எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 பிப்ரவரி, 2013

ஈசல் மேகங்கள்.

இரவு வண்ணத்துப்பூச்சியின்
இறக்கை அசைகிறது..
உதிர்த்துச் செல்கிறது
மின்மினியாய் நட்சத்திரங்களை.
ஈசல் சிறகான மேகங்கள் சிதறி
மறைகிறது சூரியனுக்குள்..

கொத்துதல்.

ஞாபக மீன்கள்
அலையும் ஏரியில்
இரு வேறு கிளையிலமர்ந்து
ஒன்றை ஒன்று
கொத்திக் கொண்டிருக்கின்றன
வலசைப் பறவைகள்...

புதன், 27 பிப்ரவரி, 2013

வெள்ளியிலிருந்து தங்கத்துக்கு..

சாம்பல் பூக்க விழித்திடும்
வயல்வெளி மனிதர்களைத்
தங்கப்புடமிடுகிறது வெய்யில்.
அதிகப் புடத்தால்
கறுப்பைப் பூசிய
இரும்பு மனிதர்கள்
இரவுப் பாதரசத்தில் மூழ்கி
வெளுத்துக் கிடக்கிறார்கள்.
விலைவாசி அறியாது
வெள்ளியிலிருந்து
தங்கத்துக்கு மாற்றும்
ரசவாத வினையில்
தோற்றுக் கொண்டிருக்கிறது
தினப்படி வெய்யில்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

மட்டை.

மட்டை:-
****************
தென்னை மட்டை விழுந்த
கிணற்றை எட்டிப் பார்க்கும்
போதெல்லாம்
ஞாபகம் வருகிறது..
போன சித்திரையில்
காதலித்துக் கூடாமல்
கிணற்றில் கை கால்கள் விரிய
மிதந்து கிடந்த நாகமணி அக்காவை..

சுவர்..

சுவர்:-
************
இறந்தவளின் சுவற்றில்
எழுதிக் கொண்டிருந்தேன்..
வாழ்வை வாழ்வின் உச்சத்தில்
சுயமாய் வாழும் ஏக்கமேந்தி
தங்கப் பேழையிலும்., சட்டத்திலும்
உறை சிரிப்போடு கிடந்தவள்..
எங்காவது ஒரு சமையல்காரியாவது
சந்தோஷமாக வாழ்ந்திறந்திருக்கலாமென..

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

அடையாள அட்டைகள்..

நிரம்புதல்..:-
********************
பெண்குழந்தைகள் இருக்கும் வீடுகளில்
துப்பட்டாக்கள் நிறைந்திருப்பது போல்..
ஆண்குழந்தைகள் இருக்கும் வீடுகளில்
நிரம்பி வழிகின்றன.. ப்ளேசர்., பெல்ட்.,
ஷூ., சாக்ஸ்., டை., செல்ஃபோன்., ஐபாட்.,
பென் ட்ரைவ்., சிடி பெட்டிகளும்..
புதிது புதிதாய் மாறிக் கொண்டிருக்கும்
வேலை நிறுவனத்தின் அடையாள அட்டைகளும்..

சனி, 23 பிப்ரவரி, 2013

ஒளியற்ற நிலா.

மறைதலும் தேய்தலும்
கொண்ட நிலா
உயரத்திலிருப்பதாலேயே
உயர்வாக நினைத்துக் கொள்கிறது..
சூரியனின் உக்கிரத்தில்
அமாவாசை இரவில்
ஒளியிழந்து தனித்திருந்தும்
கர்வம் அழியாமல்.

கனியக் கூவும் சேவல்.

மேகம்வழி கசிந்த நிலாப்பால்குடித்து
பின்னிக் கிடந்த கொடிகளைத்
தழுவிக் கிடந்தது இருள் பாம்பு.
மதுபானம் ஓடிய சாலைகள்
முயங்கிக் கிடந்தன மௌனத்தில்.
கரும்புச் சாறு வழியும் குரலில்
கனியக் கனியக் கூவியது சேவல்.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

பெருவெடிப்பு

பெருவெடிப்பில் விரிந்து
கருந்துளைக்குள் தனைப்புதைக்க
இன்னொரு பால் வீதி விரிகிறது.
இன்னொரு சூரியன்
இன்னுமொரு தேயும் சந்திரன்,
இன்னுமொரு நெபுலா.. .

குட்டி நிலா.

மேகமெத்தையில்
புரண்டு படுக்கிறது
குட்டி நிலா

வார்த்தைகளின் தையல்காரி

வார்த்தைகளின் தையல்காரி
இறந்திருந்த பூச்சிநீக்கி
வெட்டி ஒட்டித்தைத்து
மடிப்பு மடிப்பாய் அடுக்கி
அம்மன் பட்டாயோ,
அங்கியாயோ,
உச்சிபோர்த்தும் துண்டாயோ
உருவிப் போட்டாள்..
கவிதை என்னும் பேரில்..
பழமை வீச்சத்தில் ஊறிக்
கவிச்சியடித்துக் கிடந்தன
பூச்சிகளின் எச்சத்தோடு.

புதன், 20 பிப்ரவரி, 2013

மதுவாய்..

துப்புத் துலங்கியது
தேநீர்க் கோப்பை
காஃபிக் கோப்பையாய்
உருமாறிய கணம்
உரு மாறச்செய்தததிர்ந்து
சித்தம் பிரண்டது.
நுரை பொங்கி வழிய
சுவைப்பது மதுவா..
மதுவாயோடு
மயங்கும்முன்
ஈக்குத் தெரிந்தது
நெஞ்சம்விட்டு நெஞ்சம்பாய்ந்தது.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

செயல்படுபொருட்கள்.

ஒற்றை அலையைப் போல
இன்னொன்று இல்லை..
தனித்து(வமாய்)ப் பிறக்கிறது
ஒவ்வொன்றுமே..
மண்ணைத் தின்னமுயன்று
மண்ணிலேயே கரைசேரும்.,
மடிந்து மடிந்து பிறக்கும்
ஒவ்வொரு அலையும்
எழுவாய் பயன் நிலை
செயப்படுபொருளாய்
விரிகிறது வெவ்வேறு
செயல்படு பொருட்களால்.

நேயமே நீ வாழ்க..

நேயத்தால் ஆனது உலகு.
நட்பினால் பூக்கும் மனது.
அகமும் புறமும்
அன்பும் நட்பும் தழைத்திட
சாம்பவியும் சங்கரனும்
சந்ததி பெருகி வாழ்க.
நேரிசையில் இசைந்து
நேயமித்ர.. நீ வாழிய பல்லாண்டுவெள்ளி, 15 பிப்ரவரி, 2013

யாராகியரோ..

யாரோ ஒருவரில் ஆரம்பித்து
யாரோ ஒருவரில்
முடிக்க வேண்டும்.
தொடரும் விளையாட்டில்
நியதிப்படியே எல்லாமும்
என்னிடம் வருகின்றன.
எதையோ ஒன்றை ஆரம்பித்து
எதிலோ முடிக்கும் நானும்
யாயும் யாயும்
யாராகியரோ ஆகிறோம்

புதன், 13 பிப்ரவரி, 2013

முத்த தானியம்..

கொத்திக் கொத்திச் சுவைத்தும்
பசி தீர்ப்பதில்லை
முத்த தானியம்.

முத்தத் தராசு


முள்முனைகூடத்
தடுமாறுவதில்லை உன் தராசு.
நீதித் தட்டில் சம அளவு
முத்தத்துக்கு முத்தம்.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பொய்க்கால் குதிரைகள்.

பொய்க்கால் குதிரைகள் பேசுவதில்லை.
நிற்க வைத்த இடத்தில் நிற்கின்றன.
ஆடி முடித்ததும் அடங்கிப் போய்விடுகின்றன.
சோறோ, போர்வையோ
முத்தமோ ஏன் ஒரு முழம் பூவோகூட கேட்பதில்லை.
விழிக்கும் விழியில் முழிக்கின்றவா
முறைக்கின்றனவா என கண்டுபிடிப்பது அரிது.
கூட்டமாகவோ தனியாகவோ
எங்கேயும் போக விரும்புவதில்லை.
நகைச்சுவை முகத்தோடு
நகைச்சுவை அறியாதவை அவை.
லாயத்தில் கட்டிய குதிரைகள் போல
லத்தி போட்டு அசிங்கமாக்குவதில்லை.
காதலிப்பதாகக் கூறி
எவராலும் அமிலம் வீசி அழிக்கப்படாதவை.
அடுத்து ஆட்டுவிக்கப்படும்வரை

கடிவாளம் மாட்டிய பெருமையோடு
புடைத்து நிற்கின்றன புழக்கடையில் .Read more: http://www.mylivesignature.com/mls_wizard2_1.php?sid=54488-89-72B745B7DCD91A6D51CF5145CF29EE5F#ixzz0gZnBC9oU

திங்கள், 11 பிப்ரவரி, 2013

”கண்ணா”மூச்சி.

கண்ணா மூச்சி.
*********************
 
தூணிலும் இருப்பாய்
துரும்பிலும் இருப்பாய்..
எங்கேயடா இருக்கிறாய்

இதயத்திலிருந்து எட்டிப் பார்க்கிறாய்..
ஒளியக் கிடைத்த இடமா அது..
குறும்பா..குறும்பா..!!!

பிரயாணப்பொழுதில்
பின்னோக்கி வழியே
தவிப்போடு நீ பார்க்க

ஒரு பார்வைக்கும்
அடுத்த பார்வைக்கும் இடையே
பின்னோக்கியில் ஊஞ்சலாடி நான்..

வேகத்தடையில்
மோதி விடக்கூடாது
என்ற கண்ணியத்தோடு நீயும்

எதிர்பாராமல்
மோதி விடுவோமோ என
எதிர்பார்ப்போடு நானும்

எத்தனை மிட்டாய் தின்றோம்
எத்தனை மீதி வைத்தோம்
என்ற கணக்கெடுப்பில்லாமல்..
கண்ணாமூச்சியில்..

திகட்டவேயில்லை..
திரும்ப உண்ண சொல்கிறது..
தித்திப்பு குறையாமல்..

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

அனாரைத் தராதீர்கள்

அனாரைத் தராதீர்கள்:-
**********************************
வெள்ளை மாதுளையைவிட
இரும்புக்கத்தி கீறி
ரத்தச் சுவையுடனிருக்கும்
செம்மாதுளையைப் பிடித்திருக்கிறது.
இனிப்பாய்ப் பல இருக்க
உவர்ப்பும் துவர்ப்புமான இதைக்
காதல்கனியாய்ப்
பரிந்துரைத்தது யார்?
சமாதிக்குள் புதையுறும்
இதயத் தமனி(ணி)களாய்
சிவந்து கிடக்கிறது மாதுளை
துடிதுடிக்கும் காதலில்.
நேசிக்கும் இதயத்திலிருந்து
வடியும் குருதித் தணலை
ஒத்திருக்கிறது அதன்
அடர்த்தி ரசம்.
கசங்கிக் கலைந்த
இதயங்களின் கனவைப்
பிரிப்பது போலிருக்கிறது
சுற்றிய வெண்தோல்.
மாதுளம்பூ நிறத்தாள் என
அண்டமெல்லாம் விரிந்தாளைப்பாடுவது
அசந்தர்ப்பமாய் இருக்கிறது
காதலில் புதையுண்டவளை நினைவுபடுத்தி.
நிறையப் பேரைக்
காதலித்துப் புதைத்துவிட்டுக்
கையறு நிலையில் தெய்வங்களாய்
வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
எனக்காய் யாரும் அனாரை
வாங்கி வராதீர்கள்.
காதல்களிலும், காதலிக்கப்படுவதிலும்
எனக்கு நம்பிக்கையில்லை.
சரித்திரச் சின்னங்கள்
நேசிப்பவர்களின் பிணத்தின்
மீதுதான் எழுப்பப்படுகின்றன.
உங்களை நேசிப்பவர்களாகக்
கருதும் யாருக்கும்
அனாரைத் தராதீர்கள்.

முத்து முத்தாய்..

முத்து முத்தாய்..
*****************************
சிப்பிக்குள் உருளும் வெண்முத்தாய்
சிக்கித் தவிக்கும் உதடுகள்
வெளியேறியபின்
கருமுத்தாய்..

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

செல்லரித்தல்.

ராஜாவும் ராணியும்
மகிழ்வோடுதான்
வாழ்ந்தார்கள்.
அதன்பின் எப்போதும்
என்ற உறுதிமொழியோடு
செல்லரித்துக் கிடக்கிறது
பழைய புகைப்படம்.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

நிராயுதபாணி

அம்பறாத்துணியில்
பாணங்கள் தீர்வதே இல்லை.
யாரை நோக்கி
எப்போது எய்யப்படவேண்டுமென
தீர்மானிக்கப்பட்ட காத்திருப்புக்களோடு
அவை செருகி இருக்கின்றன.
சோம்பல்களாலும்
விட்டுக் கொடுத்தல்களாலும்
எய்யத்தவறும்போது
தானே கீழ்விழுந்து
முனைமுறிந்து மரிக்கின்றன.
உடைந்த எலும்புத்துண்டுகளாய்
அவை சிதறிக் கிடக்கும் காட்சி
நானும் காயம்படுகிறேன்
நிராயுதபாணியாய்
என்பதன் சாட்சி.

புதன், 6 பிப்ரவரி, 2013

குடும்பக் கூடு.

உன்னைக் காணாத போது
மனதில் வார்த்தைகளின் இரைச்சல்கள்.
நேரில் கண்ட போதோ
மொழியிழந்த மௌனியாய்..

புன்னகை பூ பூக்கும்
நட்ட தாவரங்களைப் போல நாமிருப்போம்.
சட்டிச் செடிக்குச்
சூரியவெளிச்சமாய் நம் நட்பு.

சிலந்தி வலைகளின் நடுவே
சுற்றித் திரியும்
குட்டிப்பூச்சிகள் நாம்.

பறவைகளைப் போலப் பாடவும்,
அணில்களைப் போல ஓடவும் முடியாமல்
குடும்பக் கூட்டுக்குள்
நத்தைகளாய் நாம்.

மனக் கிளைக்குள்
குயிலாய்க் கூவும்
உணர்வை மொழி பெயர்க்க
நட்பென இசைக்கிறது.

டிஸ்கி:- வீட்டு டைரியிலிருந்து 1986

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

மனப் பொந்து.

ஊரெல்லாம்
என் பார்வை தேட
மனப் பொந்துக்குள் நீ.

சிரிக்காதே
என் மனசில்
விழுகிறது சுளுக்கு.

தொலைந்து போய்
தேடப்படாமல்
மண்ணில் புதைந்த
நாணயமாய் நீ.

இழந்தவன்
எப்போது வருவான்
மீட்டுக் கொள்ள.

நான் ப்ரியக் கூண்டின்
கொக்கிகளைக் கழற்றினேன்.
நீ பறந்து போனாய் எங்கோ.

டிஸ்கி.:- கல்லூரிக்காலத்தில் எழுதிய கவிதை. 31. 12. 85. 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

இறக்”கைகள்”

இறக்”கைகள்” பற்றிப்
பறந்து திரிகின்றன
பட்டாம் பூச்சிகள்
பரிட்சை பயமற்று

சனி, 2 பிப்ரவரி, 2013

தேர்ச்சி

ராஜபாட்டையில்
குதிரையில் செல்லும் உன்பின்
ஒளிந்து ஒளிந்து
பின் தொடர்கிறேன்.

வாளெடுப்பதில்லை நீ
வாளுறை பார்த்தே
உன் போர்களைக்
கணக்கிட முயல்கிறேன்.

ஆலத்தியைச் சுற்றிக்
கொட்டும் போதெல்லாம்
உன்னைச் சுற்றியவைகளைக்
கொட்டிவிடத் துடிக்கிறேன்.

மீசையை முறுக்குவதுமில்லை
நெஞ்சை உயர்த்துவதுமில்லை
உன் சரியாசனத்தில்
சரியான ராணியாய் அமர்த்தியிருக்கிறாய்

எல்லாத் தேர்வுகளிலும்
எப்படியோ தேர்ந்துவிடுகிறாய்
தேர்வு வைத்த நான்
தோற்றுவிடுகிறேன்

காணாமல்

நீ என்பது யார் எனப்
பகுத்துணரப் பார்க்கிறேன்.
காற்றோடு சேர்ந்த காற்று.
அலையோடு சேர்ந்த அலை.
பிரிக்கப் பிரிக்க
தொடர்ந்து கொண்டே இருக்கிறாய்.
எதைப் பிரிப்பது என
என்னைப் பகுத்தாய்கிறேன்.
நானே நீயாகவும்
நிலவாகவும் இரவாகவும்
மிதந்து கொண்டிருக்கிறோம்.
விடிந்ததும் காணாமல்
போகிறோம் நமக்குள்ளே..

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

சூரியனும் சுற்றிவரும் தூரம்தான்

சூரியனும் சுற்றிவரும் தூரம்தான்:-
*************************************************

குடும்பத்தலைவிகள்
முகப்புத்தகத்தோழிகளாய்
பரிணாம வளர்ச்சியில்.

கிளைகளை நீட்டி
தன்னை எங்கெங்கும்
நிலைநாட்டி..

தோழிகளுடன்
அளவளாவுவதில்
கொஞ்சலும் பொய்ச்சண்டையும்.

சில தோழர்களுடன்
பழகுவதில் கொஞ்சம்
சிக்கல்களும்..

கற்பனைக் கோடுகளுடன்
பூமி குறிக்கப்படுவதான சாயலில்
லட்சுமண  ரேகையுடனும்.

எல்லா அட்சத்திலும்
சரியான பாகையில் சுற்றி
தீர்க்கமான ரேகையில்

துருவனை அச்சாக்கி
உருண்டு முடிக்கையில்
சூரியனும் சுற்றிவரும் தூரம்தான்
Related Posts Plugin for WordPress, Blogger...