எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

சுகமான சுமை.

இரட்டைச்சடை கொண்ட
பட்டாம்பூச்சிகள் முதுகில்
இறக்கைகளாய்
பள்ளிக்கூடப்பைகள்..
சுமையா..சுகமா.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

விட்டேற்றி.

நேசிக்காத ஒன்றை
நேசிப்பதிலேயே
நாட்கள் கடந்து விடுகின்றன.
ஒவ்வொரு முறையும்
விநோதமாகவே
சந்தித்துக் கொள்கிறோம்
நானும் நேசமும்.
நான் விட்டேற்றியாகிவிடும்போதெல்லாம்
குழம்பிக் குழம்பித்
தவிக்கிறது அது
என் பிடியில் இருந்து விடுபட்டு.

காத்திருந்த கொக்கு

துள்ளிய பார்வைமீனைக்கொத்தியபடி
காதலோடு பறக்கிறது
ஒற்றைப்பார்(ற)வை

வியாழன், 27 செப்டம்பர், 2012

சேறு

மழைக் குழந்தை
மண்ணில் தவழ்ந்தது.,
சேறானது.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அடங்கிய வீடு

அடுக்கிய ஓடுகளின் கீழ்
அடைபட்ட செங்கல்களுக்குள்
அடங்கிக் கிடக்கிறது வீடு..

திங்கள், 24 செப்டம்பர், 2012

சமர் வீழும் அம்புகள்.

விஷக்காற்றோடு நீளும்
பாம்பின் நாவு
உண்கிறது என்னை..
இறக்கை முளைத்த
ட்ராகனாய் நானும்
நெருப்புமிழத் துவங்குகிறேன்.
தொலைக்காட்சிப்
புராணத் தொடரின்
சமர் வீழும் அம்புகளாய்
தொய்ந்து கிடக்கின்றன
நமதான உடல்கள்.
விஷமும் நெருப்பும்
சிரசின் மேலேறி
செந்நிற ஒளியேற்றுகிறது
நம்முகங்களை.

வேர்

விதையாய் இருந்தபோது
தெரியவில்லை..
வேரும் கிளைகளும்
வெவ்வேறு இடங்களாகும் என்று,

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வெட்க மாலை.

வெட்கத்தின் இதழ்களைக் கோர்த்து
மாலையாக்கி அணிவிக்கிறேன் .
கழுத்தைத் தொட்ட கூச்சத்தில்
அவை காலடியில் உதிர்ந்து
ஒளியத் தவிக்கின்றன.

வியாழன், 20 செப்டம்பர், 2012

உறைந்த கடவுள்.

வளர இருபது வருடம்,
வளர்க்க இருபது வருடம்,
கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே..
கொத்தடிமைகளின் கடவுள்
படைக்கப்படும் இனிப்புகளை
உண்ட எறும்போடு
உயிரற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்
செல்ஃபுகளில் உறைந்து

புதன், 19 செப்டம்பர், 2012

குழந்தை மொழி

தாமிழி, தென் பிராமி,
பிராகிருதம் உருவற்றுப் போயின
ஆதிகாலம் பிடித்து
உருக்குலையாமல் தொடர்கிறது
குழந்தை மொழி
உன் குரலில்.

திங்கள், 17 செப்டம்பர், 2012

சிவப்பு

புது நிறத்துக்காரியின் கன்னத்தை
களையாக்குகிறது நாணம்,
காதல் சிவப்பால்.

மிச்சம்.

தன்னுடையதென்றே தோன்றுகிறது
அபகரிக்கப்படும் வரையிலோ
விட்டுச் செல்லும் வரையிலோ.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஆப்பிள் தோட்டங்களும் பாம்புகளும்.

நோவாவின் கப்பலில்
எனக்கான இடம் கேட்டு
விண்ணப்பித்திருந்தேன்.
ஒற்றை ஏவாளுக்கே
இடமுண்டென சொல்லப்பட்டது,
ஆப்பிள் தோட்டங்களும் பாம்புகளும்
ஏவாள்களுக்கானவை எனக் கூறிய
ஆதாம் ஆலிலையில்
குழந்தையாகி இருந்தான்.
ஆப்பிள் தோட்டத்தில்
புல்லாங்குழலாய் ஒலித்து
துளைபட்ட மூங்கிலாகிக்
கிடந்தாள் ராதை

வியாழன், 13 செப்டம்பர், 2012

தலை நிற்றல்.

தலை நிற்கவில்லை
கழுத்து ஆடிய கைக்குழந்தைக்கு.
தலையாட்டிக் கொண்டிருந்தார்
கழுத்து ஆடிய தாத்தா.
தலை கழுத்தில் நிற்கவில்லை
என்கிறார்கள் தற்பெருமைக்காரர்களுக்கு.
பிறப்பிலும் , பெருமையிலும்
இறப்பிலும் தலை நிற்பதில்லைதான்.,
தாயையே உதைத்து வெளிவந்தவர்களுக்கு

புதன், 12 செப்டம்பர், 2012

பிச்சை

யாசகம் கொடுப்பவர்களும்
யாசிக்கிறார்கள்..
அன்புப் பிச்சை..

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

வேர்.

வேர் பிடித்துக் கிடக்கிறது காதல்
சுவரைக் கெல்லி என்ன
அஸ்திவாரத்தைத் துருவு.

வியாழன், 6 செப்டம்பர், 2012

செல்லப்பிராணி..

நாய்களைக் காதலிப்பவர்கள்
பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்களோடு
அவர்களது உறவு முரணாகும்போது
சங்கிலியைக் கையில் மாட்டி
வேறொரு உலகத்துக்கு
இட்டுச் செல்கின்றன.
உருவாக்கப் புன்னகையில்லாமல்
ஓடிவந்து கன்னம் நக்குகின்றன.
வாலை வளைத்து இழைத்தபடி..
அவற்றின் பற்களோ நகங்களோ
கீறினாலும் நிறுத்தமுடியாத ரத்தம்
பெருகிக்கொண்டே இருப்பதில்லை.
முடிகள் சுவாசக்கோளாறு
உண்டாக்கினாலும்
சுவாசமே கோளாறாவதில்லை.
சில எலும்புத் துண்டுகள்
அல்லது பந்து போதும்
அவற்றுக்கு நிறைவளிக்க.
மூத்திரம் பெய்யவும்
மலம் கழிக்கவும்
வெளியே ஓடும் நாய்
அசுத்தப்படுத்துவதில்லை வார்த்தைகளால்.
மனிதர்களுடன் பேசுவதைவிட
குரைப்பொலிகளுடன் உரையாடுவது
இலகுவாய் இருப்பதால்
நாய்களோடு வாழ்பவர்கள்
பெருகிக் கொண்டிருக்கிறார்கள்

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

நிலவு..

நிலவாய் எழும்புகிறது
உன் நினைவு
எப்படி மறைப்பது
எல்லார் பார்வையிலிருந்தும்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

மல்லிகை

புழுங்கிப் புழுங்கி
மணக்கிறது
மல்லிகை.
Related Posts Plugin for WordPress, Blogger...