எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

புத்தனின் புத்திமதிகள்.

சில சலனங்கள்
உற்பத்தியானபோது
சில பேருந்துகள்
தவறவிடப்பட்டபோது
சில வெள்ளைப்பூக்கள்
தூதனுப்பப்பட்டபோது
சில மாலை நேரங்கள்
காயப்பட்டபோது
சில கடற்கரை மணல்கள்
பயணம் புறப்பட்டபோது
சில முறைக்கும் பார்வைகள்
துரத்தியபோது
சில பரிசுப் பொருட்கள்
கைமாறியபோது
சில காஃபிகள்
ஆடை படர்ந்த போது
சில ஃபாமிலி ரூம்கள்
வாடகைக்கு எடுக்கப்பட்ட போது
சீறாத அவன்
சில நேரச் சலனங்களின்
உற்பத்தியின் விளைவைக் கேட்டபோது
சீறிப்பாய்ந்து
சிந்தனைத் தெளிவின்றி
புத்தனாய்ப் புத்திமதிகளை
எரிமலையாய்க் கொட்டிப் போனான்
சித்தம் கலங்காத அவள்கூடச்
சிதறித்தான் போனாள்.

ஆசை அறுமின் ஆசை அறுமின்..

-- 83 ஆம் வருட டைரி


வாடிப்போன சோகங்கள்.


கடந்துபோன கசப்பு நிஜங்கள்
எண்ணக் கசடுகளின் வெளிப்பாட்டில்
நிழலாடும் ஏக்கங்கள்

காணாமல் போன கரடி பொம்மை
கண்டெடுக்க கத்தும் குழந்தை மனம்

ஊமையழுகை
காணாமல் போன பொம்மைக்கோ
கடையில் பார்த்த பொம்மைக்கோ

ராமனுக்குக் காத்துக் கிடந்த
சீதையின்   தவிப்புச் சுவைகள்

இவையெல்லாம் இப்போது
செடியிலேயே சுருங்கி
என்னைப் பார்த்து விழிக்கும்
வாடிப்போன சோகங்கள்.

-- 82 ஆம் வருட டைரி

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

உறக்கம்.

காலைநேரக் கம்பங்கள்
கொடியுடன் கொஞ்சி உறவாட
மலர்க்கொத்துகள்
மந்தகாசப் புன்னகைக்க
சின்ன இலைகள்
சலசலத்துச் சிரிக்க
மனசின் இனிமை நினைவுபோல
ஒற்றைச் சுருள் நெற்றி அரங்கில் நர்த்தனமாட
அவள் நினைத்தாள்
சூரியன் தூங்கிவிட்டானோ

அவளின் கைபோல மனசும்
நினைவுப் பின்னலைப்
பிரித்துப் பிரித்துப்
பின்னி முடிந்தது.
மாலை நேரக் காற்றில்
மல்லிகை மணக்க
மதியம் வரை சஞ்சலித்த மனம்
சந்தோஷக் கும்மாளத்தில்
கும்மியடித்தபோது
சோலைக் காற்றில் பறந்துவந்த
சிவப்பு ரோஜாப்பூவிதழ் புலம்பியது.

என்ன பெண் இவள்
துயிலப் போய்விட்ட சூரியனை
இரவில் எதிர்பார்க்கிறாள்.
விடியாத இரவல்லவோ
இவளுக்குச் சொந்தமாகி விட்டது
எந்தத் தைரியத்தில் நான்
இவள் முன் வந்தேன்.என்று

-- ஒரு சிநேகிதிக்கு.

சில எல்லைக் கோடுகள்.

சந்திரனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இப்படியும் கூடவா ஒரு மனுஷி இருப்பாள். ஜடம், ஜடம், எனத் திட்டிக்கொண்டே இருந்தது மனது.

சனியன் எதையும் ஒரு ஆர்வத்தோட புன் சிரிப்போட ஒரு அக்கறையோட கேட்கத் தோணலையே,  எந்நேரம் பார்த்தாலும் என்ன திங்க வேண்டிக் கிடக்கு, திட்டினாலும் சுரணையத்தது.

நாக்குக்கு வக்கணையாத் திங்கத் தெரியுதுல்ல. அது போல வேலை செய்கையில மத்ததுல இருக்கத் தெரிய வேணாம்.  அசமந்தம் புடிச்ச அசிங்கமான குண்டு. அவள் எதிரிலேயே திட்டிக் கொண்டிருந்தான்.

பிறகு என்ன ? ஏதாவது அவன் ஆர்வத்துடன் கூறப்போக இவள் பாட்டுக்கு ஏதாவது இனிப்பை வாயில் அடக்கிக்கொண்டு இருந்தால்.,  அவன் கூட அவனுக்குச் சமமாய் ஒரு ஈடுபாட்டோடு அதைக்கேட்காமல் அல்லது ஊம் என்று கூடச் சொல்லாமல் இருந்தால் அவனுக்குக் கோவம் வராதா என்ன ?

அவன் திட்டிக் கொண்டிருந்தான். ஜடமே ஊமைப் பிசாசே உன்னைப் போய் என் தலையில் கட்டிட்டாங்களே. கோட்டானே உன்னைத் தொலைத்துத் தலைமுழுகிவிட்டுத்தான் மறு வேலை. பல்லைக் கடித்தான்

பதில் கூறாமல் இருக்கும் அவளுடன் இனிமேலும் பேசிக் கொண்டிருந்தால் தன் சட்டையைத்தானே கிழித்துக்கொண்டு விடுவோம் என்ற் உணர்ச்சி ஏற்பட்டதாலோ அல்லது இல்லாத வெறும் காற்றான இவளுடன் பேசிக் கொண்டிருந்தால் தான் தன் தன்மையிலிருந்து விலகி இவளுடைய களிமண்ணுத்தனமான குணம் இந்த அழுத்தம் தனக்கும் தொற்றிக் கொண்டு விடுமோவென்று பயந்ததாலோ என்னவோ சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டான்.

கோர்ட்டில் இவன் ஆவேசமாகக் கத்திக்கொண்டிருந்தான்.  நான் எதிர்பார்ப்பது மனைவி என்ற இயந்திரத்தை அல்ல இரத்தமும் சதையும் உணர்ச்சியும் கொண்ட ஒரு ஜீவனை. பரஸ்பரம் புரிந்துகொண்டு அனுசரித்தோ அல்லது அடக்கி நடத்தியோ செல்லும் ஒரு பெண்ணை, என் உணர்ச்சிகளை மதிப்பவளை !. இவளை இல்லையில்ல இந்த சதைப்பிண்டத்தை நான் வெறுக்கிறேன்.

இனிமேலும் இதன் கூட நான் வாழ்ந்தால் ஒன்று இதை நான் கொன்று விடுவேன். இல்லை நானே தற்கொலை செய்துகொண்டுவிடுவேன்.


-- உடனே மனைவி தரப்பு வக்கீல் வந்து இந்தப் பெண்ணுக்கு இந்த டிஸ்ஸார்டர் இருக்கு இதுனாலதான் இப்பிடி .என்று சொல்றார். அதக் குணப்படுத்திடலாம். கவுன்சிலிங்க் செய்யலாம் என்று  நீதிபதி கொஞ்ச கால அவகாசம் அளிக்கிறார்..

-- இப்பிடி ஒரு கதையை எதுக்கு எழுதினேன்னு தெரில.. ஆனா 1982 இல் எழுதியது.. அப்பாடா இதை இத்தோட விட்ருவோம். :)

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

பேரின்பம்.இறைவன்  படைப்பினில் 
எதுவுமே இன்பம். 
குட்டிப் பாதத்தால் 
தட்டுத் தடுமாறி வரும் 
குழந்தை இன்பம். 
மக்களை 
மிருகக்காட்சி சாலையின் 
கூண்டுகளாட்டம் அடைத்துச் செல்லும் 
புகைஇரதத்தின் 
வளைந்த நடை இன்பம். 
ரோஜாவில் மிதக்கும் 
காலைநேரப் பனித்துளி இன்பம். 
கடலுடன் சங்கமிக்கும் கதிரவன் 
காட்சி இன்பம். 
நம் துன்பத்தில் 
கடவுள் கைகொடுத்து உதவுகின்றானே 
அது பேரின்பம்.

மழை.

தண்ணீருக்குப் பஞ்சமாம் இங்கே
கண்ணீருக்கல்ல
மனவடிச் சுரங்கங்களில்
அன்புத் தங்கத்தைச்
சுரண்டிச் சுரண்டி
இப்போது மிஞ்சியது
விரக்தி மட்டுமே
ஆமையாய்
எண்ண ஓட்டுக்குள் சுருங்கி
ஒடுங்கி, சுகமறுத்து
இப்போது சுரணையற்றுவிட்டது மனது;
 இதற்குத் தேவை
ஆறுதல் பேச்சுக்களல்ல
 நரகாசுரன் கூட
அறத்திற்குப் பயந்து
அடிபணிந்துவிட்டான்
இந்தக் கலியுக
நரகாசுரர்களை ஒழிக்க
ஆரம்பித்தால்
வருடம்தோறும் தீபாவளிதான்.

இந்தப் பெண்கள் எப்போதும்
வானத்தைப் பார்த்து
வாடும் பயிர்கள்தானோ
யார் கண்டது
நாளையே மழை வராதா
பயிர் செழிக்காதா
என்ற நப்பாசைதான்
எம்மைப் போன்ற சிலரின்
கவியாசையைப் பூர்த்திக்கின்றது.

-- ஜன 84 சிப்பியில் வெளிவந்தது. 

புதன், 24 செப்டம்பர், 2014

அழகின் சிரிப்பு

ஆசு கவிகளுக்கு இது
அழகான தலைப்பு

நேச உள்ளங்களுக்கு இது
அவஸ்தைச் சிரிப்பு

ஈழத்தில் நம் இதயங்கள்
துண்டாடப்படும்போது
இது அழகின் சிரிப்பல்ல

வேஷ மனிதர்கள் உறவாடும்போது
இது மோசச் சிரிப்பு .

இளங்குருத்துக்கள்
கருகிக்கிடக்கும்போது
இளஞ் சிரிப்பெங்கே பூக்கும்

வாழைக் குருத்துக்கள்
குருதி கொட்டும்போது
வளமான சிரிப்பா பூக்கும்

தாழை மடல்கள்
வேருடன் சாயும்போது
இது அக்கினிச் சிரிப்பு

காளைச் செல்வங்கள்
தடுமாறும்போது
தடம் மாறும்போது
இது நாசச் சிரிப்பு.

-- 82 ஆம் வருட டைரி.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

மெழுகுவர்த்தியேமெழுகுவர்த்தியே

நீ ஏன் அக்கினிப் ப்ரவேசம் செய்கிறாய்
ஈழத்து வனவாசத்தில்
இறந்துபட்ட சீதைகளுக்குக்
கண்ணீர் அஞ்சலியோ

மாற்றங்கள்.எனக்கு இப்போது ஏமாற்றங்கள்
பழகிவிட்டன
என் மாற்றத்தைக் கண்டு
என்னை ஏமாற்றமுடியவில்லையே
என்று ஏமாற்றத்துக்கே
பெரும் ஏமாற்றமாய்ப் போய்
அது தன்னையே மாற்றிக்கொண்டுவிட்டது
இல்லை
தன்னையே ஏமாற்றிக்கொண்டு விட்டது.

-- 83 ஆம் வருட டைரி. 


உனக்காக ஒரு இதயம்:-உனக்காக ஒரு இதயம்:-

நீ மரவள்ளிக் கிழங்கைத்
தணலிலிட்டுப் பொசுக்குகையிலே
என் உள்ளமும் பொசுங்கிப் போகின்றது.
இப்படித்தானே இலங்கையிலும்
இந்தியாவின் இளங்குருத்துக்கள்
சாம்பலாகிக் கிடக்கின்றனவென்று.
இதயம் சீழ்பிடித்து
பேப்பர் ஓடைகளில்
பேனாப் பூக்கள்
இரத்தப் புன்னகையைக்
கசியவிட்டு மடிகின்றன.

-- 83 ஆம் வருட டைரி. 

நிழல்கள்வானம் பாடி கானம்
வந்து போகும் நேரம்
மனக்குளத்தில்
மண்ணெடுப்பு
தெருவோரக் கிணற்றில்
நீரெடுப்பு உற்சவம்
சொந்த பந்தங்கள்
சுட்டெரிக்கும்போதுதான்
இரவல் உறவுகள்
இதமளிக்கின்றன.
நனவுலக நிஜங்களின்
நிழல்களில் பயமுறுத்தல்

-- 83 ஆம் வருட டைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...