எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஏப்ரல், 2015

சிறைப்பறவைகள்.



மனிதர்கள்
மனிதர்கள்.

பட்டறையின் அண்டாக்களாய்
சுத்தியல் அடி தின்று
காற்றுக்கு ஒலிஅடி கொடுக்கும்
பட்டறையின் அண்டாக்களாய்

தானும் பிழிபட்டு
தானும் கிழிபட்டு
தண்ணீரையும் பாழாக்கும் துணிகளாய்

நமத்துக் கிழிபடும் சாக்காய்
ஒளிச்சகதியில் விண்கற்களாய்

சூரியப்பயிருக்குள் களைத் தாவரங்களாய்
சேணம்மாட்டிய க்ரகக் குதிரைகளாய்

ஒரே கூண்டில் உழன்று திரியும்
சிறைப்பறவைகள்.

--1986 ஆம் வருட டைரி. 

நிகழ்வுகள்



நிகழ்வுகள்

பறவைகள்
அந்நிய தேசங்கள்போய்க்
கூடுகள் தேடும்.
நகங்களை சிலாகிக்கும்.
ஏமாந்து
பார்வைக் கூடுகளுக்குள்
ஸ்நேகமுட்டை இடும்.,
கூடாய் வாங்கிக்க்கொள்ளும்.
சந்தோஷ வெப்பத்தில்
தெரியாமல் புகுந்துவிட்ட
குயில்முட்டையையும்
சேர்த்துப் ப்ரஸவிக்கும்
தீய்ச்சல் தெரியாமல்
உள்வாங்கித்
தேய்ந்துபோகும்.


-- 84 ஆம் வருட டைரி. 


சனி, 25 ஏப்ரல், 2015

கடற்கரை சாலை

தடங் தடங் வாய் ஓரம் நுரைப்புகள். இருட்டு ஓட்டம் ஒரே ஓட்டம். பாத நுனிகள் பிடறியில் பட்டது.  திரும்பிப் பார்க்க பயம். கண்ணை இறுக்க மூடிக்கொண்டு ஓட எதிரே எரிந்த விளக்கு இமையில் வெளிச்சம் போட கண்  திறந்தாள்.

கடற்கரைச் சாலை . பதட்டம் தீரவில்லை. ஒட்டகம் போல் கால் புதையப் புதைய வேக நடை.

மச்சான் விளக்கை அணைச்சிரு தொடர்ந்து கலகலவெனச் சிரிப்பலைகள் பக்கத்துக் குடிசையிலிருந்து வெளிப்பட்டதோ இல்லையோ மறுபடியும் பேயடித்தது போல் ஓடினாள். மண்ணை கால்களால் அளந்து கொண்டிருந்த பணக்காரக் கிழக் கால்கள் நிதானித்து பயந்து இவளுக்கு வழிவிட்டன.

அவளுக்கு இருட்டு என்றாலே பயம் . பயம்  மனசு பூரா பயம். மூச்சு இறைத்தது. வானம் தன் நைட் ட்ரஸைக் களைந்து கொண்டிருந்தது. முடிக்கற்றைகள் காற்றில் பறந்து முகத்தில் அறைந்தன.

கருப்பாய் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்க இவள் அதிர்ந்துபோய் வீறிட்டலறிக்கொண்டு திரும்பவும் வந்த வழியே திரும்பி ஓடி வர காகங்கள் விடியல் இருளிலும் பூவாவுக்குக் கத்திக் கொண்டிருந்தன. பால்பாக்கெட்டுகள் உடைக்கப்பட்டு பாத்திரங்களில் ஊற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

மெட்ரோ வாட்டர் சப்ளையில் தண்ணீர்ப் பானைகள்  தவங்கிடந்து கொண்டிருந்தன. நாராயணா கஃபேயில் உலகம் இருட்டு. நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு என்று டி எம் எஸ் பாடிக்கொண்டிருந்தார். கறுப்புக் காப்பியின் மணத்தை நுகர்ந்து கொண்டிருந்த சுந்து என்ற சுந்தர விநாயக ஆதித்தன் இவளைக் கண்டதும் கொதித்துக் கொண்டிருந்த காப்பியை வாயில் ஊற்றி நாக்கைச் சுட்டுக் கொண்டு கல்லாக்காரரிடம் ப்ச்சைத் தாளை விசிறி அடித்துவிட்டு  அதே வேகத்தில் கிளிப்பச்சை நிற சுவேகாவை  உதை கொடுத்து ட்ட்ட்ர்ர்ர் ரிட்டுப் புறப்பட்டு வட்டம் போட்டு ட்ட்ட்ட்ட் என்ற வேகத்தில் தெருமுக்கில் திரும்பி அவளைப் பிடித்து சிறிது மூச்சு விட்டு நந்து பின்னால ஏறிக்கோ வீட்டுக்குப் போகலாம் என்று சொல்ல இவள் போடா.. மாட்டேன். என்று திமிறினாள்.

--- 82 ஆம் வருட டைரியிலிருந்து இன்னும் ஒரு பூர்த்தியாகாத கதை.

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

சென்னை சொர்க்கம்.



வெள்ளி அலைகளில்
தங்கச்சூரியன்.
வைரமணலில் மினுமினுக்கும்.

ப்ரிய உறவுகள்
ஜன்னலில் அடிக்கடி
பரவசப்படுத்தும்.

அவசியப்படும்போது
பத்துமணி நேரத்தில்
சொந்த ஊர்மண்
நம் காலில் நெகிழும்.

உறவுகளின் நெருக்கத்தால்
குளிரும் மழையும் கூட
கதகதப்பாய்.

கொளுத்தும் வெய்யில்கூட 
குற்றாலமாய். 

பேச்சு மட்டுமல்ல.
மூச்சுக் காற்றும்கூட
தமிழாகவே ஒலிக்கும்.

சொம்பளவு நீரிலே குளித்தாலும்
சொர்க்கம் சென்னை.
சென்னைதான். 


-- 1996  ஆம் வருட டைரி. 

வியாழன், 23 ஏப்ரல், 2015

நமது நட்பு..



நமது நட்பு :-
குறிஞ்சி மலர் போல்
அபூர்வமானது.
கொஞ்சம் நயாகரா
கொஞ்சம் சகாரா.
கொஞ்சம் ரவிவர்மா
கொஞ்சம் பிகாஸோ.
கொஞ்சம் பாலமுரளிகிருஷ்ணா.
கொஞ்சம் பேட்டைராப்.
கொஞ்சம் மல்லிகை
கொஞ்சம் கற்றாழை.
கொஞ்சம் பாசந்தி
கொஞ்சம் பாகற்காய்.
மகாமகக் குளம்போல்
புனிதமும் அசுத்தமும்.
அன்பெனும் நீருக்குள்
ஊறிக் கொண்டு வெளியே
வேற்றாளாய்த் திரியும்
வெங்காயத் தாமரைகள் போல்.
கொஞ்சம் விருப்பு
கொஞ்சம் வெறுப்பு.
கொஞ்சம் கோபம்
கொஞ்சம் பாசம்.
கொஞ்சம் அன்பு
கொஞ்சம் வம்பு.
கொஞ்சம் கனிவு
கொஞ்சம் துணிவு.
-    நவரசக் கலவையாய் நமது நட்பு.
கொஞ்சம் பக்தி
கொஞ்சம் புத்தி
கொஞ்சம் அறிவு
கொஞ்சம் தெளிவு.
கொஞ்சம் ஒட்டுதல்
கொஞ்சம் பரிவு.
ஆனால்
என் துயரத்திலும் பயத்திலும்
நோயிலும் எனக்குத் துணையிருந்த ஆருயிர் நீ.!
என் புத்தியைத் தூசிதட்டிய
தெளிவுபடுத்திய ஆசான் நீ.!!
அன்பையே ஆண்டவனாகக்
காட்டிய ஞானாசிரியன் நீ. !!!


-- 1995.. DIARY.

நிலவுப் பெண்.



ஆற்றங்கரை மேட்டில் அருவி வீழும் அழகில் முல்லைப் பூக்களின் புன்னகையில் முக்காட்டை விலக்கி மெல்ல என்னை எட்டிப் பார்க்கும் நிலவு கூட என்னை மயக்கவில்லை. 

ஏனெனில் என் நிலவாம் உன் முகம் முன் இந்த நிலவுப் பெண்ணின் சாகசப் புன்னகை எம்மாத்திரம். ! 

இந்த நிலவுக்கென்ன அடிக்கடி வெட்கம் வந்து முந்தானையை மூடிக் கொள்கின்றது.. ? 

ஓ! என்னருகில் அமர்ந்திருக்கும் உன்னைப் பார்த்து வெட்கித்தான் முக்காட்டுக்குள் முகம் புதைப்போ. ? 

இராக்கால பிறைச்சந்திரன் என்னிடத்தில் வந்து என் கீற்றுப் புன்னகைக்கீடாக இந்த உலகில் எதுவுமுண்டா என அறைகூவல் விடுத்தான். 

யான் அவனிடத்தில் என் காதலியின் முத்துப் பற்களைப் பார். ! முல்லைச் சிரிப்பைப் பார் என்றேன்.. என்னடா சத்தம் இல்லை என நிமிர்ந்தால் எங்கே ஓடி ஒளிந்தான் இந்தப் பிறைச்சந்திரன். !

-- 82 ஆம் வருட டைரி :) 

Related Posts Plugin for WordPress, Blogger...