எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 அக்டோபர், 2012

என்று தீரும் இதெல்லாம்..?

ஆணிகளால்
அறையப்படப்போகும்
கட்டைகளைச் சுமந்தபடி
பயணப்படத் துவங்குகிறான்.
சவுக்கடிகள் சீறுகின்றன
கட்டைகளோடு கட்டையாய்
விழுந்து எழும் அவன்மேல்.
யார்யாருடையதெல்லாமோ
சுமக்கிறான்.
சுமந்து சுமந்து அதிலேயே
மரிக்கிறான்.
சோர்ந்த கண்களும்,
கையறு நிலையும்
உறைந்து கிடக்கும்
இரத்தத்திப்பிகளும்
உயரப்பறக்க முயலும்
பறவையைப் போன்ற
சித்திரத்தோடு
நிறைவேறாமலே
நூற்றாண்டுகளாய்த்
தொடர்கிறது அவனது
ஏக்கமும் பயணமும். 

திங்கள், 29 அக்டோபர், 2012

கனிமங்கள் ஒளிர்கின்றன.

கனிமங்கள் ஒளிர்கின்றன.
தனிமங்கள் தவிக்கின்றன.
திரை ஊடுருவிப்பாயும் கதிர்
குகை முடிச்சுக்களைப் பொசுக்குகிறது.
உயிர் உற்பத்திக்கும் சூட்டுப் பெட்டிகள்
மரபணுச் சிதைவில் கருக்கோழிகளாய்
உருக்கொண்டதெல்லாம் ஒழுகிக் கரையும்
ஒளி ஒலியெழப் பெய்யும் அமில மழையில்
குறுவை குறுகிப் போக சம்பா மூழ்கிப் போக
எரிபொருளாய் இளசெல்லாம் எரிய
இருண்ட கண்டத்துள் செயற்கை மணல்
செயற்கை நீர் செயற்கைப் பூக்கள்
செயற்கை சுவாசம் செயற்கை மரணம்.
கருப்பா வெள்ளையா
பாதாளமா, மேலோகமா.
கனிமங்கள் ஒளிர்கின்றன.
தனிமங்கள் தவிக்கின்றன.

சனி, 27 அக்டோபர், 2012

கடத்தல்

மூச்சிரைக்க
போட்டி போட்டு
ஓடிக் கொண்டிருக்கிறோம்
வயதைக் கடக்கும் முயற்சியில்.

வியாழன், 25 அக்டோபர், 2012

தற்காப்பு

உணர்வு உறைகளில்
செருகிக் கிடக்கும்
எண்ணக் கத்திகளை
உருவி ஏந்துகிறேன்
ஏறுக்குமாறாய்த்
தாக்குபவைகளிலிருந்து
தற்காக்கும் பொருட்டு.

குயுக்திகளற்று
சுழலும் அவை
ஒளிப்பொறிகள் தெறிக்க
மின்னுகின்றன
செருக்குகள் அற்று
சுயகம்பீரம் மிளிர.

புதன், 24 அக்டோபர், 2012

நேற்றைய மழை

ஞாபகப் பள்ளத்தில்
தேங்கிக்கிடக்கும்
நேற்றைய மழை
உருவாக்குகிறது
ஓயாச்சிற்றலைகளோடு
மீன்கள்துள்ளும்
குட்டிக்கடலை.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

சாலைப் பட்சி.

சாதகப் பட்சிகள்
மழை உண்கின்றன.,
எப்போதாவது.
சாக்கடை வழியும்
சாலைகளும்..

ஒரே மழை.

இரண்டு மயானங்களும்
மூழ்கிக் கிடக்கின்றன
ஒரே மழையில்.

முள் மழை

முள் மழை சுமந்து
ரத்தச் சகதியில்
நிலம்.

மழையின் நிறம்.

பூமியைக் கழுவிக்
களங்கமாகிறது
நிறங்களற்ற மழை

மறு பதிப்பு

மறு பதிப்பிக்கிறது
மழை மரத்தை.
பயணம் என்னை.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

சுற்றுலா.

மெடுல்லா கார்டெக்ஸ்,
ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள்
இதெல்லாம் உன்
சுற்றுலாத்தலமானது எப்போது..?

குளிர் விடுதல்

செல்லும் ஊர்தோறும்
சால்வையைச் சுற்றிப்
படர்ந்திருக்கிறது குளிர்...
விட்டுப் போகாமல்.

என் தமிழே என் அரசியே.

என் புன்னகைப் பூக்களுக்காக
நந்தவனத்தையும் காக்க வைத்தவளே
நான் காடாய்ப் பூத்துக் கிடக்கிறேன்
உன் முத்த மழையைக் கொஞ்சம் அனுப்பு
கலங்கிக் கிடக்கும்
மனம் கழுவிக் கொள்ள வேண்டும்.
குளிர் மூச்சுப் பெற வேண்டும்.
என் தமிழே என் அரசியே

நிலவுப் பால்.

நிலவுப் பால் ஊற்றிய நதியைப்
பருகியபடி நகர்கிறது
இரவு.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

பிடிப்பு

நீர்ப்பூச்சி நீர்த்தாவரம்
கால்பாவ முடியாமல்
துழாவிக் கொண்டிருக்கின்றன
தங்கள் இருப்பை.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பந்தாடும் மௌனங்கள்..

நான் மௌனமாக இருக்கிறேன்.
நீயும் மௌனமாக இருக்கிறாய்.
நம் இருவர் மௌனங்களும்
பந்தாடிக் கொண்டிருக்கின்றன நம்மை.
முடிவில்
யார் யாருக்கு அணிவிக்கப் போகிறோம்
என சோதனை இட்டபடி
காத்திருக்கின்றன
வார்த்தைப் பதக்கங்கள்.

நடுங்கும் வீடு.

குளிர்கிறது
குளிர்கிறது
குளிர்கிறது
உன் பார்வை மழையில்
நடுங்குகிறது வீடு..

வியர்க்கும் நள்ளிரவு.

நிலவில்
நனைந்து கொண்டிருந்தது
நள்ளிரவு
வியர்க்கும்
பனித்துளிகளோடு

புதன், 10 அக்டோபர், 2012

மணிப்புறாக்கள்.

காற்றில்
அதிர்வுகளைப்
பறவைகளாய்ப்
பறக்க விடுகிறது
கோயில் மணி.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

மொக்கு.

மெல்லரும்பிய
மொக்கொன்று
உள்குமிகிறது
சருகென.

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

பயணம்.

அரிக்கேன் விளக்கு...
யாருடன்
யாருக்காக .,
யாரிடம் நோக்கி.,
ஏன் பயணிக்கிறோம்
என்பது புரியாமல்.,
ஒற்றை அரிக்கேன் விளக்கு..
எந்தக் கரத்திலோ
வளையமாய்த் தொற்றிக்கொண்டு.,
எந்த மாட்டுவண்டியிலோ
எதிர்க்கூதலில் ஆடிக்கொண்டு.,
இருளைத்தேடி..
இருளைத்தேடி..
முன்னே பரவும்
வெளிச்ச வட்டத்தைப் பிடிக்க...
பாலைவன மண்வீச்சுகளுக்குள்..
சிகப்பு வளையமாய்..
தூரப்புள்ளியாய்..
செவ்வாய்க் கோளாய்..
திரிக்குள் ஒளிரும்.,
கண்ணாடிக்குள் ஜ்வல்லிக்கும்
ஒற்றை அரிக்கேன் விளக்கு..
யாருடன்.,
யாருக்காக.,
யாரிடம் நோக்கி.,
ஏன் பயணிக்கிறோம்..
என்பது தெரியாமல்...

டிஸ்கி:- இந்தக் கவிதை கல்லூரிக் காலத்தில் எழுதியது. கழுகிலும் வெளிவந்துள்ளது

சனி, 6 அக்டோபர், 2012

வெட்கத்தின் விழுதுகள்.

கரையாகவோ
காற்றாகவோ
நீ வடிவெடுக்கும்போது
நான் நதியாக நாணலாக
வெட்கத்தின் விழுதுகளில்
கைபிடித்து நெளிகிறேன்.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

நதி நீராடல்.

மேகத் துகில் களைந்து
நதிநீராடிக் கொண்டிருக்கிறது
நிலா.

வியாழன், 4 அக்டோபர், 2012

சேணம்.

நான் யாராக ஆக வேண்டும்..?

தருணங்களைக்
கடந்து கொண்டிருக்கிறேன்.

குதிரையும் தயார்.
வரைபடமும் தயார்.

வார்ப்பட்டியில்
கால் வைக்கும்போதெல்லாம்
வாரி விடுகின்றன
தயக்கங்கள்.

சேணமற்று அண்டசராசரமும்
வெறித்தபடி இருக்கும்
என்னைப் பரிவோடு
பார்த்துக் கொண்டிருக்கின்றன
குதிரையும் காலமும்.

புதன், 3 அக்டோபர், 2012

விசிறி

வியர்க்கும்போதெல்லாம்
விசிறிக் கொள்கிறது,
தென்னையும் பனையும்..

மின்னுதல்.

வெய்யிலில் மின்னுகிறது
கொத்து வாட்களோடு தென்னை.
குறு வாட்களோடு பனை.
Related Posts Plugin for WordPress, Blogger...