எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 ஆகஸ்ட், 2013

கசப்புவேப்பந்தழையைக்

கொடுத்துவிட்டு

ஈரல் கசக்கிறதென்கிறார்கள்

உண்பவர்கள்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பத்தாயச் சுவர்

தானியமுடிச்சாய்
அவிழ்ந்து கிடக்கிறது
மனம்.
கட்டவும் முடியவும்
முடியாமல்.
கிடக்கட்டும்போ
முளைவிடட்டும்.
ஆம்பட்டும்.
அழுகட்டும்.
தீப்பிடித்துச்
சாம்பலாகட்டும்.
பத்தாயச் சுவரில்
ஒளிந்தது போதும்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

கைப்பிடி..

குருவிகள் கொத்திய
தான்யம் சிதறிக்கிடக்கிறது
முற்றமெங்கும்.
மரத்தொட்டியில்
சிறுமி ஊற்றிய நீரில்
சில மொதும்பிக் கிடக்கின்றன.
லேசாய்த் தூறும் தூறலில்
சில முளைவிட்டும்.
வெய்யிலும் காற்றும்
கூடமெங்கும் குளிர் அனலாய்
மாறி மாறி வீசுகிறது
தானிய மணத்தை.
அலகைத் தீட்டிக்
காத்திருக்கின்றன குருவிகள்
அடுத்த கைப்பிடி இறைக்காய்.

புதன், 28 ஆகஸ்ட், 2013

பூப்பதும் உதிர்வதும்.

இணைகள் ஒரே படகில்.
தனித்தனியான பயணம்.
சுவாசங்கள் பூப்பதும் உதிர்வதும்
வெவ்வேறு உலகங்களில்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மயில்தோகை

மழைத் தூறலில்
விரிகிறது மயில்தோகையாய்
வானவில்..

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

கன்னிச் செடி.கண்ணிச் செடிகளாய்ப்

புதைந்து கிடக்கின்றன.

கன்னி வெடிகள்.

வார்த்தைக்கால் தொட்டதும்

ரத்தப் பஞ்சுகளாய்

வெடித்துப் பறக்கின்றன.

அடக்கிவைக்கப்பட்ட

கோபம் வெளிப்பட..

அடக்கப்பட்ட 
எதையும் மிதிக்காமல்

செல்வது உத்தமம்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

மொழி,கடல்கோள் அழிக்கவில்லை

கடன்பெற்றே அழித்தோம்

அந்நிய மொழிப் புணர்வில்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

அவரவரிடமே.அட்சய பாத்திரமும்
அமிர்த கலசமும்
அவரவரிடமே

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

வேதம் புதிது.

வேதம் ஓதும்
சாத்தானைப் பிடித்திருந்தது..
வாழ்வின் ஆசைகளில்
நெருப்பை மூட்டுவததன் செயல்.
ஓடு,துரத்து, காமம் கொள்..
கிட்டாதாயின் தட்டிப்பறி..
நான் இப்படித்தான் எனச்
சாயம் அடித்துக் கொள்..
அண்டவிடாதே
அன்பெனக் கதறும் கிறுக்கர்களை..
உனக்கெனக் கட்டம்
கட்டியதை மீறு..
ரகசியங்களை அம்பலப்படுத்து.
முகமூடியையும்
கண்ணாடியையும் உடை.
பிம்பங்கள் சிதறி விழட்டும்..
பிடித்திருக்கிறது
பின்னொன்றாய்ப்
புதுப்பித்த சாத்தானை..
வேதம் புதிது..

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

பாசத்தின் வாசனை

சாம்பிராணிப் புகை
சந்தனச் சோப்பு
மஞ்சள் குங்குமம்
மல்லிகைப் பூ
மருதாணிச்சிவப்பு
மெட்டி சத்தம்
தாளித வாசனை
இதெல்லாம் இல்லாமலும்
அம்மாக்களுக்கென்று
தனி வாசனை உண்டு.
பாசத்தின் வாசனை..

இலையின் பெருவிரல் ரேகை.

மை ஒட்டும் தாளின்
நரம்போவியமாய்
சாலைக்காகிதத்தில்
அடித்துப் படிகிறது
இலையின்
பெருவிரல் ரேகை..
முதிய கிளைகளால்
வருடும் விருட்சம்
வான் விரித்து
இளம் தளிர்வேண்டி
பகீரதன் தவத்தில்.
பொழியும்
வெய்யில்துளிகளில்
கருப்பெருகிறது
இளைய கிளைகளின்
பொடிமுடிச்சிலிருந்து
சிறுவிரல் இலைகள்.

சனி, 3 ஆகஸ்ட், 2013

கீறல்உள்ளம் கீறி

உன்னைப் பொறிப்பதான வேகத்தில்

பல்சக்கரம் உருள

கன்றிய இதழ்களோடு

புன்முறுவலிக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...