எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 ஏப்ரல், 2013

பூங்காவின் உட்காரும் பலகை.

மிகக் கம்பீரமான முகத்தோடு
காலூன்றி காற்றோடு
உரையாடும் சமயத்தில் தானொரு
பூங்காவின் உட்காரும் பலகை
என்பது மறந்துவிடுகிறது அதற்கு.

குழந்தைகளின் சிணுங்கல்கள்,
உணவுச் சிதறல்கள்,
காதலர்களின் முத்தச் சத்தங்கள்,
முதியவர்களின் கால்வலி
தாங்கித் தாங்கி
தானொரு சுமைதாங்கி என்பதும் கூட

பறவைகள் கடந்து செல்கின்றன,
மேகங்கள் பஞ்சு மூட்டை அவிழ்த்து
சில நீர்ப் பூக்களால் நனைக்கின்றன.
சுருண்டு உதிரும் சருகான
சில இலைகளும் காலைச் சுற்றும்.
நாய்க்குட்டிகளும் பூனைகளும்
சங்கிலி கொஞ்ச அலையும்..

பூங்காவிலிருந்தும் கடத்தப்படும்
நாளை எதிர் நோக்கிக்
கடந்து செல்லும் காலடித் தடங்களை
உற்று நோக்கி எண்ணிக் கொண்டிருக்கிறது.
இருளைத் தழுவித் துயிலும் போது
இனம் தெரியாக் கனவில்
கட்டைகள் ஆட விழிக்கிறது

மெல்ல மெல்லக் கிளைத்து
எதிர்பாராமல் கரங்கள் ஒடிக்கப்படும்
அந்த மரத்துக்காய்த் தலை குனிந்து
வருந்தும் பலகை
அப்படியானதொரு மரத்தின்
எச்சம் தான் தானென்பதையும் உணர்ந்து
மெல்லச் சரியத் தொடங்குகிறது..

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்கள் பார்வையில் வரிகள் வியப்பையும் தருகிறது...

/// எச்சம் தான் தானென்பதையும் உணர்ந்து
மெல்லச் சரியத் தொடங்குகிறது... ///

அருமை...

வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...