எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

இனிப்பு, காரம், காஃபி.

ஒன்றுமற்ற போதுகளில்
கொறிக்கக் கொஞ்சம் முத்தம்.
இனிப்புக்கு ஒன்றுதானா..
கோபித்து ஓடுகையில்
காரம் கமறுகிறது..
எப்போதும்போல
பார்வைத் துணுக்கை
நனைத்துச் சுவைத்தபடி
அவரவர் சோஃபாவிலிருந்து
கோர்க்கும் விரல்களை
காஃபிக் கோப்பையிலிருந்து
எழும் ஆவி சுற்றுகிறது.
தொலைக்காட்சி விளம்பரங்கள்
விட்ட இடைவெளியில்
ஒருவரில் ஒருவரை
ரசிக்கும் புன்னகையில்
விருட்சமாய் வேரோடிப்
பின்னியிருக்கிறது காதல்..

வியாழன், 25 ஏப்ரல், 2013

சூரியக் கோப்பை.

தளும்பும் வெப்பக் கோப்பையாய்
பூமியில் வழிந்தபடி
உருண்டோடுகிறது சூரியன்.

புதன், 24 ஏப்ரல், 2013

எழுத்தாளர்கள்.

31.12.1986 -- 6.10 PM

************************************
அந்த எழுத்தாளர்கள்
மரித்துப் போனார்கள்.

துஷ்ட தேவதையின்
ஆவாகனங்களுக்கு மத்தியில்
வாழ்நாள் முழுக்க
வார்த்தை விஷத்தை சுவாசித்தே
மரித்தார்கள். மரித்தார்கள்.

காற்றைத் தேடியே
களைத்துப் போனார்கள்.

ராட்சசத் தாவரங்களுக்குள்
சிக்கிக் கொண்ட சின்னப் பூக்கள்,
முட்களும் மென்மையும் களையப்பட்டு..

சுத்தமான நீராய்த்தான்
இருந்தார்கள் அவர்கள்.
ஆனால் தூசிப் போர்வை இடப்பட்டு
அழுகல் இலைகளால்
கலக்கப்பட்டார்கள்.

மரித்துப் போனார்கள்
அந்த எழுத்தாளர்கள்
சுட்ட உடல்களாய்.

திங்கள், 22 ஏப்ரல், 2013

86 ஆம் வருஷ டைரி..

31.12.1986 -- 6.10 PM

எனது
வரண்ட நாவுகளில்
எதேச்சையாய்
சில மழைத்துளிகள்.

எனது
சப்பாத்திக் கள்ளிகள்
இன்று பூத்தன.

எண்ணச் சரிவுக்குள்
மனக்குகைக்குள் சில
தீபச் சிதறல்கள்.

வான நெற்றி தீட்டும்
சுடர்த் திலகங்கள்
எனது பேனா வீரனின்
படையெடுத்தலுக்காக.

எனது எழுத்தாணி இன்று
தங்கக் கவசம் விட்டெறிந்து
“இங்க்” திலகமிட்டு
வாள் வீசி முன்னேறும்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

கதிர் அலகு.

கதிர் அலகால்
பூமித் தானியத்தை
கொத்திச் செல்கிறது சூரியன்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

மீன் மீனாய்..

தங்கச்செதில் மீனாய்
நீர் நீந்துகிறது நதியில்..
இரவில் வெள்ளிமீனாய்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

தன்னை மறத்தல்

பருவங்கள் நீண்ட
நாட்களுக்குப் பின்
சந்திப்பில் மகிழ்ந்து
அணைத்துக் குலாவி
அவர்கள் பற்றி
அது பற்றி,
அனைத்தும் பற்றிப்
பேசினோம்.
பிரிந்து சென்றபின்
நம்மைப் பற்றிப்
பேசாததைச் சிந்தித்தபடி.

புதன், 17 ஏப்ரல், 2013

பந்தும் பந்தமும்..

பந்தும் பந்தமும்..
**************************
அதிகாலையின்   ஆட்டோ ..
பேருந்து நிறுத்தம் தோறும் கூட்டமாய்..

பகலில் ஆரம்பிக்கப்போகும்
பந்தின் நெரிசலும் நெரிப்பும்...

கடையடைத்து.,  கொடி கட்டி
போக்குவரத்தை வரையறுத்து..

சுற்றி வந்து ..கொள்ளையாய்க்
கூலி கொடுத்து ..

கீரைக் கட்டும்., பழமும்.,
காய்கறிக் கூடையும் சுமந்து.,

காக்காசு அரைக்காசாய்
மிச்சம் பிடித்து...

பையனுக்குப் பிடித்த
மிட்டாயை வாங்கச சென்றால் ..

பெட்ரோல் விலை ஏறிவிட்டதாம்..
மிட்டாயும் விலை ஏறிவிட்டது..

காய்ந்த பாத்தியும்..
குறைந்த விலை அரிசியும்..

கண்ணுக்குள் கலந்தடிக்க..
கூடைச் சும்மாட்டில் மிட்டாயும்..

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இறங்குதல்

எந்த இடத்தில் இறங்குவது
இருட்டாயிருக்குமோ
கள்வர் பயமிருக்குமோ
துஷ்டப் பிராணிகள் துரத்துமோ
குலைத்துத் தள்ளும் நாய்கள்
அமாவாசை இருட்டு
சலசலக்கும் பனைகள்
மயானத் தீப்பந்தம்..
யார் யாரோ எந்த பயமுமின்றி
இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கடந்து போய்க் கொண்டே இருக்கிறேன்,
அரைகுறைத் தூக்கத்தோடு.
பேருந்தில் அமர்ந்து
எங்கே எப்படி இறங்கப் போகிறோம்
என்ற கவலையோடு.

திங்கள், 15 ஏப்ரல், 2013

வண்ணமிடும் இசை.

காதுக்குள்
வண்ணத்துப் பூச்சியாய்
மெல்லச் சிறகசைத்துத்
தடவிச் செல்கிறது
இசை.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ஒற்றை


ஒற்றை ஆகாயத்தின் கீழ்தான்
நெடிய பாலைகளும் .,
குட்டிச்சோலைகளும்

சனி, 13 ஏப்ரல், 2013

தினம் உருள்தல்

துறப்பதும் இறப்பதும்
வாய்க்கிறது புத்தனுக்கு
ராகுலனும் யசோதராவும்
விட்டுப் போன மிச்சங்களாய்
கௌதமனின் அடையாளம்
சுமந்து கிடக்கிறார்கள்.
சித்திரகுப்தனின் ஏட்டில்
மார்க்கண்டேயர்கள் மரிப்பதில்லை.
அஸ்வத்தாமனாய் அலைகிறார்கள்.
ஆலம் உண்ட பெருமான்
ஆலாலத்தின் கீழ் அமர
நெருப்புத்தவம் இருக்கிறாள் உமை.
இமயம் உருகுகிறது..
கங்கையும் காவிரியும்
சரஸ்வதியாய் பூமிக்குள் சுருள
சுட்டபடி தினம் உருள்கிறான் சூரியன்..

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

முதுமை

சொப்பு வைத்து சமைக்கிறோம்
காக்காய் கடி கடித்துண்கிறோம்
சொக்கவைக்கும் பால்யமல்ல
சிறிதே ஏற்கும் முதுமை.

வியாழன், 11 ஏப்ரல், 2013

முதுமை

இலை இலையாய்
உதிர்கிறது யௌவனம்.
முதுமை வலிகளோடு மரம்.

வியாழன், 4 ஏப்ரல், 2013

தாலாட்டு

வெற்றுப் படகைத்
தாலாட்டிக் கொண்டிருக்கிறது
நிலவைச் சுமந்த நீர்.

புதன், 3 ஏப்ரல், 2013

அறிதுயில்.

எண்ணங்களால் தொட்டாய்..
வண்ணத்துப் பூச்சியாகித்
தொடர்ந்தேன்..
அடர் இருளில் எங்கு
சென்றாய்..
மனுஷியாகத் திரும்பக்
கூடுமாறும் வித்தை
கற்பிக்காமலே மறைந்தாய்..
பிரபஞ்சம் தோறும்
சூரியப் பூக்கள் ..
எதனுள் மறைந்திருக்கிறாய்..
நானும் ஒளிகிறேன்..
என்றேனும் ஏதேனும்
ஒரு வண்ணம் என்னை
உனக்கு நினைவூட்டக்கூடும்..
உன் கண்ணுக்குள்
என் வண்ணம் தோன்றும்
அந்தக் கணம்
அறிதுயிலிலிருந்து
உயிர்த்தெழுவேன்..

பூங்காவின் உட்காரும் பலகை.

மிகக் கம்பீரமான முகத்தோடு
காலூன்றி காற்றோடு
உரையாடும் சமயத்தில் தானொரு
பூங்காவின் உட்காரும் பலகை
என்பது மறந்துவிடுகிறது அதற்கு.

குழந்தைகளின் சிணுங்கல்கள்,
உணவுச் சிதறல்கள்,
காதலர்களின் முத்தச் சத்தங்கள்,
முதியவர்களின் கால்வலி
தாங்கித் தாங்கி
தானொரு சுமைதாங்கி என்பதும் கூட

பறவைகள் கடந்து செல்கின்றன,
மேகங்கள் பஞ்சு மூட்டை அவிழ்த்து
சில நீர்ப் பூக்களால் நனைக்கின்றன.
சுருண்டு உதிரும் சருகான
சில இலைகளும் காலைச் சுற்றும்.
நாய்க்குட்டிகளும் பூனைகளும்
சங்கிலி கொஞ்ச அலையும்..

பூங்காவிலிருந்தும் கடத்தப்படும்
நாளை எதிர் நோக்கிக்
கடந்து செல்லும் காலடித் தடங்களை
உற்று நோக்கி எண்ணிக் கொண்டிருக்கிறது.
இருளைத் தழுவித் துயிலும் போது
இனம் தெரியாக் கனவில்
கட்டைகள் ஆட விழிக்கிறது

மெல்ல மெல்லக் கிளைத்து
எதிர்பாராமல் கரங்கள் ஒடிக்கப்படும்
அந்த மரத்துக்காய்த் தலை குனிந்து
வருந்தும் பலகை
அப்படியானதொரு மரத்தின்
எச்சம் தான் தானென்பதையும் உணர்ந்து
மெல்லச் சரியத் தொடங்குகிறது..

திங்கள், 1 ஏப்ரல், 2013

சிறைப்பட்டது

சின்னவற்றுக்கெல்லாம்
சினத்தைச் செலவிடாதே..
உன் வலிமை உயரம்
அறிவதில்லை நீ தெரிவிக்கப்படும் வரை..
ஜாம்பவான்களும்
யோசனை சொல்லத்தான்..
யோஜனை தூரம் கடக்குமுன்
பின்னால்தான் அணில்கள்
பாலம் அமைக்கின்றன.
மனிதர்கள் கடக்க
சேமித்துவை உன் கோபத்தை எல்லாம்
சிதறி வீசு மிதவைக் கற்களாய்..
சிறைபட்டதைத் தேடிக் கண்டடைய..

வலசை.

நூலுக்குள் கோர்க்கப்படாத ஊசி
யந்திரத்தோடு கோபித்துத் துருவாய்..
பேனாக் கோபங்கள்
பட்டாக்கத்தியாய்ப் பிளக்கும்
பீடிக்கும் எல்லா வியாதியும்
கடந்தே செல்லும்..
க்ரீடங்களை அடகு வைத்து
ராஜபார்ட்டை வாங்குவதில்லை
சரித்திரம் படைப்பவர்கள்..
பறந்து பறந்து வாழ்நாள் முழுதும்
சிறந்ததையே உண்ணும்
வலசைப் பறவைகள்
வயல்கள் தோறும் கண்காணிப்பில்..
விழுங்கி விழுங்கி
மண்புழுவாய் ஊர்ந்து போக
அதன் அதன் தடம்
அதனதன் பின்னால் நேசா.

Related Posts Plugin for WordPress, Blogger...