எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
1984 ஆம் வருட டைரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1984 ஆம் வருட டைரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

கடவுள்.

82 ஆம் வருட டைரி :)

கடவுள்.

கடவுள் என்ற வார்த்தைக்கு அதன் பொருளுக்குச் சிறுவிளக்கம். கடவுளுக்கு உருவம் கிடையாது. ஏனெனில் அவர் உருவற்றவர் என்பர். அது போல கடவுளுக்குப் பெயரும் இடக் கூடாதல்லவா. அது மட்டும் சரியாக்கும். அப்படிப் பெயரிடுவதாலே நாம் ஒருவரை ஒருவரிடமிருந்து பிரித்துக் கொள்கிறோம். 

கடவுள் என்பவர் இப்படித்தான் இருப்பார் என்று யாராவது பார்த்தார்களா. எல்லாம் நாமாகக் கற்பித்துக் கொண்டதுதான். கடவுள் எல்லையற்ற அருளுடையவர். அன்புடையவர். வரையறைக்கு உட்படாதவர் என்பது உண்மை. ஆகையால் நாம் கடவுள் என்றால் இப்படித்தான் இருப்பார், அவருக்கு இன்னின்ன அடையாளங்கள் உண்டு எனக் கற்பிக்கக் கூடாது. அப்படி கூறினாலே கடவுளை வரையறைக்கு உட்படுத்துகின்றோம் என்று பொருள். அது போல நாம் எதிர்பார்ப்பதை எல்லாம் அவரிடம் எக்ஸ்பெக்ட் பண்ண முடியாது. 

ஒரு சில சமயங்களில் கடவுள் உதவுவார் என்று எதிர்பார்த்த வேளையில் நாமறியாமலே, ஒன்றும் மாற்றம் ஏற்படுத்தாமலே இருந்து விடுவார். நாம் கிறுக்குத்தனமாக குருட்டாம் போக்கில் ஏதாவது செய்யும்போது நாம் எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் புகழ் வரும். எல்லாம் நடப்பது ஒரு அமானுஷ்யச் சக்தியால்தான். கடவுளைத் தரம்பிரித்துக் காட்டும் முயற்சியிலே நாம் அவரைத் தரமற்றவராக்கி நம் தரத்தில் தாழ்ந்து போகிறோம்.

நமக்கும் மேல் ஒரு சக்தியிருக்கிறது. அது உருவமற்ற அருவமான ஒரு சக்தி என்பதுதான் உண்மை. அது எப்படிச் செயல்படும் என்பது நம் அறிவுக்கு எட்டாதது. நாம் அந்தச் சக்தியை விசுவசிக்கத் தலைவணங்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சக்தி தாய் எனும் சக்தி. அந்தச் சக்தியை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தாய் என்ற சொல் எவ்வளவு புனிதமானது. கடவுள் என்ற சொல்லை விட தாய்மை மேன்மையானது. சிறந்தது. 

ஒவ்வொரு மனிதனும் தன் தாயை வணங்கக் கற்றுக் கொண்டாலே தெய்வத்தை மதிக்கக் கற்றுக் கொள்ளுவான்.

தாய் என்னும் தெய்வத்தைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு காணாத தெய்வத்தைப் பற்றி மனிதன் ஏன் வீண் பிரச்சனை கொள்ள வெண்டும். இதனால் எத்தனை சண்டை, சச்சரவுகள். வாதம் பிடிவாதம் செய்வதனால் மதம் என்னும் மதம் கொண்டு திரிகின்ற மாக்கள் முடிவில் என்ன கண்டார்கள். அவர்கள் சென்ற இடம் கூடப் புதையுண்டு, புதுக்கட்டடங்கள் எழும்பிவிட்டன. ஆகையால் பரம்பொருளை வணங்கக் கற்றுக் கொண்டு மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டி சமாதானமாக வாழ்தலே சிறந்த கடவுள் பக்தியாகும்.

--  82 ஆம் வுடைரி :)

வியாழன், 23 ஏப்ரல், 2015

நிலவுப் பெண்.



ஆற்றங்கரை மேட்டில் அருவி வீழும் அழகில் முல்லைப் பூக்களின் புன்னகையில் முக்காட்டை விலக்கி மெல்ல என்னை எட்டிப் பார்க்கும் நிலவு கூட என்னை மயக்கவில்லை. 

ஏனெனில் என் நிலவாம் உன் முகம் முன் இந்த நிலவுப் பெண்ணின் சாகசப் புன்னகை எம்மாத்திரம். ! 

இந்த நிலவுக்கென்ன அடிக்கடி வெட்கம் வந்து முந்தானையை மூடிக் கொள்கின்றது.. ? 

ஓ! என்னருகில் அமர்ந்திருக்கும் உன்னைப் பார்த்து வெட்கித்தான் முக்காட்டுக்குள் முகம் புதைப்போ. ? 

இராக்கால பிறைச்சந்திரன் என்னிடத்தில் வந்து என் கீற்றுப் புன்னகைக்கீடாக இந்த உலகில் எதுவுமுண்டா என அறைகூவல் விடுத்தான். 

யான் அவனிடத்தில் என் காதலியின் முத்துப் பற்களைப் பார். ! முல்லைச் சிரிப்பைப் பார் என்றேன்.. என்னடா சத்தம் இல்லை என நிமிர்ந்தால் எங்கே ஓடி ஒளிந்தான் இந்தப் பிறைச்சந்திரன். !

-- 82 ஆம் வருட டைரி :) 

திங்கள், 1 டிசம்பர், 2014

திரு நீறு.

திருநீறு

அறிவை அளிப்பது நீறு
ஆசை அழிப்பது நீறு
இன்பம் அளிப்பது நீறு
ஈகை அருள்வது நீறு
உறவை அறுப்பது நீறு
ஊக்கம் அளிப்பது நீறு
எங்கும் மணப்பது நீறு
ஏக்கம் அழிப்பது நீறு
ஐயம் அறுப்பது நீறு
ஒற்றுமை அருள்வது நீறு
ஓம்காரம் அருள்வது நீறு
ஔடதம் அளிப்பது நீறு
இஃதே பழம்நீ இராஜ அலங்காரன் பாதம் பட்ட திருநீறே.

வெள்ளி, 14 நவம்பர், 2014

சில ஒற்றுமைகள்.



சில ஒற்றுமைகள். 

காதலுக்குக் கண்ணில்லை. உண்மைதான். அதனால்தான் நாமிருவரும் குருடராய்ப் பிறப்பெடுத்தோமோ. 

காதலுக்கு ஜாதி பேதமில்லை. ஆமாம் அதனால்தான் குப்பைத்தொட்டிகளின் வாரிசுகளாய் உருவெடுத்தோமோ. 

காதலுக்குப் பணக்காரன் ஏழை என்ற வித்யாசமில்லை. அதனால்தான் அன்பு உருவானதோ. 

மண்ணில் பிறந்தோமென்பதற்காக மண்ணிற்கு உணவாகிப் போகிறோமென்பதை உணர்த்துவதற்காகத்தன் மண்ணே நம் நித்திய உணவாகிப் போனதோ. 

நடைபாதைகளும் புழுதிப் படலங்களுமே நம் நித்தியக் கட்டில்கள். கூவம் நதிக்கரைப் பக்கமே நம் குடித்தன வாசஸ்தலங்கள். 

பட்டினி இரவுகளின் ஓலம் ஊமைப்புலம்பல்கள். பொறுக்கமுடியாமல் ஊற்றுத்  தோண்டி நீர் குடிப்பு. குடிக்கும்போது உப்புக்கரிப்பு. அது நம்மைப் போலவே பலபேரின் குருட்டுக் கண்கள் உதிர்த்த முத்துக்களாம். 

மனதுக்கு ஒரு சுகமளிப்பு. அவர்களைப் போலல்லாமல் எனக்கு நீ ஒரு துணையாய் இருக்கும்போது இந்தச் சில ஒற்றுமைகள்தான் நம்மைச் சேர்த்து வைத்ததோ. அதனால்தான் நெஞ்சங்கள் உறவாடினவோ. 

நம்மிடையே பகிர்ந்துகொள்ள வேறென்ன இருக்கிறது. அன்பைத் தவிர.

-- 1984 ஆம் வருட டைரி.

வெள்ளி, 7 நவம்பர், 2014

மண் வாசனைகள்



மண் வாசனைகள். :-

சுதந்திரத் திருநாடு. இதில் நாட்டைத் தவிர  சுதந்திரம் சுருண்டு ஒடுங்கி மடிந்தே போய்விட்டது. திருவை யாரோ திருடிக்கொண்டுவிட்டார்கள். 

இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம். நாடு என்ற பெயரில் பதுக்கல், கலப்பட வியாபாரிகள், ஊழல் மலிந்த ஜனநாயகமும், கடத்தல் கொள்ளையர்களும், சுரண்டல் அதிகாரிகளும் பட்டினிப் பாட்டாளிகளும் மலிந்து திரியும் இருட்டுக்குகைதான் இந்த மணித்திருநாடு. 

‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம். ‘ என்று நீ ஏன் தான் பாடி வைத்தாயோ. இன்று மக்கள் அழிக்கிறார்கள். 

எதை. தனியொரு மனிதனையேதான். ஏனெனில் அவன் இல்லாமற் போனால் உணவைப் பற்றிக் கவலையில்லையல்லவா.. 

சட்டைக்காரன் காலத்தே எட்டையப்பன் போன்ற குட்டையுள்ளம் படைத்தவர்கள், நாட்டையாளும் ஆசையாலே வீரத்தை சட்டை செய்யாத மடையர்கள் போல தொழிலாளர் தலைவனே முதலாளிகளின் கால் தடவி, கைபிடித்து, கைப்பிடிக்குள் பணமுடிப்புப் பிடித்து, கலர் காகிதங்களுக்கு அடிமையாகி குட்டிச் சுவர்க்கழுதையாகி, பட்டிகளில் தொட்டிகளில் கட்டிக் கிடக்கும் பட்டினி கிடக்கும் மட்டி மந்தைகளிடம் ஆடு தொடா இலையை ஆசை காட்டி இட்டுச் செல்கின்றான். குள்ளநரிக் கூட்டத்துக்கு விருந்து படைக்க. 

கால் வயிற்றுக்குப் பாடல் சொல்லி இரையும் கும்பல், பால் இல்லாமல் வீறிட்டழும் சேய்ச் செல்வம், என்றும் பசி, எப்போதும் பசி, பசி, பசி, பசி மயம். இதில் படிப்புக்கு வழியேது. நன்கு உடுக்க வழியேது. 

தங்கள் உரிமைகளைப் பற்றிப் பேச ஒரு பேச்சாளனைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். அவனுக்கு ரூபாய் ஐயாயிரம் வாடகை. பேச்சாளன் விளாசினான் பிரமாதமாக. பாட்டாளி வர்க்கம் சிந்தும் ஒவ்வொரு வியர்வைத்துளியும்தான் நெல்மணிகளாகிப் புன்னகை புரிகின்றன. என்று. அவனுக்கு அமோகக் கைதட்டல்கள். ரோஜாப்பூமாலைகள் பணமுடிப்பு. 

கூட்டம் முடிந்து இறங்கி வரும்வேளையில் எவனோ ஒரு உழைப்பாளி இடித்துவிட்டதால் அவள் வியர்வை பட்டு தன் அங்கவஸ்த்ரம் பாழாகிவிட்டதாயும் வியர்வை நாற்றம் பொறுக்கமுடியவில்லை என்று ஏகத்திட்டு. என்றுதான் உண்மையை உணர்வானோ என் அருமை உழைப்பாளி நண்பன். அவனுக்கு என்றுமே கோபப்படத் தெரிவதில்லையே. அது ஏனோ. 

பட்டினி கிடந்தாலும் சரி. பஞ்சையாய்த் திரிந்தாலும் சரி. காந்தியடிகளின் அஹிம்சை இங்கே வெல்ல மார்க்கமில்லை நண்பனே. நீ இப்படி இருப்பதற்குக் காரணம் ஓ . மண் வாசனைதானோ. பிறந்த மண் தோஷம் உன்னை ஒட்டிக்கொண்டதோ.


டிஸ்கி :- 85 ஆம் வருட டைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...