82 ஆம் வருட டைரி :)
கடவுள்.
கடவுள் என்ற வார்த்தைக்கு அதன் பொருளுக்குச் சிறுவிளக்கம்.
கடவுளுக்கு உருவம் கிடையாது. ஏனெனில் அவர் உருவற்றவர் என்பர். அது போல கடவுளுக்குப்
பெயரும் இடக் கூடாதல்லவா. அது மட்டும் சரியாக்கும். அப்படிப் பெயரிடுவதாலே நாம் ஒருவரை
ஒருவரிடமிருந்து பிரித்துக் கொள்கிறோம்.
கடவுள் என்பவர் இப்படித்தான் இருப்பார் என்று யாராவது பார்த்தார்களா.
எல்லாம் நாமாகக் கற்பித்துக் கொண்டதுதான். கடவுள் எல்லையற்ற அருளுடையவர். அன்புடையவர்.
வரையறைக்கு உட்படாதவர் என்பது உண்மை. ஆகையால் நாம் கடவுள் என்றால் இப்படித்தான் இருப்பார்,
அவருக்கு இன்னின்ன அடையாளங்கள் உண்டு எனக் கற்பிக்கக் கூடாது. அப்படி கூறினாலே கடவுளை
வரையறைக்கு உட்படுத்துகின்றோம் என்று பொருள். அது போல நாம் எதிர்பார்ப்பதை எல்லாம்
அவரிடம் எக்ஸ்பெக்ட் பண்ண முடியாது.
ஒரு சில சமயங்களில் கடவுள் உதவுவார் என்று எதிர்பார்த்த வேளையில்
நாமறியாமலே, ஒன்றும் மாற்றம் ஏற்படுத்தாமலே இருந்து விடுவார். நாம் கிறுக்குத்தனமாக
குருட்டாம் போக்கில் ஏதாவது செய்யும்போது நாம் எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் புகழ்
வரும். எல்லாம் நடப்பது ஒரு அமானுஷ்யச் சக்தியால்தான். கடவுளைத் தரம்பிரித்துக் காட்டும்
முயற்சியிலே நாம் அவரைத் தரமற்றவராக்கி நம் தரத்தில் தாழ்ந்து போகிறோம்.
நமக்கும் மேல் ஒரு சக்தியிருக்கிறது. அது உருவமற்ற அருவமான
ஒரு சக்தி என்பதுதான் உண்மை. அது எப்படிச் செயல்படும் என்பது நம் அறிவுக்கு எட்டாதது.
நாம் அந்தச் சக்தியை விசுவசிக்கத் தலைவணங்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சக்தி தாய் எனும் சக்தி. அந்தச்
சக்தியை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தாய் என்ற சொல் எவ்வளவு புனிதமானது. கடவுள்
என்ற சொல்லை விட தாய்மை மேன்மையானது. சிறந்தது.
ஒவ்வொரு மனிதனும் தன் தாயை வணங்கக் கற்றுக் கொண்டாலே தெய்வத்தை
மதிக்கக் கற்றுக் கொள்ளுவான்.
தாய் என்னும் தெய்வத்தைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு காணாத
தெய்வத்தைப் பற்றி மனிதன் ஏன் வீண் பிரச்சனை கொள்ள வெண்டும். இதனால் எத்தனை சண்டை,
சச்சரவுகள். வாதம் பிடிவாதம் செய்வதனால் மதம் என்னும் மதம் கொண்டு திரிகின்ற மாக்கள்
முடிவில் என்ன கண்டார்கள். அவர்கள் சென்ற இடம் கூடப் புதையுண்டு, புதுக்கட்டடங்கள்
எழும்பிவிட்டன. ஆகையால் பரம்பொருளை வணங்கக் கற்றுக் கொண்டு மனிதனுக்கு மனிதன் அன்பு
காட்டி சமாதானமாக வாழ்தலே சிறந்த கடவுள் பக்தியாகும்.
-- 82 ஆம் வருட டைரி :)
-- 82 ஆம் வருட டைரி :)
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))