எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 அக்டோபர், 2019

கொடுக்கு

ஈரத்துணிகளின் பின்புறம்
காத்திருக்கிறது ஒரு கருந்தேள்,
ஒரு பொன்வண்டு, ஒரு பட்டாம்பூச்சி.
விரல்களைப் பரிசோதிப்பதில்
ஒரு கொடுக்கைப் போல் இனிப்பதில்லை
ஒரு பொன்வண்டில் நழுவலும்,
ஒரு இறக்கையின் தடவலும்.

  

வெள்ளி, 25 அக்டோபர், 2019

கல்லா.

சாராயக்கடைகள் மூடப்படுவதேயில்லை
முதல்நாளோ மறுநாளோ
தங்கள் கல்லாவை நிறைத்துவிடுகின்றன
நோய்க்கூறு கொண்ட ஈரலோடு மனிதனையும்
மஞ்சள் கயிறு கொண்ட கழுத்தோடு மனைவியையும்
  

புதன், 23 அக்டோபர், 2019

சாட்சி

எழுத்துக்களை இழுத்துக்கொண்டு
முதுவேனில் எறும்புபோல்
வலைப்புற்றில் சேமிக்கிறேன்.
புத்தகக் கதவுகள் கொண்டு
இழுத்துமூடிக்கொள்கிறேன்
கரையான்கள் வரும்வரை
எறும்புத் தின்னிகள்
கைபட்டதும் கரைகிறோம்
கரையானும் நானும்
சேமித்த எழுத்துக்கள்
சிதறிக்கிடக்கின்றன
ஒரு வாழ்விருந்ததன் சாட்சியாய்
  

திங்கள், 14 அக்டோபர், 2019

இதழ் கள்

இப்படியாகத்தான் அது இருக்குமென்று
அதுவரை அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை
இதழிலிலிருந்து இதழ்வரை
இதமாகத் தாவி அமர்ந்து தேன் குடித்த
பட்டாம்பூச்சி மென்மையாக
இதழ் தட்டிப் பறந்தபோதுதான்
தெரிந்தது அது ஒரு முத்தமென்று.
சிறகின் ரேகைகள் வரி வரியாய்ப் படிந்த தடம்நீவி
ஆண்டுக்கணக்காய்த்
தேடிக்கொண்டிருக்கிறாள்
இன்னுமந்தப் பட்டாம்பூச்சியை.
  
Related Posts Plugin for WordPress, Blogger...