எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 மார்ச், 2012

கௌலி

ஓஸோனை ஓட்டையிட்டு
உள்விழும் சூரியன்
உறிஞ்சிக்கொண்டிருக்கிறான்
ரீங்கார சத்தத்தோடு குளிர்சாதனத்தை.
அறைந்து சாத்திய கதவின்பின்
அகப்பட்ட சுவர்ப்பல்லியாய்
காதுத் தொடர்பில் கௌலிதட்டிபடி
தனியாய்ச் சுற்றும் மனிதன்.

நெத்து

நாய்கள் உருட்டிய
தென்னங்குலைகள் ஒருநாள்
நீரற்று முற்றி விழுந்து
புழுக்களும் ஊர்ந்து
தின்னவொட்டாமல்
இறுகிக் கல்லாகி
வெடித்து வேம்பாகி
கர்த்தாவென்ன
எதுவும் உயிர்ப்பிக்க இயலா
முதுமையில்..

வெள்ளி, 30 மார்ச், 2012

களவு..

காதலிப்பது ஒற்றனென்றறியாமல்
களவு போய்க் கொண்டிருக்கிறாள்
முத்துநகை.




வியாழன், 29 மார்ச், 2012

1983 அக்டோபர் ”சிப்பி”யில் “ நீ ஒரு அநாதை” கவிதை.




































ஈழப் பெண்களே...
நீங்கள் கற்புக்குப் போராடியபோது
இங்கே கற்களுக்குத் திருவிழாக்கள்.
 நீங்கள் கண்ணீர் சிந்திய நாட்களில்
இங்கே கடையடைக்கும் உற்சவங்கள்.
நீங்கள் பசித்திருந்த வேளைகளில்
இங்கே கள்ளுக்கடைத் திறப்புக்கள்.
பிறந்தநாள் விருந்துகள்.
குப்பைத்தொட்டிக்குப் படையலிடும்
நாகரீகக் காட்டுமிராண்டிகள்.
உங்களுக்கு உதவி செய்ய முடியாத
எங்களது பொன்னான நேரங்கள்
திரையரங்குகளில் செம்மையுடன் கழிகின்றன.
உங்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவியலா
எங்களது கறுப்புப் பணங்கள் இரும்புப்
பெட்டகங்களில் உறங்குகின்றன.
உங்களுக்கு உறைவிடங்கள்
அளிக்க முடியாதவை எங்களது
நகர நரகங்கள்.
உங்களை நினைத்துப் பார்க்காத
நினைத்தாலும் நினைவில் நிறுத்த
முடியாதவை எங்களது உப்பு மனங்கள்.
நாங்கள் மறத்தமிழர்கள்
மானுடத்தின் கேவலங்கள்.
இலங்கையில் நீ அடிமை மட்டும்தான்.
வழிப்பயணத்தில் நீ அகதி.
இங்கு வந்த பின்னோ
ஏழை ஈழத்தமிழா.. நீ .. நீ.. “ அனாதை.”





சுவர்ச்சிப்பி

மனிதனில் வியர்வையை
உப்புமுத்தாய்ப் பொறிக்கிறது
வெப்பமுண்ட சுவர்ச்சிப்பி ..

புதன், 28 மார்ச், 2012

சக்கரக் கால்

வண்டிகளுக்கான கீழ்தளத்தில்
தனக்கான இடம் கேட்டுப்
பிடிவாதமாய் நிற்கிறது
பக்கத்து வீட்டு புஜ்ஜுவின்
சக்கரக் குதிரை
தன் சக்கரத்தைச் சுட்டிக் காட்டி.!

செவ்வாய், 27 மார்ச், 2012

பலகணி.. பல கனி..

கட்டம் கட்டமாய்
உன் கடிதக் கொத்தாய்
காற்றை வீசுகிறது பலகணி
சாளரம் அமர்ந்து
இனிப்பாய் சுவாசிக்கிறேன்
உன் மொழியை..பல கனி

..

திங்கள், 26 மார்ச், 2012

கம்பிக்குள் பிரயாணி.

நகரும் சித்திரங்களை
வரைந்து தள்ளுகிறது
ரயிலின் ஜன்னல்..
கம்பிக்குள் பிரயாணி கண்டு
தூரிகை கலைத்துச் சிரிக்கின்றன
தாவர ஓவியங்கள்...


வியாழன், 22 மார்ச், 2012

இனிய வாசம்.

தங்கச் சங்கிலி
சலவைச் சட்டை
சவரத் திரவம்
நறுமணத் திரவியம்
சோப்பின் மணம்
பவுடரின் வாசனை
அனைத்தையும் மீறி
மனதை நிறைக்கிறது
என்னுடைய உனதான
இனிய வாசம்..

புதன், 21 மார்ச், 2012

விரியன்களும் புற்றுக்களும்.

விரவிக் கிடக்கின்றன
வீர்யமற்ற விரியன்கள்.
நிரவிக் கிடக்கின்றன
கருவற்ற முட்டைகளால்
அடைந்த புற்றுக்கள்.

செவ்வாய், 20 மார்ச், 2012

கடலும் மணலும்.

கடலாகிறேன்
நீ அளைவதால்
மணலாகிறது முகம்

திங்கள், 19 மார்ச், 2012

நீலம்..

எவ்வளவு விஷம்..
நீலமாகவில்லை எங்கள் கண்டம்..
துப்ப முடியாத வார்த்தைகள்
நந்தியாய் வளர்ந்துகொண்டே..

நான்..?

நான் யார் நான் யார்
கேள்விகளுடன் வாழ்ந்து மடிகிறேன்
நான் யார்..?

வெள்ளி, 16 மார்ச், 2012

பந்து.

கைக்கு வரலாம் பந்து
பார்வையாளராய் இருந்தாலும்
எப்போதாவது.

வியாழன், 15 மார்ச், 2012

வேறான பிம்பங்கள்..

என்னைப் பற்றிய பிம்பங்களை
உடைத்துப் போட்டுக் கொண்டே
செல்கிறேன்.
வேறு வேறானதை
உருவாக்கிக்
கொள்கிறாய் நீ

புதன், 14 மார்ச், 2012

வர்ண இறகுகள்.

வர்ண இறகை விரிக்கின்றது
மழைக்கு முன் மயில்..
மழைக்குப் பின் வானவில்


செவ்வாய், 13 மார்ச், 2012

நீரம்புகள்.

மழைவில்லின்
நீரம்புகள் சாய்த்து
வெள்ளச்சகதியில் பயிர்கள்.


கண்ணீரின் உண்மை

உன் கோபத்தால்
நான் அழுதுகொண்டிருப்பேனென்று அறிந்தும்
கனவில் கூட நீள்வதில்லை
உன் விரல்கள்
என் கண்ணீரின் உண்மையைத் தொட்டுணர.

மழைவில்.

பச்சையக் கோலமிட்டு
நெல்வயல்.
மழைத் திருவிழாவின்
வர்ணக் கோலாட்டத்தில்
வானவில்..

போலீஸ் திருடன்.

ஒளிந்து கொள்ளும்
திருடர்களைப் பிடிப்பது
சுவாரசியமானது..
திருடன் போலீஸ் விளையாட்டில்
போலீசே திருடனாய்.

வியாழன், 8 மார்ச், 2012

கடவு..

யாரோ வந்து
வெளியே இழுக்கும்வரை
கடவுச் சொல் மறந்து
கடவுதோறும் குதூகலித்தபடி.

புதன், 7 மார்ச், 2012

அம்மா என்னும் தெய்வம்.

அம்மா என்னும் தெய்வம்.:-
***********************************

அம்மா என் இனிய தேவதையே..!
உலகத்தைப் பார்க்குமுன்
உன் முகத்தைப் பார்த்தேன்...!

மொழி தெரியாமல் இருந்தேன்.
மொழி கற்றுக் கொடுத்தாய்..!

நீ உண்ணாவிட்டாலும்
எனக்கு உணவு ஊட்டுவாய்..!

பலன் எதிர்பாராமல்
பாசம் செய்வது எப்படி
எனக் கற்றுக் கொடுத்தாய்..!

நோயில் நான் விழுந்தால்
நீ நொந்து போவாய்..!

எனக்காக எவ்வளவோ
தியாகங்கள் செய்திருக்கிறாய்..!

உனக்கு சீர் ஏதும் தரவேண்டாம்.
சிரித்து உரையாடினாலே மகிழ்வாய்..!

கடவுள் என்னோடு எப்போதும்
இருக்கமுடியாது என்பதால் எனக்கு
உன்னைக் கொடுத்தார்.!

அம்மா .. ! என் இனிய தேவதையே..!
உனக்கு நன்றி.! நன்றி. !! நன்றி..!!!

டிஸ்கி :- இது எங்கள் வீட்டினருகினில் குடி இருக்கும் ., வாணி வித்யாலயாவில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் என் குட்டித் தோழி பூஜாவின் பள்ளி மலருக்காக அவள் சார்பாக எழுதிக் கொடுத்தது..:)

பற்றுதல்

கோர்த்திருந்தது
தானே விடுவிக்கும் வரை
விடும் பழக்கமில்லை
பற்றியிருந்த விரல்களை.


செவ்வாய், 6 மார்ச், 2012

கைபேசி காதலி

காதோடு முத்தமிடுகிறேன்..
அடிக்கடி காதலோடு .
ஹ்ம்ம் காதலியல்ல..
நான் கைபேசி..

தூது..( புதியபார்வையில். )



(1984 இல் தலைவி இப்படித்தான் தூது விட்டிருப்பாளோ.. மன்னிக்கவும் கற்பனைதான்.)

நீலப்பறவையே..
என் தலைவனை
நீ
எங்காகிலும் கண்டால்
உன் தலைவி
மசாலா பாலும்
மட்டன் பிரியாணியும்
உண்ணக் கிடைக்காததால்
கைவளை நழுவ,
கால் தண்டை அடகில் போக,
மெலிந்து விட்டாள்.
உடுக்க பனாரசும்,
படுக்க டன்லப்பும்
ஏ.சியும் இல்லாமல்
மெலிந்துவிட்டாள்
என்று கூறு.
எனக்கு விரைவில்
எம். ஓ வில் ரூ. 10,000/-
அனுப்பி வைக்கச் சொல். !!!

-- ச. தேனம்மை.
ஃபாத்திமாக் கல்லூரி, மதுரை.

ஞாயிறு, 4 மார்ச், 2012

தடுக்கும் கவிதை

தடுக்கிக் கிடக்கிறது
கவிதை..
தனித்துத் தவிக்கும்
மனசாய்..

ஞாயிறின் மதியம்.

வெக்கை கசியும்
மின்விசிறியாய்
மெல்லச் சுழல்கிறது
ஞாயிறின் மதியம்..

குடைக்குள் தென்றல்.

வண்ணக் குடையினுள்ளே
உலவும் தென்றலாகவா..
அதன் பின் செழித்துக் கிடக்கும்
பச்சைத் தோட்டமாகவா..
இல்லை..சூரியக் கதிரில்
மினுமினுக்கும் குடைப்பூவேவா..
எதிலே உறைந்திருக்கிறாய்
நண்பா நீ..

வெள்ளி, 2 மார்ச், 2012

இடப்பெயர்ச்சி..

சுமந்து வலிக்கிறது
இதயத்தை விட்டிறங்கு..
இடப்பெயர்ச்சியாகிறாய்
யாருமறியா எண்ணமாய்..

வியாழன், 1 மார்ச், 2012

உயிர்மெய்..

தொட்டதே இல்லை
உணர்கிறோம் நம்மை
உயிர்மெய்யாய் எழுத்துக்களில்.

தனித்திருக்கும் வீடு.

பொதித்திருந்த வீட்டின் அணைப்பு நீக்கி
வெளியேறிய நொடியிலிருந்து
திரைச்சீலையும், ஜன்னலும்
சுவர்களும், கதவுகளும்,
தவிக்கின்றன நீயற்ற தனிமையில்.


Related Posts Plugin for WordPress, Blogger...