எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 டிசம்பர், 2012

அதிகப்படி..

அதிகப்படியான அன்பைப்
பொழிந்தேன் உன்மீது.
அதைத் தவிர வேறென்ன
தப்புண்டு என்மேல்,
அடுத்தவர்களிடம் ஒளித்துக் கொள்ள.

புதன், 26 டிசம்பர், 2012

சகஜதீபம்..

உருவத்திலிருந்து உருவமற்றதை
உருவமற்றதில் இருந்து உருவத்தை
உருவிக் கொண்டிருக்கிறீர்கள்.
உள்ளத்தின் உருவைப் பாருங்கள்.
உதடுகளில் வார்த்தைகளை
உருவாக்கிக் கொண்டேயிருக்கிறீர்கள்.
உள்ளன்பான வார்த்தைகள்
ஒன்றிரண்டே போதும்.
மறைந்திருக்கிற ஒன்றைத்
தேடிக் கொண்டேயிருக்கிறீர்கள்.
மனதுள் பாருங்கள்.
மறைத்ததெல்லாம் தெரியும்.
புத்தியில் அமர்ந்து
பயணித்துக் கொண்டேயிருக்கிறீர்கள்
இறங்கிக் கொஞ்சம்.
இதயத்துள்ளும் காலார நடங்கள்.
இரத்தம் தேக்கும் மதகல்ல மனது.
இறையெனும் இரையெடுங்கள்.
இன்பச்சுற்றுலாவாகும் வாழ்வு.
பயிற்சியால் முயற்சியால்
பலகாலம் வெல்கிறீர்கள்,
சகஜதீபத்தை ஏற்றுங்கள்
பரிபூரணமாகும் தேடல்.

செவ்வாய், 25 டிசம்பர், 2012

வீரம்

விட்டுக் கொடுத்தல்
கோழைகளின் செயலாம்..
சுயத்தைக் கொல்வது வீரமில்லையா..

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

நியாயவான்.

ஒருவனுடைய
தோல்வியின் வெற்றியை
சலிக்கச் சலிக்கக்
கொண்டாடியாயிற்று.

அர்த்த ராத்திரியிலும்
பட்டாசுச் சப்தங்கள்
அனைவரையும் எழுப்பிச்
சொல்லியாயிற்று.

திகட்டத் திகட்ட
இனிப்புகளை அள்ளி
இறைத்தாயிற்று.

துண்டைத் தலையில்போட்டு
மூலையில் அமர்ந்திருப்பதாக
அவனை கேலிச்சித்திரம்
வரைந்தாயிற்று.

அவனைப் பற்றிக்
கருத்துக் கணிப்பு
கேட்கப்படும்போது
நியாயமானவன் போல
நடித்தாயிற்று.

இன்னும் எத்தனை வருடம்
எதிரியாய் மனதுள்
பாவித்துக் கொண்டே
நட்போடு இருக்கவேண்டுமோ
என்ற சலிப்போடு.

மனச்சில்கள்.

மனச் சமநிலை குலைக்க
வரிசை ஏன்..?
மொத்தமாகக் கலைக்கவும்.
மறு அடுக்கீடு செய்யவேண்டும்
மனச் சில்களை.

நரிகள்..

இயலாமை நரிகள்
சந்தர்ப்பம் எதிர்நோக்கியிருக்கின்றன
வேங்கையின் உருவெடுத்துப் பாய்வதற்கு. 

வெள்ளி, 21 டிசம்பர், 2012

மெய்தேடல்

மெய் தேடலில்
அலட்டும் பொய்தேடல்
பிடிபட்டு ஒளிகிறது
மெய்விட்டு..

வியாழன், 20 டிசம்பர், 2012

கசியும் மார்கழி.

தன்னைத்தானே உண்டுவிட்டது
இன்னிசை..
கரையான்கள் புற்றாக
எங்கே படமெடுத்தது அபஸ்வரம்..
பனிப்புகையாய் கசிகிறது மார்கழி.

புதன், 19 டிசம்பர், 2012

ஈடு..

பூமியையும் மரத்தையும்
ரத்தத் துண்டாக்குகின்றன
கருங்கோடாலிகள்..
புறாக்கறிக்கீடாக சிபியும்
நரவதத்தில் சத்யபாமாவும்
நெறிகட்டிய நியாயத்தராசில்..

செவ்வாய், 18 டிசம்பர், 2012

யாயும் ஞாயும்

யாயும் ஞாயும். 
***********************

தீபங்கள் அசையும் தொட்டியாய் 
உலவித் திரிந்து உற்சாகமாக்குகின்றன
வண்ண மீன்கள்.
ஆண் உணவு தூவுகிறான்.
பெண் புழுக்களைத்தூவுகிறாள்.
அளவில்லாத உயிர்ப்புழுக்கள்
அலைகின்றன நீரெங்கும்
ஆணுக்கும் பெண்ணுக்குக்கும்
வார்த்தைகளின் சப்தத்தில்
யுத்தம் நிகழும்போதெல்லாம்
உணவுக் கசடுகளில்
மூச்சுவிட முடியாமல்
மரித்துப் போய்க்கிடக்கின்றன மீன்கள்
அலங்காரக் கற்களடியில்

அகோரி.

பிறைநிலவுச் சடைபிடிக்க
புலித்தோல் போர்த்திய பாம்பு.
வராகம் மண்கிளற
பொய்யுரைக்கிறது
தாழைமடல் பிடித்த அன்னம்
கங்கைக்குடம் சுமந்து
சுமை கடந்து செல்கிறான் சிவன்.
சாம்பல் பூசிக் கிடக்கிறது
மன அகோரி.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

புற்றுப்பைகள்.

கூடுதலும் பிரிதலுமான
உராய்வில் உருவாகும்
மின்சார சுகம் அற்பம்.
பிர சவங்களாக்குகின்றன
மொத்தமாய்...
வெடிக்கும் அபாயங்களோடு
புற்றைச் சூல்கொண்ட
அணுப்பைகள்

திங்கள், 10 டிசம்பர், 2012

என் கடவுள்.

என்னுடைய கடவுள்
என்னைவிட எளிமை .

செல்ஃப் என்னும் ஒற்றைமாடப்
புறாக்கூண்டாய் அவர் வீடும்.

உடுத்த ஒற்றையாடை
மேலும் கேட்பதில்லை
பிசுக்கானாலும்
துவைக்கும்படியும்.

இரத்த அழுத்தம்
இனிப்புநீர் இல்லை அவர்க்கு,
இருந்தும் என் பத்தியச் சாப்பாடே..

சம்பா, சாத்தமுது
விக்கிவிடக்கூடாதேயென
சிறிது தண்ணீர் படைப்பேன்.

சிறிய வாகனம்தான் அவரது.
வீணாக அடிபட்டு
வருந்த வைப்பதில்லை.

வயதாவதும்
நரைப்பதும் குறித்த
கவலைகள் அவர்க்கில்லை.

என்னை உயர்த்துவார் என நானும்
அவரை இன்னும் நல்ல இடத்தில்
வைத்துக் கொள்வேன் என அவரும்
காத்திருக்கிறோம்..

சனி, 8 டிசம்பர், 2012

நீதி.

கண்ணைமூடிக் கொண்டால்
தெரிவதில்லை
நீதித்தட்டின் நிறைகுறைகள்.

காதல் மட்டை

காதல் மழையில்
எல்லா மரங்களும்
ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்

ஒரு துளி காதல்.

இரும்பையும் செரித்து
இளைத்த துரும்பாக்குகிறது
ஒரு துளி காதல்.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

தேன்நஞ்சு.

சிறுகச் சேமித்த
அடையைப் பிழிய
அமிர்தம் திரண்டு
கண்டம் அடைத்தது
தேன்நஞ்சு.

வியாழன், 6 டிசம்பர், 2012

நட்பூங்கொத்து

நட்பை பூங்கொத்தாய் ஒளித்து
மறைத்து முன்போகிறாய்.
ஓரத்து இதழ்களையும்
சிந்தும் மகரந்தங்களையும்
சிதறும் தேன் துளிகளையும்
கை வழி சிதறிய
நீர்ச் சொட்டுக்களையும் பிடித்துத்
தேனீயாய்ப் பின் தொடர்கிறேன்
முழுவதும் காண..
லாவகமாய் நீ நகர நகர
இழுக்கிறது என்னை
நட்பின் நறுமணமும்
எப்போது தரப் போகிறாய்
என்ற எண்ணமும்.

புதன், 5 டிசம்பர், 2012

கருகிய வயல்

கருகிய சம்பாக்களோடு
மழையம்புப் படுக்கையில்
உத்தராயணக் காவிரியை
எதிர்நோக்கி வீழ்ந்து கிடக்கும் வயல்.

மனமீன்

மனமீன் கொத்த
மழை முள் குத்த
மூச்சுக் குமிழ்களுடன்
நைந்தோடுகிறது நதி.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

புயல்

ஒரு பூவை,
பறவையை,
மழையை,
குழந்தையை
ரசிப்பதைப் போன்றதல்ல
எதிர்பாராமல் எதிர்கொண்டுவரும்
ஒரு காற்றை ரசிப்பது.
திடுக்கிடும் அவள்
வீட்டுள் ஒளிந்து
பலகணிகளை
அடைக்க முயற்சிக்கிறாள்.
வீசும் காற்றோடு
தூறும் சாரல்
வெப்ப அறைக்குள்
கொஞ்சம் குளுமையைத்
தூவிச் செல்கிறது.
மூடப்பட்ட
வரவுக்கான பாதையில்
தன்னை இழந்த ஏக்கத்தோடு
சுற்றிச் சுழல்கிறது
காற்று.

திங்கள், 3 டிசம்பர், 2012

வானவில் பூ

மழைக்கிளைகளில்
மஞ்சள் மகரந்தம் சிதற
விரிகிறது வானவில் பூ ..

Related Posts Plugin for WordPress, Blogger...