், 2016

தொட்டிச் செடி வளர்ப்போம்.

தொட்டிச் செடி வளர்ப்போம் :- (UNEDITED )

பட்டுரோஸை ரசிக்கலாம்.
புதினா வாசம் பார்க்கலாம்
துளசி இலைகள் எட்டிப் பார்க்கும்
தொட்டிச் செடி வளர்ப்போம்.

காய்கறிக் குப்பையைப் போட்டு
மண்புழு உரம் கொஞ்சம் போட்டு
செம்மண் கொட்டி விதை தூவ
குட்டித் தொட்டி போதும்.

காலை மாலை நீரூற்றி
காயும் வெய்யிலில் சிறிது வைத்து
கண்ணும் கருத்துமாய் கவனித்தால்
கொள்ளை அழகாய்ப் பூ பூக்கும்.

ரோஜாப்பூவு தலையாட்ட
சாமந்திப் பூவு சாமரம் வீச
சங்குப் பூவும் இதழ் சிரிக்க
ஜன்னலோரம் செடி வளர்ப்போம்.

காற்றை சுத்தம் செய்யும்
வீட்டை அழகாய் மாற்றும்
அம்மாவின் சமையலுக்குதவும்
அருமையான செடிகள் வளர்ப்போம்.


வியாழன், 29 டிசம்பர், 2016

கண்விழித்தெழுந்திடு பாப்பா :-

கண்விழித்தெழுந்திடு பாப்பா :- ( UNEDITED )

கண்விழித்தெழுந்திடு பாப்பா
 கன்னுக்குட்டியும் கால் எட்டித் துள்ளுது.
கோழிகுஞ்சும் துறுதுறுப்பாய் அலையுது.
துள்ளிக் குதித்தே பள்ளிக்குச் செல்ல
கண்விழித்தெழுந்திடு பாப்பா .

கணக்கு ஒன்றும் கடினம் இல்லை
ஆங்கிலம் அறவே அந்நியம் இல்லை
விஞ்ஞானம் என்றும் அஞ்ஞானம் போக்கும்
வரலாறும் உனக்கு  வாழ்க்கையை போதிக்கும்.
தமிழோ உனக்கு அமிழ்தமாய் இனிக்கும்

ஆசிரியர்கள் உனக்கு அருமையாய்க் கற்பிப்பர்.
அன்பான நண்பர்கள் காத்துக் கிடப்பர்.
அம்மாவும் உனக்கு அருதுணையாய் இருப்பார்
கண்ணை இறுக்கும் சோம்பலைக் களைந்திடு
கண்விழித்தேதான் பள்ளிக்குக் கிளம்பிடு.

புதன், 19 அக்டோபர், 2016

புத்தகத் திருவிழா போகலாம். :-


புத்தகத் திருவிழா போகலாம். :-

புத்தகத் திருவிழா போகலாம்
பொம்மைப்படப் புத்தகங்கள் வாங்கலாம்.
புதுப் புதுச் சேதிகள் கற்கலாம்
பரிசுப் பொருளாய்க் கொடுக்கலாம்.

பாட்டி சொன்ன கதைகள் இருக்கும்.

தாத்தா சொன்ன விடுகதை இருக்கும்

அக்கா போட்ட புதிர்க்கணக்கு இருக்கும்

அண்ணன் சொன்ன திகில்ப்படமிருக்கும்.

வாத்துக் கூட்டம் இல்ல நாம
ஒழுங்காய்க் கற்று வாசிக்கும் கூட்டம்
மடுவில் விழும் ஆட்டுமந்தை இல்ல நாம
மந்தம் போக்கும் அறிவுக் கூட்டம்.

நல்ல நல்ல புத்தகங்கள் வாங்குவோம்
நாடு நகரம் மக்கள் பத்தி வாசிப்போம்
நல்வழிப்படுத்தும் விஷயங்களை சுவாசிப்போம். 
புத்தகங்கள் நமக்கு என்றும் நல்ல நண்பனாம்

சனி, 6 ஆகஸ்ட், 2016

விடுமுறை விளையாட்டு :-

விடுமுறை விளையாட்டு :-

கூடிக் கைதட்டிப் பாடலாம்
கண்ணாமூச்சி ஆடலாம்
கபடி கபடி கபடின்னு
வளைஞ்சி நெளிச்சி ஓடலாம்.

வளையப் பந்து போடலாம்
கூடைப் பந்தை வீசலாம்
கால்பந்து கோலில் போடலாம்
கோ கோ என்றே துரத்தலாம்.

க்ரிக்கெட் மட்டையைத் தூக்கலாம்
க்ரவுண்ட் எல்லாம் சுற்றி ஓடலாம்
வீட்டுள்ளே முடங்கிக் கிடக்காம
விடுமுறையை விளையாடிக் களிக்கலாம்.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

வயல் கம்பளம். :-

வயல் கம்பளம். :-

மேகப்பஞ்சு அவிழுது
மழை நூலை உதிர்க்குது
நீர்ப்புடவை நெய்யுது
மின்னல் சரிகை சேர்க்குது
இடியும் தறிபோல் இடிக்குது
இருண்ட மேகம் வெளுக்குது
சூரியன் எட்டிப் பார்க்குது
வானவில் வண்ணம் அடிக்குது
வானம் வெள்ளரிச்சுப் போனது
வயல் பச்சைக் கம்பளம் ஆனது
நெய்து முடித்த களிப்பில் மேகம்
நிர்மலமா நகர்ந்து போகுது.

புதன், 3 ஆகஸ்ட், 2016

பரிட்சை ஒண்ணும் பூதம் இல்ல..

பரிட்சை ஒண்ணும் பூதம் இல்ல
படிச்சுப் போட்டா கவலை இல்ல
பிறகு படிக்கலாம்னு ஒத்திப்போடாதே
நேரம் பத்தலைன்னு விட்டுப்புடாதே.

திட்டம் போட்டு அட்டவணை போடு
தினமும் அதன்படி படிச்சுப் போடு
பக்கத் துணையா குறிப்புகள் எடு
பதட்டமில்லாம சொல்லிப் பாரு

ஒண்ணோடஒண்ணா வார்த்தையக் கோர்த்துக்கோ
ஒப்புரவா அதை மூளையில் சேர்த்துக்கோ
சந்தேகம் வந்தா சார்கிட்ட கேட்டுக்கோ
சஞ்சலமில்லாம சரளமா எழுதப்பழகிக்கோ

கேள்வித்தாள் ஒண்ணும் வேள்வித்தாள் இல்ல
சரியான பதில்களால எதிர்கொள்ளு புள்ள
நேரத்துக்குத் தூங்கி ஒழுங்கா சாப்பிட்டு
பரிட்சைக்குப் புறப்படு பதட்டமின்றி வெற்றி பெறு.


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

மிக நன்று :-

மிக நன்று :-

முள்ளில் ரோஜா மலருண்டு
சேற்றில் செந்தாமரையுண்டு
இருக்கும் இடத்தை வெறுக்காமல்
சிறப்பாய்ச் செய்தல் மிக நன்று.


குயிலின் பாட்டில் அழகுண்டு
காக்கையின் குரலில் பரிவுண்டு.
உருவைக் கண்டு எள்ளாமல்
உண்மை உணர்தல் மிக நன்று.

காடு இருந்தால் மழை உண்டு
கண்மாய் நிறைந்தால் நீர் உண்டு
காடு கண்மாய் அழிக்காமல்
கண்போல் காத்தல் மிக நன்று.

Related Posts Plugin for WordPress, Blogger...