நிழல்களற்ற மனிதன்
தென்படுவதேயில்லை எங்கும்.
முன்னும் பின்னும் வலமும் இடமும்
மேலும் கீழும் உருவி விழுந்து அவனைப்
பின் தொடந்துகொண்டேயிருக்கின்றன அவை
தொற்றியோ பற்றியோ இருக்கும்
அவற்றைக் கைவிடுவதில்லை
எல்லாவற்றையும் வீசி எறியும்
மனிதனும் கூட.
தன் இருப்பின் சாயலை
நிழலில் பொதித்து வரைந்து
இழுத்துச் செல்பவனின் பின்
உருவற்ற உருவமாய்
கலைந்த சாம்பல் மூட்டைகளாய்
அசைந்தபடி செல்கின்றன அவை.
கருஞ்சாந்தாய்க் கொட்டி அசையும் அவை
அவனைத் தவிர வேறேதோடும் ஒட்டுவதில்லை.
உடலோடு பிடித்தபடி அலையும் மனிதனின் பின்
அஸ்வத்தாமனாய் சாபமுற்றுக் கிடக்கின்றன
சாக்காடு மட்டும். சாம்பலாகும் முற்றும்.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))