எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 டிசம்பர், 2018

அந்தகாரத்தில் சாமி.

இருண்மையான உலகத்துள்
அடைத்து வைத்திருக்கிறோம்
எமது ஈசன்களை.
நாம் தரும் சிறுவெளிச்சமே
போதுமானதென்று நினைக்கிறோம்.
உணவுப் பொருட்களைக் கொட்டி
அபிஷேகமென்கிறோம்.
விட்டுப் போனவற்றை
யாக குண்டத்திலும்.
பூக்கள் மேல் பூக்கள் சாற்றி
மூச்சுத் திணற அடிக்கிறோம்.
களிம்பு பீடம் சுற்றுகின்றன
கரப்பான்கள்.
பணக்காரச் சாமியென்று
வைர க்ரீடம் ஏற்றுகிறோம்.
உண்டியல் கொள்ளாப் பணத்துடன்
மேலெறியப்பட்ட கோரிக்கைகளை
கவனம் கொண்டு மோனத்திலாழ்ந்து
அந்தகாரத்தில் தனித்திருக்கிறார் சாமி.
  

வியாழன், 27 டிசம்பர், 2018

செந்நிறச் சர்ப்பம்.

பசுமை தோய்ந்த மலையில்
ஒரு நீலப்பூ பூத்திருக்கிறது.
மஞ்சள் பறவை ஒன்று
சிகப்பு அலகில்
வெள்ளை மகரந்தம்
தோயப் பறக்கிறது.
அரக்கு மலையில்
சாம்பல் நிறச் சாலைகள்
வழிந்து விழுகின்றன.
வானவில் வண்ணங்களில்
கொழுப்பு சுமந்த இறைச்சிகள்
திமில்களுடனும் குளம்புகளுடனும்
அசைந்தோடுகின்றன.
பருந்துப் பார்வையில்
செந்நிறச் சர்ப்பமொன்றைத்
தேர்ந்தெடுத்திருக்கிறாய்.
சீறித்தப்பிக்க விரும்பா அதுவும்
உன்னைச் சுற்றத் தொடங்குகிறது.
  

தீபாவளி.

எட்டுமணிப் பட்டாசுக் கூச்சலில்
நிரம்பிக் கிடக்கின்றன தெருக்கள்.
பட்சணக் கடைகளைவிட
பிரியாணிக் கடைகள் அதிகம்.
பாப்ளின் பாவாடைகளும்
ஜப்லா ஜாக்கெட்டுகளும்
டார்பாலின் கீழ் உருவமாய் அசைகின்றன.
நகரும் வெளிச்ச முகத்தோடு நடனமாடுகின்றன
அங்காடிகளும் காவல் ஊர்திகளும்.
குஸ்கா தேக்ஸாக்களோடு
குடைக்கம்பி பிடித்துக் காத்திருக்கிறார்கள் வியாபாரிகள்.
நாலு பேருக்கு நல்லது செய்ய
நமனிடம் பிணையாகியிருக்கிறான் நரகாசுரன்.
தெறித்துத் தெறித்துப் பயமுறுத்தும்
மழைக்குமுன் தீபாவளி வந்துவிடுதல் நலம்.

புதன், 19 டிசம்பர், 2018

ஒரு துளிப் புல்.

பாறைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது
தவழ்ந்து கிடக்கும் அம்மலை.
எங்கும் ஏதும் நிற்கவோ நடக்கவோ
கிடக்கவோ இடமில்லை அதன் மீது.
வழு வழுத் திட்பமாய்
காற்றைக் கூடத் தள்ளி விடுகிறது அது.
வெய்யில் மழை வேண்டா விருந்தாளிகள்.
பனி அணைத்த விடியலில் ஈரம் மினுமினுக்கும்.
எதன்மீதும் அதற்கு வெறுப்பில்லை
எதிர்ப்பில்லை பொருட்டில்லையெனினும்
அதனைப் பொருட்படுத்தி அண்டி
இடுவலான ஈரத்தில்
உயிரைப் பிடித்துப்
பிணைந்தாடிக் கொண்டிருக்கிறது
ஒரு துளிப் புல்.
  

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

நிரம்பித் ததும்பும் கானகம்.

அதிகம் பேசாதேயென்கிறாய்
பேச்சைத் தவிர என்னிடம்
வேறு நூலேணியில்லை.
அதைப் பிடித்து என் உப்பரிகையில்
நுழைந்த ராஜகுமாரன் நீ.
உள் நுழைந்ததும்
சுருட்டி வைத்துவிட்டாய்
எனதான ஏணிகளை.
அந்தப்புரத் திரைச்சீலைகள்
குளிர்ந்து கிடக்கின்றன.
என் மாடமாளிகையும்
கூடகோபுரமும் வெய்யில்படாமல்
இறுகிக் கருகி.
எங்கோ தூரத்து அகழியில்
முதலைச் சத்தம்.
காற்று மரங்கள் வழி
பழ வாசனையைக் கொணர்கிறது.
ஒளித்துவைத்த நூலேணியின்
ஒரு இழையாவது தேடுகிறேன்.
பசி தீர்க்கப் பழமரம் அழைக்கிறது.
பேச்சற்ற போதில் பறக்கவோ
குதிக்கவோ தயாராகிறேன்.
கடும்பசியில் இருக்கும்
முதலைக்கு உணவாகிறேன்
அல்லது கானகம் பார்த்துவருகிறேன்.
சிறிது வெய்யில் வேண்டுமெனக்கு.
தூக்கி வீசிவிடு என்னை நூலேணியோடு.
என் சில்வண்டுக்குரல்களால்
நிரம்பித் ததும்பட்டும் கானகம்.
  

செவ்வாய், 4 டிசம்பர், 2018

கீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-

கீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-

முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோக்கமே ஒரு மனிதனின் உபகார குணத்தையும், கிறித்துவக் கம்யூனிசத்தையும் விளக்குவதற்காகத்தான். மேலும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வூட்டவும் பயன்படுத்துகின்றார்.

“ பிள்ளையப் பெத்தா கண்ணீரு
தென்னயப் பெத்தா இளநீரு “ என்ற வரிகளைப் போலப் பிள்ளைகள் கூடப் பெற்றோருக்கு உதவாத நிலையில் வேதமணி வாத்தியார் ஊசியிலிருந்து கப்பல் வரையிலான எல்லாப் பொருள்களையும் கொடுத்து உதவுகின்றார்.

“துன்பங்களின் சுயதரிசனங்களில்
துணைகளும் மாரீசமான்களே “ என்ற புதுக்கவிதைப்படி இல்லாமல் வேதமணி வாத்தியார்  உபகார சிந்தையுள்ளவராக, ஒவ்வொரு நேரமும் நொடித்துவிடும் இரட்டை மாட்டு வண்டியை, மாட்டைத் ( முத்தையா குடும்பத்தை ) தூக்கிவிடும் உபகாரராகவே உருவாக்கப்பட்டுள்ளார். அவர் இந்நாவலில் உருவாக்கப்பட்ட நோக்கத்தைச் சிறிது இவண் ஆராய்வோம்.

பொருளுரை:- முத்தையாவின் குடும்பம் நடுத்தரக் குடும்பம். அதன் வீழ்ச்சிகளில் ஒவ்வொரு நிலையிலும் அருகிருந்து ஆறுதல் அளிக்கும் ஆதர்ஷ புருஷனாக வேதமணி வாத்தியார் சித்தரிக்கப்படுகின்றார்.

பாத்திர உருவாக்கத்திற்கான காரணம். :-

ஆசிரியர் தாம் கூறும் முறைப்படிப் பார்த்தால், செல்லையா பொது நலத்திற்கும், துரை சுயநலத்திற்கும் பலியான பின்பு, எஞ்சியிருக்கும் இரு பெண் மகவும் பாரமான பின்பு, முத்தையாவைச் சரிப்படுத்த, ஆறுதலளிக்க ஒரு ஆள் தேவை. அது சாமுவேல் நாட்டையாரால் இயலாது என நினைத்திருக்கலாம் ஆசிரியர். மேலும் வேதமணியும், முத்தையாவும் நெருங்கிய நண்பர்கள். வேதமணியின் வாதத்தைக் கேட்டுத்தான் முத்தையாவே தன் மூத்த மகனின் கொள்கையில் நம்பிக்கை வைக்கின்றார். அவனை ஏற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார்.

கிறித்துவக் கம்யூனிசம் :-

வேதமணியின் கிறித்துவக் கம்யூனிசக் கொள்கைகள் சிறப்பானவை. இக்கதையில் கிறித்தவத்தையும், சமுதாயத்தையும் இணைத்து ஒன்றாக்கி கிறித்துவ கம்யூனிசச் சமுதாயமாக மாற்றினால் நலம் பயக்கும் என்பதை விளக்கவும், கம்யூனிசம் கிறித்தவத்திற்கு எதிரி அல்ல என்பதை விளக்கவும், இவரின் பாத்திரம் பயன்படுகின்றது.

ஆசிரியரின் ஒரு பாகம் :-

மேலும் இப்பாத்திரம் ஆசிரியர் தன்னில் ஒரு பகுதியை விளக்கப் படைத்தது போலவும் தோன்றுகிறது. இவர் தம் முன்னுரையில் கிறித்துவத்துக்குக் கம்யூனிசம் எதிரி அல்ல என்று கூறுவதன் மூலம் மேலும் கிறித்துவக் கம்யூனிசம் கொண்ட ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்பதை இவர் தன் நாவலில் பல இடங்களில் குறிப்பிடுவதன் மூலமும், வேதமணி, சாமுவேல், செல்லப்பா ஆகிய மூவர் மூலமும் இக்கருத்துத் தெற்றென விளங்குகின்றது.

பல இடங்களில் முத்தையாவுக்கு ஆறுதல் கூறுமிடங்களிலும் ஹார்லிக்ஸ் அமிர்தாஞ்சன் குப்பி முதல் பெண்ணின் திருமணத்தை முடித்து வைப்பது வரையிலும் இவர் முன்னின்று செய்வது,  நொடித்துப் போன குடும்பத்திற்கு இவர் முன்னின்று முதுகெலும்பாக உதவுவது, புலவர்கள் தாம் புகழ்ந்து பாடும் வள்ளல் வறுமையுற்றவனாய் ஆனாலும் பெருஞ்செல்வம் படைத்த உலோபியிடம் செல்லாமல் வறுமையுற்ற அள்ளி வழங்கும் வள்ளல் குணத்தை உடையவனிடமே வருவார்களாம். அதுபோல் உள்ளது.

விழிப்புணர்வுத் தூண்டல்:-

விழிப்புணர்வைத் தூண்டவும் இவரின் பாத்திரம் பயன்படுகின்றது. ஆசிரியர் தான் புகுத்த நினைக்கும் விழிப்புணர்வை வேதமணியின் சிந்தனை ஓட்டங்களிலும், சொல்வன்மையிலும் வெளிக் கொணருகின்றார். கம்யூனிசம் மதத்துக்கு எதிரானது அல்ல என்பதை அப்பாவிடம் ( வாசகர்களிடம் ) வலியுறுத்துவதும், அடிமை மக்கள் தங்கள் அடிமைப்படுத்தப்படுகின்றோம் என்பதை உணர்ந்து , திருந்தி, அடிமைப்படுத்துபவனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றார்.

முடிவுரை:-


இவ்வாறு வேதமணி கீறல்கள் நாவலில் ஆலோசகராக, உபகாரராக, புதிய சிந்தனை ஓட்டங்களின் புதல்வராக, அகிம்சாவாதியாய, அமைதி வழியில் ஆணவத்தை ஒடுக்க விரும்பும் மிதவாதியாக, மதத்தையும், சமுதாயத்தையும் இணைக்க ஒரு கருவியாக, பழமையையும் புதுமையையும் சரிப்படுத்த ஒரு பாலமாக உருவாக்கப்பட்டிருக்கின்றார். அவர் இவ்வாறு உருவாக்கப்பட்டது இந்நூலில் ஆசிரியர் தான் கூற விரும்பிய எண்ணவோட்டங்களைப் பிரதிபலிக்க, தான் கூற விரும்பிய கருத்துக்களைத் தெளிவான, அமைதியான முறையில் விவரிக்க, ஆசிரியரான வேதமணியைப் பயன்படுத்தியுள்ளார். 

சனி, 1 டிசம்பர், 2018

டீச் பண்ணுகிறார்களா அன்றி டீஸ் செய்கிறாயா :)

19. 6.85.

அன்பிற்கினிய மதூ,

நலம். நலமறிந்த மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். !

முகமறியா நட்பாய் முகிழ்த்து, வேர்க்கால் பரப்பிய ஸ்நேகக் கைகுலுக்கலில் குடும்ப உறவுகளையும் அறிமுகப்படுத்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி தோழீ !.

வண்ணப் பூக்களோடும், பிஞ்சு மழலைகளோடும் எனக்கும் நிறைய பரிச்சயமுண்டு – உன்னைப் போல் !. என் வீட்டில் குடியிருக்கும் ஆசிரியர் ஒருவரின் சின்னப் பெண் அருணா – ஒன்றரை வயது – அவளோடுதான் என் பொழுதுபோக்கு. செல்லமாய் ’ஜிக்கு’.  

முத்தக்காவை நான் கேட்டதாகச் சொல்லேன் ! அவர்கள் என்ன டிகிரி முடித்துவிட்டு வீட்டிலுள்ளார்களா ? அவர்களின் திருமணம் எப்போது ? இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ? ( வற்றல் மிளகாய் காய வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ) வீடு முழுக்க பிள்ளைகள் மயமாய் வீற்றிருப்பாய். காலப் பறவையும் கடிதே சிறகை அசைத்துப் போகும். !

டைப் ரைட்டிங் ஹையர் எக்ஸாம் எழுதப் போகிறாய். தம்பிகளிருவரும் லோயரா ? இன்ஸ்டிட்யூட் பேர் என்ன ? இன்ஸ்ட்ரக்டர் எப்படி ? நன்றாக டீச் பண்ணுகிறார்களா ? அன்றி நீ டீஸ் செய்கிறாயா ?

ஹிந்தி வகுப்பு எப்போதிருந்து ஆரம்பம் ? வீணை கத்துக்க வேண்டியதுதானே ? நான் கூட வயலின் கத்துக்கலாமென்று யோசிப்பில் ! ஆனால் டைம்தான் போதமாட்டேங்குது. ஷார்ட் ஹேண்ட் க்ளாஸ், எம் ஏ ந்னு நேரம் அதுக்கே சரியா போறது.

உனக்கென்னப்பா ! ஜாலியா வீட்ல உட்கார்ந்து புஸ்தகத்தைப் புரட்டியபடி, கவிதை எழுதிட்டு, ஃப்ரெண்ட்ஸுக்கு எல்லாம் லெட்டர் போட்டுட்டு, ஃப்ரீயா இருப்பே ! பொழுது போக்குறதுக்கு குட்டிங்களும் முத்துவைப் போன்ற ஸிஸ்டர்ஸும்.!

உனக்கு அக்டோபருக்குள் மூன்று முடிச்சு என்று எழுதியிருந்தாயே ! மணாளன் யார் ? அதையேன் எழுதல. எனக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்பதாலா ?

பர்த்டேக்காக இன்று ட்ரெஸ் வாங்கினேன்.

ஃபாத்திமாவிலேயே எம் ஏ தமிழ் பண்ணப் போறதா எழுதினேயே. ஏன் பண்ணல. கரஸ்பாண்டண்ட்ல எம் ஏ பண்ண உத்தேசமா ?  அல்லது பி எல் அல்லது எனி அதர் பிஜி கோர்ஸ் .

நிஜமாய் அரும்பின எதுவுமே அழிவதில்லை. உருமாறிப் போனாலும் உண்மைகள் மாறுவதில்லை. ஸ்நேகமும் அப்படித்தான்.

வீட்டில் எல்லாரையும் கேட்டதாக விளம்பு.

கவிதைகள் படித்தேன். சுவைத்”தேன்”.

அற்புதம். மீதி உன் லெட்டர் பார்த்து.


என்றென்றும் அன்புடன் மனோ. 
  
Related Posts Plugin for WordPress, Blogger...