எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

விளையாட்டுப் பொருள்..

பட்டமாய் சிறகடிப்பாயே
மாட்டிக் கொண்டாயே.
விரும்பிய கைகளில்
விளையாட்டுப் பொருளாய் ..


தொலைதல்..

காணவில்லை..
பதின்பருவங்களில்
தொலைந்த என்னை..

தங்க நிறப்பூ..

விரல்காம்பில் ரோஜாஇதழ் ..
கருமகரந்தக் கண் இனிக்க..
ஒரு தங்க நிறப்பூ.

காதல் கள்..

மிதக்கிறாய் நடப்பதாய்..
நீ குடித்தது கள் இல்லை..
காதல்...:)

திங்கள், 27 பிப்ரவரி, 2012

நம்வாழ்வில்.. வெள்ளைப் பூக்களடி இவை.. கவிதை.



கிணற்றடியில் குனிந்து
இருட்டறையில் அடைந்து
உள்நடையில் உடைந்து
தூணோரத்தில் ஒடுங்கிப்
போகும்
வெள்ளைப் பூக்களின்
கலங்கிய சிரிப்புக்களின்
எதிரொலிகள் -- இந்தப் பனித்துளிகளோ.?
மழுங்கிய நினைவுமுனைகளின்
நுனிப்புக்களில் சந்தோஷச் சுவைப்புக்கள்.
சிலநேரம் அசைபோடும்.
கைக்காரியம் பரபரக்கும்.
நிரந்தர இருள்களில்
தலையணை நனைப்புக்கள்.
விடியற்குளிரின்
பிரச்சனை வரவேற்புக்கள்.
நித்யம் நடக்கும்
சத்யசோதனைக்குப் பயந்து
மௌனத் தியானிப்புக்கள்.
குருட்டு நம்பிக்கையின்
கடுவழிப் பயணங்கள்.
கண்டதென்னவோ
கடும் பாலைகள்தான்.
உள்ளத்துள் எரிமலையை
விழுங்கிக் கொண்டு இது
எனக்குச் சுடவில்லையேயென
அக்கினிப் பூக்களைக்
குளிர்வித்துப் பரிமாறும்
”வெள்ளைப் பூக்களடி” இவை.

டிஸ்கி:- இந்தக் கவிதை 1.4.84 நம்வாழ்வு வார இதழில் வெளிவந்தது.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

இரப்பவன்..

ரோட்டோரம் கடை விரிப்பவனாய்
பரப்புகிறேன் அன்பை..
பார்வையிட்டபடி
உன் பாதையில்
தொடர்கிறது உன் பயணம்..
கரிக்கோடு இழுப்பவனாகவும்
கிறுக்கிக் திரிகிறேன்,
பின் தொடர்ந்து.
பார்வைக் காசைச்
சுண்டி என் பசிக்கு
தானமளிக்கிறாய்.
பசியடங்காமல்
சிக்னலில் மனக் குழந்தை
சுமந்து சோம்பித் திரிகிறேன்.
கையில் இருக்கும்
வார்த்தை பிஸ்கட்டுகளைப் போடுகிறாய்.
நான் எப்போதும் இரப்பவனாகவும்
நீ எப்போதும் வழங்குபவனாகவும்
தொடர்கிறது ஏதோ ஒன்று.

புதன், 22 பிப்ரவரி, 2012

வார்த்தைக் கருணை.

தூவிச்செல் வார்த்தைகளை
தினமும் ஒருமுறை கருணையாய்..
ஏங்கித் தவித்துழம்பும்
மனப்பூ வாடாமலிருக்க..

எங்கனம்..

கைகோர்த்தபடியே
யோசிக்கத் துவங்கினோம்
ஒருவரை விட்டு ஒருவர்
விலகி இருப்பது எங்கனம்..

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

காய்கறிகளின் கண்ணீர்

கையை வெட்டிக்கொண்டதும்
உணர முடிந்தது
காய்கறிகளின் கண்ணீர்..

பாசப் பிரிவினை.

பங்கிட முயல்கிறது
பாகப் பிரிவினை
பாசப் பிரிவினையையும்.


பாலை சூடிய பூ.

குறிஞ்சி முல்லை
மருதம் நெய்தல் சூடிய பூ
பாலையும் சூடியது..,
பாளம் பாளமாய்
வெடித்துக் கிடக்கும் வயோதிகம்..
அணைகளும் உழவுமாடுகளும்
வழக்கற்ற காலம்
வாய்க்கால்களும் தூர்ந்து.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

காறுதல்.

காறும்முன்பே யோசிக்கவும்..
துப்பப் போவது யார் மீது என்று..
தெரியாமல் உங்கள் மீதே தெறிக்கலாம்.

அச்சாணித் தத்துவம்.

மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்..
அச்சாணித் தத்துவம்..

வியாழன், 16 பிப்ரவரி, 2012

தாழிடும் நாணம்..

தாழ்ந்து அறியாதவளின்
இமைகள் தாழ்கின்றன
தாழிடும் நாணத்தால்..:)

புதன், 15 பிப்ரவரி, 2012

சுயகம்பீரம்.

செயலற்று அடித்து
மென்மையாக்கும் காதல்முன்
குழம்பித் தவிக்கிறது
சுயகம்பீரம்..

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

காதல் அடுக்குகள்..

சாம்பலானாலென்ன
கல் சிற்பங்களானாலென்ன
நினைவுச் சின்னங்களாய்
உயிர்த்துக் கிடக்கிறது காதல்
அவரவர் ஞாபக அடுக்குகளில்..

சனி, 11 பிப்ரவரி, 2012

தே வதை...

எதைத் தேடுகிறாயோ
அதையே அடைகிறாய்
தேவதையோ.. வதையோ..


காலனின் கத்தி

புத்தியைத் தீட்டியவர்களுக்கு
கத்திகள் வடிவில்
காத்திருக்கிறான் காலன்.

துயில்

கண் சொக்கித் துயில்கிறேன்.
தாலாட்டிய புத்தகமும்
களைத்துத் துயில்கிறது என்மேல்


வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

புராதனப் பனைகள்

தன்மானத்தலை முறிந்து
கவிழ்ந்து கிடக்கின்றன
புராதனப் பனைகள்,
காதல் இடிவீழ்ந்து..

வியாழன், 9 பிப்ரவரி, 2012

அம்மா முகம்.

ஒவ்வொரு முகமாய்ப் பார்த்து
ஏங்குகிறது குழந்தை
அலுவலகம் சென்ற
அம்மா முகம் தேடி..



புதன், 8 பிப்ரவரி, 2012

பாவை மேகம்

கண்திராக்ஷையிலிருந்து
வழிகிறது காதல் ரசம்..
பார்வை ஜலக்ரீடை
பாவை மேகத்திலிருந்து.


காதல் பானம்

சோமபானமா.. சுராபானமா
காதல்பானம் வீழ்த்துகிறது
இன்பலாகிரியில்.


சதைச் சுருக்கம்.

அலைகளின் பயணத்தில்
கரை ஒதுங்கிக் கிடக்கிறது வெண்சிப்பி
சதைச் சுருக்கம் யோசித்தபடி..


ஞாபக ஊஞ்சல்

யார் யாருடனோ கேட்கிறோம்
யாருக்கோ பிடித்த பாடலை,
ஞாபக ஊஞ்சலாடி..

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

வர்ணக் குழப்பம்..

ஸ்தம்பிக்கின்றன
சாலை நிறுத்த விளக்குகள்.
வர்ணக் குழப்பம்..
வண்டியில் பறந்து வருகிறதே
வண்ணத்துப் பூச்சி..
அனுமதிப்பதா.. மறுப்பதா..


வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

சவலை..

ஆயிரம் கைகள் வேண்டும்
அரவணைக்க..
அதிகமாகி விட்டன..
சவலைக் குழந்தைகள் ..

வியாழன், 2 பிப்ரவரி, 2012

சிவகாமியின் சாத்தியங்கள்.

சபதமும் சன்னதமும்
சாத்யப்படும் சிவகாமிகளுக்கு
சாத்யப்படுவதில்லை சாத்வீகக் காதல்..

பிடிபடுதல்

கதவுகளுக்குப் பின்னே
ஒளிந்து பிடித்து விளையாடுகிறோம்
இருள் பூச்சாண்டிகளுக்குப் பயந்தாலும்
பிடிபட்டு விடக்கூடாதென்ற பயத்தோடு


அடைசல்..

அதிகமாகி விட்டது அடைசல்..
விலைக்குப் போட்டபின் வீடு ரெடி
அடுத்த குப்பைகளுக்கான ஷெல்ஃப்களோடு.

புதுமை.

கொடிகளோடு சிக்கல்களில்..
வெட்டுங்கள் மரங்களைச் சீக்கிரமாய்
புதிய துளிர்.. புதிய கிளைகள்.


புதன், 1 பிப்ரவரி, 2012

முக மூடிகள்

எத்தனை முகமூடி..
களைத்து விட்டேன்
களைந்து களைந்து..
போதுமிந்த விளையாட்டு.
நீயாக வெளியே வா..

மகிரும் வெள்ளம்

மதிலுகளா.. அணைகளா
மடக்கித் தடுக்க
மகிர்ந்து வழிகிறது வெள்ளம்
மண் ருசிக்கும் ஆசையில்..

Related Posts Plugin for WordPress, Blogger...