எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 மே, 2013

வால் பிடித்து.

மீனாய் நீந்துகிறாய்
அலையாய்த் தொடர்கிறேன்
ஆசையுடன் வால் பிடித்து.

வியாழன், 30 மே, 2013

ட்ரெயின் விளையாட்டு..

குழந்தைகளின்
ட்ரெயின் விளையாட்டில்
கும்பகோணம் வந்ததும்
சென்னை வந்துவிடுகிறது..

காசு செலவில்லாமல்
கேட்டில் கால்வைத்துந்தி
காஞ்சிபுரமும் கன்யாகுமரியும்
சென்று வருகிறார்கள் குழந்தைகள்.

ட்ரெயின் விளையாட்டில்
எல்லாக் குழந்தையும்
சொந்த ஊர் சொல்லி ஆட
சென்னைக் குழந்தை மட்டும்
தயக்கமாய் தலைசாய்த்துச்
சென்னை என்கிறது.

எங்க ஊருக்கே வாடா நீயும்
என மற்ற குழந்தைகள்
சென்னைக் குழந்தையைத்
தோளணைத்து உந்தும்போது
இன்பமாய்க் கிறீச்சிடுகிறது
கேட்டும்..சேர்ந்து...

புதன், 29 மே, 2013

மனிதர்களைத் தேடி..

பொழுதின் கழுத்து
என் கைகளில்

காற்று
பலூன்களாய்,
நீர்க்குமிழிகளாய்
உருமாற்றம் பெறும்.

வாணச் சத்தங்கள்
மனசுக்குள்.

வடமெனும்
உயிர் இல்லாச்
சவமாய்த் தேர்.

வெய்யில் குல்லாய்க்குள்
தேராய்
மனம்.

தெய்வம்
மனிதர்களைத் தேடி
திருவிழாக் கூட்டத்துள்..

31.12.1986 -- 6.10 PM.. வீட்டு டைரியில் கிறுக்கியது.

திங்கள், 27 மே, 2013

நதி..

வெய்யிலில் காய்ந்து
கருவாடாய்க் கிடக்கிறது
மண்செதிலோடு நதி.

நீல மீனும் தங்கப் பறவையும்..

மேக இறக்கையில்
செந்நிற அலகைத்
தீட்டுகிறது சூரியன்..

அலைத் தானியத்தை
அலசிக் கரை சேர்க்கிறது
நீர்த் துடுப்பு.

தங்கச் செதில் மின்ன
நீல மீனாய்த்
துள்ளுகிறது கடல்.

இரையெடுத்த சூரியன்
இறங்கித் துயில்கிறது
இரவுக் கூட்டுக்குள்.

இன்பமாய் அசைகிறது
அலையும் கடலும்
கடலும் அலையும்..

ஒளியின் வருகை.:-

ஒளியின் வருகை.:-
கண் துலக்கிக்
கதிர் நீட்டிக்
கொடி தழுவிக்
காலெடுத்து
உள்நுழைகிறது
வெளிச்சப் பாதுகை..
தன்னை அழுத்திய
இருளெனும் மோகமுள் நீக்கி
உயிர்பெற்று எழுகிறாள்
உலகெனும்
அகலிகைப் பெண்.

ஞாயிறு, 26 மே, 2013

மனப்பம்பரம்.

மனப்பம்பரம்
ஒற்றை இடத்தில் சுற்றுகிறது
உன் நினைவுக் கயிற்றில்..

வெள்ளி, 24 மே, 2013

மொட்டைமாடி.

சிதறிய தானியங்களைக்
கொத்தும் ஓவியமாய் இருக்கிறது குருவி.

சுளகின் மிளகாய் வற்றல்கள்
காரச் சிவப்போடு கண்ணேறுகின்றன.

நெகிழித் தண்ணீர்
நெகிழ்ந்து நொதித்துக்கொண்டிருக்கிறது.

அனலில் கறுத்துக் கரைந்து
எச்சமிடுகின்றன காக்கைகள்.

தன்னைத்தானே வேட்டியாய்
காயவைத்தபடி இருக்கிறது மொட்டைமாடி.

புதன், 22 மே, 2013

விடுமுறை..

விடுமுறையில் ஊருக்குச் செல்லத்
துணியெடுத்து வைக்கும்போது
குழந்தை தன்
உடைகளை எடுத்துத் தருகிறது.
தொப்பியை எடுத்துத் தருகிறது.
ஷூக்களை எடுத்துத் தருகிறது.
பார்பி பொம்மைக்கும்
இடம் ஒதுக்கச் சொல்லிக் கேட்கிறது.
ஊர் சென்றபின் காணாவிட்டால்
குட்டு வாங்குவோம் எனத் தெரிந்தும்
வசதியாய் மறந்துவிடுகிறது,
விடுமுறை வீட்டுப்பாட நோட்டை..

திங்கள், 20 மே, 2013

ஒருவரின் மனமாய்.

மல்லி முல்லை
மகிழம் பிச்சி
முகிழ்த்து மணக்கிறது
பண்ணைத் தோட்டம்..

டேலியா கினியா
ரோஜா குறிஞ்சி
குளிர்ந்து சிலிர்க்கிறது
எஸ்டேட் காம்பவுண்டில்..

இரண்டும் இடம்மாறி
எஸ்ஸென்சுகளாகி
போத்தல்களில்
குதூகலமாய்ப் பயணிக்கிறது..

அடையாளமற்றும்
கசிகிறது வாசனையாய்..
ஒருவரின் மனமாய்
இன்னொருவரின் மனத்தில்..

ஞாயிறு, 19 மே, 2013

ஆமைகள்..

ஆமைகள் அதிகம்
கடலோரங்களில்..
குடக்கூலியில்லை..
குழிபறித்து முட்டையிட்டுக்
குஞ்சு பொறிக்கக்
கையூட்டில்லை.
நினைத்தபோது நீந்தி
நினைத்தபோது கரையேற
குடியேற்றக் கூலியுமற்ற
மணற் தேரி.
நினைத்தபோது
மனிதர்கள் சுடவும் கூட..
ஆமைகளற்ற போதில்
அகதிகளும், மீனவர்களும்..

ஓடும் ஒளியும்.

ஓடுகளைச் சுமப்பதில்
பிரியம் உனக்கு..
ஒளித்துவைக்கிறேன்
நீ வெளிவந்த ஓடுகளை..
உன் புன்னகையின் ஒளியில்
பூக்கிறது சூரியன்..
கலகலக்கிறது நதி
சலசலக்கிறது பறவை.
ஒளியெடுக்கிறது நிலா..
கண்கூசத் திரும்பத்
தேடுகிறாய் உனதான ஓடை.
ஒளித்துவைத்த நானே
உன் பார்வைக்கெட்டாது
கிட்டிவிடக்கூடாதென
ஒளியத் துவங்குகிறேன்
நீ ஒளிர..

மெல்லெழும்பும் குளிர்ச்சி.

மெல்லெழும்புகிறது குளிர்ச்சி..
நீரிலிருந்து மரத்துக்கு..
மரத்திலிருந்து இலைகளுக்கு..
இலைகளிலிருந்து புற்களுக்கு..
புற்களிலிருந்து மீண்டும் நீருக்குள்..
நழுவி நழுவி விழுகிறது.

வெய்யில் வீசும்
வலைகளுக்குத் தப்பி
வலசைப் பறவையாய்ப்
பறந்து திரும்பிக்
கற்களுக்குள் விதையாகிறது
மீண்டும் கிளைபரப்ப.. :)

வெள்ளி, 17 மே, 2013

முகர்தலும் முத்தமிடுதலும்.

முகமகரந்தம் சுற்றி
வெய்யில் பூ விரிக்கிறது..
இமை இதழ்கள் வழி
வழிகிறது வியர்வைத் தேன்.
காற்றில் கலையும்
குழல் ஆடுகிறது இலைஇலையாய்..
முகர்தலும் முத்தமிடுதலுமாய்
விருப்பமற்று நகர்கிறது பொழுது..

தாலாட்டு.

நுரை மெத்தையில்
பூக்களைத் தாலாட்டுகிறது
ஆறு.

புதன், 15 மே, 2013

நில வாசிப்பு.

இருளில் நனைந்த
துண்டுப் பிரசுரமாய்க்
கிடக்கிறது பூமி.
வாசித்துச் செல்கிறது நிலா.

வியாழன், 9 மே, 2013

விசும்பும் நிலவு.

காற்றில் விசும்பும்
நிலவு ஏந்தி
நெளிக்கரங்களால் தட்டித்
தூங்கவைக்கின்றன
நீரலைகள்.

திங்கள், 6 மே, 2013

குடியும் குடும்பமும்.

முட்டாள் அன்னங்கள்
ஒதுக்கப்படுகின்றன..
பாலை சுத்திகரித்துப்
பதநீராக்குகின்றன.
சுண்ணம் தடவாத
பானைப் பாலுக்குள்
சுண்ணாம்பாய் வேகிறது
கணவனின் குடலுடன்
மனைவியின் இதயம்.
தாய்தந்தை ஊடலில்
விசிறி விசிறி
வேக்காளமாகிறது
குழந்தையின் மனம்.
கோட் ஸ்டாண்டில்
தொங்கும் சட்டையைத்
துழாவித் துழாவி
வீட்டுள் நுழைந்ததும்
தன்னை வருடும்
தந்தையின் கை தேடும்
குழந்தையின் கண்கசியும்
யாரும் அறியாமல்
வடிக்கும் கண்ணீரில்
கரைந்து வெளியேறுவான்
தந்தையைத் தின்ற
கோரக் குடியரக்கன்.

உத்தரம்.

மனிதர்கள் நினைவுகளாகப்
புகைப்படங்களாகப்
போய்விடுகிறார்கள்.
எந்த ஆணியில் மாட்டிக் கொள்வது
எந்தச் சுவற்றில் ஒட்டிக் கொள்வது
சுவாசத்தையும் வாசத்தையும்
அளைந்து களைத்து
உளுத்துக் கொண்டிருக்கும்
உத்தரத்தோடு
அழுதுகொண்டிருக்கிறது வீடு..
Related Posts Plugin for WordPress, Blogger...