எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 பிப்ரவரி, 2023

உடுப்பு

வாங்கும்போது பிடிக்கும்
உடுப்புக்கள் ஏனோ
அணியும்போது
பிடிக்காமல் போய்விடுகிறது
குழந்தைகளுக்கு.
கட்டாயப்படுத்தியதால்
போட்டுக்கொண்டு
இது லூசா இருக்கு
இதப் போட்டுட்டு சைக்கிள்ள போனா
ஊரே என்னைப் பார்த்துச் சிரிக்கும்
என அழுதான் சின்னவன்.
ஆம் ஊருக்கு வேறு வேலையில்ல
உன் பாண்ட் லூசா டைட்டானுதான்
பார்த்துட்டுத்தான் சிரிக்குமாக்குமென்று
நாங்களும்
சிரித்துக் களித்தோம்.
அந்தக் கண்ணீர் ஞாபகம்
வரும்போதெல்லாம்
நாம் எவ்வளவு
கொடுமையாளர்களாய் இருந்தோம்
எனத் திகிலடிக்கிறது.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

மனுசங்கதானா

கால் உந்தி ஓட்டும் மிதிவண்டியைப்
பக்கத்துப் பூங்காவில்
தொலைத்து விட்டு வந்து
நின்றான் மூத்தவன்.
கிரிக்கெட் விளையாடும்
பிளாஸ்டிக் மட்டையால்
இனி போவியா,
போட்டுட்டு வருவியா எனக் காலில்
இரண்டு சாத்து சாத்த
அதன் டொம் டொம் என்ற
சத்தம் கேட்டு அதிர்ந்த சின்னவன்
நீங்கள்ளாம் மனுசங்கதானா
என்று கதறினான்.
பெரியவன் உறைந்து நிற்க
நாங்கள்ளாம் மனிதர்கள்தானா
என்ற கேள்வியில்
உடம்பு விதிர்விதிர்க்கிறது.

புதன், 8 பிப்ரவரி, 2023

புருஷாயணம்

இத்தோடு எல்லாம் முடிந்தது
என்று நினைக்கும்போது
புதிய கவிதைகள்
பிறக்கத் தொடங்கி விடுகின்றன
புதிய வருடங்கள் போல,
ஒன்றுமே நடக்காததுபோல்
என்மேல் நீ பொழியும் காதலைப் போல,
விட்ட இடத்திலிருந்தே தொடங்கும்
நம் வாக்குவாதங்களைப் போல 😉
-- புருஷாயணம் 😉
 

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

பிரம்புப் பூதம்

அடிப்பதற்குப் பிரம்பெதற்கு?
ஒரு கடினப் பார்வை போதாதா.
அதிலேயே நடுங்கி
விழுந்தவர்கள் நாங்கள்.
வேர்வையூறிக் கண்ணீர் வடிய
இரத்தம் கட்டிய கைகளோடு
பைக்கட்டுக்களைத் தூக்கி
நடப்பதன் கடினத்தை
பக்கத்து வகுப்பின்
தாமரையிடம் பார்த்த அன்று
மேஜை டிராயருக்குள் போட்டு
அறைந்து மூடினார்
எங்கள் நாலாம் வகுப்பின் சண்முகம் சார்.
அந்தப் பிரம்புகளை ஏன்
அலாவுதீன் பூதம் போல் உயிர்ப்பிக்கிறீர்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...